கோடாலம்பாக்கம்)
#சிதம்பரேஸ்வரர் (சிற்றம்பலநாதர்)
#சிவகாமசுந்தரி_அம்மன் திருக்கோயில் வரலாறு:
தன் தலை மீது கால்பட தனக்கு திருவடி தீட்சை தந்தது சிவபெருமான் தான் என்பதை உணர்ந்த சுந்தரர்.
1110 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது சித்தவட மடம் ஸ்ரீ சிதம்பரேஸ்வரர் திருக்கோயில்வழக்கில் தற்போது கோட்டலாம்பாக்கம் என்றழைக்கப்படும் .
மூலவர்: சிதம்பரேஸ்வரர்
(சிற்றம்பலநாதர்)
அம்மன்: சிவகாம சுந்தரி
புராண
பெயர்: கோடலாம்பாக்கம் (சித்தவடமடம்)
ஊர்: கோட்லாம்பாக்கம்
மாவட்டம்: கடலூர்
மாநிலம்: தமிழ்நாடு
பாடியவர்கள்:
(தேவார வைப்புத் தலம்)
சுந்தரர், அப்பர் சுவாமிகள்
*அப்பர் சுவாமிகள் பாடிய பாடல்:
"ஒத்த வடத்திள நாகம்
உருத்திர பட்ட மிரண்டும்
முத்து வடக்கண் டிகையும்
முளைத்தெழு மூவிலை வேலுஞ்
*சித்த வடமும் அதிகைச்
சேணுயர் வீரட்டஞ் சூழ்ந்து
தத்துங் கெடிலப் புனலும்
உடையா ரொருவர் தமர்நாம்
அஞ்சுவ தியாதொன்று மில்லை
அஞ்ச வருவது மில்லை
சுந்தரமூர்த்தி நாயனார் பாடிய தேவாரம்:
"தம்மானை அறியாத சாதியார் உளரே
சடைமேற்கொள் பிறையானை விடைமேற்கொள் விகிர்தன்
கைம்மாவின் உரியானைக் கரிகாட்டி லாடல்
உடையானை விடையானைக் கறைகொண்ட கண்டத்
தெம்மான்றன் அடிக்கொண்டென் முடிமேல்வைத் திடுமென்னும்
ஆசையால் வாழ்கின்ற அறிவிலா நாயேன்
எம்மானை எறிகெடில வடவீரட் டானத்
துறைவானை இறைபோது மிகழ்வன்போ லியானே.
#கோட்லாம்பாக்கம்:
கோடலம் (செங்கந்தல் பூ) என்றால் சுடர் அல்லி. இந்த பகுதியில் பழங்காலத்தில் ஃபிளேம் லில்லி செடி அடர்த்தியாக இருந்திருக்கலாம். அதனால் இப்பகுதி கோடாலம் பாக்கம் என அழைக்கப்பட்டது. பின்னர், கோட்லாம்பாக்கம் என தற்போது அழைக்கப்படுகிறது.
மற்ற பெயர்கள்:
சித்தாண்டிமடம் / சித்தாந்த மடம் / சித்தாவடமடம் / கோடாலம் பாக்கம் என்று பழங்காலத்தில் கோட்லம்பாக்கம் அழைக்கப்பட்டது.
சேக்கிழாரின் பெரிய புராணத்தில் , இக்கோயில் திருவதிகைக்கு அருகில் அமைந்துள்ள மடம் என்று குறிப்பிடப்படுகிறது. அந்தக் காலத்தில், இந்த இடத்திற்கு சித்த வட மடம் (அல்லது சித்தாண்டி மடம்) என்ற பெயர் இருந்தது.
சித்தவட மடம் அமைந்திருந்த இடத்தில் தற்போது ஸ்ரீ சிவகாமசுந்தரி உடனாய ஸ்ரீ சிதம்பரேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. திருவதிகை திருக்கோயில் கல்வெட்டில் இவ்வூர் கொட்டிளம்பாக்கம் (தற்போதைய பெயர் கோட்டலாம்பாக்கம்) என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
#சுந்தரமூர்த்தி நாயனாருக்கு
#திருவடி தீட்சை:
ஒருநாள் சுந்தரர் திருத்துறையூர் கோயில் கொண்டிருக்கும் சிஷ்ட குருநாதரை தரிசித்து, பின்னர் அங்கிருந்து அட்டவீரட்டானத்தலங்களுள் ஒன்றான திருஅதிகை வீரட்டானம் கோயிலில் எழுந்தருளியிருக்கும் ஈசனை தரிசிக்க தற்போது புதுப்பேட்டைன்னு அழைக்கப்பட்ட ரோஜபுரியின் வழியாக சென்றார்.
