Showing posts with label #Tirumala Badi sivan Swamy #Thiruvaiyaru #Hindu India #Tamil Nadu #Nandi devar marriage. Show all posts
Showing posts with label #Tirumala Badi sivan Swamy #Thiruvaiyaru #Hindu India #Tamil Nadu #Nandi devar marriage. Show all posts

Thursday, March 14, 2024

திருமண தடை நீக்கும் திருமழபாடி வைத்தியநாதர் கோவில்

சிவபெருமானே முன்னின்று நடத்திய விழாவான 
#நந்தி_தேவருக்கும்
#சுயசாம்பிகைக்கும்_திருமணம் 
நடக்கும் ஒரே கோவிலான 
#திருமழப்பாடி 
#வைத்தியநாதசுவாமி
#சுந்தராம்பிகை திருக்கோயில்:
திருமண தடை நீக்கும் திருமழபாடி வைத்தியநாதர் கோவில்
திருமணம் தடை விலக விரதம், பரிகாரங்கள், பரிகார தலங்கள் எத்தனையோ உள்ளன. ஆனால் அப்படி உடலை வருத்தி சிரமம் ஏதும் படாமல், கோவிலில் நடக்கும் திருக்கல்யாண வைபவத்தில் கலந்து கொண்டாலே திருமணம் விரைவில் கை கூடி வரக்கூடிய திருத்தலம் தான் திருமழப்பாடி வைத்தியநாத சுவாமி திருக்கோவில்.

எல்லா கோவில்களிலும் தெய்வங்கள், உப தெய்வங்களுக்கு தான் திருக்கல்யாணம் வைபவம் நடக்கும். ஆனால் திருமழப்பாடியில் மட்டும் தான் சிவபெருமானின் வாகனமான நந்தி தேவருக்கு திருக்கல்யாணம் நடத்தப்படுகிறது. ஆண்டுதோறும் பெரிய விழாவாக எடுத்து நந்தி திருக்கல்யாணம் நடத்தப்படுகிறது. அதுவும் சிவ பெருமானே இந்த தலத்திற்கு எழுந்தருளி இந்த திருக்கல்யாணத்தை நடத்தி வைப்பதாக ஐதீகம்.

திருமழப்பாடி வைத்தியநாத சுவாமி கோவில் :

பொதுவாக கோவில்களில் மூலவர், உப தெய்வங்களுக்கு தான் திருக்கல்யாணம் நடைபெறும். ஆனால் சிவ பெருமானின் வாகனமான நந்தி தேவருக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெறும் ஒரே திருத்தலம் மயிலாடுதுறை மாவட்டம் திருமழபாடியில் உள்ள வைத்தியநாதர் சுவாமி திருக்கோவில் தான்.

தேவார பாடல் பெற்ற தலங்களில் ஒன்றான இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் புனர்பூசம் நட்சத்திர தினத்தில் நந்தி திருமண விழா கோலாகலமாக நடத்தப்படுகிறது. இந்த நந்தி திருமண விழாவில் கலந்து கொண்டால் திருமண தடைகள் நீங்கி, விரைவில் திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம்.
விஞ்ஞானத்தை வியக்க வைக்கும் நெல்லையப்பர் கோவில் இசை தூண்கள்

#நந்தி வரலாறு :

திருவையாறு அருகே அந்தணபுரம் என்னும் ஊரில் வசித்து வந்த சிலாத முனிவர், குழந்தைப்பேறு வேண்டி திருவையாறு ஐயாறப்பரை நோக்கி தவம் செய்தார். அவரது தவத்திற்கு மகிழ்ச்சி காட்சி தந்த ஐயாறப்பர், புத்திரகாமேஷ்டி யாகம் செய்து, யாக பூமியை உழும் போது பெட்டி ஒன்று கிடைக்கும் என்றும், அதற்குள் மகன் ஒருவன் இருப்பான் என்றும் அருள் செய்தார். அதே சமயம் அந்த மகன் 16 வயது வரை மட்டுமே உன்னுடன் இருப்பான் என்றும் தெரிவித்தார். இறைவன் சொன்னபடி யாகம் செய்து, குழந்தையை பெற்ற முனிவர், குழந்தைக்கு செப்பேசன் என பெயர் சூட்டி, 14 வயதிற்குள் அனைத்து கலைகளையும் கற்றுக் கொடுத்தார்.

