Showing posts with label #Kamakshi Amman Temple #mangadu #Hindu temple #Chennai #Tamil Nadu #India. Show all posts
Showing posts with label #Kamakshi Amman Temple #mangadu #Hindu temple #Chennai #Tamil Nadu #India. Show all posts

Monday, June 2, 2025

சென்னை மாங்காடு காமாட்சி அம்மன்

*மாங்காடு காமாட்சி அம்மன்*  
பூந்தமல்லியிலிருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ளது, இத்தலம். கருவறையில் ஆதிசங்கரரால் அஷ்டகந்தங்கள் எனும் எட்டுவகை மூலிகைகளால் ஆன அர்த்தமேரு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. 

ஒரு கையில் கிளியை ஏந்தி, ஒரு கையை தொங்கவிட்ட நிலையில் திரிபங்கமாக, அதாவது ஒயிலாக, மூன்றாக வளைந்த நிலையில் காட்சி தரும் அம்பிகையின் எழிலுருவம் மனதை கொள்ளை கொள்கிறது. 

*‘நிம்மதி தரும் சந்நதி, நீயே எனது நவ நிதி’* என பக்தர்கள் இந்த அன்னையை சரணடைகின்றனர். 

ஐந்தணலில் நின்று அருந்தவம் புரிந்து சங்கரனை மணந்த சங்கரியை ஆலய பிராகாரத்தில் தரிசிக்கலாம். ஆறு வாரம் தொடர்ந்து அன்னையைத் தொழ சங்கடங்கள் மறைகின்றன.
ஆதிசங்கரர், தன் திக்விஜயத்தின்போது தொண்டைமண்டலத்திலுள்ள அந்த மாமரக் காட்டுக்குள் புகுந்தார். அந்தக் காட்டின் மையப்பகுதி தகித்துக்கொண்டிருந்தது. 

அது வெறும் அக்னிச் சூடாக இல்லாமல் ஒரு சக்தியின் உக்கிரமாய், வெப்பம் கமழ்ந்திருந்தது. ஈசன் உமையோடு கயிலையில் வீற்றிருந்தார். சக்தியான பார்வதி ஈசனின் கண்களை விளையாட்டாய் பொத்தினாள். 

ஈசன் கோபமானார். தன் கண்கள் மூடப்பட்டதால் பிரபஞ்சமே இருளில் மூழ்கிய வினை உணர்ந்து கோபம் கொண்டார் ஈசன். ‘என் பணியை விளையாட்டாக நினைத்த நீ பூலோகத்திற்குப் போய் தவம் செய். 

என் உண்மையான சொரூபம் புரிந்து கொள். அலட்சியம் அறுத்து, அகங்காரம் அழித்து வா,’ என்றார்.  
   
பார்வதிதேவி தன் தவறு புரிந்து பரிதவித்தாள். ஈசனோடு மீண்டும் இணைய வேண்டுமே என்று பெருங்கவலை கொண்டாள். பூலோகத்தில் அடர்ந்த மாமரங்கள் சூழ்ந்த காட்டினுள் மெல்லிய பூவாய் மென்மையாய் வந்திறங்கினாள். 

அங்கிருந்த ஒரு மாமரத்தடியில் நின்றாள். மண் குவித்தாள். அதை ஐந்து பாகமாக்கினாள். அதில் குழிவாய் பள்ளம் செய்து சுற்றிலும் கரை அமைத்து யாக குண்டமாக மாற்றினாள். மாமரத்தைச் சுற்றிலும் நிறுவினாள். ஈசனை நெஞ்சத்தில் நிறுத்தினாள். 

ஐந்து குண்டங்களையும் உற்றுப் பார்க்க குண்டத்தினுள் விழி ஜோதியினின்று தெறித்த சுடர் சட்டென்று வளர்ந்து அந்த மாமரத்தையே வளைத்துக் கொண்டது. புறத்தில் ஒளிர்ந்த தீ அவள் அகத்தினுள்ளும் வைராக்கியம் எனும் பெருந்தீயாய் வளர்ந்தது. 

நடுக்குண்டத்தில் தனது இடதுகால் கட்டை விரலை ஊன்றி  நின்றாள். வலதுகாலை இடது தொடையின்மேல் பதித்து மடித்து  தூக்கினாள். இடதுகை நாபிக்கமலத்திற்கு அருகேயும், வலது கை ஜபமாலையோடு தன் சிரசிற்குமேல் முத்திரைகாட்டி நின்றாள். 