கி.பி. எட்டாம் நூற்றாண்டில், இந்த இடம் சித்தர்கள் மடமாக இருந்த காலத்தில், ஸ்ரீ வீரட்டானேஸ்வரரைத் தரிசிக்கும் பொருட்டு வந்த சுந்தரமூர்த்தி நாயனார் திருவதிகை திருத்தலத்தில் திருநாவுக்கரசர் பெருமானும் அவரது தமைக்கையார் திலகவதி அம்மையாரும் தங்களது திருக்கரங்களால் உழவாரத் திருப்பணி செய்துள்ளனரே அந்த இடத்தை, தான் தனது கால்களால் மிதிக்கக் கூடாது என்ற பக்தியின் மேலீட்டால், ஸ்ரீ வீரட்டானேஸ்வரரை சித்தவட மடத்திலிருந்தவாறே தரிசித்து விடலாம் என்று முடிவு செய்து அங்கேயே தங்கி விட்டார்.
தன்னை தரிசிக்க விரும்பிய தனது பக்தன் சுந்தரன் தன்னை தரிசிக்காமல் செல்லலாகாது என்று எண்ணிய ஸ்ரீ வீரட்டானேஸ்வரர், சுந்தரர் தங்கியிருந்த சித்தவட மடத்திற்கே சென்று சுந்தரருக்கு அருட்காட்சி தர விரும்பினாராம். உடனே முதுமைக் கோலம் பூண்ட சிவபெருமான் சித்தவட மடம் சென்று, அங்கு சுந்தரர் உறங்கிக் கொண்டிருப்பதனைக் கண்டு, அவர் அருகிலேயே சிவபெருமானும் தனது கால்கள் சுந்தரரின் தலை மீது படும்படியாகப் படுத்துக்கொண்டார்.
முதியவரின் கால்கள் தன் தலை மீது படுவதை உணர்ந்த சுந்தரர், பக்கத்திலேயே சற்று தள்ளி வேறு இடத்தில் சென்று படுத்துக்கொண்டார். சிவபெருமானும் சுந்தரர் படுத்திருந்த இடத்தருகே சென்று அவரின் கால்கள் மீண்டும் சுந்தரரின் தலை மீது படும்படியாகப் படுத்துக் கொண்டார்.
வெகுண்டு எழுந்த சுந்தரர், “ஐயா, பெரியவரே, ஏன் மீண்டும் மீண்டும் இப்படிச் செய்கிறீர்?” எனக் கேட்க, “நீ வேண்டும் என்பதால் தான்” என்று முதியவர் கோலத்திலிருந்த சிவபெருமான் பதில் தர, உடனே சுந்தரர், “நீர் யார்? எந்த ஊர்?” எனக் கேட்க, அதற்கு சிவபெருமான், “நீ ஒரு சித்தன் – நீ எனது பித்தன்” என்று கூறி ரிஷப வாகனத்தில் உமையாளுடன் சுந்தரருக்கு அருட்காட்சிகொடுத்து மறைந்தாராம் சிவபெருமான்.தன் தலை மீது தன் கால்பட தனக்கு திருவடி தீட்சை தந்தது சிவபெருமான் தான் என்பதை அப்போது தான் உணர்ந்தார் சுந்தரர்.
தலையின் மீது கால் போட்டுத் தன்னை தூங்க விடாமல் கிழவன் மேல் கோபம் கொண்ட சுந்தரர் என்னை நிம்மதியாய் உறங்கவிடாமல் செய்கிறீரே! யார்நீர்? "என்று கேட்டார். அதற்கு அந்தப்பெரியவர் ,"என்னைத் தெரியவில்லையா?"என்று கேட்டுச் சற்றே உட்புறமாக நோக்கிச் சென்று மறைந்தார். அந்த இடத்திலே ரிஷப வாகனத்தில் உமையவளோடு சிவப்பெருமான் காட்சியளிக்க பரவசப்பட்டுப்போன சுந்தரர் வந்திருந்தது ஈசன் என அறியாமல் நான் பாவம் செய்தேன் என்று சொல்லி இந்த பதிகத்தை பாடினாராம்
"தம்மானை அறியாத சாதியார் உளரே
சடைமேற் கொள்பிறையானை விடைமேற் கொள்விகிர்தன்
கைம்மாவின் உரியானைக் கரிகாட்டில் ஆடல்
உடையானை விடையானைக் கறைகொண்ட கண்டத்
தெம்மான்றன் அடிக்கொண்டென் முடிமேல் வைத்திடும் என்னும்
ஆசையால் வாழ்கின்ற அறிவிலா நாயேன்
எம்மானை எறிகெடிலவட வீரட்டானத்
துறைவானை இறைபோது மிகழ்வன் போலியானே.
இந்த பதிகத்தில் பத்து பாடல்கள் உள்ளன. திருவதிகை இறைவனை நினைந்து பாடிய அப்பதிகத்தை இங்கு வைத்துப்பாடினார் சுந்தரர் அவருக்கு இறைவன் காட்சித் தந்த இடமே தற்போதைய மூலஸ்தானம் என்று சொல்லபடுது.
