Showing posts with label #Brahmapureeswarar temple #Hindu temple #Thiruppattur #Tiruchirappalli #Tamil Nadu #India. Show all posts
Showing posts with label #Brahmapureeswarar temple #Hindu temple #Thiruppattur #Tiruchirappalli #Tamil Nadu #India. Show all posts

Thursday, August 7, 2025

திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் சிவனை பிரம்மா வணங்கிய ஆலயம்.



திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் சிவனை பிரம்மா வணங்கிய ஆலயம். ஊர் திருப்பட்டூர். புராண பெயர் திருப்பிடவூர். மூலவர் பிரம்மபுரீஸ்வரர் கிழக்கு நோக்கி சுயம்பு மூர்த்தியாக அருள் பாலிக்கிறார்.  


திருப்பட்டூர் அற்புதங்கள் : 30

1. சிவ பக்தியுடன் வாழ்ந்து வந்த வியாக்ரபாதர், சிவனாரை நோக்கி இந்த தலத்தில் தவம் செய்தார்.

2. திருச்சியில் உள்ள புகழ்பெற்ற தலம்

திருப்பட்டூர் திருத்தலம் ஒரு காலத்தில் மிகச் செழிப்பாக இருந்தது. எப்போதும் வேத கோஷங்கள் காற்றில் நிரம்பி புண்ணிய பூமியாக திகழ்ந்தது.

3. இத்தலத்தில் உள்ள தீர்த்தக்குளத்து நீரை, எவர் கையில் எடுத்தாலும் அவர்களுக்கு கங்கையில் நீராடிய பலனும் கிடைக்கும்.
4. இத்தலத்தில் 3001 அந்தணர்கள் வேதங்களை அனுதினமும் பாராயணம் செய்ததால் அதில் உண்டான அதிர்வலைகள் அங்கிங்கெனாதபடி எங்குமாக பரவிக் கிடப்பதால் திருப்பிடவூர் எனப்பெயர்பெற்றது. திருப்பிடவூர் என்பதே காலப்போக்கில் திருப்பட்டூராக மாறியது.

5. இது காசிக்கு நிகரான தலம் மட்டுமல்ல. திருக்கைலாயத்திற்கு நிகரான தலமும் ஆகும். இத்தலத்தில் ஸ்ரீமந் நாராயணரை வணங்கி தொழுததால் ஆதிசேஷன் அடுத்த கணம் பதஞ்சலி முனிவராக மாறினார்.

6. கர்வத்தை ஒழிப்பவர்கள் மனதில் இறைவன் உறைவதும், அவனே இறைவனாக மாறிப்போவதும் இத்தலத்தில் நிகழும்.

7. திருக்கயிலாய ஞான உலா எனும் நூல் இத்தலத்தில் அரங்கேறியது.

8. சிவ பெருமான், தன் அடியவர்கள் பலரையும் இந்த தலத்திற்கு அழைத்து வந்து திருவிளையாடலை நிகழ்த்தி இருக்கிறார்.

9. சேர மன்னன் நாயானாரும், சுந்தரரும் நெகிழ்ந்து வணங்கிப் பேறு பெற்ற அற்புதமான இடம் இதுவாகும். மாசாத்தனார் ஓலை நறுக்குகளுடன் காட்சி தரும் விக்கிரகத் திருமேனியை கோவிலின் மூலமூர்த்தமாக இன்றைக்கும் இங்கு தரிசிக்கலாம்.

10. சிவபெருமான் பிரம்மனின் ஒரு தலையை கிள்ளி எறிந்த தலம் திருவையாறு அருகில் உள்ள திருக்கண்டியூர் தலத்திலாகும். அந்த பிரம்மன் பரிகாரம் தேடி கொண்டது திருப்பட்டூராகும்.

11. பிரம்மன் உருவாக்கிய பிரம்ம தீர்த்தக் குளம், சிவலிங்கச் சந்நிதிகளும் இங்கு அமைந்துள்ளன. இங்கு வழிபட்டால் 12 சிவாலயங்களுக்கு சென்று வழிபட்ட புண்ணியம் கிடைக்கும்.

12. பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் மாதாவாக பிரம்ம சம்பத்கவுரி கனிவு ததும்ப கருணை பொங்கக் காட்சி தருகிறாள். இவளுக்கு செவ்வாய், வெள்ளி கிழமைகளில் புடவை சார்த்தி வேண்டிக் கொண்டால் தடைப்பட்ட திருமணம் இனிதே நடைபெறும்.

