Showing posts with label #Sula devar #Hindu temple #sulamangalam #papanasam #Thanjavur #Tamil Nadu #India. Show all posts
Showing posts with label #Sula devar #Hindu temple #sulamangalam #papanasam #Thanjavur #Tamil Nadu #India. Show all posts

Monday, January 27, 2025

ரத்த சம்பந்தமான வெண்புள்ளி இரத்தம் உறையாதல் போன்ற குறைபாடுகள் நீங்க

உலகிலேயே #சூலத்தேவர் என்ற #அஸ்திரதேவர் 
உருவ வடிவில் காட்சி தரும் ஒரே தலமான, சூலத்தேவர் ஈசனை வழிபட்டு சுய உருவம் பெற்ற தலமான, 
சோழ நாட்டு தேவார வைப்புத் தலமான,
சப்த மங்கை தலங்களில் ஒன்றான, சப்த மாதர்களில் கெளமாரி வழிபட்ட தலமான,
சக்கராப்பள்ளி சபஸ்தான தலங்களில் ஒன்றான 
 #தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 
#சூலமங்கை - (#சூலமங்கலம்)
#கிருத்திவாகேஸ்வரர்
#அலங்காரவல்லிஅம்மன் திருக்கோயில் வரலாறு:
சூலமங்கலம் கிருத்திவாகேசுவரர் கோயில் என்பது தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சிவன் கோயிலாகும். 
இது ஒரு தேவார வைப்புத்தலமாகும்.
இக்கோயில் தஞ்சாவூர்-கும்பகோணம் சாலையில் அய்யம்பேட்டை அருகே ரயில் நிலைய சாலை அருகே 1 கிமீ தொலைவில் சூலமங்கை என்னுமிடத்தில் அமைந்துள்ளது. சூலத்தேவர் வழிபட்டு சுய உருவம் பெற்றதால் சூலமங்கலம் என்று அழைக்கப்படுகிறது. 

இங்கு கோயில் கோயில் கொண்டுள்ள இறைவன் ஸ்ரீகிருத்திவாகேஸ்வரர், கரிஉரித்த நாயனார். இறைவி அலங்காரவல்லி. தாருகாவன முனிவர்களின் செருக்கை அடக்குவதற்காக வேள்வி மூலமாக அனுப்பப்பட்ட யானையின் உடலில் புகுந்து அதனைக் கிழித்து வெளியே வந்ததால் வேழம் உரித்த வித்தகராக இருப்பதால் கிருத்திவாகேசுவரர் என்றழைக்கப்படுகிறார்.
சூலத்தேவர் வழிபட்டு சுய உருவம் பெற்றதால் சூலமங்கலம் என்று அழைக்கப்படுகிறது. 

இதன் காரணமாக உள்மண்டபத்தில் சூலதேவர் கை கட்டி இறைவனை வணங்கும் நிலையில் உள்ளார். சூலதேவர் இங்குள்ள கிருத்திவாஸேஸ்வரிடம் எப்போதும் காவல் காக்கும் வரம் பெற்றதாக கூறுவர்.

இறைவர் திருப்பெயர்:    கிருத்திவாகேஸ்வரர்  இறைவியார் திருப்பெயர்: அலங்காரவல்லி.   தல மரம்:     தீர்த்தம் : சூலதீர்த்தம்  வழிபட்டோர்:அஸ்திரதேவர், 

#சக்கராப்பள்ளி சப்தஸ்தானத் தலம்:

சப்தமாதர்கள் வழிபட்ட ஏழு கோயில்களில், சக்கராப்பள்ளி சப்தஸ்தானத் தலமாகக் கோயில்களில், இதுவும் ஒன்றாகும். சப்தமங்கைத் தலங்கள் என்றும் அழைக்கப்படுகின்ற இவை கீழ்க்கண்ட இடங்களில் அமைந்துள்ளன. 

