Showing posts with label # Nataraja #sivan #hindu #india #tamilnadu. Show all posts
Showing posts with label # Nataraja #sivan #hindu #india #tamilnadu. Show all posts

Saturday, June 24, 2023

ஆனித்_திருமஞ்சனம் 25.06.2023***************************************ஆடலரசனுக்கு ஆனித் திருமஞ்சனம்..

ஆனித்_திருமஞ்சனம்  25.06.2023
***************************************
ஆடலரசனுக்கு ஆனித் திருமஞ்சனம்..
சிதம்பரத்தில் ஆண்டு தோறும் நடைபெறும் ஆனித் திருமஞ்சனம் மிகவும் சிறப்புவாய்ந்த ஒன்று. இந்த உற்சவத்தை பதஞ்சலி முனிவர் தொடங்கி வைத்தார் என்று புராணங்கள் கூறு கின்றன. ஏன் பதஞ்சலி மனிதராக அவதரித்து சிவ நடனம் காண விரும்பினார் என்பது உயர்ந்த தாத்பர்யம் எனலாம்.

ஒருமுறை திருமால் பாற்கடலில் சயனம் கொண்டிருந்த போது கண்கள் மூடியிருந்த நிலையில் தன் மலர்போன்ற உதடுகளை விரித்துப் புன்னகை செய்தார். திருமாலே மனம் மகிழ்ந்து புன்னகை செய்யும் அந்தத் திருக்காட்சி என்னவாக இருக்கும் என்று ஆதிசேஷனுக்குத் தோன்ற அதை அவர் பெருமாளிடம் கேட்டார்.

“சுவாமி எந்தக் காட்சியைக் கண்டு தாங்கள் மகிழ்ந்தீர்கள்...” என்று கேள்வி எழுப்பினார். அதற்குப் பெருமாள், “சிவபெருமான் நடராஜ ரூபம் கொண்டு நடனமாடுகிறார். அந்த ஆனந்த தாண்டவம் கண்டு மகிழ்ந்தேன்” என்றார். 

உடனே ஆதிசேஷனும், “தனக்கும் அந்தத் திருக்காட்சி தரிசனம் பெற ஆசையாய் இருக்கிறது. அதற்குத் தாங்கள்தான் அருள வேண்டும்.” என்று கேட்க மகிழ்வோடு பெருமா ள் சிவனை நோக்கித் தவம் செய்யுமாறு கூறுகிறார்.

சிவபெருமானை அடையும் வழி. இந்தக் காலத்தில் முக்கியஸ்தர்களின் அறிமுகம் எல்லாக் காரியங்களையும் சாதித்துத் தந்து விடுகிறது. தகுதியில்லாமலேகூடப் பலரும் பலவற்றையும் பெற்றுவிடுகிறார்கள். அதே போன்று மகாவிஷ்ணுவும் தன் சக்தியால் ஆதிசேஷனுக்கு அந்தக் காட்சி தரிசனத்தை ஒரே கணத்தில் காட்டியருளியிருக்கலாம். ஆனால் அவரோ ஆதிசேஷனை சிவனை நோக்கி தவம் செய்யும்படி அறிவுறுத்துகிறார்.

சிவனின் திருவடி தரிசனம் என்பது யாராலும் அடையமுடியாதது. அரியும் பிரம்மாவும் சிவனி ன் அடிமுடியை அறியவிரும்பித் தோற்றனர். அப்படி மும்மூர்த்திகளில் இருவருக்கே எட்டாத திருவடி எப்படி சாதாரண முனிவர்களுக்கும் ஞானிகளுக்கும் பக்தர்களுக்கும் கிடைக்கும்?

திருவடிகளைப் பற்றிக்கொள்வதுதான் கலியு கத்தில் மீட்புக்கு ஒரே வழி. பிறயுகங்களில் யாகங்களும் தவங்களும் அளித்த பலன் இந்த கலியுகத்தில் திருவடியை தியானிப்பவர்களு க்குக் கிடைக்கும். அப்படியான அந்த உயர்ந்த வரத்தை இறைவன் பக்தர்களுக்கு எளிமையா க அருள வேண்டும் என்னும் திருவுளத்தோடு செய்த அவதாரமே திருவடியைத் தூக்கி நடனமாடிய நடராஜத் திருவுருவம். 

