Showing posts with label #Kurudumale #Ganesha Temple #hindu temple #Kurudumale #Karnataka #India. Show all posts
Showing posts with label #Kurudumale #Ganesha Temple #hindu temple #Kurudumale #Karnataka #India. Show all posts

Friday, August 23, 2024

கர்நாடக மாநிலம், கோலார் கூடுமலை. பதின்மூன்றரை அடி உயர ஸ்ரீ மகாகணபதி!

_நான்கு யுகங்களாக அருள்பாலிக்கும் சாலிகிராமக் கற்களால் அமைந்த பதின்மூன்றரை  அடி உயர ஸ்ரீ மகாகணபதி!_

உலகில் வேறெங்கும் இதுபோனற சாலிகிராமத்தாலான திருமேனி இல்லை. [ Saligramam ]

இரத சப்தமியன்று தேவர்கள்  ஒளிவடிவில் வழிபடும் ஸ்ரீ மகாகணபதி!

கர்நாடக மாநிலம், கோலார் மாவட்டம், முல்பாகல் நகரில் இருந்து சுமார் 12 கி.மீ. தொலைவில் உள்ளது கூடுமலை. இதனை இன்று குருடுமலே என்று அழைக்கிறார்கள் [கூடுமலை குருடுமலேயாக மருவிவிட்டது. பெங்களூரூவில் இருந்து சுமார் 90 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது, ) 

கூடுமலையின் அடிவாரத்தில் அழகுற அமைந்துள்ளது ஸ்ரீமகா கணபதியின் ஆலயம்.  

மூலவரின் உயரம் சுமார் 13.5  அடி; அகலம் சுமார் 7 அடி. நமது விக்னங்களை எல்லாம் தீர்த்து வைக்கும் ஸ்ரீவிக்ன விநாயகரைப் பார்த்தபடி, அவருக்கு எதிரில் அவரின் வாகனம், மூஞ்சூறு. பெரிய வடிவில். 

மூலவரின் திருமேனி, நான்கு யுகங்களாக இருப்பதாகச் சொல் கிறார்கள். கிருத யுகத்தில்  ஸ்ரீபிரம்மா,  ஸ்ரீவிஷ்ணு, ஸ்ரீசிவ பெருமான் ஆகிய மூன்று பேரும், இந்தத் திருவிடத்தில் கூடிப் பேசுவார்களாம்; பொழுதைக் கழிப்பார்களாம்
.( திரிபுராந்தகர்களைச் சங்கரிக்க மும்மூர்த்திகளும் கூடிய மலை ஆதலால் இது கூடுமலை ஆனது)

அந்தக் காலகட்டத்தில், திப்ராசுரன் எனும் அரக்கன், தேவர்களையும் மக்களையும் அச்சுறுத்தி, அவர்களுக்குத் துன்பம் கொடுத்து வந்தான். அவனை அழிக்கும்படி, மும்மூர்த்தி களிடம் தேவர்கள் வேண்ட, அவர்கள் ஸ்ரீகணேசரை அழைத்து, அசுரனை சங்கரிக்குமாறு  கூற, அதன்படியே ஸ்ரீகணபதி அந்த அசுரனை அழித்து, தேவர்களையும் மக்களை யும் காத்தருளினார். இதில் மகிழ்ந்த மும்மூர்த்திகளும் ஸ்ரீகணபதியின் பிரமாண்டத் திருவிக்கிரகத் திருமேனியை அபூர்வமான  சாலிக்கிராம கற்களால்படைத்து, கூடுமலை அடிவாரத்தில் பிரதிஷ்டை செய்ததாகச் சொல்கிறது இக்கோயில் ஸ்தல புராணம்.