13. பிரதோஷ நாளில் இங்கு ஒரே நேரத்தில் நந்திக்குச் செய்யப்படுகிற பூஜையையும், நரசிம்ம மூர்த்தியையும் தரிசிக்கலாம்.

14. ஏழேழு ஜென்ம பாவங்களை நீக்கி பஞ்சபூதங்களாக உறைந்து இத்தலத்து ஈசன் நம்மை காக்கிறார்.

15. பிரம்மாவை வணங்கும் போதே குரு தட்சிணாமூர்த்தியை தரிசிக்கலாம்.

16. குரு பகவானுக்கு அதி தேவதை யான பிரம்மா தனி சந்நிதியுடன் திகழும் தலம் இதுவாகும்.

17. இத்தலத்திற்கு திருப்படையூர் என்ற பெயரும் வழக்கத்தில் இருந்தது.

18. சுப்ரமணிய சுவாமிக்கு வஸ்திரம் சார்த்தி, சர்க்கரை பொங்கல் நைவேத்தியம் செய்து பிரார்த்தனை செய்தால் வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும்.

19. தலை எழுத்தையே மாற்றி அருளும் திருப்பட்டூரில் குடி கொண்டிருக்கும் சுப்ரமணியரை வணங்கினால் மோட்சம் நிச்சயம் கிடைக்கும்.

20. தேய்பிறை அஷ்டமி யில், ராகு கால வேளையில் காலபைரவரைத் தரிசித்து அவரின் வலது காதில் நம் பிரச்சினைகளைச் சொல்லி வணங்கு வதற்காகத்தான் இத்தலத்தில் கால பைரவரின் வலது காது வித்தியாசமாக உள்ளது.

21. இத்தலத்தில் கால பைரவருக்கு நேர் எதிரில் இருக்கும் கஜலட்சுமியை வணங்கினால் ஐஸ்வர்யம் கிடைக்கும்.

22. 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை திருச்சி, முசிறி மற்றும் துறையூர் என சுற்று வட்டார ஊர்களைச் சேர்ந்தவர்களுக்குக்கூட திருப்பட்டூர் என்கிற ஊரே தெரியாமல் இருந்தது. ஆனால் இன்றைக்கு இத்தலம் தமிழகத்தையும் கடந்த பெங்களூரு, ஆந்திரா முதலான மாநிலங்களையும் தாண்டி பிரபலமாகியுள்ளது.

23. இத்தலத்திற்கு வந்து காசி விஸ்வநாதரையும், பிரம்மபுரீஸ்வரரையும் கண்ணாரத் தரிசித்து

வணங்குபவர்களுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும். புதிய சக்தியுடன் சிவத்தொண்டு புரிவர்.

24. பூணூல் கல்யாணம் எனும் சடங்கை இத்தலத்தில் செய்வது விசேஷம் ஆகும்.

25. திருபட்டூர் சுற்று வட்டாரத்தில் உள்ள விவசாயிகள் இங்கு வந்து அம்பாளின் திருவடியில் விதை நெல்லை வைத்து வணங்கி விட்டு, பிறகு அதை ஊர்வலமாக எடுத்துச்சென்று தங்களின் வயல்களில் விதைத்தால், தானியங்கள் செழிப்பாக வளர்ந்து லாபம் கொழிக்கும் என்கிறார்கள்.

26. இத்தலத்துக்கு வந்து பிரம்மாவின் திருச்சந்நிதியில் ஜாதகத்தை வைத்து மனதாரப் பிரார்த்திக்கும் பக்தர்கள், பிரார்த்தனை நிறைவேறியதும் வஸ்திரம் சார்த்தி நேர்த்திக் கடன் செலுத்துகின்றனர்.

27. 11 வியாழக்கிழமை தவறாமல் இங்கு வந்து தியானம் செய்தால் மன அமைதி கிடைக்கும் என்கிறார் இங்கு வரும் பக்தர் ஒருவர்.

28. வெள்ளைத் தாமரை சார்த்தி பிரம்மாவை வழிபட்டால் உடனடி பலன் கிடைக்கும் அதே போல் நீங்கள் பிறந்த நட்சத்திர நாளில் இத்தலத்தில் வழிபட்டால் புண்ணியம் நிச்சயம் சேரும்.

29. ஆடி சுவாதி நட்சத்திர நாளில், திருப்பட்டூர் வந்து மூன்று கோவில்களுக்கு சென்று தரிசனம் செய்யுங்கள். அப்படி தரிசித்த பலனை, அடுத்தடுத்த நாளிலேயே உணர்வீர்கள்.