இறைவனின் திருநடனம் எப்போதும் நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது. அதைக் காண நமக்கு அவன் அருள் வேண்டும். அதை அடையும் வழி தவமும் வழிபாடுமே. சிவபெருமானின் திருநடனத்தைக் காணவிரும்பிய ஆதிசேஷன் தவம் செய்தார். அவரின் தவத்தில் மயங்கிய ஈசன் அவர் முன்பாக பிரம்மாவின் வடிவில் தோன்றினார்.

'பிரம்மா, நமக்கு சாகாவரம் அளிக்க இயலாது. முக்தி நிலையை அருளமுடியாது. பிரம்மாவிட ம் தவம் செய்து வரம் பெற்ற அசுரர்கள் இந்த உலக சுகங்களையே வரங்களாகக் கேட்டுப் பெற்றனர். உயர்ந்த லட்சியமாகிய சிவபதம் விரும்புபவர்கள் சிவனையே தியானிக்க வேண்டும். 

தவத்தினாலும் பக்தியினாலும் கிடைக்கும் உலக சுகங்களில் தன் மதிமயங்காது இறைவ னை தியானிக்க வேண்டும். இல்லையென்றா ல் தன் பக்தியினை இழந்து தம் லட்சியத்திலி ருந்து வழுவ நேரிடும்' என்று நினைத்த ஆதிசேஷன், தன் லட்சியத்தில் உறுதியாக இருந்தார்.

தன் முன் தோன்றிய பிரம்மாவிடம், “தங்களிடம் நான் வேண்டுவது எதுவுமில்லை. எனவே நீங்கள் போகலாம்” என்று சொல்லித் தன் தவத்தினைத் தொடர்ந்தார். ‘எண்ணியர் எண்ணியாங்கு எய்துவர்’ என்பதைப் போல ஆதிசேஷனின் மன உறுதியைக் கண்ட ஈசன் அவருக்கு  சுய வடிவில் காட்சிகொடுத்தார். 

அப்போது, ஆதிசேஷன், "நான் தங்கள் திரு நடனம் காண விரும்புகிறேன்’ என்று கேட்க, அதற்கு சிவபெருமான், ‘சிதம்பரம் தலத்துக்கு வா’ என்று சொல்லி மறைந்தார்.

நடராஜர் திருநடனம் புரியும் சபைகள் ஐந்து. அதில் முதலாவது சிதம்பரம். இங்குதான் இறைவன் தன் எல்லையில்லாப் பெருநடனத் தை நடத்திக்கொண்டிருக்கிறார். 

ஆதிசேஷன் நடனக் காட்சியைப் பெற மனித வடிவம் எடுத்துவந்தார். ஆதிசேஷன் அப்படி யே திருநடனம் காண விரும்பியிருக்கலாம். ஆனால் மனிதராகப் பிறப்பெடுத்தவர்கள் திருநடனத்தை கண்டபின்பு எப்படி சிவநிலை க்கு உயர்வார்கள் என்பதை இந்த உலகுக்கு உணர்த்தவே மனிதராகப் பிறப்பெடுக்கிறார். 

மேலும் சிவனின் தூக்கிய திருவடி நடராஜ வடிவத்தின் சிறப்பு. தேவர்களும் காண்பதற்கு அரிய அந்த திருவடியை ஈசன் இங்கு எளிமை யாக பக்தர்களுக்குத் தன் திருநடனத்தின் மூலம் காட்சியருளி அவர்களை சிவபதம் அடைய வழிகாட்டுகிறார்.

