Showing posts with label #Tamil Nadu. Show all posts
Showing posts with label #Tamil Nadu. Show all posts

Thursday, April 25, 2024

ஈசனின் ஆலயக் காப்பாளர் சண்டிகேஸ்வரர்.

வேண்டுதல்களை நிறைவேற்றும் சண்டிகேஸ்வரர் வழிபாடு 
சிவ தலங்களில் நந்தியம் பெருமானும், சண்டிகேஸ்வரரும் கட்டாயம் இடம்பெறுவார்கள். நந்தியின் காதுகளில் நம் வேண்டுதல்களை கூறினால் பலிக்கும் எனும் நம்பிக்கை கொண்டவர்கள், ஏன் சண்டிகேஸ்வரரிடம் மட்டும் சப்தம் போடாமல் வேண்ட வேண்டும் என்று கூறுகிறார்கள் தெரியுமா?.

சிவனின் மெய்க்காவலர் நந்தி என்றால், ஈசனின் ஆலயக் காப்பாளர் சண்டிகேஸ்வரர். ‘சிவன் சொத்து குலநாசம்’ என்று சொல்வார்கள். 

பொதுவாகவே கோவில்களுக்கு சென்றால் நாம் அங்கு தேவைப்படும் சேவைகளை மட்டுமே செய்ய வேண்டும். அங்கு இருக்கும் எந்தப் பொருளுக்கும் ஆசைப்படுவதோ, அதை தனக்குரியதாக்கி எடுத்து வருவதோ நல்லதல்ல.

சிவனின் உதவியாளரான சண்டிகேஸ்வரர், எந்நேரமும் சிவ சிந்தனையில் ஆழ்ந்து தியானத்தில் இருப்பவர். மனிதனுக்கு கேட்கும் திறன் கொண்ட காதுகளைப்போல் சிவனின் ஆலயத்தில் சண்டிகேஸ்வரர் குடிகொண்டிருக்கும் இடம் இறைவனின் செவியாகிறது.

இறைவனிடம் நாம் வேண்டுவதை அவரின் உதவியாளரான சண்டிகேஸ்வரர் தியானத்திலேயே கேட்டு உணர்ந்து, அவைகளை அவரவர் பாவ- புண்ணியங்களுக்கு ஏற்ப கணக்கெழுதி இறைவனிடம் சமர்பிப்பதாக ஐதீகம். ஆகவே தான் சிவன் கோவில் சென்றால் இவரைப் பார்க்காமல் செல்லக்கூடாது என்பார்கள்.

யோக நிலையில் உள்ள இவரை வணங்கினால் நல்ல பேச்சுத் திறனுடன், நினைவாற்றலும் பெருகி அறிவு வளரும். எந்நேரமும் கண்மூடி சிவசிந்தனையில் இருக்கும் இவரின் தியானம், நம்மால் கலைந்து விடக் கூடாது என்றே அவரை அமைதியாக வணங்குமாறு அறிவுத்துகின்றார்கள் பெரியவர்கள். 

ஆனால் நான் ஆலயத்திலிருந்து எதுவும் எடுத்துச்செல்ல வில்லை என்பதை அவருக்கு காட்டும் வண்ணம் இரு கைகளையும் சப்தமில்லாமல் துடைத்துக் காண்பிக்க வேண்டும்.

இவரை நம்பிக்கையுடன் வணங்கினால் தொலைந்து போன பொருட்களும் நமக்குக் கிடைக்கும். இவருக்கு உரிய திதிகள் பிரதமை மற்றும் நவமிஆகும்.

புதன்கிழமை இவரை வணங்கிட ஏற்ற நாள். சிவபெருமானின் பிரதிநிதியான இவருக்கும் வில்வ இலை கொண்டு மாலைகள் சூட்டி வழிபட்டால் வாழ்வில் அனைத்து வளங்களும் பெறலாம்.

 ஓம் நமசிவாய

Tuesday, January 2, 2024

கைலாசநாதர் கோயில் - காஞ்சிபுரம்

கைலாசநாதர் கோயில் - காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் 
 கைலாசநாதர் கோயில் அமைந்துள்ளது.
 தென்திசைக் கைலாயம் என்றும் அழைக்கப்படுகின்ற இக்கோயில் சுமார் 2000 வருடங்களுக்கு முன்னர் பல்லவர்களால் கட்டப்பட்ட கோயிலாகும். இக்கோயிலின் அமைப்பு மாமல்லபுரத்தில் உள்ள சிற்பக் கோயில்களை ஒத்துள்ளது. இக்கோயிலின் பழமையாலும், மிக நுண்ணிய வேலைப்பாடுகள் கொண்ட சிற்பங்களை பாதுகாக்கும் நோக்குடனும், இக்கோயிலை அரசின் தொல்லியல் துறையின் கீழ் கொண்டு வந்துள்ளனர். கோயிலின் சுற்றுச் சுவர் முழுவதும் கருங்கற்களால் ஆன சிற்பங்களும், கோயிலின் உள்ளே சுடுமண் சிற்பங்களும் காணப்படுகின்றன. இந்தச் சிற்பங்களைக் காணக் கண் கோடி வேண்டும்.
கைலாசநாதர் கோயிலின் உள் பிரகாரத்தில் கைலாசநாதர் சன்னதி மட்டுமே உள்ளது. அந்த சன்னதியை சுற்றி வர பாதாளம் போன்ற ஒரு அமைப்பு உள்ளது. ஒருவர் மட்டுமே நுழையக்கூடிய அளவு இடமே அதில் உள்ளது. நாம் தவழ்ந்துதான் அதிலிருந்து வெளியே வரமுடியும். அதற்குள் நுழைந்து நாம் வெளியே வந்தால் நமது பாவங்கள் அனைத்தும் தீரும் என்பது ஐதீகம்.