அம்மை ஈசனின் சொரூபத்தை அகத்தில் நிறுத்தினாள். அந்த தவத்தின் உக்கிரம் காட்டையே வெம்மையாக்கியது; கயிலைநாதனையும் அசைத்தது. கயிலைநாதன் கருணை கொண்டான். 

அம்மைமுன் தோன்றி, அவளை மணம் புரிய காஞ்சிக்கு வரச்சொன்னான். அதேபோல் மணம் புரிந்து தன் அகம் சேர்த்துக் கொண்டார். 

ஆனால், மாங்காட்டில் அந்த பஞ்சாக்னியின் உக்கிரம் தணிக்கப்படாமல் சென்றதால், அம்பாளின் இருப்பு கனன்ற வெப்பமாகவே இருக்கிறது. அதை குளிர்வித்து காமாட்சி அம்மனின் அருளை பருகச்செய்ய முன்வந்தார் ஆதிசங்கரர். 

அஷ்டகந்தம் எனும் எட்டு மூலிகைகளால் ஆன ஸ்ரீஅர்த்தமேரு ஸ்ரீசக்ரத்தை அங்கே பிரதிஷ்டை செய்தார். பிழம்பாய் இருந்த அம்மனின் சாந்நித்யத்தை அமுதமாய் பொழியச்செய்தார்.  

இன்றும் இத்தலம் மாங்காடு என்றே அழைக்கப்படுகிறது. காமாட்சி அம்மன் நிரந்தரமாய் அவ்விடத்தில் அமர்ந்தாள். 

காமாட்சி மோனநிலையில் தவக்கோலத்தில் இருப்பதால் மூலஸ்தானத்தில் சாந்தமே உருவான ஆதிகாமாட்சியை சுக்ராச்சாரியார் பிரதிஷ்டை செய்தார். தபஸ் காமாட்சி, சிலை உருவில் அருள் பாலிக்கிறாள்.      - (வேலாயுதம் செ)

மூலத்தான அம்பாள் முகத்தில் கருணை ததும்பி வழிகிறது. நாம் கேட்காமலேயே நம் வேண்டுதல் நிறைவேறும் மகத்தான சந்நதி அது. அம்பாள் முன்பு வெறுமே கைகூப்பி நின்றால் போதும், நம் வாழ்வுதனை அவள் தன் கையில் ஏந்தி பக்குவமாகப் பாதுகாக்கிறாள். 

காமாட்சி முதலில் மாங்காட்டில் தவம் இருந்த பிறகே காஞ்சீபுரத்துக்கு எழுந்தருளினாள். மாங்காடு காமாட்சி அம்மன் பற்றிய 25 சிறப்பான, அரிய தகவல்களை கீழே பார்க்கலாம்.

*மாங்காடு காமாட்சி அம்மன் 25 சிறப்பு தகவல்கள்*

1. காமாட்சி என்றதும் அனைவருக்கும் காஞ்சீபுரம்தான் நினைவுக்கு வரும். ஆனால் காமாட்சி முதலில் மாங்காட்டில் தவம் இருந்த பிறகே காஞ்சீபுரத்துக்கு எழுந்தருளினாள் என்று காஞ்சிப்புராணத்தில் கூறப்பட்டுள்ளது.

2. மாங்காட்டில் காமாட்சி அம்மன் சிவனை நோக்கி தவம் இருக்கும் கோலத்தில் காட்சித் தருகிறாள்.

3. அன்னை பார்வதி தேவி எத்தனையோ தவம் இருந்துள்ளாள். அதில் மிகக் கடுமையான தவமாக மாங்காட்டில் இருந்த தவம் கருதப்படுகிறது.

4. மாங்காடுக்கு வடமொழியில் “ஆம்ராரண்யம்” என்று பெயர். அம்ரம் என்றால் மாமரம். அரண்யம் என்றால் காடு. எனவே ஆம்ராரண்யம் என்று அழைக்கப்பட்டது.

5. காமாட்சி வருவதற்கு முன்பே மாங்காடு புண்ணிய பூமியாக இருந்ததாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

6. மாங்காடு தலத்தில் பார்கவர், மார்க்கண்டேயர் ஆகிய மகரிஷிகள் தவம் இருந்து பலன் பெற்றுள்ளனர்.