தமிழகத்திலிருந்து பிறந்த கலை பரதம். அதன் ஆதர்ச வடிவம் நடராஜ பெருமான் திருவடிவம். நடனமாடும் ஈசனின் இந்தத் திருவடிவம் தமிழ கக் கோயில்களில் மட்டுமே பெரும்பாலும் காணப்படுகிறது. ஆடல் கலையின் நாயகனா ம் ஈசனிடம் பிறந்த அந்தக் கலையைப் பெற்று மக்களுக்கு அருளினார் பதஞ்சலி முனிவர்  என்கின்றன புராணங்கள்.

அவரே சிவபெருமானுக்கு உகந்த ஆனி உத்தி ர நட்சத்திர தினத்தில் அபிஷேக ஆராதனைக நிகழ்த்தி மகிழ்ந்தார். அதன்பின் பல ஆயிரம் ஆண்டுகளாக இந்த ஆனித் திருமஞ்சன வைபவம் நடைபெற்றுவருகிறது. ஆனித் திருமஞ்சனத்தைக் காண்பதன் மூலம் பிறவிப் பிணி தீரும் என்றும் இந்த உலகில் தொல்லை யில்லாத பெருவாழ்வு கிடைக்கும் என்றும் ஞான நூல்கள் கூறுகின்றன.

நடராஜர்ம்ஆறு அபிஷேகங்களில் ஒன்று,

‘சித்திரையில் ஓணம் முதல்; சீர் ஆனி உத்தரமாம்
சத்ததனு ஆதிரையும் சார்வாகும் - பத்தி வளர்
மாசி அரி கன்னி மருவு சதுர்த்தசி மன்றீசர் அபிடேக தினமாம்.’ 
என்கிறது ஆகமம். 

இந்த ஆறு அபிஷேக தினங்களில் ஆனி உத்திரமும் மார்கழித் திருவாதிரையும் சிறப்பு மிக்க விழாவாகக் கொண்டாடப்படுகின்றன. சிதம்பரத்தில் இந்த இரண்டுவிழாக்களும் பிரம்மோற்சவ விழாக்களாகும். இந்த விழாக்க ளில் பத்துநாள்கள் இறைவனுக்கு உற்சவம் நடத்திப் அபிஷேக ஆராதனைகள் செய்வர். 

நடராஜர் அபிஷேகம் விசேஷமானது. 32வகை யான திரவியங்கள் கொண்டு குடம்குடமாகச் செய்யப்படும் இந்த ஆறு அபிஷேகங்களும் ஆறு கால வேளைகளில் நடைபெறும். இதற்கு தேவர்களின் காலக் கணக்கை ஆகமங்கள் சொல்கின்றன. தேவர்கள் தாங்கள் நடராஜரை பூஜிப்பதோடு பூவுலகில் நடக்கும் நடராஜ அபிஷேகங்களையும் கண்டு மகிழ்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. 

அத்தகைய சிறப்புவாய்ந்த இந்த அபிஷேக ஆராதனைகளைக் காண்கிறவர்கள் இந்தப் பிறவியில் அனைத்து நன்மைகளும் பெறுவார்கள்.

சிதம்பரத்தில் ஆனித் திருமஞ்சனம் சிதம்பரத் தில் இன்று 25.06.2023 அதிகாலை 2 மணிக் குத் தொடங்கும் அபிஷேக ஆராதனைகள் காலை 7 மணிவரை நடைபெறும். வழக்கமாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு மகிழ்வா ர்கள். பக்தர்கள் தம் மனக்கண்ணில் நடராஜரி ன் திருமஞ்சனக் காட்சியைக் கண்டு ஈசனை வழிபட்டு மாணிக்கவாசக.பெருமான் அருளிய சிவபுராணத்தைப் பாராயணம் செய்ய சகல நன்மைகளையும் சிவபெருமானின் நல்லரு ளால் பெறலாம்.

ஓம் நமசிவாய..... திருச்சிற்றம்பலம்....

