Saturday, October 14, 2023

நவராத்திரி தோன்றிய வரலாறு:

#நவராத்திரி_சிறப்பு_பதிவு:
#நவராத்திரி ஆரம்ப நாளான இன்று 
முக்கிய சக்தி தலங்களின் மூலவர் புகைப்படங்கள் ஒரே தொகுப்பாக: 🙏🙇

நவராத்திரி தோன்றிய வரலாறு:

நவராத்திரி பண்டிகையின் 9 நாட்களில் முதல் 3 நாட்கள் அம்பாளுக்காக அர்ப்பணிக்கப்படுகின்றன. இந்த முதல் 3 நாட்களும் மாஹேஸ்வரி, கெளமாரி,வாராஹி என்ற பெயர்களில் துர்க்கைக்கு சிறப்புப் பூஜைகள் நடைபெறும்.

அடுத்த 3 நாட்கள் மகாலட்சுமிக்கு சிறப்புப் பூஜைகள் நடக்கும். மகாலட்சுமி, வைஷ்ணவி, இந்திராணி என்ற பெயர்களில் இப் பூஜைகள் நடக்கும்.

கடைசி 3 நாட்கள் சரஸ்வதி, நரசிம்ஹி, சாமுண்டி என்ற பெயர்களில் சரஸ்வதிக்கு பூஜைகள் செய்யப்படும்.

நவராத்திரி வரலாறு:

தேவி மகாத்மியத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. சும்பன், நிசும்பன் என்ற அண்ணன், தம்பி இருவரும், அரக்கர்கள். அவர்களது அக்கிரம ஆட்சி தாங்காமல், மக்கள் தவித்திருக்கின்றனர். இந்த அரக்கர்களை எப்படியாவது அழித்து, மக்களைக் காப்பாற்ற வேண்டும் என, சிவா, விஷ்ணு, பிரம்மா (மும்மூர்த்திகள்)விடம், தேவர்கள் முறையிட்டிருக்கின்றனர்.

மும்மூர்த்திகளும், மகா சக்தியைத் தோற்றுவித்து, அவளுக்குத் தங்களது சக்தியையும், ஆயுதங்களையும், வாகனங்களையும் அளித்தனர். தேவி, அழகிய பெண் உருவம் எடுத்து, பூலோகத்திற்கு வந்தாள். அரக்கர்களின் வேலையாட்கள், சண்டன், முண்டன் என்ற இருவரும், இந்த அழகுப் பதுமையான மகாசக்தியைப் பார்த்ததும், தங்களது ராஜாக்களுக்கு ஏற்றவள் இவள் என முடிவு செய்து, தேவியிடம், தங்களது ராஜாக்களில் ஒருவரைத் திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தினர். அப்போது தேவி, தான் ஒரு சபதம் செய்திருப்பதாகக் கூறி, யார் என்னை போரில் வெல்கின்றனரோ, அவர்களைத்தான் மணப்பேன்' என்றாள்.

அதற்கு சண்டனும், முண்டனும், தேவர்கள், அசுரர்கள் எல்லாருமே, எங்கள் ராஜாக்களுக்கு அடிமை. பெண்ணான நீ எம்மாத்திரம்? பேசாமல் எங்களுடன் வா...' என்றனர். அதற்கு தேவி, தெரிந்தோ, தெரியாமலோ, சபதம் செய்து விட்டேன். நீ போய் ராஜாவிடம் சொல். அவர்கள் எப்படி சொல்கின்றனரோ, அப்படியே நடக்கட்டும்...' என்றாள்.
இதை சும்பன், நிசும்பன்களிடம் சொன்னதும், இருவரும் ஒவ்வொரு அசுரர்களாக அனுப்பினர். அவர்கள் எல்லாரையும் அழித்தாள் தேவி.அதில், ரக்த பீஜன் என்று ஒரு அரக்கன். இவன் கடுந்தவம் செய்து, ஒரு வரம் பெற்றிருக்கிறான். இவன் உடம்பிலிருந்து விழும் ஒவ்வொரு சொட்டு ரத்தத்திலிருந்தும், மீண்டும் ஒரு ரக்த பீஜன் தோன்றுவான்.