அடுத்து வந்த திரேதா யுகத்தில், நினைவாற்றலும் ஞாபக சக்தியும் கேட்டு, ஸ்ரீஅனுமன் இங்கு வந்து ஸ்ரீமகா கணபதியைப் பிரார்த்தித்தார். அவருக்குக் காட்சி தந்ததுடன், நினைவாற்றல் எனும் சக்தியையும் வழங்கியருளினார்,ஸ்ரீ கணபதி. அதன் பிறகு, ஸ்ரீசீதா பிராட்டியைத் தேடி இலங்கைக்குச் சென்ற ஸ்ரீஅனுமன், அங்கே சீதையைக் கண்டதும் ஒருகணம் என்ன செய்வது, என்ன சொல்வது என்று தெரியாமல் விக்கித்து நின்றாராம். சட்டென்று மகா கணபதியின் பேரருளால் ஞாபகம் வந்தவ ராக, ஸ்ரீராமர் கொடுத்தனுப்பிய கணையாழியை ஸ்ரீசீதையிடம் கொடுத்தார் என்றொரு கதை இப்பகுதியில் வழங்குகிறது.. 

அதேபோல், ஸ்ரீராமபிரான், இராவண யுத்தத்துக்குக் கிளம்புவதற்கு முன்னதாக, இங்கே வந்து மனமுருகி ஸ்ரீமகா கணபதியை பூஜித்துச் சென்றார்; வெற்றி பெற்றார் என்றும் இக்கோயில் வரலாறு கூறுகிறது. .

துவாபர யுகத்தில் ஸ்ரீகிருஷ்ணர் தமக்கு ஷமந்தகமணிய முனிவர் அளித்த சாபத்தைப் போக்க, இந்த மகா ஸ்ரீ கணபதியைப் பூஜித்து, சாபம் நீங்கப் பெற்றதாகச் சொல்கிறது தல புராணம். பஞ்ச பாண்டவர்களும் இந்தத் தலத்துக்கு வந்து, ஸ்ரீமகா கணபதியைப் பூஜித்து சென்றதால், குருக்ஷேத்திர யுத்தத்தில் வெற்றி வாகை சூடினார்களாம்.

ஆக, மூன்று யுகங்களிலும் அருள்பாலித்தவர் ஸ்ரீமகா கணபதி. இவரின் திருமேனி, திறந்தவெளியில்... வெயிலிலும் மழையிலுமாகவே இருக்க, கலியுகத்தில்... மகா கணபதியின் மகத்துவத்தை அறிந்து உணர்ந்த விஜயநகரப் பேரரசர் ஸ்ரீகிருஷ்ணதேவராயர், அற்புதச் சிற்பங்களுடன் கூடிய அழகிய ஆலயத்தை எழுப்பினார். 

பேளூர், ஹளபேடு கோயில்களின் சிற்பப் பொக்கிஷங்களை உருவாக்கிய சிற்பிகளான டங்கணாச்சாரி மற்றும் ஜெகன்னாச்சாரி ஆகிய இருவரும் இந்தக் கோயிலை உருவாக்கித் தந்தார்கள்.

கோயிலை ஒட்டிய மலை; அருகில் அமைதியாக ஓடுகிறது கவுண்டின்ய நதி. மலையில் உள்ள குகை ஒன்றில், சப்த ரிஷிகளில் ஒருவர் என்று போற்றப்படும் கவுண்டின்ய முனிவர் வசித்தார். தினமும் மலையடிவாரத்தில் உள்ள ஸ்ரீமகா கணபதியை வழிபட்டு, தவம் இயற்றி, மோட்சம் எய்தினார் அவர். கவுண்டின்ய முனிவர் நடுநிசியில் அருவமாக ஸ்ரீமகா கணபதி ஆலயத்துக்கு வருவதாகவும், பக்தர்களின் எண்ணங்களை ஈடேற்றித் தருவதாகவும் இங்குள்ள அர்ச்சகர்கள் கூறுகிறார்கள்.

 ஆண்டுக்கு ஒருமுறை வரும் இரத சப்தமி  நாளில், இரவு நேரத்தில் கூடுமலைப் பகுதியிலிருந்து தீபங்கள் மகா கணபதி ஆலயம் நோக்கி வருவதையும், பின்னர் அந்த ஒளித்தீபங்கள் திரும்பி மலைக்குச் செல்வதையும் அன்பர்கள் பலர் தரிசித்திருக்கிறார்களாம்!