Friday, March 10, 2023

உலகிலேயே அழகான நடராஜர் வீற்றிருக்கும் கோனேரிராஜபுரம்.அந்த சிற்பி, ஆறாவது முறையாக நடராஜப் பெருமாள் திருவுருவத்திற்கு அச்சு செய்து பஞ்ச உலோகங்களை கலந்து காய்ச்சி வார்த்துக் கொண்டிருந்தான்.

*பூர்வ ஜென்ம புண்ணியம் செய்தவர்களுக்கு மட்டுமே அழகு ததும்பி வழியும் இந்த உலகப் புகழ் பெற்ற நடராஜரை தரிசித்து மகிழும் பெரும் பாக்கியத்தை பெற முடியும்…!*
உலகிலேயே அழகான நடராஜர் வீற்றிருக்கும் கோனேரிராஜபுரம்.

அந்த சிற்பி, ஆறாவது முறையாக நடராஜப் பெருமாள் திருவுருவத்திற்கு அச்சு செய்து பஞ்ச உலோகங்களை கலந்து காய்ச்சி வார்த்துக் கொண்டிருந்தான்.

பெரிய திருவாச்சியை தனியே வார்த்தாகி விட்டது.
சிவனுக்குரிய சடையை, அந்த சடையில் இருக்கும் நாகத்தை கங்கை உருவத்தை வார்த்தாகிவிட்டது.

சிவகாமிக்கும், நடராஜருக்கும் தனித்தனியே பீடம் செய்து முடித்தாகி விட்டது. 

இப்போது நடராஜரையும், சிவகாமியையும் வார்க்க வேண்டும்.

மழு (பஞ்சலோக குழம்பு) தொலைவே கொதித்துக் கொண்டிருக்கிறது.

 அவன் அடுப்பைத் துருத்தியால் வேகமாக ஊதி உலையின் தீவிரத்தை அதிகப்படுத்தி மழுவைக் கொதிக்க வைத்துக் கொண்டிருந்தான்.

 மழு தயார் நிலையில் இருந்தது.

திரும்பி மனைவியைப் பார்த்து துவங்கி விடட்டுமா? என்று கேட்டான். மனைவி சரியென்று தலையசைத்தாள்.

படுக்க வைக்கப்பட்ட பெரிய களிமண் அச்சுக்கு முன் கைகூப்பி நின்றான்.

ஐயனே! இது ஆறாவது முறை. என்ன தவறு செய்தேன் என்று தெரியவில்லை. ஒவ்வொரு முறையும் ஏதேனும் ஒரு பின்னம் நடந்து கொண்டே இருக்கிறது.

உன்னை நான் உருவமாகச் செய்கிறேன் என்ற கர்வம் எனக்கில்லை.

ஈசனே, நீயே வந்து குடி கொண்டாலொழிய உன் உருவத்தை ஒரு நாளும் செய்ய முடியாது.

எங்கேனும் ஒரு கர்வத்தில் நான் இருப்பின் தயவுசெய்து என்னை தண்டித்துவிடு. 

இந்த உருவத்திற்குள் வராமல் போகாதே என்று வேண்டினார்.

அன்று கோபத்துடன் கூறிய அரசனுடைய குரல் அவன் காதில் விழுந்தது. 
“வேண்டுமென்றே தவறு செய்கிறாய் சிற்பியே, என்னிடம் காசு வாங்குவதற்காகவே நீயாக ஏதேனும் தவறு செய்துவிட்டு, பின்னமாகிவிட்டது குறையாகிவிட்டது, என்று வருத்தப்படுகிறாய்.

கடந்த நான்கு வருடங்களாக நடராஜர் சிலையை செய்வதாக கூறி என்னுடைய சம்பளத்திலே தின்றுகொழுத்து செய்துவருகிறாய், இதுவே கடைசி முறை இன்னும் இரண்டு நாட்களில் நடராஜர் சிலையை செய்யவில்லையெனில் நீ இங்கிருந்து புண்ணியமில்லை!

உன்னை சிற்பி என்று நாங்கள் அழைத்து லாபமில்லை. எனவே உன் கதையை என் வாளால் முடிப்பேன் “என்று சீறிய அரசனின் காதில் ஈட்டி போல் குத்தியது.