#வரம்_பெற்ற நந்தி :

மகன் இன்னும் இரண்டு ஆண்டுகள் மட்டுமே தன்னுடன் இருப்பான் என்பதை அறிந்து கவலையடைந்தார் சிலாத முனிவர். அதே சமயம் செப்பேசனும் தனது ஆயுள் பற்றிய உண்மையை தெரிந்து கொண்டு, ஐயாறப்பர் குளத்தில் ஈசனை வேண்டி ஒற்றைக் காலில் தவம் செய்தான். அவனுக்கு காட்சி கொடுத்த சிவ பெருமானுக்கு அவனுக்கு 16 பேறுகளையும் அளித்தார். பல்வேறு உபதேசங்களை கேட்டறிந்து சிவகணங்களுக்கு தலைவனாகவும், கைலாயத்தை காவல் காக்கும் பொறுப்பையும் பெற்றான். இவரே நந்தியம் பெருமான் ஆனார்.

#நந்தி_திருக்கல்யாணம் :

நந்தி தேவருக்கு திருமணம் செய்ய முடிவு செய்த ஈசன், திருமழபாடி வைத்தியநாத சுவாமியை சாட்சியாக வைத்து ஐயாறப்பரே நந்தி தேவருக்கும், வியாக்ரபாத முனிவரின் மகளான சுயசாம்பிகைக்கு பங்குனி மாதம் புனர்பூசமக் நட்சத்திரத்தில் திருமணம் நடத்தி வைத்தார். தற்போது வரை அந்தணர்குறிச்சியில் நந்தி தேவர் பிறப்பு விழாவும், திருமழபாடியில் நந்தி தேவர் திருமண விழாவும் வெகு விமர்சையாக ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.

திருமழப்பாடி திருத்தலம் :

சிவ பெருமானே, சிலாத முனிவரின் மகனான நந்தி தேவருக்கும், சுயசாம்பிகைக்கும் திருமணத்தை முன்னின்று நடத்தி வைத்ததாக சொல்லப்படுகிறது. இதனை குறிப்பிடும் விதமாகவே ஆண்டுதோறும் இத்தலத்தில் நந்தி திருமணம் நடத்தப்படுகிறது. இந்த நந்தி திருமணத்தில் கலந்து கொண்டு, திருமணத்தை நடத்தி வைக்க திருவையாற்றில் இருந்து ஐயாறப்பர் இங்கு எழுந்தருவார். அதே போல் திருவையாற்றில் நடைபெறும் சப்தஸ்தான விழாவின் போது இங்கிருந்து நந்தி தேவர் புறப்பட்டு செல்லும் வைபவம் நடைபெறுவது தனிச்சிறப்பானதாகும்.

சிவனடியார்களுக்கு மிகவும் பிரியமான, பொன்னார் மேனியனே என்ற பதிகத்தை சுந்தரமூர்த்தி நாயனார் பாடியது இந்த தலத்தில் தான். இத்தல இறைவனை போற்றியே இந்த தேவார பாடலை இயற்றினார். திருஞான சம்பந்தரும் இத்தல இறைவனை பாடி உள்ளார். நந்தி கல்யாணம் பார்த்தால் முந்தி கல்யாணம் என்ற சொல் வழக்கு உருவான தலம் திருமழப்பாடி ஆகும்.

#மனித முகத்துடன் நந்தி :

திருமழப்பாடி திருத்தலத்தில் சிவ பெருமான் வைத்தியநாத சுவாமி என்ற திருநாமத்துடன் போற்றப்படுகிறார். தாயார் சுந்தராம்பிகை. காவிரியின் வட கரையில் அமைந்த சோழ நாட்டு சிவ தலங்களில் இக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த கோவிலில் தான் தமிழகத்திலேயே மிகப் பெரிய வெண்கலத்தால் ஆன திருவள்ளுவர் சிலை உள்ளது. இதன் எடை 750 கிலோ ஆகும்.

