Showing posts with label #Shiva Kolundeswar #Sivan temple #Hindu temple #Thiru Sakthi muttram #Thanjavur #Tamil Nadu #India. Show all posts
Showing posts with label #Shiva Kolundeswar #Sivan temple #Hindu temple #Thiru Sakthi muttram #Thanjavur #Tamil Nadu #India. Show all posts

Sunday, January 4, 2026

சிவக்கொழுந்தீசர் திருச்சத்தி முற்றம் தஞ்சாவூர்

தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றான
#திருச்சத்திமுற்றம் என்ற 
#திருச்சத்திமுத்தம்
#தழுவக்குழைந்தநாதர்
(சிவக்கொழுந்தீசர்) திருக்கோயில் வரலாறு:

இறைவனை உமை வழிபட்டுத் தழுவி முத்தமிட்டதால் 'சத்தி முத்தம்' என்று வழங்குகிறது.

திருச்சத்தி முற்றம் சிவக்கொழுந்தீசர் கோயில் திருஞானசம்பந்தர் மற்றும் திருநாவுக்கரசர் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலமாகும். இச்சிவத்தலத்தின் மூலவர் சிவக்கொழுந்தீசர். இவருக்கு தழுவக்குழைந்த நாதர் என்ற வேறு பெயரும் இருக்கிறது. தாயார் பெரியநாயகி.இச்சிவத்தலம் தமிழ்நாடு தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருச்சத்தி முற்றம் எனும் ஊரில் அமைந்துள்ளது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் 22ஆவது சிவத்தலமாகும்.

மூலவர்:சிவக்கொழுந்தீசர், தழுவக்குழைந்த நாதர்
அம்மன்:பெரியநாயகி
தீர்த்தம்:சூல தீர்த்தம்
புராண பெயர்:சத்திமுத்தம், திருச்சத்திமுத்தம்
ஊர்:திருச்சத்தி முற்றம்
மாவட்டம்:தஞ்சாவூர்
மாநிலம்:தமிழ்நாடு

பாடியவர்கள்:

திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர்

தேவாரப்பதிகம்:
வெம்மை நமன்தமர் மிக்குவிரவி விழுப்பதன்முன் இம்மைஉன் தாள்என்றன் நெஞ்சத்து எழுதிவை யீங்கிகழில் அம்மை அடியேற்கு அருளுதி என்பதிங்கு யாரறிவார் செம்மை தருசத்தி முற்றத்து உறையுஞ் சிவக்கொழுந்தே.

-திருநாவுக்கரசர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 22வது தலம்.

தல சிறப்பு:

இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இத்தலம் திருமணத் தடை நீக்கும் தலமாகும்.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 85 வது தேவாரத்தலம் ஆகும்.

பொது தகவல்:

பெரிய கோயில், கிழக்கு நோக்கியது. வாயிலில் வல்லபை கணபதி காட்சியளிக்கிறார். ராஜகோபுரம் ஐந்து நிலைகளையுடைது. வெளிப் பிராகாரம் பெரியது. இரண்டாங் கோபுர வாயிலில் விநாயகர் முருகன் சன்னதிகள் உள்ளன. அம்பாள் சன்னதி தெற்கு நோக்கியுள்ளது. நடராச சபை உள்ளது. மூல வாயிலின் முன்னால் ஒருபுறம் சோமாஸ்கந்தரும், மருபுறம் சத்தி, முத்தம் தரும் தல ஐதீக மூர்த்தியும் உள்ளனர். உட்பிராகாரத்தில் தல விநாயகரும் சோமாஸ்கந்தரும் ஆறுமுகம், கஜலட்சுமி சன்னதிகளும் உள்ளன.

தலபெருமை:

இவ்வாலயத்தில் உள்ள சிவனை பார்வதிதேவி

பூஜை செய்து தழுவி முத்தமிட்ட காரணத்தினால் இத்தலம் “திருச்சத்திமுத்தம்’ என பெயர் பெற்றது. மூலஸ்தானத்திற்கு அருகில் அம்மன் சிவலிங்கத்தை கட்டி தழுவி முத்தமிட்ட திருக்கோலத்தை இன்றும் தரிசிக்கலாம். சுவாமி சன்னதியின் வாசலின் வட புறத்தில் சக்தி முத்தமளிக்கும் தல ஐதிக மூர்த்தியும் உள்ளனர். இவ்வைதீகச் சிற்பத்தின் பின்புறம் அம்மன் ஒரு காலில் நின்று தவம் செய்யும் காட்சியையும் காணலாம். காஞ்சியில் அம்பிகை இறைவனைத் தழுவியிருப்பது போலவே இத்தலத்திலும் நிகழ்ந்ததாக சொல்லப்படுகிறது.

இங்கு பார்வதி, அகத்தியர், ஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், அருணகிரிநாதர், ராமலிங்க அடிகள் ஆகியோர் வழிபட்டுள்ளனர். திருநாவுக்கரசருக்கு இறைவன் தன் திருவடி தரிசனம் தந்த தலம். இத்தலத்தில் அமாவாசை, பவுர்ணமி வழிபாடு மிகவும் சிறப்பாகும்.

தல வரலாறு:

பக்தியே முக்திக்கு வித்து’ என்பதை இந்த உலகிற்கு எடுத்துக்காட்ட சிவ, பார்வதி விரும்பினர். இதற்காக சக்தி, காவிரியாற்றின் தென்பகுதியில் அமைந்துள்ள சூரிய புஷ்கரணி சூல தீர்த்தத்தின் அருகே அமைந்துள்ள சக்திமுற்றத்தில் இறைவனை பூஜை செய்து வந்தாள். சிவன் காட்சி தர நீண்ட நாட்கள் ஆனது. ஆனால் பார்வதி உறுதி கலையாமல், தன் பக்தி நிலையானது என்று உறுதி செய்யும் வகையில் ஒற்றைக்காலில் நின்று கடும் தவம் மேற்கொண்டாள்.