காஞ்சிபுரத்தை ஆயிரம் கோயில்கள் கொண்ட ஊர் என்று அழைக்கிறார்கள். அதனால்தான் காஞ்சிபுரம் கோயில் நகரம் என்றும் அழைக்கப்படுகிறது. திருவாரூரில் பிறந்தால் முக்தி என்றும், திருவண்ணாமலை என்று மனதில் நினைத்தால் முக்தி என்றும், காஞ்சிபுரத்தில் வாழ்ந்தால் முக்தி என்றும் சொல்வார்கள். இங்குள்ள ஆயிரம் கோயில்களைப் பார்க்கவே நமக்கு வாழ்நாள் முழுதும் ஆகும் அல்லவா? அதனால்தான் அவ்வாறு சொல்கிறார்கள் போல?! அதுமட்டுமல்ல இந்தியாவில் மொத்தம் 7 முக்தி ஸ்தலங்கள் உள்ளன. அவற்றில் காஞ்சிபுரமும் ஒன்று. மேலும் காஞ்சி பட்டுக்கு மட்டுமல்ல, கலை, கலாசாரம் போன்றவற்றிலும் சிறந்து விளங்கும் ஊராகும். காஞ்சிபுரம் நமது தமிழகத்தின் பாரம்பரிய சின்னமாகவும் திகழ்கிறது. இங்கே ஓடும் நதி பாலாறு ஆகும்.

இப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த காஞ்சிபுரம், சென்னையிலிருந்து 75 km தொலைவிலும், வேலூரில் இருந்து 65 km தொலைவிலும், வைணவப் பெருந்தகை ஸ்ரீ ராமானுஜர் பிறந்த ஊரான ஸ்ரீபெரும்பதூரில் இருந்து 29 km தொலைவிலும் உள்ளது.

காஞ்சிபுரத்தில் ஏகாம்பரநாதர் கோயில், காஞ்சி காமாட்சி கோயில் மற்றும் இங்கிருந்து 7 km தொலைவில் உள்ள 108 திவ்யதேசங்களில் ஒன்றான வரதராஜ பெருமாள் கோயிலுக்கும் சென்று வரலாம்.

ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது 
இரா .இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Thursday, December 21, 2023

அருள்மிகு சாரங்கபாணி திருக்கோயில், கும்பகோணம்

*அருள்மிகு சாரங்கபாணி திருக்கோயில், திருக்குடந்தை, தஞ்சாவூர்*
பாலாலி லையில் துயில் கொண்ட பரமன் வலைப் பட்டிருந்தேனை வேலால் துன்னம் பெய்தாற் போல் வேண்டிற் றெல்லாம் பேசாதே கோலால் நிறை மேய்த் தாயனாய்க் குடந்தை கிடந்த குடமாடி நீலார் தண்ணந்துழாய் கொண்டு என் நெறி மென்குழல் சூட்டீரே
- *ஆண்டாள்*
*திருவிழா* சித்திரை திருவிழா, தை மாதத்தில் சங்கரமண உற்சவம், வைகாசியில் வசந்த உற்சவம், மாசி மக தெப்பம், வைகுண்ட ஏகாதசி ஆகியவை முக்கிய விழாக்கள் ஆகும்.

*தல சிறப்பு*

பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 12 வது திவ்ய தேசம். இத்தல பெருமாள் வைதிக விமானத்தின் மீழ் கிழக்கு நோக்கி சயன திருக்கோலத்தில் அருள்புரிகிறார்.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது.

*பொது தகவல்*

மூலஸ்தானத்தில் ஹேமரிஷி புத்திரியான கோமளவல்லி மற்றும் மகாலட்சுமியுடன் பெருமாள் அருள்பாலிக்கிறார். நாபியில் பிரம்மா, தலை பகுதியில் சூரியன் உள்ளனர். சுவாமியின் கருவறையை சுற்றி நரசிம்ம அவதார சிலைகள் மிக அருமையாக செதுக்கப்பட்டுள்ளன.

தாயாரை மணந்துகொள்ள இத்தலத்திற்கு சாரங்கபாணி தேரில் வந்தார். எனவே சுவாமி சன்னதி தேர் அமைப்பில் இருக்கிறது. தேரின் இருபுறங்களிலும் உத்ராயண, தெட்சிணாயன வாசல்கள் உள்ளன. தேர் சக்கரம் பிரம்மாண்டமாகவும், சுற்றுப்புற சுவர்களில் அழகிய சிலைகளும் வடிக்கப்பட்டுள்ளன.

11 நிலைகளையுடைய இது, 150 அடி உயரம் கொண்டது. இத்தலத்து தேரும் விசேஷமானது. சித்திரத்தேர் எனப்படும் இந்த தேரின் அமைப்பை புகழ்ந்து திருமங்கையாழ்வார் பாடியுள்ளார். இந்த பாடல், "ரதபந்தம்' என்று அழைக்கப்படுகிறது.

*பிரார்த்தனை* கருவறைக்கு முன்பாக சந்தான கிருஷ்ணன் அருள்பாலிக்கிறார். இவரை வணங்கினால் நினைத்தது நடக்கும் என்பது ஐதீகம்.

*நேர்த்திக்கடன்* பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர். கும்மாயம்: கும்பகோணம் சாரங்கபாணி பெருமாளுக்கு பயத்தம்பருப்பு வெல்லம், நெய் கொண்டு தயாரித்து படைக்கும் நைவேத்தியத்தின் பெயர் கும்மாயம்.

*தலபெருமை*

*உத்தான சயன பெருமாள்* : பெருமாள் பள்ளிகொண்டிருக்கும் தலங்களில் பலவிதமான சயனங்களில் காட்சி தருவார். இங்கு "உத்தான சயன' கோலத்தில் பள்ளி கொண்டிருக்கிறார்.இத்தலத்திற்கு வந்த திருமழிசையாழ்வார், சுவாமியை வணங்கி மங்களாசாசனம் செய்தார்.

அப்போது அவர், "நடந்த கால்கள் வலிக்கிறது என்றா பள்ளி கொண்டிருக்கிறாய்!' என்ற பொருளில் பாடினார். அவருக்காக சுவாமி எழுந்தார். திருமாலின் அருளைக்கண்டு மகிழ்ந்த திருமழிசையாழ்வார், "அப்படியே காட்சி கொடு!' என்றார்.

சுவாமியும் அவ்வாறே அருளினார். முழுமையாக பள்ளி கொண்டிராமல் சற்று எழுந்த கோலத்தில் இருப்பதை "உத்தான சயனம்' என்பர்.