அவனும் ரக்த பீஜன் போலவே ஆற்றலுடன் இருப்பான். ரக்த பீஜனை தேவி அழிக்கத் துவங்கி, கீழே விழும் ஒவ்வொரு துளி ரத்தத்திலும், ஒரு ரக்த பீஜன் தோன்றி, உலகமே ரக்த பீஜர்களால் நிறைந்தது. உடனே தேவி, தன்னிடம் உள்ள சாமுண்டி என்ற காளியை, வாயை அகலமாகத் திறந்து, ரக்த பீஜனின் உடம்பிலிருந்து விழும் ஒவ்வொரு துளி ரத்தத்ததையும் குடிக்க வேண்டும் என்று ஆணையிட்டாள். சாமுண்டியும், தேவியின் கட்டளையை நிறைவேற்றினாள். கடைசியில் ரக்த பீஜன் தன் ரத்தமெல்லாம் வெளியேற சோர்ந்து, இறந்து
விடுகிறான். இறுதியில் சும்பன், நிசும்பன்களையும் அழித்து விடுகிறாள் தேவி. 

மற்றுமொரு புராண வரலாறு:

முன்பு வரமுனி என்ற பெரும் சக்தி வாய்ந்த முனிவர் ஒருவர் இருந்தார். எல்லாவற்றிலும்சிறந்து விளங்கியவர் வரமுனி. இவருக்கு நிகர் இவர்தான். தனக்கு இணை யாரும்இல்லை என்ற தலைக்கனம் இவருக்கு ஏற்பட்டது. பதவியும், தலைக்கனமும்ஏற்பட்டால் மற்றவர்களை துச்சமாக மதிக்கும் எண்ணமும் வரும்தானே?

வரமுனிக்கும் அது வந்தது. இவர் தலைக்கனம் காரணமாக அகத்தியர் போன்ற பெரும்முனிவர்களிடமும் மகிஷம் (எருமை) போல் உருவம் கொண்டு அவமரியாதையாகநடந்து கொண்டார். இதனால் கோபம் கொண்ட முனிவர்கள் அனைவரும் எருமையாகபோவாய் என்று அவருக்கு சாபமிட்டனர்.

ரம்பன் என்ற அசுரன் கடுமையான தவத்தில் ஈடுபட்டிருந்தான். அவன் தவத்தை மெச்சிஅவன் முன் தோன்றினார் அக்னி பகவான். அவன் தனக்கு சர்வ வல்லமை பொருந்தியமகன் வேண்டும் என வேண்டினான்.

அவன் வேண்டியதை அருளிய அக்னி தேவன், ரம்பன்!, நீ கேட்ட வரத்தை அளித்தேன்.நீ எந்த பெண்ணை கொண்டு ஆசை கொள்கிறாயோ அவள் மூலம் உனக்கு மகன்பிறப்பான் என்று கூறி மறைந்தார்.

மனம் முழுக்க உற்சாகத்துடன் வந்த ரம்பன் முதலில் கண்டது காட்டெருமையை.அவனது அசுர புத்தி வேலை செய்தது. காட்டெருமை மேல் காதல் கொண்டான். தானும்காட்டெருமையாக உருமாறினான். முனிவர்களால் எருமையாய் பிறப்பாய் என்றுசாபம் பெற்ற வரமுனி, அசுரனின் வாரிசாக மகிஷாசுரனாக பிறந்தான். 

மகிஷாசுரன் 10 ஆயிரம் ஆண்டுகள் பிரம்மனை குறித்து தவம் இருந்தான்.