இந்த ஸ்தலத்திற்கு வந்த வடலூர்
வள்ளலார் பெருமான் இந்நிகழ்ச்சியை நினைந்து வியக்கின்றார்..
சிவபெருமானை நோக்கி,
“திருமுடியில் பிறையணிந்த பெருமானே, திருமாலும் பிரமனும் வேதமும் தத்தம் முடிமேல் அமையவேண்டும் என நின் திருவடி நோக்கித் தவம் கிடந்து வேண்டவும், அங்கெல்லாம் வராமல், ஆரூரனாகிய சுந்தரர் பித்தன் என்று பேசியும், முடிமேல் அடிவைத்தாய் என்று மறுக்கவும், விடாது தொடர்ந்து சென்று அவர் முடிமேல் நின்றதே, உமது திருவடிக்கு சுந்தரர் முடிமேல் அத்தனை ஆசைபோலும் என பாட்டாய் பாடபெற்றதும் இந்த ஸ்தலமே
"ஒருமுடிமேல்பிறைவைத்தோய்
அரிஅயன்ஒண்மறைதம்
பெருமுடிமேலுறவேண்ட
வராதுனைப்பித்தனென்ற
மருமுடியூரன்முடிமேல்
மறுப்பவும்வந்ததவர்
திருமுடிமேலென்னஆசைகண்
டாய்நின்திருவடிக்கே.
இந்த சித்தவட மடம் தான் தற்போது ஸ்ரீ சிதம்பரேஸ்வரர் திருக்கோயிலாக மிளிர்கிறது. இம்மடத்தின் வரலாற்றுப் புகழை அறிந்த சோழ மன்னர்கள் செங்கல் மற்றும் சுண்ணாம்பு கொண்டு கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டில் இங்கு திருக்கோயில் எழுப்பினர் .
மேலும் பதினோராம் நூற்றாண்டில் வாழ்ந்த நம்பியாண்டார் நம்பியும், பன்னிரெண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த சேக்கிழார் பெருமானும், பெரியப்புராணத்துக்கு முன்பு வந்த எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த சுந்தரர் பாடிய திருத்தொண்டர் புராணத்தை மேற்கோள் காட்டிப் பாடப்ட்டது எனவும் கூடுதல தகவல். சுந்தரர் தம் திருத்தொண்டத் தொகையில் பாடிய நரசிங்கத்தரையர் எனும் அரசர்கூட பல்லவ சக்கரவர்த்தியாக இருந்த ராஜசிம்ம பல்லவனைக் குறிக்கும் என ஆராய்ச்சியாளர்களாலும், அந்த அரசன் பல்லவன் இல்லை, சிற்றரசன் சிலர் சொல்கின்றனர்.
சுந்தரருடைய பெருமைகளைக் கேட்டுத்தெரிந்து கொண்ட சேரநாட்டு அரசராகிய சேரமான் பெருமாளும் திருவாரூர் வந்து அவரைச்சந்தித்து அவருடன் கூடவே இருந்து, ஒரே சமயத்தில் கைலாயம் சென்றதாக பெரியபுராணப் பாடல்களில் சொல்லபடுகின்றன. அதனால் இந்த கோவில் எந்த நூற்றாண்டை சேர்ந்தது என அறியமுடியவில்லை. அங்கே இருந்த சில பெரியவர்களிடம் கேட்டும் கூட தெரியவில்லை .
செல்லும் வழி:
இந்த திருக்கோவிலுக்கு விழுப்புரம் வழியாகவும் போகலாம். விழுப்புரத்திலிருந்து அரசூர் வந்து அங்கிருந்து பண்ருட்டி செல்லும் வழியில் புதுப்பேட்டை என்னும் இடத்திலிருந்து 3 கி மீ தொலைவில் உள்ளது இந்த திருக்கோவில். பண்ருட்டிலிருந்து மடப்பட்டு வழியாக செலலும் மார்க்கத்தில் அங்கு செட்டிபாளையம் என்னும் ஊரில் இருந்து 1 கிமீ தொலைவில் இருக்கு. பஸ்ல போறவங்களுக்கு பண்ருட்டிலிருந்து நேரடியாக இங்கே மினி பஸ் இருக்கு கடலூரில் இருந்தும் பண்ருட்டி வந்து இந்த தலத்தை அடையலாம்.
சுந்தரருக்கு சிவபெருமான் தம் திருவடியைச் சூட்டியதும் (திருவடி தீட்சை), ஞான சித்தர்களும், முனிவர்களும் இறவாப் புகழுடன் வாழும் சித்தவட மடத்தில் கோயில் கொண்டுள்ள ஸ்ரீ சிவகாமி உடனுறை ஸ்ரீ சிதம்பரேஸ்வரரை தரிசித்து பலன் பெறுவோம்.
ஓம் நமசிவாய
படித்து பகிர்ந்தது
இரா இளங்கோவன்
நெல்லிக்குப்பம்
9443548747