*திவ்ய பிரபந்தம் தந்த திருமால்* : பெருமாளை குறித்து, பன்னிரு ஆழ்வார்கள் மங்களாசாஸனம் செய்த பாடல்கள், நாலாயிர திவ்ய பிரபந்தமாக தொகுக்கப்பட்டுள்ளது. இந்த பாடல்கள் கிடைப்பதற்கு காரணமாக இருந்தவர் இத்தலத்து பெருமாளே ஆவார்.ஆம்! நாதமுனி என்பவர் சாரங்கபாணியை வணங்க வந்தார்.

அப்போது சில பக்தர்கள் சுவாமியின் பெருமையை "ஓராயிரத்துள் இப்பத்தும்' என்று சொல்லி பாடினர். இதைக்கேட்ட நாதமுனி, "இன்னும் ஆயிரம் பாடல்கள் உள்ளதா!' என வியந்து மீதி பாடல்களையும் பாடும்படி கேட்டார். ஆனால், அவர்களுக்கு தெரியவில்லை.

அப்போது அவரது கனவில் தோன்றிய பெருமாள், ஆழ்வார்திருநகரி (நவதிருப்பதி - தூத்துக்குடி மாவட்டம்) சென்று, நம்மாழ்வரை வணங்க மீதி பாடல்கள் கிடைக்குமென்றார். அதன்படியே அவர் நம்மாழ்வாரை வணங்கினார்.

ஆயிரம் பாடல்கள் கிடைக்குமென வந்த இடத்தில், நாலாயிரம் பாடல்கள் கிடைத்தது. இவற்றை நாதமுனி தொகுத்தார். ஆழ்வார்கள் பல தலங்களிலும் மங்களாசாசனம் (பாடல்) செய்த இப்பாடல்களின் தொகுப்பே "நாலாயிர திவ்ய பிரபந்தம்' ஆனது.

ஆழ்வார்களின் பாடல்களை தொகுக்க காரணமாக இருந்தவர் என்பதால் இத்தலத்து சாரங்கபாணிக்கு, "ஆராவமுதாழ்வார்' என்ற பெயரும் உண்டானது.

*அதிக ஆழ்வார்களால் மங்களாசாஸனம்* : திவ்ய தேசங்களில் ஸ்ரீரங்கம் ரங்கநாதரை 11 ஆழ்வார்களும், திருப்பதி வெங்கடாஜலபதியை 10 ஆழ்வார்களும் மங்களாசாஸனம் செய்தனர். 108 திருப்பதிகளில் அதிக ஆழ்வார்களால் மங்களாசாஸனம் செய்யப்பட்ட தலங்கள் இவையிரண்டு மட்டுமே.

இதற்கு அடுத்து கும்பகோணம் சாரங்கபாணி கோயிலே அதிக (ஏழு) ஆழ்வார்களால் மங்களாசாஸனம் செய்யப்பட்டிருக்கிறது. பேயாழ்வார், பூதத்தாழ்வார், திருமழிசையாழ்வார், நம்மாழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள், திருமங்கையாழ்வார் ஆகியோர் இத்தலத்தில் மங்களாசாசனம் செய்துள்ளனர்.

*பாதாள சீனிவாசன் மேட்டு சீனிவாசன்* : திருமணத்திற்காக இத்தலம் வந்த பெருமாள், தாயாரிடம் விளையாடுவதற்காக பூமிக்கு கீழே ஒளிந்து கொண்டார். திருமாலைக் காணாத தாயார் கலக்கமடைந்தார். அதன்பிறகு அவள் முன்தோன்றிய சுவாமி, தாயாரை மணந்து கொண்டார்.

திருமால் ஒளிந்த இடம், "பாதாள சீனிவாசர் சன்னதி' என்ற பெயரில் உள்ளது. திருமணத்துக்குப் பிறகு, இவர், மேடான இடத்தில், மேட்டு சீனிவாசராக' தாயார்களுடன் தனிச்சன்னதியில் இருக்கிறார். பிரம்மச்சாரிகள், இல்லறத்தை தழுவிய பின்பே, மேன்மை பெற முடியும் என்ற வாழ்க்கை தத்துவத்தை இந்த அமைப்பு உணர்த்துவதாக உள்ளது.

*சொர்க்கவாசல் இல்லாதது ஏன்?* : திவ்யதேசங்களில் பெரும்பாலும் சொர்க்கவாசல் இருக்கும். ஆனால், இத்தலத்தில் சொர்க்கவாசல் கிடையாது. இதற்கு காரணம் இருக்கிறது. இத்தலத்து சுவாமி நேரே வைகுண்டத்திலிருந்து இங்கே வந்தார்.

எனவே, இவரை வணங்கினாலே பரமபதம் (முக்தி) கிடைத்துவிடும் என்பதால், சொர்க்கவாசல் கிடையாது. மேலும், இங்குள்ள உத்ராயண, தெட்சிணாயன வாசலைக் கடந்து சென்றாலே பரமபதம் கிட்டும் என்ற நம்பிக்கையும் உள்ளது.

உத்ராயண வாசல் வழியே தை முதல் ஆனி வரையும், தெட்சிணாயண வாசல் வழியே ஆடி முதல் மார்கழி வரையும் சுவாமியை தரிசிக்க செல்ல வேண்டும். ஏதாவது ஒரு வாசல் தான் இங்கு திறக்கப்பட்டிருக்கும்.

*உபய பிரதான திவ்யதேசம்* : திவ்யதேசம் தெரியும், அதென்ன உபய பிரதான திவ்யதேசம் என்கிறீர்களா? இதற்கான விளக்கம் இதுதான்! திவ்யதேசங்களில் மூலவர் மட்டுமே பிரதானம் பெற்றிருப்பார். அவருக்கே பூஜையின்போது அனைத்து அலங்காரங்களும் செய்யப்படும்.

ஆனால் இக்கோயிலில் உற்சவருக்கு, மூலவருக்கான மரியாதைகள் செய்யப்படுகிறது. அதாவது உற்சவர் மூலவரின் பொறுப்பில் இருந்து, உபயமாக (அவருக்கு பதிலாக) செயல்படுபவராக இருக்கிறார். எனவே இத்தலம், "உபய பிரதான திவ்யதேசம்' எனப்படுகிறது.