எனக்கு தேவர்கள், அசுரர்கள், மானிடர்களால் மரணம் ஏற்படக்கூடாது. கன்னிப்பெண்ணால்தான் மரணம் ஏற்பட வேண்டும் என்று வரம் கேட்டான். அவன் கேட்டவரத்தை அருளினார் பிரம்ம தேவன்.அங்கு தொடங்கியது பிரச்சனை.

மகிஷாசுரனின் அராஜகம் அதிகமாகியது. மகாவிஷ்ணுவை தஞ்சமடைந்தனர்.தேவர்கள். மகிஷாசுரனுக்கு மரணம் பெண்ணால்தான். அவனை சம்ஹாரம் செய்யதகுந்தவள் மகாசத்தி மட்டும்தான் என்று கூறினார் மகாவிஷ்ணு.

மும்மூர்த்திகளும் தேவர்களும் ஒன்று கூடி பிரார்த்தனை செய்ததும் ஸத்வ, ரஜஸ், தமஸ்என்ற மூன்று குணங்களையும் ஒன்றாக பெற்ற மகாலட்சுமியாய் தோன்றினாள்அம்பாள்.

தங்களை காக்க வந்த தேவிக்கு தேவர்கள் படைக்கலங்களைப் படைத்தனர். சிவபெருமான் சூலம் தந்தார். அக்னி சக்தி தந்தார். வாயு பகவான் வில்லும்,அம்பறாத்துணியும் கொடுத்தார். தேவி மகிஷனை சம்ஹாரம் புரிய சர்வலங்காரபூஷிதையாய் புறப்பட்டாள்.

அம்பாளுடன் கடும் போர் புரிந்தான் மகிஷாசுரன். கடும் போர் முடிவுக்கு வந்தது.அநீதி அழிக்கப்பட்டது. அழிந்தான் மகிஷாசுரன்.

அம்பாள் மகிஷாசுரனை சம்ஹாரம் செய்தது அஷ்டமி தினத்தன்று. தேவர்கள்அம்மனை வணங்கி வழிபட்டது அடுத்த நாளான நவமி தினத்தன்று. தேவிமணித்வீபம் (மூலஸ்தானம்) சென்றது அதற்கு அடுத்த நாளான தசமி தினத்தன்று.

இந்த நாட்கள்தான் நவராத்திரியின் கடைசி 3 நாட்களாகக் கொண்டாடப்படுகிறது.

மகிஷாசுரனை சம்ஹாரம் செய்ய அம்மன் 9 நாள் கொலுவிருந்து 10ம் நாள்மகிஷாசுரனை சம்ஹாரம் செய்து மகிஷாசுர மர்த்தனியானாள் என்றும் கூறப்படுகிறது. 9நாட்கள் அம்மன் ஊசி மேல் தவம் நின்று தவம் புரிந்தாள். இதனால் நவராத்திரிதினமான 9 நாட்களும் ஊசியால் துணிகளை தைப்பதை தவிர்க்க வேண்டும் என்றும்கூறப்படுகிறது.

நவாரத்திரியின் மற்றொரு சிறப்பம்சம். எப்போதும் காலையில் செய்யும் பூஜைசிவனுக்கும், மாலையில் செய்யும் பூஜை அம்மனுக்கு உரியது என்றும் கூறப்படும்.ஆனால், நவராத்திரி தினங்களில் காலை, மாலை இரண்டு வேளைகளில் செய்யும்பூஜையுமே அம்மனுக்கு உரியதுதான்.

முதல் மூன்று நாட்கள் துர்க்கா பூஜையின் போது, தேவி மலை மகளாக இருந்து இச்சா சக்தியை, அதாவது, நமக்குள் இருக்கும் கெட்ட எண்ணங்களை அழிக்கும் தீர்மானத்தைத் தருகிறாள். இரண்டாவது மூன்று நாட்கள் லட்சுமியாக இருந்து, நமக்கு க்ரியா சக்தியை, அதாவது, வேண்டிய எல்லா செல்வங்களையும் கொடுத்து, நம்மை முழு மனிதனாக ஆக்குகிறாள். மூன்றாவது மூன்று நாட்கள் சரஸ்வதியாக உருவாகி, நமக்கு ஞான சக்தியை அருளி, நாம் மோட்சம் அடையும் வழியைக் காட்டுகிறாள்.