*சக்கராப்பள்ளியில் உள்ள சக்கரவாகேசுவரர் கோயில்
*அரியமங்கையில் உள்ள ஹரிமுக்தீஸ்வரர் கோயில்
*சூலமங்கையில் (சூலமங்கலம்) உள்ள கிருத்திவாகேசுவரர் கோயில்
*நந்திமங்கையில் உள்ள ஜம்புகேஸ்வரர் கோயில்
*பசுமங்கையில் (பசுபதிகோயில்) உள்ள பசுபதீசுவரர் கோயில்
*தாழமங்கையில் (தாழமங்கலம்) உள்ள சந்திரமௌலீசுவரர் கோயில்
*புள்ளமங்கை என்றழைக்கப்படுகிற ஆலந்துறைநாதர் கோயில்

#தல வரலாறு:

தாருகானவனத்து முனிவர்களின் கர்வத்தை அழிப்பதற்காக, சிவனார் திருவுளம் கொண்டார். அவர்கள் நடத்திய வேள்வியில் இருந்து யானையை ஏவினார்கள். அந்த யானைக்குள் புகுந்தார் சிவபெருமான். அந்த யானையின் உடலைக் கிழித்துக் கொண்டு, உக்கிரத்துடன் வெளியே வந்தார். வேழம் உரித்த வித்தகன் என்று ஈசனைப் புகழ்கிறது புராணம். வேழம் என்றால் யானை என்று அர்த்தம். இதனால்தான் இந்தத் தலத்து இறைவனுக்கு கிருத்திவாகேஸ்வரர் எனும் பெயர் அமைந்ததாகச் சொல்கிறது ஸ்தல புராணம். சப்தமாதர்களில் வாராஹியும் ஒருத்தி. அதேபோல், சப்தமாதர்களில் கெளமாரியும் ஒருத்தி. சோழ தேசத்தில், சப்த மாதர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு இடத்தில், ஒவ்வொரு தலத்தில் பூஜித்ததாகச் சொல்கிறது புராணம், அப்படி சப்தமாதர்களில் ஒருத்தியான கெளமாரி இங்கு வந்து வழிபட்டு, சிவ பூஜை செய்து, வரம் பெற்றாள் என்று விவரிக்கிறது இந்தக் கோயிலின் ஸ்தல புராணம். சூலத்தேவர் இங்கு வந்து வழிபட்டு சுய உருவத்தை மீண்டும் பெற்றார் என்றும் இதனால்தான் இந்த ஊருக்கு சூலமங்கலம் என்று பெயர் அமைந்ததாகவும் சொல்கிறது ஸ்தல புராணம்.

இங்குள்ள மற்றொரு ஸ்தல புராணத்தின் படி, வராஹ அவதாரத்தில் விஷ்ணுவால் கொல்லப்பட்ட அரக்கன் ஹிரண்யாக்ஷனுக்கு இரண்டு மகன்கள் இருந்தனர்: அந்தக மற்றும் காலநேமி. அந்தகாசுரன் திருக்கோவிலூரில் சிவனால் கொல்லப்பட்டார், விஷ்ணு காலநேமியை வென்றார். காலநேமியைக் கொல்வதற்கு முன், விஷ்ணு இந்தக் கோயிலில் வழிபட்டதாகக் கூறப்படுகிறது.கோயிலின் தீர்த்தம் – சூல தீர்த்தம் – சிவன் தனது திரிசூலத்தின் முனையை இங்கு வைத்தபோது அவர் உருவாக்கியதாகக் கூறப்படுகிறது. இக்கதையால் அந்த இடத்திற்கும் பெயர் வந்தது.