*வில்லுடன் பெருமாள்* : பெருமாள் சங்கு, சக்கரத்துடன் மட்டும் காட்சி தருவார். ஆனால், இத்தலத்தில் சார்ங்கம் என்னும் வில்லும் வைத்திருக்கிறார். மூலஸ்தானத்தில் இருக்கும் சுவாமி, உற்சவர் இருவருமே சார்ங்கம் வைத்திருப்பது விசேஷம்.

இதன் பெயராலேயே இவர், "சார்ங்கபாணி' என்று அழைக்கப்பட்டார். மூலவரிடம் இருக்கும் சார்ங்கத்தை பார்க்க முடியாது. கும்பகோணம் தீர்த்த ஸ்தலம் என்பதால், மூலவரை மகாமகத்திற்கு வரும் நதி தேவதைகளும், தேவர்களும் வணங்கியபடி காட்சி தருவதைக் காணலாம்.

*மாமனார் வீட்டோடு மாப்பிள்ளை* : இந்த தலம் தாயாரின் பிறந்த வீடு ஆகும். திருமால், அவளைத் திருமணம் செய்து வீட்டோடு மாப்பிள்ளையாக இருக்கிறார். எனவே, இங்கு தாயாருக்கே முக்கியத்துவம் தரப்படுகிறது.

தாயாரை வணங்கிய பிறகே பெருமாளை வணங்க வேண்டும் என்பது பொதுவான அம்சமானாலும், இத்தலத்தைப் பொறுத்தவரை, தாயார் சன்னதிக்கு சென்ற பிறகே, பெருமாள் சன்னதிக்குள் செல்லும் வகையில் வடிவமைப்பும் செய்யப்பட்டிருக்கிறது.

நடைதிறக்கும் போது, சுவாமி சன்னதியில் செய்யப்படும் கோமாதா பூஜையை, இக்கோயிலில் கோமளவல்லி தாயார் சன்னதி முன்பாக நடத்துகின்றனர். தாயாரே பிரதானம் என்பதால், கோமாதா பூஜை தாயார் சன்னதியில் நடத்தப்பட்ட பிறகே, சுவாமி சன்னதியில் நடக்கிறது.

*பக்தனுக்கு சிரார்த்தம் செய்யும் பரந்தாமன்!* லட்சுமி நாராயணசாமி என்னும் பக்தர் சாரங்கபாணியின் மீது தீவிர பக்தி கொண்டிருந்தார். இறுதிக்காலம் வரையில் சேவை செய்தார். இக்கோயிலின் கோபுரத்தை கட்டியவரும் இவரே. அவருக்கு குழந்தைகள் இல்லை.

ஒரு தீபாவளியன்று அவர் பெருமாளின் திருவடியை அடைந்தார். சிரார்த்தம் செய்ய குழந்தைகள் இல்லாமல் போனால், நரகம் செல்ல வேண்டி வரும் என்பதால், தனக்கு சேவை செய்த தன் பக்தருக்கு தானே மகனாக இருந்து, இறுதிச்சடங்குகள் செய்தார் சாரங்கபாணி.

இது நடந்த மறுநாள் கோயிலை திறந்து பார்த்த போது, பெருமாள் ஈரவேட்டியுடனும், மாற்றிய பூணூலுடனும், தர்ப்பைகளுடனும் காரியம் செய்து வந்த கோலத்தில் காட்சியளித்தார். அதாவது பெருமாளே தன்பக்தனுக்க ஈமக்கிரியை செய்துவைத்து கருணைக்கடலாக விளங்கினார்.

தீபாவளியன்று உச்சிக்காலத்தில் அந்த பக்தருக்கு சாரங்கபாணி, திதி கொடுக்கும் நிகழ்ச்சி இப்போதும் நடக்கிறது. ஆனால், இதை பக்தர்கள் பார்க்க முடியாது.

*தல வரலாறு*

ஒருசமயம் வைகுண்டம் சென்ற பிருகு மகரிஷி, திருமாலின் சாந்த குணத்தை சோதிப்பதற்காக அவரது மார்பில் உதைக்கச் சென்றார். இதைத் திருமால் தடுக்கவில்லை. ""உங்கள் மார்பில் நான் வசித்தும் பிற புருஷனின் பாதம் பட இருந்ததை தடுக்காமல் இருந்து விட்டீர்களே'' என கோபப்பட்ட லட்சுமி, கணவரைப் பிரிந்தாள்.

தவறை உணர்ந்த பிருகு மகரிஷி, திருமாலிடம் மன்னிப்பு வேண்டினார். லட்சுமியிடம், ""அம்மா! கோபிக்க வேண்டாம். ஒரு யாகத்தின் பலனை அளிக்கும் பொருட்டு, தெய்வங்களில் சாத்வீகமானவர் யார் என அறியும் பொறுப்பை என்னிடம் தேவர்கள் ஒப்படைத்தனர்.

அந்த சோதனையின் விளைவே, உன் கணவனை நான் எட்டி உதைக்க வந்தது போல் நடித்தது. லோகத்தின் தாயாராகிய உனக்கு நான் தந்தையாக இருக்க விரும்புகிறேன். நீ என் மகளாகப் பிறக்க வேண்டும்,'' என்றார். லட்சுமிதாயார் மனம் குளிர்ந்து பிருகுவை ஆசிர்வதித்தாள்.

தன் சபதப்படி திருமாலைப் பிரிவதாகவும், பூலோகத்தில் பிருகுவின் மகளாகப் பிறக்கப் போவதாகவும், தன்னை மகளாக அடைய வேண்டுமானால், தவமிருக்க வேண்டும் என்றும் சொன்னாள். அதன்படி, பிருகு புண்ணிய பூமியான கும்பகோணம் பகுதியில் தவமிருந்தார்.

இங்குள்ள ஹேமபுஷ்கரிணியில் தாமரை மலரில் லட்சுமி அவதரித்தாள். அவளுக்கு "கோமளவல்லி' என பெயரிட்டு வளர்த்து, திருமாலுக்கு மணம் முடித்துக் கொடுத்தார். பெருமாள் சார்ங்கம் என்னும் வில்லேந்தி வந்ததால், "சாரங்கபாணி' எனப்பட்டார். இவ்வூரை தாயாரின் அவதார ஸ்தலம் என்கிறார்கள்.