30. ஒரேயரு முறை திருப்பட்டூர் தலத்தில் காலடி எடுத்து வையுங்கள். மனதின் அத்தனை துக்கங்களும் பறந்து, மனம், புத்தி, செயல், சிந்தனை யாவற்றிலும் ஓர் ஒழுங்கை, நேர்த்தியை, தெளிவை உணர்வீர்கள்

திருப்பட்டூர் பிரம்மாவைத் தரிசித்தால், நம் தலையெழுத்தையே திருத்தி அருள்கிறார். இனி, நமக்கு நல்லகாலமாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், திருச்சியில் இருந்து சுமார் 28 கி.மீ. தொலைவில் உள்ளது சிறுகனூர். இங்கிருந்து கிளை பிரிந்து செல்லும் சாலையில், 5 கி.மீ/. தொலைவில் உள்ளது திருப்பட்டூர். சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து பஸ் வசதி உண்டு. சிறுகனூரில் இருந்தும் சிறுகனூரை அடுத்த எம்.ஆர்.பாளையத்தில் இருந்தும் ஆட்டோ வசதி உண்டு. திருச்சியில் இருந்து காரில் ஆலயத்துக்கு வருவதே உத்தமம்.

வாழ்வில் ஒருமுறையேனும் திருப்பட்டூர் வாருங்கள். வாழ்வில் நல்ல நல்ல திருப்பங்கள் நிச்சயம் நம்மைத் தேடி வரும் என்பது உறுதி.

திருப்பட்டூர் தல மகிமையைப் பார்ப்போம்.

கர்வமும் ஆணவமும்தான் முதல் எதிரி. கர்வம் இருக்கும் இடத்தில் அன்பு இருக்காது. ஆணவம் இருந்துவிட்டால், அங்கே மதிப்புமரியாதைக்கு வேலையே இல்லை. தவிர, கர்வத்துடன் எவர் இருந்தாலும், அவருக்கு துயரமும் அழிவும் நிச்சயம். நம்மைப் படைத்த பிரம்மாவுக்கு, அப்படியொரு கர்வம் தலைக்கேறியது. ‘உனக்கு நிகரானவன் நான். உனக்கும் ஐந்து தலை. எனக்கும் ஐந்து தலை’ என்று சிவபெருமானிடம் கொக்கரித்தார் பிரம்மா. அவருக்கும் அகிலத்து மக்களுக்கும் பாடம் நடத்த, தன் விளையாட்டைத் துவக்கினார் சிவபெருமான்.

 

பிரம்மாவின் ஒரு தலையைக் கொய்தார். கொடுத்த படைப்புத் தொழிலையும் பிடுங்கிக் கொண்டார். துடித்துப் போனார் பிரம்மா. அகங்காரம் தந்த அழிவும் அதனால் பொங்கிய அவமானமும் கலங்கடித்தது பிரம்மாவை! சிவனாரிடம் சரணடைந்தார். ‘அப்பா சிவனே. என்னை மன்னித்துவிடுங்கள். தவறை உணர்ந்தேன். பிராயச்சித்தம் தாருங்கள்’ என மன்றாடினார்.

அதையடுத்து சிவனாரின் அறிவுரைப்படி கடும்தவம் புரிந்தார். அனுதினமும் சிவலிங்க பூஜைகள் செய்து வந்தார். அதன் பலனாக, இழந்ததைப் பெற்றார். ஸ்ரீபிரம்மா உருவாக்கிய தீர்த்தக்கிணறு, பிரம்மதீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. அவர் பிரதிஷ்டை செய்து வழிபட்ட 12 தலங்களில் உள்ள லிங்கங்கள், இங்கே பிரம்மபுரீஸ்வரர் கோயிலில், 12 சந்நிதிகளாக, 12 சிறிய ஆலயங்களாக இன்றைக்கும் காட்சி தருகின்றன. இங்கு வந்து தரிசித்தால், 12 தலங்கள் மற்றும் திருப்பட்டூர் தலம் என 13 தலங்களுக்கும் சென்று தரிசித்த பலன்கள் கிடைக்கும். நம் வாழ்க்கையில் இழந்ததையும் தொலைத்ததையும், தேடுவதையும் நாடுவதையும் நிச்சயம் பெறலாம் என்பது ஐதீகம்!