திரிசூலம் என்பது சிவன் ஏந்திய ஆயுதம், அதனால் சிவனுக்கு சூலபாணி என்று பெயர். அஸ்திர தேவர், வான தெய்வம், தேவர்களின் ஆயுதமாக கருதப்படுகிறது. எனவே, இக்கோயிலில் சிவனை வழிபட்ட அஸ்திர தேவர் சன்னதி பொருத்தமாக இந்த கோவிலில் உள்ளது. அஸ்திர தேவரை வழிபடுவது பக்தர்களுக்கு மற்றவர்கள் மீதுள்ள பகையை போக்க உதவுவதோடு, சச்சரவுகளையும் தீர்க்க உதவும் என்று கூறப்படுகிறது. மகா மண்டபத்தின் நுழைவாயிலில் இடதுபுறத்தில் அஸ்திர தேவர் சன்னதி அமைந்துள்ளது.

சப்த மாதர்களில் கௌமாரி- பூஜை செய்து மற்ற மங்கைகளுடன் வழிபட்ட தலம்.

பராசக்தியினின்று உதித்த கௌமாரி அழகு, அறிவு, வீரம் ஆகியவற்றின் உறைவிடமான குமரக்கடவுளின் அம்சம். பக்தர்களின் விருப்பங்களை தட்டாமல் நிறைவேற்றுபவள்.

இந்த அம்பிகை ஆறுமுகங்கள் கொண்டவள். பன்னிரு கண்களும், கரங்களும் கொண்டவள். மயில் வாகனத்தில் அமர்ந்து அருள்பவள். வில், அம்பு, பாசம், அங்குசம், பரசு, தண்டம், தாமரை, வேல், கத்தி, கேடயம் போன்ற ஆயுதங்களோடு அபயமும், வரதமும் தரித்தவள். அடியார்க்கு வரங்களை வாரி வழங்குவதால் சிவந்த கரம் கொண்டவள். விஷ்ணு தர்மோத்திரம் என்ற நூல் இந்த அன்னையைப் பற்றி விரிவாக விளக்குகிறது.

ரத்தத்திற்குத் தலைவியான இவளை வணங்கினால் ரத்த சம்பந்தமான வெண்புள்ளி, இரத்தம் உறையாதல் போன்ற குறைபாடுகள் நீங்க பெறலாம். இவள் கோபமடைந்தால் பசுக்களுக்கு கோமாரி எனும் நோய் தோன்றும். எலுமிச்சம் பழ சாதம் நிவேதனம் செய்து நலம் பெறலாம். இந்த அம்பிகை காசியிலிருந்து வந்த நாதன்சர்மா அனவித்யை தம்பதியர்களுக்கு வேண்டுதலுக்கிணங்கி பெண்களின் ஏழு பருவங்களில் மூன்றாவதான மங்கை பருவத்தினளாக காட்சி.

 மக்கள் வழக்கில் "சூலமங்கலம்" என்று வழங்குகிறது.
 
 கஜாசுரனை சிவபெருமான் வென்று,அவனது (யானைத்) தோலைப் போர்த்ததால் அவருக்குக் கிருத்திவாசர் என்ற பெயர் ஏற்பட்டது.  இவரிடம் சூலதேவர் வரம் பெற்றதாகக் கூறப்படுகிறது.
 
 
 அஸ்திரதேவர் வழிபட்டு, திருவிழாக் காலங்களிலும், தீர்த்த வாரியிலும் தான் முதன்மையாக விளங்கத்தக்க வரத்தை இறைவனிடம் பெற்ற தலம்.
 
 சப்தமாதர்களில் கௌமாரி வழிபட்ட தலம் இது.

அன்னை பராசக்தியும் இங்கு வந்து இறைவனை நோக்கித் தவம் செய்தபோது, தனது கரத்தில் சூலம் ஏந்தியவராக சுவாமி அவளுக்குக் காட்சி அளித்தார்.
 வட நாட்டிலிருந்து வந்த நாதசன்மா – அனவித்தை தம்பதிகளுக்கு அம்பிகை மங்கைப்பருவத்தினளாகத் தரிசனம் தந்தாள்.

சப்தமங்கையரில் சூலமங்கை வழிபட்டதனால் சூலமங்கை என்றாயிற்று என்றும் சொல்லப்படுகின்றது.
 