Saturday, December 9, 2023

காசிக்கு நிகரான தலங்களில் ஸ்ரீவாஞ்சியமும் ஒன்று.



ஏழு ஜென்மப் பாவம் தீரும்!
Vanchinadha Swamy temple 
கோயிலும் கோபுரமும் குளமும் என கொள்ளை அழகுடன் திகழும் தலங்கள் எல்லாமே, மனதைக் கவர்ந்துவிடும். 

கொஞ்சம் குழப்பமும் தவிப்பும் இருந்தால் கூட, அங்கே கால் வைத்த கணமே, தெளிவும் அமைதியும் வந்துவிடும். 

ஸ்ரீவாஞ்சியத்தில் இதை உணர்ந்திருக்கிறேன், அப்படித்தான் உணர்ந்து சிலிர்க்கச் செய்யும். 

காரணம்... காசிக்கு நிகரான தலங்களில் ஸ்ரீவாஞ்சியமும் ஒன்று.

திருவாரூர் மாவட்டத்தில் நன்னிலம் அருகில் அமைந்து உள்ள அற்புதமான திருத்தலம், ஸ்ரீவாஞ்சியம். 

வியாசர் அருளிய ஸ்காந்த புராணம், பிரம்மாண்ட புராணம் ஆகியவற்றில் இந்தத் தலத்தின் பெருமை சொல்லப்பட்டிருக்கிறது, கோயிலின் தொன்மையைப் புரிந்து கொள்ளலாம்.
இங்கே சிவனாரின் திருநாமம் ஸ்ரீவாஞ்சிநாதர்.  அம்பாளின் பெயர் ஸ்ரீமங்களாம்பிகை. 

இந்தத் தலத்தில் தேவர்களும் முனிவர்களும் கடும் தவமிருந்து சிவபூஜை செய்திருக்கிறார்கள். 

தெய்வங்களே இங்கு வந்து, சிவபெருமானை நோக்கி தவம் மேற்கொண்டிருக்கிறார்கள்.
அவ்வளவு ஏன்... எமதருமருக்கு சிவனார் அருளிய பேறு பெற்ற திருத்தலம் இது. 

ஆகவே இந்தத் தலத்தின் அம்மைக்கும் அப்பனுக்கும் வாகனத் தொண்டு செய்து வருகிறார். 

இதனால் எமதருமருக்கு இங்கு தனிச்சந்நிதி உள்ளது. இவரை வணங்கிய பிறகுதான் மூலவரை வழிபடுகின்றனர்.

நால்வர் பெருமக்கள், அருணகிரிநாதர், வள்ளலார் பெருமான் ஆகியோரால் பாடல்கள் பெற்ற திருத்தலம் இது. 

இந்தத் தலத்துக்கு வந்து தரிசிக்கும் பாக்கியம் இருந்தால்தான் இங்கு வந்து தரிசிக்க முடியும் என்பது ஐதீகம்.
அற்புதமான ஆலயம். 

தலம், தீர்த்தம், மூர்த்தம் என விசேஷங்கள் கொண்ட கோயில். எம பயம் முதலான பலவற்றுக்கு பரிகாரத் தலமும் இதுவே! 

இந்த இப்பிறவியில் ஒருமுறையேனும் வாஞ்சியம் வந்து வாஞ்சிநாதரை தரிசித்துவிட்டு, எமதருமனையும் வணங்கினால், இந்த வாழ்க்கை நிம்மதியாகவும் நிறைவுடனும் அமைந்துவிடும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்!

இந்தக் கோயிலின் தீர்த்தம், குப்த கங்கை எனப்படுகிறது. 

கார்த்திகை மாதத்தின் ஞாயிற்றுக் கிழமைகளில், இங்கு வந்து நீராடிவிட்டு, இறைவனைத் தரிசித்தால் ஏழு ஜென்மப் பாவங்களும் தீரும் என்பது ஐதீகம்! 

குறிப்பாக, கார்த்திகை மாத கடைசி ஞாயிற்றுக்கிழமை இன்னும் விசேஷமாகவும்  கூட்டமாகவும் இருக்கும் என்கிறார்கள் பக்தர்கள்!
ஸ்ரீவாஞ்சியம் வாருங்கள். 

பிறவிப்பயனைப் பெறுங்கள்.

 ஏழு ஜென்மப் பாவம் நீங்கி, புத்துணர்வுடன் வாழ்வோம்.!

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது
 இரா .இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Wednesday, December 6, 2023

நந்தி கல்யாணம்: திருமழபாடி திருத்தலத்தில் வயிரத்தூண் நாதர், வைத்தியநாதசுவாமி, வச்சிரதம்பேஸ்வரர்.

இறைவர் திருப்பெயர் :வஜ்ரஸ்தம்பநாதர், வயிரத்தூண் நாதர், வைத்தியநாதசுவாமி, வச்சிரதம்பேஸ்வரர்
இறைவியார் :சுந்தராம்பிகை, பாலாம்பிகை
தல மரம் : - பனை மரம்
தீர்த்தம் : -  கொள்ளிடம், லட்சுமி, சிவகங்கை தீர்த்தம்
வழிபட்டோர் : புருஷாமிருகம், பிரம்மா, சிலாத முனிவர் , செப்பேசர் என்கிற திருநந்திதேவர் ,திருமால், இந்திரன், மார்க்கண்டேயர், அகத்தியர், பராசரர், வசிஷ்டர்
தேவாரப் பாடல்கள் :-சம்பந்தர், அப்பர், சுந்தரர்

இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

இத்தலத்தில்தான் நந்திக்கு திருமணம் நடைபெற்றது.

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 54 வது தேவாரத்தலம் ஆகும்.

இங்குள்ள பிரம்மனுக்கு எதிரில் நான்கு வேதங்களும் நான்கு நந்திகளாக அமர்ந்துள்ளன.