இங்கு நந்தி தேவர், ரிஷப முகத்துடன் இல்லாமல் மனித முகத்துடன் காணப்படுவது மற்றொரு தனிச்சிறப்பாகும். நந்தி தேவர் திருமணக் கோலத்தில் மனைவியுடன் காட்சி தரும் திருக்கோலத்தையும் இந்த ஆலயத்தில் காண முடியும்.

தல வரலாறு:

திருமழபாடி வைத்தியநாதர் கோயில் என்பது தமிழ்நாடு, அரியலூர் மாவட்டம், திருமழபாடி என்ற ஊரில் அமைந்துள்ள ஒரு சிவன் கோயில் ஆகும். சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்றது. இத்தலத்தின் மூலவர் வைத்தியநாதசுவாமி, தாயார் சுந்தராம்பிகை ஆவர். தல விருட்சமாக பனை மரம் உள்ளது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 54வது சிவத்தலமாகும்.

கயிலைநாதன் எழுந்தருளியுள்ள திருக்கோவிலை கண்டு வழிபட எண்ணிய நம்பியாரூரராம் சுந்தரமூர்த்தி சாமிகள் திருவாரூரிலிருந்து புறப்பட்டு நன்னிலம், திருவாஞ்சியம், ஆவடுதுறை, நாகேச்சரம், கண்டியூர் போன்ற தலத்தை தரிசித்து திருவாலம் பொழிலையைடைந்து இறைவனை வழிபட்டு அன்றிரவு தங்கியிருந்த போது அவர் கனவில் சிவபெருமான் தோன்றி "மழபாடிக்கு வருவதற்கு மறந்தாயோ" என்று வினவி மறைந்தார். பின் வடகரையை அடைந்து திருமழபாடி ஈசனாரை தரிசித்து,

"பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கு அசைத்து
மின்னார் செஞ்சடைமேல் மிளிர் கொன்றை அணிந்தவனே
மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே
அன்னே உன்னை அல்லால் இனியாரை நினைக்கேனே"
என்ற தேவார திருப்பதிகத்தை பாடிப்போற்றினர்.

இந்த மழப்பாடி ஈசனை சுந்தரர் காலத்துக்கு முன்பே திருஞானசம்பந்தர் கண்டு "காச்சிலாத பொன்னோக்கும் கனகவயிரத்தின் ஆச்சிலதா பளிங்கினன் மழப்பாடி வள்ளல்" என்று போற்றியுள்ளார். திருநாவுக்கரசரோ "மரு சுடரின் மாணிக்கக்குன்று கண்டாய் மழப்பாடி மண்ணும் மணாளன் தானே " என்று மழப்பாடி ஈசனை போற்றியுள்ளார்.

ஆவணம் காத்த கங்கை கொண்ட சோழன்:

திருமழபாடி என்னும் இத்திருத்தலம் கொள்ளிடம் ஆற்றின் வடக்கு மற்றும் மேற்கு கரைகளில் திகழ்வதாகும். இந்த கோவில் கிழக்கு நோக்கி ஏழு நிலைகளையுடைய ராஜகோபுரம் இரண்டு திருசுற்றுகள் உடன் கோபுரம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் பல்லவ வேந்தர்களின் பாடல் இடம்பெற்றுள்ளதால் இவ்வாலயம் கி.பி 7 ஆம் நூற்றாண்டு காலத்திய ஆலயம் என்பதில் ஐயமில்லை. ஆதித்தசோழன் காலம் தொடங்கி பல்வேறு சோழ அரசர்களின் கல்வெட்டு சாசனங்கள் சுந்தரபாண்டியன் போன்ற பாண்டிய மன்னர்களின் கல்வெட்டுகள், போசன அரசர்கள், கோனேரிராயன் காலத்து மற்றும் விஜய நகர நாயக்க மன்னர்கள் கல்வெட்டுகளை இந்த கோவிலில் காணலாம். சோழர் கல்வெட்டுகளில் வடகரை ராஜராஜ வளநாட்டுப் பொய்கை நாட்டு உட்பிரிவான மிய்பிலாற்று திருமழபாடி என்றும் ராஜேந்திர சிம்ம வளநாட்டுப் பொய்கை நாட்டுத் திருமழபாடி என்றும் இவ்வூர் குறிப்பிடப்பெற்றுள்ளது. இவ்வூரோடு இணைந்து ஸ்ரீ கண்டராதித்தர் சதுர்வேதிமங்கலம் என்ற பேரூரும் இருந்துள்ளது. தற்போது இவ்வூர் கண்டராதித்தம் என்ற பெயரோடு மழபாடியோடு இணைந்து திகழ்கின்றது. இங்குள்ள செம்பியன் மாதேவிப் பேரேரி என்ற பெயரால் சோழர்கள் வெட்டுவிக்கப்பெற்றதோடு எந்த ஏரியில் பிரிந்து செல்லும் வாய்க்காலுக்கு ராஜராஜன் வாய்க்கால், குலமணிக்க வாய்க்கால், சுந்தரசோழன் வாய்க்கால் உத்தமசோழன் வாய்க்கால் என்ற பெயரில் இருந்தமையும் குலோத்துங்கசோழப் பெருவழி என்ற நெடுஞசாலை இவ்வூர் வழி சென்றமையும் சோழசமாதேவி வீதி, கண்டராதித்தர் வீதி என்ற இரண்டு வீதிகள் இருந்தமையும் கல்வெட்டு சொல்லும் செய்திகளாகும்.