 தேவர்களுக்கு கஜ சம்ஹாரமூர்த்தியாக காட்சியளித்த தலம்
 
வைப்புத்தலப் பாடல்கள் : 
அப்பர் - நறையூரிற் சித்தீச் (6-70-10). 
 
இத்தலம் அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.

பெரிய சிவாலயம்; கல் திருப்பணி.
 
 ஊரின் பெயருக்கேற்றவாறு, வெளி வாயிலின் புறத்தில் - சூலம் தலைமீது ஏந்திய மங்கையொருத்தியின் உருவம் கைகளைக் கட்டிக் கொண்டு உள்ளது. ஊர்ப் பெயரும் சூலம் ஏந்திய மங்கை - சூலமங்கை என்றாயிருக்க வேண்டும்.
 
 
 திருவிழாக்களில் முக்கிய அங்கம் வகிக்கும் அஸ்திர தேவர் இங்கு சிலாரூபத்தில் சுமார் 4 ½ அடி உயரத்தோடு நுழைவாயில் அருகில் காட்சி அளிக்கிறார். பின்னால் சூலம் பொலியக் கைகூப்பியவராகக் காட்சியளிக்கிறார் அஸ்திர தேவர். 
 
 
இங்கு கோஷ்டத்திலுள்ள தக்ஷிணாமூர்த்தி ஆலமரம் இல்லாமல் ஜடாமுடியுடன் தரிசனம் தருகிறார். 
 
 
 தை அமாவாசையன்று வரும் சூலவிரதம் இங்கு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்த விரதத்தை அனுஷ்டித்து, மகாவிஷ்ணுவானவர் , காலநேமி என்ற அசுரனை வென்றார். பிரமன் தனது கடுமையான வயிற்றுவலி நீங்கப்பெற்றான்.சூல விரதம் மேற்கொள்வதால், எதிரிகளின் தொல்லைகளும், நோய்களும், வறுமையும், தோஷங்களும் நீங்கப்பெறலாம்.
 
 
 தேவாரத் திருப்பதிகம் இத்தலத்திற்குக் கிடைக்காவிடினும், அப்பர் பெருமான் வாக்கில் இத்தலப்பெயர் எடுத்தாளப்பட்டுள்ளதால், இதனைத் தேவார வைப்புத்தலம் என்பர்.
 

நறையூரில் சித்தீச்சரம் நள்ளாறு நாரையூர் நாகேச்சரம் நல்லூர் நல்ல

துறையூர் சோற்றுத்துறை சூலமங்கை தோணிபுரம் துருத்தி சோமேச்சரம்

உறையூர் கடல் ஒற்றியூர் ஊற்றத்தூர் ஓமாம்புலியூர் ஓர் ஏடகத்தும்

கறையூர் கருப்பறியல் கன்றாப்பூரும் கயிலாய நாதனையே காணலாமே.

                                           -- திருநாவுக்கரசர் தேவாரம்.

 
சூலவிரதமும் சூலமங்கையும்:

     சகல விதமான சௌபாக்கியங்களையும் அளிக்கக் கூடியது அஷ்ட மகா விரதங்களில் ஒன்றான சூல விரதம். இச்சூல விரதத்தை, சூரியன் மகர ராசியில் இருக்கும்போது, அதாவது தை அமாவாசைத் தினத்தன்று அனுஷ்டிக்க வேண்டும்.

 