அந்த அரசன் நான்கு வருடங்கள் பொறுமையாக இருந்ததே பெரிய விஷயம். அவன் பொறுமை மீறும்படியாக என்ன ஏற்பட்டது என்று தெரியவில்லை, அரசனிடம் இருந்து நடராஜர் சிலை செய்ய உத்தரவு சிற்பிக்கு வந்ததுமே அற்புதமான ஒரு நடராஜர் ஆயிரமாயிரம் காலத்திற்கு நிற்க வேண்டிய நடராஜர் செய்ய வேண்டும் என்ற வேகம் வந்தது.

 அந்த வேகத்தோடு கர்வம் வந்ததோ, என்னவோ தெரியவில்லை. ஐந்து சிலைகள் செய்தும் சரியாக வரவில்லை.

இது ஆறாவது சிலை.
ஒரு சிறு தவறும் நேராதவாறு எல்லா விஷயங்களையும் ஒரு முறைக்கு இரு முறை சோதித்து மெழுகால் சிலை செய்து பிறகு அதன் மீது களிமண் பூசி, சரியான இடத்தில் ஓட்டைகள் வைத்து காற்றுப் போக வழிகள் செய்து அவன் மழுவைக் காய்ச்சி இறைவனை வழிபடத் தொடங்கினான்.

மழு உச்ச நிலையில் கொதித்துக் கொண்டிருக்க, “என்னுடைய வாழ்க்கை உயர்வதும், தாழ்வதும் இப்பொழுது உன்கையில் இருக்கிறது இறைவா!  உனக்கு விருப்பம் இருப்பின் இதற்குள் வந்து உட்கார்ந்து கொள். இல்லையெனில், என்னை சாக விடு…! “என்று சொல்லிவிட்டு முழுமனதோடு மழுவை கிளரத் தொடங்கினான்.

உலையின் அனல் உடம்பு முழுவதும் அடித்தது.

அப்போது இருட்டில் யாரோ தொலைவிலிருந்து வருவது தெரிந்தது.

 வந்தவர்கள் ஆணும், பெண்ணுமான வயதான அந்தணர்கள்.

“அப்பா திருநல்லம் என்கிற ஊர் எது, ஏனப்பா மிகப்பெரிய ஊர் என்று சொல்கிறார்கள், ஏன் இப்படி வயல்களுக்கு நடுவே சிறியதாக இருக்கிறது. இதை தேடிக் கண்டுபிடித்து வருவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது.

ஐயா, சிற்பியே, தயவுசெய்து குடிப்பதற்கு ஒரு குவளை நீர் கொடு” என்று கேட்டார் அந்தணர்.

சிற்பி திரும்பி ஆச்சரியத்தோடு அந்தணர்களைப் பார்த்தான், 
ஐயையோ, இந்த அந்தணர் தன்னிடம் போய் நீர் கேட்கிறாரே, என்று ஆச்சரியப்பட்டான்.

“அய்யா, நான் சிற்பி, கருமார் இனத்தை சேர்ந்தவன்.

அந்தணர்கள் வசிக்கும் பகுதி கோயிலுக்கு பின்புறம் இருக்கிறது. நீங்கள் பார்ப்பதற்கு அந்தணர்கள் போல் இருக்கிறீர்கள். எனவே, கோயிலுக்கு பின்புறம் போய் அந்தணர் வீட்டில் குடிக்க நீர் கேளுங்கள், தருவார்கள் “என்று சொல்லிவிட்டு 
மறுபடியும் வேலையில் மூழ்கினான்.

 வந்தவர் கைதட்டி அழைத்து “எனக்கு தாகமாக இருக்கிறதப்பா, அக்ரஹாரம் போகிறவரையில் என்னால் தாங்க இயலாது சுருண்டு விழுந்து விடுவேன் என்று தோன்றுகிறது.

 எனவே உன் கையால் ஒரு குவளை நீர் கொடு “என்றார்.