சக்தியை சோதிக்க விரும்பி ஜோதிப்பிழம்பாய் காட்சி தந்தார் சிவன். தீப்பிழம்பாக காட்சி தந்தாலும், அதில் ஈசன் இருப்பதை உணர்ந்த பார்வதி அந்த நெருப்பை கட்டித்தழுவினாள். சிவன் குளிர்ந்து போனார். குடும்பத்தில் பிரச்னைகள் நெருப்பென தாக்கினாலும், அதை தம்பதியர் தங்கள் பரஸ்பர அன்பினால் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்பதையே இத்தல வரலாறு தம்பதிகளுக்கு காட்டுகிறது. 

அப்பர், தனக்குத் தருவடி தீட்சையருளுமாறு வேண்டிப்பாட, இறைவன் திருநல்லூருக்கு வருமாறு அருளிய சிறப்புடைய பதி. இவ்வாறு அருளிய மூர்த்தியே இங்கு மூலவராக உள்ளார்.

மூலவர் பக்கத்தில் தலவரலாற்றுச் சிறப்புடைய - இறைவி சிவலிங்கத்தைக் கட்டித் தழுவி முத்தமிட்ட திருக்கோல உருவத்தைக் கண்டுத் தரிசிக்கலாம்.

 மூல வாயிலின் முன்னால் ஒருபுறத்தில், சத்தி முத்தம் தரும் தல ஐதீக மூர்த்தி உள்ளார்.

 சம்பந்தர் இத்தலத்திலிருந்து இறைவன் அருளிய முத்துப்பந்தர் நிழலில் திருப்பட்டீச்சுரம் சென்று வணங்கிப் பதிகம் பாடினார்.

 கல்வெட்டில் இறைவன் "திருச்சத்தி முற்றம் உடையர், திருச்சத்திவனப் பெருமாள்" எனக் குறிக்கப்படுகிறார்.

 அக்காலத்தில் கோயில் நிலங்களில் வரிகளை வசூலிக்கும் விதிமுறைகளைப் பற்றியும், விளக்கெரிக்க காசும், ஆடும் அளித்ததையும் கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன.

மூலவர் திருமேனியில் தீச்சுடர்கள் தெரிகின்றன.
தெரியாதவர்கள் குருக்களிடம் கேட்டால் தீப ஆராதனை செய்து காட்டுகிறார். நன்றாகப் பார்க்கும் வண்ணம் மூன்று சுடர்கள் புடைத்துத் தெரிகின்றன.

செங்கற்களால் கட்டபட்டிருந்த இக்கோவிலை கற்கோவிலாக மாற்றியவர் சோழ ராஜ வம்சத்தைச் சேர்ந்த செம்பியம் மாதேவி ஆவார். முதலாம் ராஜ ராஜ சோழன் காலத்திலும் திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளன.

கோவில் அமைப்பு: 

இவ்வாலயம் கிழக்கு நோக்கிய 5 நிலை இராஜகோபுரத்துடன் காட்சியளிக்கிறது. கோபுர வாயிலில் வல்லபை கணபதி காட்சியளிக்கிறார். முதல் கோபுர வாயிலைக் கடந்தால் பெரிய வெளிப் பிரகாரத்தைக் காணலாம். அடுத்துள்ள இரண்டாங் கோபுர வாயிலில் விநாயகர் முருகன் சந்நிதிகள் உள்ளன. மூலவர் சிவக்கொழுந்தீசர் சுயம்பு மூர்த்தியாக கிழக்கு நோக்கி கருவறையில் காட்சி கொடுக்கிறார். சுவாமி சன்னதிப் பிரகாரத்தில் உள்ள பைரவர் சந்நிதியில் பைரவர் நிஜமாகவே ஒரு ஆள் உயரத்துக்கு இருக்கிறார். அன்னை பெரியநாயகியாகத் தெற்கு நோக்கி அருள் பாலிக்கிறாள். நடராஜர் மற்றும் சரபேஸ்வரர் சந்நிதிகளும் பார்க்க வேண்டியவை. உட் பிராகாரத்தில் தலவிநாயகரும் சோமாஸ்கந்தரும் ஆறுமுகர், கஜலட்சுமி சந்நிதிகளும் உள்ளன.

முருகப் பெருமான் ஆறு திருமுகமும், பன்னிரு திருக்கரங்களும் கொண்டு வள்ளி, தெய்வானை சமேதராய் மயில் மீது அமர்ந்த கோலத்தில் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது ஒரு பாடல் உள்ளது. 

நாரைவிடு தூது ' பாடிய சத்திமுற்றுப்புலவர் இவ்வூரினரே.)

அமைவிடம் மாநிலம் : 

தமிழ் நாடு கும்பகோணம் - ஆவூர் நகரப் பேருந்துகளில் எளிதில் இத்தலத்திற்கு சொல்லலாம். 

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Followers

பிள்ளையார் விரும்பும் 'மோதகம்' நைவேத்தியம் என்றால் என்ன❓

பிள்ளையார் விரும்பும் 'மோதகம்' நைவேத்தியம் மோதக் என்றால் உற்சாகம், மகிழ்ச்சி என்று பொருள். அகம் என்ற சொல்லுக்கு ‘வழங்கக்...