Thursday, January 26, 2023

கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம்,திருக்கண்டேஸ்வரம் சிவன்கோயில்Thirukandeswaram sivan temple

கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம்,திருக்கண்டேஸ்வரம் சிவன்கோயில்
Thirukandeswaram sivan temple 
கடலூர்-பண்ருட்டி சாலையில் பத்தாவது கிமில் உள்ளது நெல்லிகுப்பம். நெல்லிகுப்பத்தின் மேற்கில் உள்ளது திருகண்டேஸ்வரம் ,பிரதான சாலையின் வடக்கில் உள்ளது கோயில் 

‘சீரார் வடுவூர்  சிவற்கொரு நந்தா விளக்கு’ என்று திருஞான சம்பந்தப் பெருமான் போற்றிப் பாடிய தலம் சுயம்பு லிங்க தலம். 

இந்த திருத்தலம் திருஞானசம்மந்தர் அவர்களால் பாடல் பெற்றது ? இந்த திருவடுகூர் (எ) திருக்கண்டீஸ்வரம் என்கின்றனர்.  திருவடுகூர் என்ற பெயர் கல்வெட்டில் பதிவு பெற்றுள்ளது.
 
படைக்கும் திறனை இழந்திருந்த பிரம்மதேவர், தன்னுடைய படைக்கும் திறனை மீண்டும் பெற்ற தலம், மேலும் தன் தந்தை சம்ஹாரம் செய்யப்படுவதற்குத் தானே காரணமாகிவிட்டோமே’ என்று சித்தப்பிரமை பிடித்ததுபோல் இருந்த பிரகலாதனின் சித்த பிரமையைப் போக்கிய திருத்தலம், மகாபலி சக்கரவர்த்திக்கு சிரஞ்ஜீவித்துவம் அருளிய திருத்தலம்இப்படி பல பெருமைகளுக்குரியது இத் திருக்கண்டேஸ்வரம்.  

மிகப்பெரிய வளாகமாக கோயில் காணப்படுகிறது. மேற்கு நோக்கிய சிவாலயம்,முதன்மை கோபுரம் இல்லை எனினும் கொடிமரம் பலி பீடம் என அனைத்து அம்சங்களுடன் உள்ளது கோயில். பழமையான திருக்கோயில். விநாயகர் தென்மேற்கில் கிழக்கு நோக்கி உள்ளார். முருகன் தனி சிற்றாலயத்தில் தனி கொடிமரம் இவற்றுடன் கிழக்கு நோக்கி உள்ளார்.  முருகன் சன்னதியின் அருகிலேயே தென் புறம் நோக்கி பாண்டுரங்கன் சன்னதி உள்ளது.
 
அம்பிகை ஆலயம் தனியாக இறைவனுக்கு இடப்புறம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. எதிரில் பிரம்மதீர்த்தம் எனும் பெரிய குளம் ஒன்றும் உள்ளது. இறைவன் மேற்கும் இறைவி கிழக்கும் நோக்கியிருக்கும் கோயில்கள் மிகச்சிலவே. 

திருக்கண்டேஸ்வரத்தில் உள்ள நடனபாதேஸ்வரர் திருக்கோவில் 1500 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டது. எனலாம்.
 
மேற்படி கோவிலை பராந்தக சோழன், ராஜ ராஜசோழன், ராஜேந்திர சோழன், குலோத்துங்க சோழன், புறையன், சாலவ நரசிம்மன், ஆந்திர தளபதி நரசையன்  ஆகியோர் இக்கோவிலுக்கு திருப்பணிகள் செய்தவர்கள் என்றும் சொல்லப்படுகிறது.

இக்கோயில் இறைவனுக்கு ஆடும் அடிகள், மன்றில் குளிக்கும் பெருமாள், வடுகூர் மகாதேவர், முண்டீசர் சிவலோகநாதர், பழியில் புகழனார் திருகண்ணிஸ்வரமுடைய மகாதேவர், திருக்கண்ணீச்சரமுடயார் என பல திருநாமங்கள் உள்ளன. இருந்தபோதிலும் இறைவன்- நடனபாதேஸ்வரர்  என தற்போது அழைக்கப்படுறார். 
இறைவி- தளரும் கொடியாள், கானார் குழலியம்மை, கைத்தாளம் போடும் உமை எனவும் தற்போது  ஹஸ்ததாளாம்பிகை எனப்படுகிறார். 
இத்தல இறைவன் சுந்தரர் பாடியபோது இறைவன் நடனமாடியதாகவும் இறைவி கைத்தாளம் இட்டதாகவும் நந்தி மத்தளம் இசைத்ததாகவும் கூறப்படுகிறது. இறைவன் ஆடியதற்கு சுந்தரரிடம் கூலி கேட்டதாகவும், ஒரு புராண கதை உள்ளது.  காசிக்கு அடுத்து இங்கு தான் ஆறு கரங்கள் கொண்ட பைரவர் உள்ளார், இவருக்கு ஆனந்த கால பைரவர் எனப்படுகிறார். 