பிரம்மாவுக்கு சாப விமோசனம் தரும் போது, தன் அடியவர்களுக்காக, பக்தர்களுக்காக சிவனார், பிரம்மாவிடம் என்ன சொல்லி அருளினார் தெரியுமா? ‘உன் சாபம் போக்கிய இந்தத் திருவிடத்துக்கு, என்னை நாடி வரும் அன்பர்கள் அனைவருக்கும் விதி கூட்டி அருள்வாயாக!’ என்றார் சிவபெருமான். அதாவது, இங்கே, இந்தத் தலத்துக்கு வரும் பக்தர்களின் தலைவிதியை நல்லவிதமாக, திருத்தி எழுதி, நல்வாழ்வு மலரச் செய்வாயாக என அருளினார் ஈசன். அதன்படி, எவரொருவர் பக்தி சிரத்தையுடன், ஆத்மார்த்தமாக, திருப்பட்டூருக்கு வந்து சிவ தரிசனம் செய்து, பிரம்மா சந்நிதியில் மனமுருகி வேண்டி நிற்கிறார்களோ, அவர்களின் தலையெழுத்தை திருத்தி அருள்கிறார் பிரம்மா.

அதனால்தான் திருப்பட்டூர் வந்தால், நல்லதொரு திருப்பம் நிச்சயம். தேக நலம் கூடும். ஆயுள் அதிகரிக்கும் என உறுதிபடச் சொல்கிறார்கள் பக்தர்கள். நடப்பவற்றுக்கெல்லாம் தானே ஓர் சாட்சியாக இருந்து, தன்னை நாடி வருவோருக்கெல்லாம் அருளையும் பொருளையும் அள்ளித் தந்து வாழவைக்கிறார் ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர் என்கிறார் கோயிலின் பாஸ்கர குருக்கள்.

பிரம்மபுரீஸ்வரரை வணங்கிவிட்டு, பிராகாரத்துக்குள் அடியெடுத்து வைத்ததுமே, விமானத்துடன் கூடிய தனிச்சந்நிதியில் உள்ள பிரமாண்டமான பிரம்மாவை கண்ணாரத் தரிசிக்கலாம்.நான்கு முகங்கள். நான்கு தலைகளிலும் அழகிய கிரீடம். நான்கு திருக்கரங்கள். அதில் இரண்டு திருக்கரங்களை மடியில் வைத்துக் கொண்டிருக்கும் அழகே அழகு! மற்றபடி வலது கரத்தில் ஜப மாலை, இடது கரத்தில் கமண்டலம். பத்ம பீடம் என்று சொல்லப்படுகிற, தாமரை மலரில் அமர்ந்து, தவ நிலையில் இருந்தபடி அருள்பாலிக்கிறார்.

பொதுவாக பிரம்மாவுக்கு மஞ்சள்காப்பு செய்து வழிபடுவது சிறப்பு. பிரம்மா குரு அல்லவா. எனவே வியாழக்கிழமையிலும் சிவனாருக்கு உகந்த திங்கட்கிழமையிலும் ஞாயிற்றுக்கிழமையிலும் வந்து வணங்கிச் செல்வது, மிகுந்த பலன்களைத் தரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

இங்கே, குரு பிரம்மாவையும் குரு ஸ்ரீதட்சிணாமூர்த்தியையும் பிரம்மாவின் சந்நிதியில் நின்று கொண்டே தரிசிக்கிற பாக்கியமும், இந்த ஆலயத்தின் சிறப்புகளில் ஒன்று.

அதுமட்டுமா? ஸ்ரீபிரம்மாவுக்கு எதிரில் உள்ள தூண்களில் ஒன்றில், ஸ்ரீசனீஸ்வர பகவானின் திருவுருவம், சிற்ப வடிவில் வடிக்கப்பட்டுள்ளது. எனவே இங்கு வந்து தரிசித்தால், சனி தோமும் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

திருப்பட்டூர் வாருங்கள்; பிரம்மாவை தரிசியுங்கள்; வாழ்வில் இனி உங்களுக்கு நல்ல காலமே! நல்ல நல்ல திருப்பங்கள் நிச்சயம்!

 மேலும், பூணூல் கல்யாணம் போன்ற சடங்குகளை இங்கு செய்வது விசேஷமாகக் கருதப்படுகிறது,  

திருப்பட்டூர் கோயிலின் அற்புதங்கள்:

வியாக்ரபாதரின் தவம்:

சிவபக்தரான வியாக்ரபாதர், இந்த தலத்தில் சிவபெருமானை நோக்கி தவம் செய்தார் என்று சொல்லப்படுகிறது. 