“நான் இங்கு வேலை செய்து கொண்டிருப்பது உன் கண்ணில் படவில்லையா, ஒரு சிலை வடிப்பது எவ்வளவு கடினம் என்பது உங்களுக்கு தெரியாது…?
கவலையோடு நான் இங்கு நின்று கொண்டிருக்கிறேன். குடிக்க தண்ணீர் கொடு என்று என் உயிரை ஏன் வாங்குகிறீர்கள்.

 என்னிடம் தண்ணீர் இல்லை, இந்த மழு (கொதி நிலையில் உள்ள பஞ்சலோக குழம்பு) தான் இருக்கிறது வேண்டுமானல் இதை குடியுங்கள்” என்று கோபத்துடன்  சொல்ல,
*“சரி அதையே குடித்துக் கொள்கிறேன்”* என்று அருகே வந்த அந்தனர், உஞ்சவர்த்தி பிராமணர் போல தன் இடுப்பில் கட்டி தொங்கவிட்டிருந்த அந்தச் சொம்பினால்  மழுவை மொண்டார், கொதிக்கின்ற நெருப்பு ஒளியோடு வீசுகின்ற மழுவை எடுத்து உயர்த்திக் குடித்தார். 

மழு வாய்க்குள் போயிற்று, மழுவை அவர் குடித்துக் கொண்டிருக்கும் போது சற்றுத் தொலைவில் நின்றிருந்த அவரது மனைவி (இறைவி) வாய்விட்டுச் சிரித்தாள்..

சுற்றியுள்ள உதவியாட்களும், சிற்பியும் பயந்து போய் ஓவென்று கூவ, வந்தவரையும் காணோம், வந்தவர் மனைவியையும் காணோம்.

ஐயா, கொதி நிலைக்கு வந்துவிட்டது என்று உதவியாளர் கூவ, எல்லாரும் கொதிக்கும் பாத்திரத்தின் அடிப்பக்க குழாயைத் திறந்து விட்டார்கள். மழு தரைவழிந்து பள்ளத்தின் வழியே சிற்பத்திற்குள் நதிபோல் ஓடி புகுந்து கொண்டது. 
சரியாய் எண்பது நொடிகளில் எல்லா உருக்கு உலோகமும் சிலைக்குள் போய் தங்கிவிட்டது.

அடுத்தது சிவகாமி சிலைக்கும் அவ்விதமே திறந்து ஊற்ற, அதுவும் சிலைக்குள் போய் அமர்ந்து மெழுகை வெளியே அனுப்பியது, மெழுகு உருகி வெளியேறும் புகையில் அடுத்தவர் முகம் தெரியவில்லை.

கிழவரையும், கிழவியையும் யாரும் தேடவில்லை.

உருக்கு மொத்தமும் வழிந்ததும் அவரவர் ஓரம் போய் திண்ணைகளில் சாய்ந்தார்கள். தலைக்கு துணிவைத்துக் கொண்டு மயக்கத்தில் ஆழ்ந்தவர்கள் போல் தூங்கினார்கள்.

 விடிந்ததும்  என்ன நடந்தது என்று விவாதித்தார்கள்…! யோசித்தார்கள்…!

வந்தது சிவபெருமானே என்று முடிவு செய்தார்கள்.

ஓடிப்போய் களிமண்ணில் நீர் ஊற்றி மெல்ல மெல்ல பிரித்து சிலையைப் பார்த்தார்கள். 

சிலை ஆறடி உயரத்திற்கு மேலாய் அற்புதமாய் வந்திருந்தது.

*குமிழ் சிரிப்பும், கோவைச் செவ்வாயும், அகலமான கண்களும், தீர்க்கமான நாசியும் அற்புதமான கோணத்தில் நடனமாடும் சிவனுருவம் மிகச் சிறப்பாக வந்திருந்தது.*

நிமிர்த்தி பீடத்தில் நிற்க வைத்தார்கள், சடையையும், திருவாச்சியையும் மாட்டினார்கள்.

 சிவகாமியையும் நிமிர்த்தி பீடத்தோடு பொருத்தினார்கள்.