இக்கோயிலில் 24 கல்வெட்டுக்கள் படியெடுக்கப்பட்டுள்ளன. இரண்டாம் ராஜராஜன், முதலாம் குலோத்துங்கன், விக்கிரமசோழன், திருபுவனசக்கரவர்த்தி கோனேரின்மை கொண்டான், சடையவர்மன் சுந்தரபாண்டியன் கல்வெட்டுக்கள் உள்ளன. இரண்டாம் இராஜேந்திரன் காலத்தில் திருவடுகூர்  எனவும் விக்கிரமசோழன் காலத்தில் ராஜராஜ வளநாடு எனவும் சோழகுலவல்லி நல்லூர் எனவும் அழைக்கப்பட்டு உள்ளது. 

சீரார் வடுவூர் சிவற்க்கொரு நந்தா விளக்கு என கூறப்பட்டுள்ளதை வைத்து  சம்மந்தர் இவ்வூரை வடுகூர் என பாடியதை அறியலாம் ௧௩௦௦ / 1300 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த கோயில் தனி தன்மை மாறாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

 அகத்தியர், அத்திரி, பிருகு, குச்சர், வசிஷ்டர், கௌதமர், காசிபர், ஆங்கிரசமுனி எனும் சப்த ரிஷிகளும், புலஸ்தியர் ஸ்வயம்புவமனு, அக்னி, மிருகண்டு, கபிலர் போன்றவர்களும் வழிபட்டுள்ளனர். விமானத்தின் கோஷ்டங்களில் கிழக்கில் லிங்கோத்பவருக்கு மேல்  இந்திரன், மேற்கில் யோக நரசிம்மர் வடக்கில் பிரம்மனும் தெற்கில் தக்ஷணமூர்த்தியும் உள்ளனர்.  ஈஎசான்ய மூலையில் நவக்கிரக சன்னதி  உள்ளது. 
இந்தக் கோயிலில் ஈசான்ய மூலையில் தெற்கு சன்னதி கொண்டருள்கிறார் ஆனந்த பைரவர். பிரம்மதேவன் படைப்புத் திறனை மீண்டும் பெறுவதற்கு அருள்பாலித்த மூர்த்தி இவர்தான் என்கிறார்கள். இந்தப் பைரவருக்கு பௌர்ணமி, அமாவாசை,  தேய்பிறை அஷ்டமியில் திராட்சைச் சாறு, மாதுளம் சாறு மற்றும் தேன் படைத்து வழிபட்டால் , திருமணத் தடை நீங்கி நல்ல வரன் அமையும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கை. அதேபோல், கொடுத்த கடன் திரும்பாவிட்டால், அஷ்டமி நாளில் இங்கு வந்து பைரவரை வழிபட்டால், வாராக் கடன்கள் திரும்பகிடைக்கும்.
 
பைரவரின் சன்னதியில் வழங்கப்படும் ரட்சை தீர்த்தம் மிகவும் சிறப்பு. வெட்டிவேர், விளாமிச்சைவேர், நன்னாரி வேர், பச்சைக்கற்பூரம், குங்குமப்பூ, பன்னீர், கோரக்கிழங்கு, கஸ்தூரி மஞ்சள், ரோஜா மொட்டு, செண்பகம் மொட்டு, மிராட்டி மொட்டு, பேரீச்சங்காய் ஆகியவை சேர்த்து ஆகம முறைப்படி தயாரிக்கப்படும் தீர்த்தம் ஆனந்த பைரவருக்கு படைக்கபடுகிறது. இந்த தீர்த்தத்தைப் பருகினால், உடற்பிணிகள் அனைத்தும் நீங்கிவிடுவதாக நம்பிக்கை. நாங்கள் சென்றிருந்த பகல் வேளையில் பைரவர் எங்களுக்கு காட்சியளித்தது  கண்டு மிக்க மகிழ்ச்சி அடைந்தோம். 
இக்கோயிலுக்கு என புதிய தேரும் தயாராகி உள்ளது. கோயில் திருப்பணி கண்டு வருகிறது. 

#வாருங்கள்கிராமசிவாலயம்செல்வோம்

No comments:

Post a Comment

Followers

சிவனுக்கு வில்வ இலை அர்ச்சனை மிகவும் விசேஷமானது.

_வில்வ மரத்தை வழிபட்டால் பல சிவ க்ஷேத்திரங்கள் போன பலன் கிடைக்கும்_ 'பிரும்மா விஷ்ணு சிவன்' என்ற மும்மூர்த்திகளைத் தன்னக...