தீர்த்தக்குளத்தின் மகிமை:

இங்குள்ள தீர்த்தக்குளத்தின் நீரை அருந்துவது அல்லது பயன்படுத்துவது பல்வேறு நன்மைகளைத் தரும் என்று நம்பப்படுகிறது,  

பூணூல் கல்யாணம்:

இந்த கோயிலில் பூணூல் கல்யாணம் செய்வது விசேஷமாக கருதப்படுகிறது. 

பிரம்மனின் வழிபாடு:

பிரம்மன் இங்கு வந்து வழிபட்டதாக ஐதீகம் உள்ளது, மேலும் இங்குள்ள பிரம்மபுரீஸ்வரர் சிலை, பிரம்மனால் பிரதிஷ்டை செய்யப்பட்டது என்றும் சொல்லப்படுகிறது. 

இதுபோன்ற பல்வேறு காரணங்களால், திருப்பட்டூர் கோயில் ஒரு புனித தலமாக கருதப்படுகிறது. 

முகவரி

திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில், திருப்பட்டூர், வழி சிறுகானூர், திருச்சி மாவட்டம் – 621105

இறைவன்

இறைவன்: பிரம்மபுரீஸ்வரர் இறைவி: பிரம்மநாயகி

அறிமுகம்

திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோயில் திருப்பட்டூரில் அமைந்துள்ள பெருமாள் சிவன் கோயிலாகும். திருச்சி – சென்னை தேசீய நெடுஞ்சாலையில் சமயபுரம் தாண்டி மேலும் 4 கி.மீ. சென்றால் சிறுகனூர் என்று ஊர் வரும். அங்கிருந்து திருப்பட்டூர் செல்லும் சாலை இடதுபுறம் பிரிகிறது. அதில் சுமார் 4 கி.மீ. சென்றால் திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்தை அடையலாம். இவ்வூர் திருப்பிடவூர், திருப்படையூர் என்றும் அழைக்கப்பட்டது. இது ஒரு தேவார வைப்புத்தலமாகும். அப்பர், சுந்தரர் திருவாக்கில் இடம்பெற்றுள்ள வைப்புத்தலமாகும். இங்குள்ள இறைவன் பிரம்மபுரீஸ்வரர். இறைவி பிரம்மநாயகி. இத்தலம் மிக பழமையானது. பதஞ்சலி,வியாகிரபாதர் மற்றும் காசியபர் ஆகியோர் சிவனை தரிசித்து முக்தி அடைந்த தலம்.

புராண முக்கியத்துவம்

பிரம்மன் இவ்வுலகத்தை படைக்கும் ஆற்றலை சிவனிடமிருந்து பெற்றிருந்தார். தன்னைப் போலவே, பிரம்மனுக்கும் சம அந்தஸ்து கொடுக்கும் வகையில் ஐந்து தலைகளை அவருக்கு கொடுத்தார். படைப்புத் தொழிலில் அனுபவம் பெற்ற பிரம்மன், தன்னையும், சிவனையும் ஒன்றாகக் கருதி ஆணவம் கொண்டார். அவருக்கு பாடம் புகட்ட விரும்பிய சிவன், “”ஐந்து தலை இருப்பதால் தானே அஞ்சுதல் இல்லாமல் இருக்கிறாய்,” எனக்கூறி, ஒரு தலையைக் கொய்து விட்டார். படைப்புத்தொழிலும் பறி போனது. நான்முகனான பிரம்மா, இறைவனிடம் தனது தவறுக்காக சாப விமோசனம் கேட்டார். பூலோகத்தில் திருப்பட்டூர் என்ற தலத்தில் குடிகொண்டிருக்கும் தன்னை 12 லிங்க வடிவில் (துவாதசலிங்கம்) வணங்கி, சாப விமோசனம் பெற சிவன் அருள் செய்தார். மேலும், பிரம்மனின் தலையெழுத்தை மாற்றி, மீண்டும் படைப்புத்தொழிலை அருள்வதாகக் கூறினார். பிரம்மனும், இங்கு வந்து துவாதச லிங்க வழிபாடு செய்து சாபம் நீங்கப் பெற்றார். என்னை மகிழ்வித்த உன்னை வழிபடுகிறவர்களின் தீய தலையெழுத்தை மங்களகரமாக மாற்றுவாயாக,” என வரமும் கொடுத்தார். அன்று முதல் இந்த பிரம்மன், தன்னை வழிபடும் பக்தர்களின் தலையெழுத்தை மாற்றி அருள் செய்கிறார். பிரம்மன் இத்தலத்தில் சிவனை வழிபட்டதால் பிரம்மபுரீஸ்வரர் என சிவனுக்கு பெயர் ஏற்பட்டது. அம்பாள் பிரம்மநயாகி அல்லது பிரம்ம சம்பத்கவுரி எனப்படுகிறாள்.