இத்திருக்கோவிலில் மிக தலையாய சிறப்புடைய கல்வெட்டு முதலாம் ராஜேந்திர சோழனின் 14ஆம் ஆண்டு 70 ஆம் நாளில் வெட்டுவிக்கப்பெற்ற சாசனமேயாகும். ராஜராஜ சோழனின் காலத்தில் சிதைந்த திருமழபாடி கோவிலை புதுப்பிக்க விரும்பி ஓர் ஆணை பிறப்பித்தான் அதன்படி கோவில் விமானத்தை பிரித்து மீண்டும் கற்றளியாக புதுப்பிக்கவேண்டி இருப்பதால் விமானத்தில் உள்ள கல்வெட்டு சாசனங்களை படியெடுத்து புத்தகத்தில் பதிவு செய்யவேண்டும். புதிய கற்கோவில் எடுத்த பிறகு மீண்டும் அக்கல்வெட்டுகளை அங்கு பொறிக்கவேண்டும் என்பதேயாகும். திருமழபாடி கோயில் திருப்பணியை மன்னன் ராஜேந்திர சோழன் கி.பி 1026 இல் நிறைவுசெய்ததாக கல்வெட்டுகள் சொல்கின்றது. புத்தகத்தில் பதிவு செய்யப்பெற்ற பழைய கல்வெட்டு செய்திகளை நகல்களை தன்னுடைய தண்டநாயக்கர்(சேனாதிபதி) ராமன் அருள்மொழியான உத்தமசோழ பிரம்மராயன் மேற்பார்வையில் ஓலை அனுப்பி திருமழபாடி கோயிலின் அலுவலரான குளவன் சோழன் அரங்கலமுடையன் பட்டலாகன், திருமழபாடி பிச்சன் கண்டராதித்த சதுர்வேதிமங்கள சபையோர் பெரும்புலியூர் சபையோர் ஆகியோர் முன்னிலையில் கல்வெட்டுகள் ஒப்பிட்டு பார்த்தபின் கல்வெட்டில் பொறிக்கவேண்டும் என்பது ராஜேந்திர சோழரின் ஆணை மேலும் இந்த ஆணை திருமழபாடிமூலவரின் கருவறைச் சுவற்றில் 83 வரிகளில் பதிவு செய்யப்பெற்றுள்ளது. அதில் 73 வரிகள் ராஜேந்திர சோழனின் ஆணையும் 74 ஆம் வரிகளில் ராஜ ராஜ சோழரின் ஆணையும் இடப்பெற்றுள்ளது சிறப்பு செய்தியாகும். இந்த அனைத்து செய்திகளையும் தற்போது உள்ள கல்வெட்டுகளில் காணலாம்.