ஊர்ரே கூடி நின்று பார்த்து வியந்தது, கன்னத்தில் போட்டு கொண்டது.

 மன்னனுக்கு ஓடிப்போய் மந்திரிகள் செய்தி சொல்ல, மன்னனும் விரைந்து வந்து பார்த்தான்.

”உங்களுக்கெல்லாம் கத்தி எடுத்தால் தானடா காரியம் செய்ய முடிகிறது. தலையை கொய்து விடுவேன் என்று நான் ஆணையிட்டதனால் தானே இரண்டு நாளில் இத்தனை அற்புதமான ஒரு சிற்பத்தை செய்து முடித்தாய், இதுவரை நீ ஏமாற்றிக் கொண்டிருந்தது உண்மை என்று இப்போது தெள்ளத் தெளிவாக புரிந்து விட்டது பார்” என்று சிரிப்போடும் கடுப்போடும் மன்னன் பேசினான்.

சிற்பி இல்லை அரசே என்று தலையாட்டினார்.

 “என்ன சொல்ல வருகிறாய்?” என மன்னன் மறுபடியும் சீறினான்.

”இது சிவனால் செய்யப்பட்ட சிலை, இப்படி அந்தணர் உருவத்தில் சிவன் வந்து நின்றார். மனைவியுடன் வந்து என்னிடம் பேசினார், தண்ணீர் கேட்டார் மறுத்தேன், இது தான் இருக்கிறது என்று மழுவை (குழம்பு) காண்பித்தேன், மழுவை ஏந்திக் குடித்தார் மறைந்தார்,” என்று சிற்பி சொல்ல….

“இந்த கதையெல்லாம் என்னிடம் விடாதே” என்று மறுபடியும் சீறினான் அரசன்.

”இல்லை அரசே, இது சிவன் இருக்கிற சிலை, சிவன் மழுவுக்குள் கரைந்த சிலை. எனவே இதனுள் இறைவன் இருக்கிறான். 

இது என்னால் செய்யப்பட்ட சிலை அல்ல,” என்று பணிவாக சொல்ல, அரசன் கெக்கலித்து கிண்டலாகச் சிரித்தான்.

உளியை சிற்பியிடமிருந்து பிடுங்கி, இது சிவன் உருவம் சிவன் இருக்கிற உருவம் என்றால் இதை குத்தினால் ரத்தம் வருமோ? என்று சிற்பத்தின் காலில் ஒரு காயத்தை ஏற்படுத்தினான்.

என்ன ஆச்சரியம் !பளிச்சென்று குருதி கொப்பளித்து கொட்டியது! தரையை நனைத்தது.
மக்களெல்லோரும்  பயந்தார்கள், அரசனோ திகைத்துப் போனான். பயத்தில் சுருண்டு கீழே விழுந்தான்.

இறைவனை சோதித்த அரசனின் உடம்பு முழுவதும் தொழுநோய் பரவியது. 

அவன் சிற்பியிடமும், இறைவனிடமும் கைகூப்பி மன்றாடி மன்னிப்பு கேட்டான் என்பது கோனேரி ராஜபுரத்தின் கதை.

எங்கே இருக்கிறது இந்த கோனேரிராஜபுரம்?

 கும்பகோணம் காரைக்கால் பேரூந்து பாதையில் புதூர் என்ற ஊரை அடைந்து, அங்கேயிருந்து வலதுபுறமாக போகும் சாலையில் விசாரித்துக் கொண்டு போக வேண்டும்.

வயல் வெளிகளுக்கு நடுவே ஒரு பெரிய கிராமம் அமைதியாக திகழ்கிறது. அதுவே ஆடவல்லான் அற்புதம் நிகழ்த்திய அழகிய திருத்தலம்.

கோனேரி ராஜபுரத்திற்கு முற்காலப் பெயர் திருநல்லம். இந்த கோனேரி ராஜபுரத்திற்கு சோழமன்னன் கண்டராதித்தனும் அவன் மனைவி செம்பியன் மாதேவியும் பல நிவந்தங்கள் விட்டிருக்கிறார்கள்.