நம்பிக்கைகள்

இது தஞ்சாவூர் கோயிலுக்கும் முற்பட்டதாக தெரிய வருகிறது. இங்குள்ள நந்தியை தடவிக் கொடுத்தால், நிஜ காளையை தடவிக் கொடுத்த உணர்வு ஏற்படுகிறது. குரு பரிகார தலம்: அட்சமாலை மற்றும் கமண்டலத்துடன் பிரம்மா இங்கு இருக்கிறார். குருபகவானுக்குரிய அதிதேவதை பிரம்மா என்பதால், குரு தோஷ நிவர்த்திக்காக வியாழக்கிழமைகளில் விசேஷ பூஜை நடக்கிறது. மேலும், திங்கள் கிழமை, திருவாதிரை, புனர்பூசம், சதயம் மற்றும் ஜென்மநட்சத்திர நாட்களில் பக்தர்கள் இவரை வணங்குவது விசேஷ பலன் தரும். குருபெயர்ச்சியன்று பிரம்மாவிற்கு பரிகார யாகபூஜை நடக்கும். குழந்தைகளுக்காக பைரவர் வழிபாடு: சில குழந்தைகள் இரவு வேளையில் தூங்காமல், தொடர்ந்து அழுது கொண்டிருக்கும். இவ்வாறு குழந்தைகள் அழாமல் இருக்கவும், அவர்கள் நிம்மதியாக தூங்கவும் இங்குள்ள கால பைரவரை வழிபடுகின்றனர். அர்த்தஜாமத்தில் இவரது சன்னதியில் சாவி வைத்து பூஜை நடக்கும். இவ்வேளையில் தரப்படும் விபூதியைப் பெற்றுச்சென்று குழந்தைக்கு கொடுக்கின்றனர். இவ்வாறு செய்வதால் குழந்தைக்கு பைரவர் காவலாக இருப்பார் என்பது நம்பிக்கை. ஞானஉலா அரங்கேற்றம்: சுந்தரருடன், சேரமான் கயிலாயம் சென்றபோது, சிவனை பெண்ணாக உருவகப்படுத்தி சிற்றிலக்கியம் இயற்றினார். அதை ஐயனார் இத்தலத்தில் அரங்கேற்றம் செய்தார். இவர், இக்கோயிலில் இருந்து சற்று தூரத்தில் “ஞானஉலா அரங்கேற்றிய ஐயனார்’ என்ற பெயரில் அருளுகிறார். ஆடி சுவாதியில் “திருக்கயிலை ஞானஉலா’ விழாவன்று சுந்தரருக்கும், சேரமானுக்கும் பூஜை நடக்கும். அன்று, சேரமான் கையில் ஞானஉலா சுவடி வைத்து, கயிலாயத்தில் அரங்கேற்றம் செய்யும் நிகழ்ச்சி நடக்கும். ஏழாம் தேதி பிறந்தவரா? ராஜகோபுரத்தில் இருந்து 7 நிலைகளைக் கடந்து, 300 அடி தூரத்தில் பிரம்மபுரீஸ்வரர் இருக்கிறார். ஆனாலும், சுவாமி சன்னதிக்குள் சூரிய வெளிச்சம் இருக்கும்படியாக, கோயில் கட்டப்பட்டுள்ளது. சூரியனுக்குரிய ரதம் ஏழு குதிரைகள் பூட்டியது. இதன் மீது வரும் சூரியன், ஏழு நிலைகளையும் கடந்து, தினமும் பிரம்மபுரீஸ்வரரை தரிசிப்பதாக ஐதீகம். பங்குனியில் மூன்று நாட்கள் காலையில் சிவலிங்கம் மீது சூரிய ஒளி விழும். ஏழு நிமிடங்கள் இந்த ஒளி இருக்கும். ஜாதகத்தில் ஒருவரது ஏழாம் இடத்தைப் பொறுத்தே மனைவி, நண்பர்கள் அமைவர். இது தொடர்பான தோஷ நிவர்த்திக்கு இங்கு வழிபடுகின்றனர். ஏழாம் எண் ஆதிக்கத்தில் பிறந்தோருக்கான பரிகார தலமாகவும் இக்கோயில் உள்ளது.