பத்தாவது நாள் தசமியன்று, மோட்சத்தை அடைய வழி ஏற்பட்டதைக் கொண்டாடும் தினம்.நவராத்திரி பூஜையை நிறைய பேர் சேர்ந்து சமஷ்டி பூஜையாகச் செய்யலாம். எப்போதுமே கூட்டுப் பிரார்த்தனைக்கு சக்தி அதிகம். நவராத்திரியின் போது காலையில் பூஜையை அனுஷ்டானங்களுடன் செய்ய வேண்டும். தேவி மகாத்மியத்தில் ஒவ்வொரு நாளுக்கும், ஒரு அத்யாயம் அல்லது குறிப்பிட்ட வழிமுறைப்படி பாராயணம் செய்ய வேண்டும்.முதல் மூன்று நாட்கள், துர்க்காஷ்டகமும், இரண்டாவது மூன்று நாட்கள், லட்சுமி அஷ்டோத்திரமும், மூன்றாவது மூன்று நாட்கள் சரஸ்வதி அஷ்டோத்திரமும் சொல்லி பூஜை செய்ய வேண்டும்.பூஜைக்குப் பயன்படுத்தும் பூக்களில் வாடல், அழுகல் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

அதேபோல், வெற்றிலையும் அழுகலோ அல்லது கோணலாகவோ இல்லாமல் தேர்வு செய்ய வேண்டும். பாக்கும் நல்ல பாக்காக இருக்க வேண்டும். ஏனென்றால், தேவிக்கு நாம் சிறப்பானதைத்தான் படைக்க வேண்டும். பூஜை செய்வது நம் வசதியைப் பொறுத்தது. பூஜை முடிந்த பிறகு, தினமும் ஒரு தம்பதிக்கு விருந்து படைக்கலாம் அல்லது ஒன்பது நாட்களில் ஏதாவது ஒரு நாள், இந்த விருந்து உபசாரத்தைச் செய்யலாம். இது செய்ய இயலாதவர்கள், சுமங்கலிக்கு ஒரு நாள் கண்டிப்பாக விருந்து உபசாரம் செய்வது அவசியம். அதே போல், ருது அடையாத கன்யா பெண்களையும் உபசரித்து, உணவளித்து, தாம்பூலம் கொடுக்க வேண்டும். வசதி குறைந்தவர்கள், குத்து விளக்கையே தேவியாக நினைத்து பூஜை செய்து, தம்மால் முடிந்ததை நிவேதனம் செய்து, யாராவது ஒருவருக்கு, மனதார தாம்பூலம் கொடுத்தாலே, பூஜையின் முழுப் பலனும் கிடைக்கும். மூல நட்சத்திரத்தன்றே சரஸ்வதியை ஆவாஹனம் செய்ய வேண்டியது முக்கியம். சரஸ்வதியை விக்ரக வடிவத்திலோ அல்லது புஸ்தக வடிவத்திலோ ஆவாஹனம் செய்யலாம்.ஆத்மார்த்தமாக, மனம் ஒப்பி பூஜை செய்ய வேண்டும். எல்லாவற்றையும் நமக்கு தேவிதான் கொடுக்கிறாள்.
அவளுக்குச் செலுத்தும் சிறு நன்றிதான் இந்த நவராத்திரி பூஜை.

ஓம் நமசிவாய
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

No comments:

Post a Comment

Followers

கார்த்திகை மாத சோமவாரம் சிறப்புகள்

*கார்த்திகை மாத சோமவாரம் சிறப்புகள்*  *சரணம் சரணம் அகிலம் காக்கும் தந்தை  அண்ணாமலையார்  பொற் பாதங்கள் சரணம்*  *கார்த்திகை மாத தி...