ஊர் மிகச் செழிப்பான ஊர். நடராஜர் விக்ரகத்தை பார்க்க வேண்டுமானால் அதை கோனேரி ராஜபுரத்தில் தான் பார்க்க வேண்டும்.

உலகத்திலேயே மிகப் பெரிய நடராஜர் சிலை இந்த ஊரில் தான் இருக்கிறது.

அழகு என்றால் அழகு அப்படியொரு கொள்ளையழகு.

 சிற்ப கலை தெரிந்தவர்கள் மட்டுமல்ல, சிற்பக் கலைப்பற்றி தெரியாதவர்கள் கூட அருகே போய் நின்றார்கள் என்றால் அப்படியே பரவசமாகிவிடுவார்கள்.

சிற்பக் கலை தெரிந்தவர்கள் மயக்கமாகி விடுவார்கள்!

நடராஜ பெருமானின் கைரேகைகள், அக்குள் பக்க கருப்பு, அங்கு வழக்கமாய் எல்லா ஆண்களுக்கும் இருக்கின்ற கொழுப்புக் கட்டி, புறங்கை தேமல் என்று பல்வேறு விஷயங்கள் அற்புதமாக அந்த சிற்பி (இறைவன்) செய்திருக்கிறான்.

அரசன் உளியால் செதுக்கிய இடமும் பாதத்திற்கு மேல் அப்படியே இருக்கிறது. 

கோயில் ஆயிரம் வருடத்து கோயில்.

 கோனேரி ராஜபுரம் சுவாமியின் பெயர் உமாமகேஸ்வரர் அல்லது பூமீஸ்வரர்!

தவிர, அங்கு வைத்தியநாதன் சன்னதி இருக்கிறது, அந்த வைத்திய நாத சன்னதியில் ஜபம் செய்தால், வேறு யாருக்கேனும் உடம்பு சரியில்லை என்று நாம் இறைவன் பெயரை திரும்பத் திரும்பத் சொன்னால் சம்மந்தப்பட்டபவருக்கு நோய் குணமாவதாகவும் அன்பர்கள் சொல்கிறார்கள்.

இறைவி பெயர் தேகசௌந்தரி,
ஸ்தல விருட்ஷம் அரசு,
தீர்த்தம் பிரம்ம தீர்த்தம்.

கும்பகோணம் போகிறவர்கள் அரை நாள் கோனேரிராஜபுரத்திற்கு ஒதுக்கி வைத்துவிட்டு
நிதானமாக பார்த்துவிட்டு வரவேண்டும்.

குறிப்பாக அந்த வைத்தியநாத சன்னதி மண்டபத்தில் உட்கார்ந்து ஜபம் செய்துவிட்டு அல்லது கண்மூடி இறைவன் பெயரைச் சொல்லிவிட்டு வருதல் மிக அவசியம்.

எல்லாவற்றையும் விட உங்கள் வாழ்நாளில் ஒரு முறையேனும் இந்த நடராஜனை பார்த்து கைகூப்பிவிட்டு வாருங்கள்!

கை நிறைய வில்வம் குடந்தையிலேயே வாங்கி கொண்டு போய் அவன் கால் அடியில் சொரிந்துவிட்டு வாருங்களேன்!

திருநல்லம் ஒரு முறையேனும் சென்று வாருங்கள்.
 நடராஜ சிவனின் அழகில் சொக்கிப் போவது கண்கூடான உண்மை..!!

*🔱 ஓம் நமசிவாய 🔱

Followers

பிள்ளையார் விரும்பும் 'மோதகம்' நைவேத்தியம் என்றால் என்ன❓

பிள்ளையார் விரும்பும் 'மோதகம்' நைவேத்தியம் மோதக் என்றால் உற்சாகம், மகிழ்ச்சி என்று பொருள். அகம் என்ற சொல்லுக்கு ‘வழங்கக்...