சிறப்பு அம்சங்கள்

வித்தியாசமான அமைப்பு: குருர் பிரஹ்மா; குருர் விஷ்ணு; குருர் தேவோ மகேச்வர; குரு ஸாட்ஷாத் பர ப்ரஹ்மை தஸ்மை ஸ்ரீ குரவே நமஹ”என்ற குருமந்திரப்படி அமைந்த கோயில் இது. கோயிலை வலம்வரும் போது, சிவன் சன்னதி கோஷ்டத்திலுள்ள தெட்சிணாமூர்த்தி (குரு), அடுத்து அருகில் தனிசன்னதியிலுள்ள பிரம்மா, அடுத்து சிவன் சன்னதி கோஷ்டத்திலுள்ள விஷ்ணு, அதன்பின் மூலவர் பிரம்மபுரீஸ்வரர் (மகேஸ்வரர்) என வரிசையாகத் தரிசிக்கலாம். இந்த அமைப்பு மிக விசேஷமானது. முருகன் வணங்கிய சிவன்: முருகப்பெருமான், அசுரர்களை அழிக்கச் செல்லும்முன் இத்தலத்தில் லிங்க பிரதிஷ்டை செய்து வணங்கி, அதன்பின் படை திரட்டிச் சென்றாராம். இதனால் “திருப்படையூர்’ எனப்பட்ட தலம் “திருப்பட்டூர்’ என மருவியதாகச் சொல்வர். முருகன் வழிபட்ட சிவன் கந்தபுரீஸ்வரர் என்ற பெயரில் இங்கிருக்கிறார். எல்லாமே மஞ்சள் நிறம்: பிரம்மா மங்கலம் தந்து வாழ்க்கையை சிறக்கச்செய்பவர் என்பதால், பூஜையின்போது இவருக்கு மஞ்சள் காப்பிட்டு, புளியோதரை படைத்து, மஞ்சள் பிரசாதம் தருகின்றனர். மற்ற சன்னதிகளிலும் மங்கல சின்னமாகிய மஞ்சள் நிற வஸ்திரங்களையே பயன்படுத்துகின்றனர். பிரம்மன் வழிபட்ட பழமலைநாதர், கந்தபுரீஸ்வரர், பாதாள ஈஸ்வரர், தாயுமானவர், மண்டூகநாதர், ஏகாம்பரேஸ்வரர், அருணாசலேஸ்வரர், கைலாசநாதர், ஜம்புகேஸ்வரர், காளத்தீஸ்வரர், சப்தரிஷீஸ்வரர், தூயமாமணீஸ்ணீ வரர் ஆகிய லிங்கங்கள், சிவன் சன்னதி எதிரிலுள்ள நந்தி உட்பட பெரும்பாலான பரிவார மூர்த்திகளுக்கும் மஞ்சள் வஸ்திரமே அணிவித்து பூஜிக்கின்றனர். பிரம்மன் மஞ்சள் காப்பு அலங்காரத்தில் வியாழக்கிழமைகளில் காணப்படுகிறார். குருவுக்கு அதிதேவதை பிரம்மா. எனவே, வியாழன் இங்கு விசேஷம். யாருக்கு தலையெழுத்து மாற வேண்டும் என்ற விதி உள்ளதோ, அவர்களே இக்கோயிலில் பிரம்மனின் பார்வையில் படுவார்கள் என்பது ஐதீகம். அதுபோல், தலையெழுத்து மாற தகுதியுள்ளவர்கள், குறைந்த பாவக் கணக்கில் இருப்பவர்கள், பக்திமான்களின் தலைவிதி மாற்றப்பட்டு விடுகிறது. உதாரணமாக நோய் தாக்க வேண்டும் என்ற விதி இருந்தால் அது மாறிப் போகிறது. ஆபரேஷன் செய்ய வேண்டும் என்ற விதியுள்ள கர்ப்பிணிகளுக்கு சுகப்பிரசவம் ஆகும். விரயச் செலவுகள் தடுக்கப்படும். பெயிலாகிக் கொண்டிருக்கும் மாணவன் நன்றாக படிக்க ஆரம்பித்து உயர்நிலைக்குச் செல்வான். நியாயமற்ற கோரிக்கைகளை பிரம்மன் கவனிப்பதில்லை என்பதுடன், மேலும் நமது நிலையை மோசமாக்கி விடுவார். நரசிம்மர் மண்டபம்: நரசிம்மரின் லீலைகளை விளக்கும் வகையில் ஒரு மண்டபத்தில் சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம், துரோபாவம் என்ற வகையில் நரசிம்மர் அவதாரமானது, இரண்யனுக்கு