Showing posts with label #gnanaburi swarar #Sivan temple #Hindu temple #thiruvadi Solam #Kanchipuram #Tamil Nadu #India. Show all posts
Showing posts with label #gnanaburi swarar #Sivan temple #Hindu temple #thiruvadi Solam #Kanchipuram #Tamil Nadu #India. Show all posts

Friday, June 27, 2025

ஞானபுரீஸ்வரர் திருவடிசூலம் காஞ்சிபுரம்.

அருள்மிகு ஞானபுரீஸ்வரர் திருக்கோவில், திருஇடைச்சுரம்,
திருவடிசூலம்,
காஞ்சிபுரம் மாவட்டம் – 
603 108.   
*திருஇடைச்சுரம் தற்போது திருவடிசூலம் என்று மக்கள் வழக்கில் அறியப்படுகிறது.

*இறைவன் பெயர்: ஞானபுரீஸ்வரர், இடைச்சுரநாதர் 

*இறைவி பெயர்: கோவர்த்தனாம்பிகை, இமயமடக்கொடி அம்மை                   

*தல மரம் : வில்வம்

*தீர்த்தம்: சாட்சி தீர்த்தம்

*பாடல்பெற்ற தொண்டைநாட்டுத்தலம். இத்தலத்துக்கு திருஞானசம்பந்தர் பாடிய பதிகம் உள்ளது. 

*வழிபட்டோர்:   அப்பர்,  சேக்கிழார், சனற்குமாரர், கெளதம ரிஷி, பிருங்கி ரிஷி ஆகியோர். 
*திருஇடைச்சுரம் பல குன்றுகளுக்கு நடுவில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் திருவடிசூலம் கிராமத்தில் அமைந்துள்ளது. 

இக்கோவிலுக்கு ராஜகோபுரம் உள்ளது. கோவிலுக்கு வெளியே இடதுபுறம் வரசித்தி விநாயகர் சந்நிதி உள்ளது. நுழைவாயில் வழியாக உள்ளே சென்றால், விசாலமான தெற்கு வெளிப் பிராகாரத்தில் நேரே வலம்புரி விநாயகர் சந்நிதியைக் காணலாம். வெளிப் பிராகாரம் வலம் வரும்போது, கிழக்குப் பிராகாரத்தில் பலிபீடமும், நந்தியும் உள்ளன. இப்பிராகாரத்தில் பிரம்மாண்டேஸ்வரர் சந்நிதியும் உள்ளது. 

அருகில் வேப்பம், அரசு, வில்வம் ஆகிய மூன்று மரங்களும் இணைந்து வளர்ந்திருப்பதைக் காணலாம். 

மேலும் இந்தக் கிழக்குப் பிராகாரத்தில் தெற்கு நோக்கிய சுப்பிரமணியர், வள்ளி தெய்வானையுடன் உள்ள சந்நிதியும் உள்ளது. 

பிராகார வலம் முடிந்து மீண்டும் தெற்குப் பிராகாரம் வந்தால், தல விருட்சம் வில்வ மரம் உள்ளது. இந்த வில்வ மரத்துக்கு அருகில் ஒரு பாம்புப் புற்று உள்ளது. இது விநாயகர் வடிவில் காட்சி தருகிறது. 

தெற்குப் பிராகாரத்திலுள்ள மற்றொரு நுழைவாயில் வழியே உள்ளே சென்றால், அநேக தூண்களுடன் ஒரு பெரிய மண்டபம் உள்ளது. மண்டபத்தை அடுத்து நேரே தெற்கு நோக்கிய இறைவி கோவர்த்தனாம்பிகை சந்நிதியைக் காணலாம். சந்நிதிக்குள் நுழைந்தால், இடதுபுறம் கிழக்கு நோக்கிய இறைவன் ஞானபுரீஸ்வரர் சந்நிதி உள்ளது. ஒரே இடத்தில் நின்றபடி இறைவன், இறைவி இருவரையும் தரிசிக்கலாம். மூலவர் சந்நிதிக்கு இருபுறமும் விநாயகரும் முருகப்பெருமானும் காட்சி அளிக்கின்றனர். கருவறை அகழி அமைப்புடன் காணப்படுகிறது. 

வலமாகச் சுற்றி வந்தால், முதலில் நால்வர் பிரதிஷ்டையும், அதையடுத்து விநாயகர், சந்நிதியும், வள்ளி தெய்வயானை உடனாகிய சுப்பிரமணியர் சந்நிதியும் உள்ளன. அதையடுத்து பைரவரும் காட்சி தருகிறார். 