தல வரலாறு:



பிரம்மனின் சத்தியலோகத்திலிருந்து புருஷா மிருகம் லிங்கத்தை எடுத்து வந்து இங்கு பிரதிஷ்டை செய்து வழிபட்டது. இதை அறிந்த பிரம்மன் லிங்கத்தை மீண்டும் எடுக்க முயன்றான். பிரம்மன் அந்த லிங்கத்தை எடுக்க முயல, அது அவனின் கைக்கு வர மறுத்து அது முடியாது போகவே இது, வைரத்தூணோ என்று கூறினான். பிரம்மன், வைரத்தூணானவனோ எனக் கூறியதால், இவ்விறைவனை வைரத்தூண் நாதர் என்றும், வச்சிரதம்பேஸ்வரர் என்றும் ஈசனுக்கு பெயர்கள் ஏற்பட்டது.

இந்த ஊருக்கு பெயர் மழபாடி என்று வந்ததற்கு காரணம், சோழர் காலத்தில் அவர்களுக்கு உதவியாக சேரர் பிரிவான மழவர் படை பாசறை இங்கு அமைத்திருந்ததால் வந்ததென்றும், மேலும் மார்க்கண்டேய முனிவருக்காக இங்குள்ள சிவபெருமான் மழு ஏந்தி நடனம் ஆடியதால் மழுவாடி என்று பெயர் பெற்று பின்னர் மழபாடி என்று பெயர் திரிந்ததாகவும் கூறுகின்றனர்.



நந்தி கல்யாணம்: திருமழபாடி திருத்தலத்தில் தான் நந்தி தேவர் சிவகணங்களின் தலைமைப் பதவியையும், திருக் கயிலையின் தலை வாயிலைக் காக்கும் உரிமையையும் பெற்றார். ‘நந்திக் கல்யாணம் பார்த்தால் முந்திக் கல்யாணம்’ என்று சிறப்பித்துச் சொல்லப்படும் நந்தி தேவரின் திருக்கல்யாணம் நடைபெற்ற தலமும் திருமழபாடி திருத்தலம்தான்.



குழந்தை பாக்கியம் வேண்டி சிலாத முனிவர் சிவனை நோக்கி தவம் இருந்தார். அப்போது அசரீரி தோன்றி,"முனிவரே! புத்திரகாமேஷ்டி யாகம் செய்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். நீர் யாகம் செய்யும் நிலத்தை உழும் போது, பூமியில் இருந்து ஒரு பெட்டி கிடைக்கும். அதனுள் இருக்கும் குழந்தையை எடுத்து வளர்த்து வாருங்கள். ஆனால், அந்தக் குழந்தை 16 ஆண்டுகள் தான் உயிர் வாழும்,''என்றது.சிலாதரும் அவ்வாறே செய்ய ஒரு பெட்டியில், மூன்று கண்கள், நான்கு தோள்கள், சந்திரனை அணிந்த முடியுடன் ஒரு குழந்தை இருப்பதைக் கண்டார். வியந்து போன அவர், பெட்டியை மூடிவிட்டு மீண்டும் திறக்க பழைய அடையாளங்கள் மறைந்து அழகிய குழந்தையாக மாறியிருந்தது. அதற்கு "ஜபேசர்' என பெயரிட்டார்.இறைவனிடம் சகல வரங்களையும் பெற்ற தனது மகன் செப்பேசர் என்கிற திருநந்திதேவருக்கு திருமணம் செய்ய சிலாத முனிவர் முடிவு செய்தார்.சிலாத முனிவர், தம் மகனுக்கு திருமழப்பாடி தலத்தில் ஆசிரமம் அமைத்து, தவமும், அறமும் செய்து வந்த வசிஷ்ட முனிவரின் பேத்தியும், வியாக்ரபாத முனிவரின் மகளுமான சுயசாம்பிகையை பங்குனி மாதம் புனர்பூச நட்சத்திரத்தில் திருமணம் செய்து வைத்தார்.இதற்காக திருவையாற்றில் இருந்து நந்திகேஸ்வரர் குதிரை வாகனத்தில் திருமழப்பாடி புறப்பட்டார். தனது பக்தனுக்கு தானே முன்னின்று திருமணம் செய்து வைப்பதற்காக ஐயாறப்பர்- அறம் வளர்த்தநாயகி ஆகியோர் பல்லக்கில் திருமழப்பாடிக்குச் சென்றனர்.திருமழப்பாடியில் உள்ள சுந்தராம்பிகை சமேத வைத்தியநாத பெருமான் கொள்ளிடம் சென்று மங்கல வாத்தியங்கள் முழங்க ஐயாறப்பர், அறம் வளர்த்தநாயகி, நந்தி்யம்பெருமான் ஆகியோரை வரவேற்று கோவில் முன் அமைக்கப்பட்டுள்ள திருமண மேடைக்கு அழைத்து வந்தார். இருவருக்கும் வெகு சிறப்பாக திருமணம் நடைபெற்றது.இந்த நிகழ்வை எடுத்துரைக்கும் விதமாக இன்றும் நந்தியம்பெருமான்- சுயசாம்பிகை திருமணம் திருமழப்பாடியில் நடைபெறுகிறது.

நந்தி கல்யாணம் பார்த்தால் முந்தி கல்யாணம்:

பங்குனி மாதம் புனர்பூசத்திற்கு முதல் நாள் அந்தணர்புரத்தில் நந்திதேவர் வயலில் கிடைக்கும் காட்சி நிகழ்த்திக் காட்டப்படும். அன்று மாலை ஐயாறப்பன் திருக்கோயிலில் அவருடைய பட்டாபிஷேக கோலாகலத்தை தரிசித்து மகிழலாம். புனர்பூசம் நட்சத்திர நாளில் காலை 4 மணி அளவில் நந்திதேவர் வெள்ளித் தலைப்பாகை, பட்டு வேட்டி&துண்டு, வெள்ளிச் செங்கோலுடன் மாப்பிள்ளைக் கோலத்தில் குதிரை வாகனத்தில் புறப்படுவார். கூடவே வளர்ப்புப் பெற்றோர் ஐயாறப்பனும் அறம்வளர்த்த நாயகியும் வெட்டிவேர் பல்லக்கில் தொடர்ந்து, திருநெய்த்தானம், கடுவெளி, வைத்தியநாதம்பேட்டை வந்து கொள்ளிடம் நதிக்கரைக்கு வருவர்.மாப்பிள்ளை மற்றும் சம்பந்தியை எதிர்கொண்டு அழைக்க, கொள்ளிடப் பந்தலில் சுயம்பிரகாசாம்பிகையின் வளர்ப்புப் பெற்றோரான வைத்தயநாதரும் சுந்தராம்பிகையும் அழகிய கண்ணாடிப் பல்லக்கில் வந்து காத்திருப்பார்கள்.