உள்ளே கருவறையில்... சர்வ அலங்காரத்தில் மகா கணபதியின் தரிசனம் சிலிர்க்கச் செய்கிறது. இங்கு, விசேஷ தினங்களில் ஸ்ரீவிநாயகருக்கு வெண்ணெய்க் காப்பு நடைபெறும். முழு வெண்ணெய்க் காப்பு அபிஷேக- அலங்காரத்துக்கு ஆயிரம் கிலோ வெண்ணெய் தேவைப்படுமாம்!

எந்தக் காரியத்தைத் துவக்குவதாக இருந்தாலும், கூடுமலை மகா கணபதிக்கு பூஜை செய்துவிட்டு, அதன்பிறகே காரியத்தைத் துவக்குவது கர்நாடக மாநில பக்தர்களின் வழக்கம். அப்படிச் செய்தால் மகா கணபதியின் பேரருளால்,  தங்களுக்கு வெற்றி உறுதி, வாழ்வில் நிம்மதி நிச்சயம் என்பது அவர்களின் நம்பிக்கை.

குறிப்பாக, தேர்தல் வந்துவிட்டால், அரசியல் பிரமுகர்கள் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு முன்னதாக, கூடுமலை வந்து ஸ்ரீ மகா கணபதியின் திருவடியில் மனுவின் பிரதியைத் தாக்கல் செய்த பிறகே, தேர்தல் ஆணையரிடம் ஒரிஜினல் வேட்பு மனுவைத் தாக்கல் செய்வார்களாம். அப்படி அங்கு வந்து சென்ற கர்நாடக அரசியல் ஜாம்பவான்களின் பட்டியல் மிக நீளமானது என்கிறார்கள், கோயில் ஊழியர்கள்.

முன் மண்டப விதானத்தில், கிருஷ்ணதேவராயர் ஆட்சிக் கால இலச்சினைகளான சூரியன், சந்திரன், கத்தி, வராகம், மீன்கள் ஆகியன பொறிக்கப்பட்டுள்ளன. 

மூலவர் சந்நிதிக்கு முன் உள்ள தூணில் ஸ்ரீசாமுண்டீஸ்வரி, ஸ்ரீவிருபாட்சேஸ்வரர் திருமேனிகள். கிருஷ்ணதேவராயர் கட்டிய ஆலயங்கள் யாவற்றிலும் இந்தச் சிலைகளும், சின்னங்களும் கண்டிப்பாக  அமைக்கப்பட்டிருக்குமாம்!

கொடிய அசுரனை மிகப்பெரும் சக்தியுடன் அழித்தவரும், தன்னை வழிபட்ட கவுண்டின்ய மகரிஷிக்கு மோட்சம் அளித்தவரும், பக்தர்கள் வேண்டுகோள் எதுவாயினும் அதை நிறைவேற்றி அருள்பவரும், தன்னைப் பூஜித்துவிட்டுத் துவக்கும் எந்தக் காரியத்திலும் ஜெயம் அளிப்பவருமான கூடுமலை மகா கணபதியை வணங்கித் தொழுதால், வாழ்வில் நிம்மதியும் சந்தோஷமும், வெற்றியும், வியாபாரத்தில் லாபமும் கூடும் என்பதில் சந்தேகம் இல்லை.

" இந்த ஆலயத்தின் உள்ளே நுழைந்ததும், ஒரு தெய்விக அதிர்வு உடலில் பரவுவதை உங்களால் உணரமுடியும்'’ என்று சொல்லிச் சிலிர்க்கிறார்கள்.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Followers

சஹஸ்ரலட்சுமீஸ்வரர் உத்திரட்டாதி தீயத்தூர் , புதுக்கோட்டை ,

உத்திரட்டாதி நட்சத்திர கோயில்🙏🙏 உத்திரட்டாதி நட்சத்திரத்திற்குரிய நட்சத்திரக் கோயில் - ஸ்ரீ சஹஸ்ரலட்சுமீஸ்வரர் திருக்கோயில். த...