*இத்தலத்தின் சிறப்பு, மூலவர் லிங்கத் திருமேனி. இந்த சுயம்பு லிங்கம். சதுரபீட ஆவுடையார். சிவலிங்கத் திருமேனியில் தீபாராதனை செய்யும்போது தீப ஒளி பிரகாசமாக லிங்க பாணத்தில் தெரிகின்றது.  இத்தலத்தில் இறைவனுக்கு தேன் அபிஷேகம் செய்வது ஒரு சிறப்பம்சம்.

தேன் அபிஷேகம் செய்து அந்த தேனை பிரசாதமாக வாங்கி தினமும் உட்கொண்டு வந்தால், சகலவிதமான நோய்களும் நீங்கும் என்பது ஐதீகம். 

*திருஞானசம்பந்தரும் தனது பதிகத்தின் கடைசிப் பாடலில், இத்தல பதிகத்தைப் பாராயணம் செய்து இறைவனை வழிபடுவர்கள் பிணிகள் இன்றி வாழ்வர் என்று குறிப்பிடுகிறார்.   

*அம்பாள், பசு வடிவில் வந்து பால் சொரிந்து இறைவனை வழிபட்ட தலம் ஆதலால், இறைவி கோவர்த்தனாம்பிகை என்று அழைக்கப்படுகிறாள்.             

*கோஷ்ட மூர்த்தங்களாக தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர்.         

*இது கருங்கல் கட்டமைப்புடைய பழமையான திருக்கோயில்.       

*தல வரலாறு:
திருஞானசம்பந்தர் தனது சிவத்தல யாத்திரையின்போது இவ்வழியே வந்துகொண்டிருந்தார். நீண்ட தூரம் நடந்து வந்ததாலும், வெயில் ஏறியதாலும் அவர் மிகவும் களைப்படைந்தார். அதோடு பசியும் அவரை வாட்ட, ஒரு மரத்தடியில் அமர்ந்தார். அப்போது ஒரு இடையன் அங்கு வந்தான். பசியோடு உள்ள சம்பந்தரைப் பார்த்த அவன் தன்னிடமிருந்த தயிரை பருகக் கொடுத்தான். தயிரைப் பருகி களைப்பு நீங்கிய சம்பந்தரைப் பார்த்து, இடையன் நீங்கள் யார் என்று வினவினான். தனது சிவத்தல யாத்திரை பற்றிக் கூறிய சம்பந்தரிடம், இடையன் அருகிலுள்ள வனத்தில் ஒரு சிவன் இருப்பதைப் பற்றிக் கூறினான். இடையன் மூலமாக பசியாறிய சம்பந்தர், அவனது அழைப்பைத் தட்ட முடியாமல் அவனைப் பின் தொடர்ந்து சென்றார். வழியில் ஒரு குளக்கரையில் நின்ற இடையன், சம்பந்தரைப் பார்த்து புன்னகைத்துவிட்டு மறைந்துவிட்டான். திகைப்படைந்த சம்பந்தர், சிவபெருமானை வேண்ட, சிவன் அவருக்கு காட்சியளித்து, தானே இடையன் வடிவில் வந்து அருள்புரிந்ததைக் கூறினார். 

இடையனாக வந்து, இடையிலேயே விட்டுவிட்டுச் சென்றதால், இறைவனை இடைச்சுரநாதர் என்று அழைத்து சம்பந்தர் பதிகம் பாடினார். சிவன் மறைந்த குளக்கரை, காட்சிகுளம் என்ற பெயர் பெற்றது. 

*இத்தலத்தில் சனத்குமார முனிவர் இறைவனை வழிபட்டு உபதேசம் பெற்றதால், சனத்குமாரபுரி என்றும், அம்பிகை பசு வடிவில் இறைவனை வழிபட்டதால் கோவர்த்தனபுரி என்றும் இத்தலம் பெயர் பெற்றிருந்தது.  

*கோயில் திறந்திருக்கும் நேரம் காலை 8 முதல் 11.30 வரை, மாலை 4 முதல் - 6.30 வரை. 

*செங்கல்பட்டில் இருந்து திருப்போரூர் போகும் சாலை மார்க்கத்தில், செங்கல்பட்டில் இருந்து கிழக்கே சுமார் 9 கி.மீ. தொலைவில் இந்த சிவத்தலம் அமைந்துள்ளது. திருவடிசூலம் பேருந்து நிறுத்தத்தில் இருந்து 1 கி.மீ. தூரத்தில் ஆலயம் உள்ளது. திருக்கோயில் வரை கார், தனிப் பேருந்து செல்லலாம். 
 
ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Followers

பிள்ளையார் விரும்பும் 'மோதகம்' நைவேத்தியம் என்றால் என்ன❓

பிள்ளையார் விரும்பும் 'மோதகம்' நைவேத்தியம் மோதக் என்றால் உற்சாகம், மகிழ்ச்சி என்று பொருள். அகம் என்ற சொல்லுக்கு ‘வழங்கக்...