7. மாங்காட்டில் சுமார் 1500 ஆண்டுகளுக்கு காமாட்சியம்மன் ஆலயத்தை சோழ மன்னர்கள் கட்டினார்கள். அவர்களால் கருவறை, அர்த்த மண்டபம் கட்டப்பட்டது.

8. விஜயநகர பேரரசு மன்னர்கள் இத்தலத்தில் பல்வேறு திருப்பணிகள் செய்துள்ளனர். மகா மண்டபம், சபா மண்டபம் அவர்கள் கட்டியதுதான்.

9. இவ்வாலயத்தில் ஆதிசங்கரர் நிறுவிய அர்த்தமேரு ஸ்ரீசக்கரமே மூலஸ்தானமாக உள்ளது.

10. இவ்வாலயத்தில் காமிக ஆகம முறைப்படி பூஜைகள் நடைபெற்று வருகின்றன.

11. மாங்காடு தலம் மிகச் சிறந்த பிரார்த்தனை தலங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.  - (வேலாயுதம் செ)

12. இத்திருக்கோவிலில் “எலுமிச்சம்பழம் கொண்ட ஆறு வார வழிபாடு” பக்தர்களால் பெரிதும் கடைப்பிடிக்கப்படுகிறது.

13. செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் இத்தலத்தில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.

14. பூந்தமல்லிக்கும், குன்றத்தூருக்கும் நடுவில் மாங்காடு உள்ளது. சென்னையில் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் இங்கு வர மாநகர பஸ் வசதி உள்ளது.

15. மாங்காடுக்கு சூதவதனம், மாலை என்ற பெயர்களும் உண்டு.

16. மாங்காடு காமாட்சிக்கு ஆதிகாமாட்சி, தபஸ் காமாட்சி என்றும் பெயர்கள் உண்டு.

17. இத்தலத்தில் ஆதிசங்கரர் நிறுவிய அர்த்தமேரு சக்கரம், சந்தனம், அகில், பச்சைக்கற்பூரம், குங்குமப்பூ, கோரோசனம், சிலாஜித், ஜடாமாஞ்சீ, கச்சோலம் ஆகிய 8 வகையான கந்தங்களைக் கொண்டது.

18. மாங்காடு காமாட்சிக்கும் ஒற்றை மாமரத்துக்கும் தொடர்பு உண்டு. ஆனால் ஏனோ இத்தலத்தில் ஒற்றை மாமரம் இல்லை.

19. மாங்காடு கோவிலில் அரசர்கள் காலத்தில் செதுக்கி வைக்கப்பட்டுள்ள ஏராளமான கல்வெட்டுகள் உள்ளன. அந்த கல்வெட்டுகளில் 8 கல்வெட்டுகள் படி எடுக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டுள்ளன.

20. கல்வெட்டுகளில் மாங்காட்டின் பெயர் “அழகிய சோழ நல்லூர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

21. சிவபெருமானின் உத்தரவை ஏற்று பார்வதி தேவி, கன்னிப் பெண்ணாக மாங்காட்டில் எழுந்தருளியதால் இத்தலத்தில் கன்னிப்பெண்கள் மனம் உருகி அம்பாளை வழிபட்டு என்ன வரம் கேட்டாலும் கிடைக்கும் என்பது ஐதீகமாகும்.

22. அன்னை காமாட்சியை வழிபட்டால் கிரக தோஷங்கள் அனைத்தும் விலகி ஓடி விடும்.

23. இத்தலத்து தங்கரதம் 17.5 கிலோ எடை அளவு தங்கத்தால் செய்யப்பட்டதாகும். இது தமிழகத்தில் உயரமான தங்க ரதங்களில் ஒன்றாகும்.  - (வேலாயுதம் செ)

24. மாங்காடு காமாட்சியை முன்பு பூஜை வைத்த ஏகாம்பரம் குருக்கள் பார்த்து இருப்பதாக செவி வழி செய்தி ஒன்றுள்ளது.

25. கோவில் உள் பிரகாரத்தில் ஆதிசங்கரரின் உருவச்சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Followers

பிள்ளையார் விரும்பும் 'மோதகம்' நைவேத்தியம் என்றால் என்ன❓

பிள்ளையார் விரும்பும் 'மோதகம்' நைவேத்தியம் மோதக் என்றால் உற்சாகம், மகிழ்ச்சி என்று பொருள். அகம் என்ற சொல்லுக்கு ‘வழங்கக்...