இத்தலம் புருஷாமிருகம் மகரிஷியால் பூஜிக்கப் பெற்றதும் திருமால், இந்திரன் ஆகியோரால் வழிபடப் பெற்ற பெருமையும் உடையதாகும். சந்திரனுக்குள்ள கய நோயை போக்கியதால் இறைவன் வைத்தியநாதர் எனப் பெறுகிறார்.புருஷாமிருக முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பெற்ற சிவலிங்கத்தைப் பிரம்மன் பெயர்த்தெடுக்க முயன்றபோது வச்சிரத்தம்பமாக இறைவன் விளங்கிய காரணத்தால் "வச்சிரதம்பேசுவரர்' எனவும் அழைக்கப்படுகின்றார். இத்தல அம்பிகைக்கு சுந்தரராம்பிகை, அழகம்மை, பாலாம்பிகை என்ற திருநாமங்கள் உண்டு. இத்தல தீர்த்தம் இலக்குமியின் பெயரால் "இலக்குமி தீர்த்தம்' என அழைக்கப்படுகிறது. சோமாஸ்கந்த வடிவம் ஒரே கற்சிலையில் அமையப் பெற்றுள்ள அற்புதமான தலம்.

சிலாதமுனிவரின் புதல்வராய்த் தோன்றியவர் திருநந்தி தேவராவார். நந்தீஸ்வரருக்கும் சுயசாம்பிகைக்கும் திருமணம் நடந்த இத்தலத்தில் அதனைக் குறிக்கும் விதத்தில் ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் நந்திதேவர் விழா பெருவிழாவாக நடைபெற்று வருகின்றது. அன்றைய நாளில் திருவையாற்று இறைவன் ஐயாறப்பர் இங்கு எழுந்தருளுவதும் திருவையாற்றில் நடைபெறும் சப்தஸ்தான விழாவிற்கு இங்கிருந்து நந்திதேவர் புறப்பட்டுச் செல்லுவதும் மரபாக இருந்து வருகின்றது. இந்த திருமண வைபவத்தை நேரில் காணும் கல்யாணமாகாத வரன்களுக்கு உடனடியாக திருமண பிராப்தி வாய்க்கும் என்பதும் அக்காரணத்தில்தான் இப்பகுதியில் "நந்தி கல்யாணம் முந்தி கல்யாணம் என்ற சொல் வழக்கும் நிலவி வருகிறது என்பதும் சிறப்புத் தகவலாகும்.

இந்த திருமண வைபவத்தைக் காணும் திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம். அதனால் தான் நந்தி கல்யாணம் முந்தி கல்யாணம் என்ற பழமொழியும் ஒன்றாயிற்று.

அலங்கார திருக்கோலத்தோடு திருமண விழாவில் திருமணமாகாத ஆண்களும், பெண்களும் ஆயிரக்கணக்கில் பங்கேற்பது ஆண்டுதோறும் காணக்கூடிய காட்சியாக உள்ளது.

நவகிரகங்களின் சக்திகளை இறைவன் தனது ஆதிக்கத்தில் கொண்டிருப்பதால் தான் இந்து கோயிலில் நவகிரகங்கள் இல்லை. பக்தர்களுக்கு ஏற்படும் நவகிரக தோஷத்தை இறைவனை முன் நின்று தீர்த்து வைப்பதாகப் பக்தர்கள் இடையே நம்பிக்கை உள்ளது.

வைத்தியநாத சுவாமி கோயிலில் ஒன்பது நந்திகள் அமைந்துள்ளது. இந்த கோயிலும் சிறப்பு அம்சங்களில் ஒன்றாகும் ஐந்து நதிகள் ஒன்றன்பின் ஒன்றாக இருக்கின்றன. மேலும் தல விருட்சமான பனைமரத்தின் கீழ் நான்கு நந்திகள் உள்ளன. அவை ரிக், யஜுர், சாம, அதர்வண என வேதங்களைக் குறிப்பதாக ஐதீகம்.
ஓம்நமசிவாய
 படித்து 
பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 
 . 

Followers

தென்னாடுடைய சிவன் என்பது ஏன் ..?

சிவன் வீற்றிருக்கும் கயிலாயம்  வடக்கில் இருக்கும் போது ...... தென்னாடுடைய சிவன் என்பது ஏன் ..? .. வடக்கில் இருப்பது பூலோக கயிலாய...