நல்லொழுக்கம் போதித்தது, அவன் கேட்காததால் சம்ஹாரம் செய்தது, பிரகலாதனுக்கு அருள் செய்தது ஆகிய காட்சிகள் சிற்பங்களாக எழிலுற வடிக்கப்பட்டுள்ளன. நாத மண்டபத்தில் ராவணன், அகந்தையினால் மேருமலையை சிவ, பார்வதியுடன் சேர்ந்து தூக்குவது போலவும், அது முடியாமல் போகவே சாமகானம் இசைத்து சிவனை வசப்படுத்தும் முயற்சியில் இம்மண்டபத்தில் இசைத்தூண்கள் அமைந்ததாகவும் கூறப்படுகிறது. பிரம்மன் வழிபட்ட சோடசலிங்கம் (பதினாறு பட்டை உடையது) தனி மண்டபத்தில் உள்ளது. இந்த மண்டபத்தின் உச்சி மரத்தால் ஆனது. எலும்பு நோய்க்கு பூஜை: பதஞ்சலி மகரிஷி ராமேஸ்வரம் உட்பட 10 தலங்களில் ஐக்கியமானதாக சொல்லப்படுகிறது. அதில் இத்தலமும் ஒன்று. இவர் ஐக்கியமான இடத்தில் ஒரு லிங்கமும், ஓவியமும் உள்ளது. அமாவாசையன்று இந்த லிங்கத்திற்கு, தயிர் சாதம் படைத்து பூஜை நடக்கும். வைகாசி சதயத்தன்று இவரது குருபூஜை நடக்கிறது. சித்தர்பாடலில் இத்தலம் “பதஞ்சலி பிடவூர்’ எனக் கூறப்பட்டுள்ளது. மனஅமைதி கிடைக்க, எலும்பு தொடர்பான நோய் நீங்க, கல்வி, கலைகளில் சிறப்பிடம் பெற, குருவருள் கிடைக்க திங்கள், வியாழக்கிழமைகளில் இவரை வழிபடுகின்றனர். பதஞ்சலியின் ஜீவச மாதி: ஜோதிடக்கலையின் தந்தையும், பாம்பு உடலைக் கொண்டவருமான பதஞ்சலி முனிவர் பத்து இடங்களில் ஜீவச மாதி அடைந்ததாக ஒரு தகவல் உண்டு. அதில் இத்தலமும் ஒன்று. பதஞ்சலி முனிவரின் சமாதி இக்கோயிலுக்குள் இருக்கிறது. அவர் யோகசூத்ரம் என்ற நூலை எழுதியவர். முக்தியடைந்தாலும் கூட இன்றும் உயிருடன் இருந்து அவர் அருள்பாலிக்கிறார். வேதங்களை ஈசன் அம்பிகையிடமும், அம்பிகை பிரம்மாவிடமும், பிரம்மா நந்தியிடமும், நந்தி தேவர் ரிஷிகளிடமும் சொன்னதாக காஞ்சிப்பெரியவர் சொல்வார். அது இங்கு தான் நிகழ்ந்திருக்குமோ என எண்ண வேண்டியுள்ளது. ஏனெனில் இங்கு பிரம்மபுரீஸ்வரர், பிரம்மநாயகி, பிரம்மா, பிரம்மாண்ட நந்தி, பதஞ்சலி ரிஷி ஆகியோர் உள்ளனர். இவ்வகையில் இது மிக விசேஷமான கோயில். பிரம்மன் வழிபட்ட 12 லிங்கங்களும் இங்கு உள்ளன. எனவே ஜோதிர்லிங்கங்களை தரிசித்த பலன் இங்கு சென்றாலே கிடைத்து விடுகிறது. தெற்கு நோக்கி இருக்க வேண்டிய காலபைரவர் இங்கு மேற்கு நோக்கி உள்ளார். பிரம்மனுக்கு 36 தீபம் (27 நட்சத்திரம், 9 கிரகம்) ஏற்றி, 108 புளியோதரை உருண்டைகளை படைத்து வழிபடுவது சிறந்தது. ஒன்பது முறை பிரம்மனை வலம் வர வேண்டும்.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Followers

பிள்ளையார் விரும்பும் 'மோதகம்' நைவேத்தியம் என்றால் என்ன❓

பிள்ளையார் விரும்பும் 'மோதகம்' நைவேத்தியம் மோதக் என்றால் உற்சாகம், மகிழ்ச்சி என்று பொருள். அகம் என்ற சொல்லுக்கு ‘வழங்கக்...