மாப்பிள்ளையை வரவேற்று ஊர்வலமாக அழைத்துச் செல்வார்கள். மாலை 7 மணிக்கு ஒரு பெரிய பந்தலில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் திருக்கல்யாணம் விமரிசையாக நடைபெறும். இவ்வாறு கல்யாணம் முடிந்ததும் தம்பதிகள் ஒரு பல்லக்கிலும் சம்பந்திகள் தத்தமது பல்லக்கிலுமாகப் புறப்பட்டு, ஊர்வலமாகச் சென்று கொள்ளிடம் மணற்பரப்பில் ஓய்வெடுப்பர்.அப்போது அரசு சார்பில் கலைப் பண்பாட்டுத் துறை வழங்கும் கலை நிகழ்ச்சி, வாணவேடிக்கை போன்றவை விமரிசையாக நடக்கும். பிறகு, சம்பந்திகள், மணமக்கள் விடைபெறும் நிகழ்ச்சி; திருமழபாடி இறைவன் தன் திருக்கோயில் திரும்புதல்; மணமக்களும், பெற்றோரும், புனல்வாயில், பெரும்புலியூர், திருநெய்த்தானம் வழியாகச் சென்று ஐயாறு சேர்தல் என்று அடுத்தடுத்து நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்படும்.


வழிநெடுக பந்தல், நீர் மோர், பானகம், அன்னதானம் என்று யாரையும் பசித்திருக்காமல் சில தர்ம அமைப்புகள் பார்த்துக் கொள்கின்றன. திருமணத்திற்குக் காத்திருக்கும் பிள்ளைகளும், பெண்களும், இந்த சிறப்பு மிக்க தெய்வத் திருமணத்தை தரிசித்தால் அவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். இதனை, ‘‘ நந்தி கல்யாணம் பார்த்தால் முந்தி கல்யாணம்’’ என்ற வழக்கு மொழி உறுதி செய்கிறது.
“நந்தி கல்யாணம் முந்தி கல்யாணம்” என்பது சான்றோர் வாக்கு. நந்தி கல்யாணம் பார்த்தோருக்கு முந்தித் திருமணம் ஆகும் என்பது இதன் பொருள். அதன்படி நந்தி கல்யாணத்தை பார்ப்பவர்களுக்கு அடுத்தவருடம் நந்தி கல்யாணம் நடைபெறுவதற்குள் திருமணம் நடைபெற்று விடும் என்கின்றனர். இதனால் ஆண்டு தோறும் திருமழப்பாடியில் நடைபெறும் இந்த தெய்வீக திருமணத்தை பல்லாயிரக்கணக்கானோர் திரளாக கூடிச் சென்று தரிசிக்கின்றனர்.

தக்கன் தனது 27 பெண்களையும், சந்திரனுக்கு மணம் செய்து கொடுத்தான். ஆனால் சந்திரன் ரோகிணியிடம் மட்டும் அன்பு கொண்டிருந்தான். இதனால் மற்ற மனைவியர், தனது தந்தை தக்கனிடம் முறையிட்டனர். இதையடுத்து ‘எல்லோரிடத்திலும் அன்பு செலுத்தவில்லை எனில் எனது சாபத்திற்கு ஆளாவாய்’ என சந்திரனை தக்கன் எச்சரித்தான்.ஆனாலும் சந்திரன் முன்பு போலவே ரோகிணியிடம் மட்டுமே அன்போடு பழகி வந்தான். இதனால் சந்திரன் தேய்ந்து போகும்படி தக்கன் சாபமிட்டான். அந்த சாபம் நீங்குவதற்காக இத்தலம் வந்து இறைவனை நினைத்து தவம் இருந்தான் சந்திரன்.இறைவன் சந்திரனின் முன்பாகத் தோன்றி, முற்றிலும் அழிந்துவிடாத வகையில் ‘தேய்வதும், வளர்வதுமான நிலையிலிருப்பாய்’ என்று சந்திரனுக்கு அருள்பாலித்தார். சந்திரனின் நோய் போக்கியதால், இத்தல இறைவன் வைத்தியநாதன் என்று பெயர் பெற்றார்.


இதே போல், முனிவர் ஒருவரது சாபத்தால் திருமகளான லட்சுமிதேவிக்கு வெண்குஷ்ட நோய் ஏற்பட்டது. இதையடுத்து லட்சுமி தேவி இத்தலம் வந்து தீர்த்தத்தில் நீராடி நோய் நீங்கப்பெற்றாள். சுந்தராம்பிகை அம்மன் சன்னிதிக்கு எதிரே, லட்சுமி தேவி நீராடிய குளம், ‘லட்சுமி தீர்த்தம்’ என்ற பெயரிலேயே வழங்கப்படுகிறது. இந்த நீரை உடலில் தெளித்துக் கொண்டால் சரும நோய் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.


சுந்தரரை குரல் கொடுத்து அழைத்துத் தன் மேல் பாடல் பாட வைத்த சிவபெருமான் வீற்றிருக்கும் சிவஸ்தலம் மழபாடி. சுந்தரர் சோழ நாட்டுசிவஸ்தலங்களுக்கு யாத்திரை மேற்கொண்டபோது ஒரு நதியைக் கடந்து செல்லும்படி நேர்ந்தது. அப்போது "சுந்தரா, என்னை மறந்தாயோ" என்றகுரல் கேட்டு திடுக்கிட்ட சுந்தரர் அக்குரல் தன்னை ஆட்கொண்ட சிவபெருமானின் குரல் என்பதை உண்ர்ந்தார். அருகில் எங்கேயாவது சிவன் கோவில்இருக்கிறதா என்று தன்னுடன் வந்த சீடர்களைக் கேட்டார். அவர்களும் அருகில் உள்ள மழபாடியில் ஒரு சிவன் கோவில் இருக்கிறது என்பதைக்கூறினார்கள். திருமழப்பாடி ஆலயத்திற்கு வந்த சுந்தரர் "தங்களை மறந்து விட்டு வேறு யாரை நினைப்பேன்" என்னும் கருத்து அமைத்துவஜ்ரஸ்தம்பநாதர் மேல் பதிகம் பாடியருளினார். அந்தப் பதிகம்

பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து

மின்னார் செஞ்சடைமேல் மிளிர்கொன்றை யணிந்தவனே

மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே...


கோவில் அமைப்பு:
வைத்தியநாத சுவாமி சந்நிதி இராஜேந்திரன் காலத்தாலானவை. நூற்றுக்கால் மண்டபம், சோமாஸ்கந்த மண்டபம் ஆகியவை பதின்மூன்றாம் நூற்றாண்டைச் சார்ந்தவையாகும்.

கிழக்கு நோக்கிய இவ்வாலயம் 7 நிலைகளையுடைய இராஜகோபுரத்துடன் காட்சி தருகிறது. உள் நுழைந்ததும் கொடிமரம், பலிபீடம், நந்தி உள்ளன.2-வது கோபுரத்தைக் கடந்ததும் மிகப்பெரிய அலங்கார மண்டபம் உள்ளது. இங்கு இரு நந்தி சந்நிதிகள் உள்ளன.

ஒரே கல்லால் ஆன சோமாஸ்கந்தர் தனி சன்னதியில் அருளுகிறார். இங்குள்ள பிரம்மனுக்கு எதிரில் நான்கு வேதங்களும் நான்கு நந்திகளாக அமர்ந்துள்ளன. சிவன் பிரகாரத்தில் இரண்டு தெட்சிணாமூர்த்திகள் உள்ளனர்.


மூலவர் வயிரத்தூண் நாதர் சிவலிங்கத் திருமேனி புருஷாமிருகத்தால் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபடப் பட்டதாகும். இந்திரன், திருமால் ஆகியோர் வழிபட்ட சிறப்புடையது இத்தலம். பிராகாரத்தில் அகோரவீரபத்திரர், விநாயகர், முருகர் ஆகியோர் காட்சி தருகின்றனர். மூன்றாவது வாயிலைக் கடந்தால் மகா மண்டபத்தை அடையலாம். கருவறையும் சோமாஸ்கந்தர் கோயிலும் இணைந்து பெரிய கோயிலாகக் காட்சியளிக்கின்றன.
இரு அம்பாள் சந்நிதிகள் உள்ளன. பாலாம்பிகை சந்நிதி தெற்கு நோக்கியுள்ளது. கருவறை மேற்குச் சுற்றில் வள்ளி தெய்வானையுடன் முருகர் காட்சி தருகிறார். இந்த கோவிலின் தல விருட்சம் பனை மரம், மேலும் இங்கு உள்ள குளத்திற்கு மருத்துவ குணம் இருப்பதால் இதில் நீராடுவோர்க்கு தோல் சம்பந்தமான நோய்கள் குணமாவதாக நம்பிக்கை இருக்கிறது. இது மட்டுமல்லாமல் மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள வைதீஸ்வரன் தலத்திற்கு எவரேனும் நேர்த்தி கடன் இருந்தால் அதை இந்த கோவிலிலே நிறைவேற்றலாம் என்பதும் இத்தல சிறப்பாகும். காத்தியாயினி அம்மன் சன்னதியும் இருக்கிறது. இந்தக் கோயிலில் காத்தியாயினி அம்மனும் மயில் வாகனத்தில் காட்சி தருவது குறிப்பிடத்தக்க விசேஷம். இந்தக் கோயிலில் விநாயகர் தெற்குப் பார்த்துக் காட்சி தருகிறார். முற்காலத்தில் உத்தரவாகினியாகப் பாய்ந்த ஆற்றை தெற்கு நோக்கி, தெற்குப் பக்கமாகத் திருப்பியதாகவும் அதன் காரணமாகவே விநாயகர் தெற்குப் பார்த்துக் காட்சி தருவதாகவும் சொல்லப்படுகிறது

பக்தர்கள் சிவனுக்கும் நந்திக்கும் நடுவில் இருக்கும் மூன்று குழிகளை நவக்கிரகங்களாக கருதி, அவற்றில் தீபமேற்றி வணங்குகின்றனர். இந்தத் தலத்தில் இருந்த நவகிரகங்களை ஈசன் தம் நெற்றிக்கண்ணால் அழித்துவிட்டராம். அதன் காரணமாக முக மண்டபத்தில் உள்ள மூன்று குழிகளையே நவகிரகங்களாக பாவித்து வழிபடுகின்றனர். சரும நோயினால் அவதிப்பட்ட சந்திரன், இந்தத் தலத்து இறைவனை வழிப்பட்டான். சந்திரனுக்குக் காட்சி அளித்த இறைவன், நவகிரகக் குழிகளில் நெய்விளக்கு ஏற்றி வழிபடும்படி கூறினார். சந்திரனும் அப்படியே செய்து சருமநோய் தீரப்பெற்றதாகத் தலவரலாறு. சிபி சக்கரவர்த்தியின் நவகிரக தோஷமும் நீங்கியதாகச் சொல்லப்படுகிறது. சனிக்கிழமைகளில் இந்தக் குழிகளுக்கு முன்பாக எள் எண்ணெய் தீபம் ஏற்றி வழிபட்டால் நவகிரக தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம்.மார்க்கண்டேய முனிவர், வைகாசி விசாகத்தில் மழுவேந்திய கோலத்தில் காட்சி தருகிறார். இத்தலத்திற்கு மழுவாடி என்ற பெயரும் உண்டு.

ஓம் நமசிவாய 

படித்து பகிர்ந்தது
 இரா .இளங்கோவன் நெல்லிக்குப்பம்.

Followers

பாரிஜாத வனேஸ்வரர் திருக்களர் திருவாரூர்.

அருள்மிகு பாரிஜாதவனேஸ்வரர் திருக்கோயில்,  திருக்களர்,  திருவாரூர்.  திருவாரூர் மாவட்டம். +91- 4367 – 279 374 (மாற்றங்களுக்குட்பட...