     அன்றைய தினம் அதிகாலையில் விழித்தெழுந்து சூலபாணியாகிய சிவபெருமானை உள்ளத்தில் தியானித்து-வழிபட்டு, வெளியே சென்று, சிவாலயத்திற்குள் இருக்கும் மங்கள தீர்த்தத்தில் நீராடி சந்தியாவந்தனம் முதலிய கர்மாக்களை நியமத்தோடு செய்து, பிறகு உமாதேவியோடு கூடிய சிவபெருமானின் விக்ரகத்திற்கு அபிஷேகித்து நைவேத்தியம் செய்ய வேண்டும்.  பிறகு மத்தியான வேளையில் திருநீறு, உருத்திராக்‌க மாலைகளைத் தரித்த சிவபக்தர்களுக்குத் தன் பொருளாதார சக்திக்கு ஏற்றவாறு தான-தர்மங்களை செய்ய வேண்டும். அதன்பின் சிவாலயத்திற்குச் சென்று பிரதட்சிண வழிபாடுகள் செய்து, திருக்கோயிலுக்கு தம்மால் முடிந்த காணிக்கைகளையும் கொடுத்து, இறைவனை வழிபட வேண்டும். பிறகு சிவபக்தர்களுடன் அமர்ந்து ஒரே ஒரு வேளை மட்டும் உணவு உட்கொள்ள வேண்டும். 

 

     இப்படியாக இச்சூல விரதத்தை யார் அனுஷ்டிக்கிறார்களோ, அவர்கள் தங்களுடைய விரோதிகளை வென்று, தீராத கொடிய நோய்களிலிருந்தும் விடுபட்டு, தீர்க்காயுள், புத்திரச் செல்வங்கள், தாங்கள் விரும்பிய பொருட்களையெல்லாம் அடைந்து, சகல போக சௌபாக்கியங்களையும் அனுபவித்து மகிழ்வார்கள்; முடிவில் சிவசாயுஜ்யத்தையும் அடைவார்கள். சகல பாவங்களையும் வேரோடு அழிக்கவல்ல இந்த சூல விரதத்தின் சிறப்பைப் பற்றி விளக்கும் இந்த அத்தியாயத்தை எவர்கள் படிக்கிறார்களோ அல்லது கேட்கிறார்களோ அவர்களுக்கு மிருத்யுவின் (மரணத்தின்) பயமே இராது” என்று கந்தபுராணம் விளம்புகிறது.

இங்குள்ள கட்டமைப்புக் கோயில் ஆரம்பகால சோழர் காலத்தைச் சேர்ந்தது, ஆனால் இந்தக் காலக்கெடுவிற்கு மிகக் குறைந்த சான்றுகளே உள்ளன. மூன்றாம் குலோத்துங்க சோழன் மற்றும் பாண்டியர்கள் மற்றும் ஹொய்சாலர்கள் உட்பட பிற்கால வம்சங்களின் காலத்துடன் தொடர்புடைய ஏராளமான கல்வெட்டுகள் இங்கு காணப்படுகின்றன.

நுழைவாயிலில் இருந்து, பலி பீடம் மற்றும் நந்தி கொண்ட ஒரு நீண்ட நடைபாதை, முக மண்டபத்திற்கு நம்மை அழைத்துச் செல்கிறது. இங்கு துவஜஸ்தம்பம் இல்லை. இடதுபுறம் தாழ்வாரத்தின் முடிவில், அஸ்திர தேவர் விக்ரஹம் உள்ளது.

கர்ப்பகிரஹத்தின் முன் உள்ள நந்தி மற்றும் துவாரபாலகர்களின் புடைப்புச் சிற்பங்கள் கோயில் மிகவும் பழமையானது என்பதை தெளிவாகக் குறிப்பிடுகின்றன. 
முக மண்டபம் – இது மிகவும் பிற்காலத்தில் சேர்க்கப்பட்டது – வவ்வால்-நெத்தி மண்டபம் உள்ளது. கர்ப்பகிரஹத்தில் உள்ள லிங்கம் எப்பொழுதும் கவசத்தால்
மூடப்பட்டிருக்கும்.

கோயிலைச் சுற்றி வரும்போது, சோழர்கால கட்டிடக்கலையின் பிரகாசம் உடனடியாகத் தெரியும். பெரும்பாலான சித்தரிப்புகள் மற்றும் கட்டிடக்கலை வேலைகள் பிற்கால சோழர்களாக இருந்தாலும், நேர்த்தியானது உடனடியாக அடையாளம் காணக்கூடியது. கோஷ்டத்தில் நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி (தனியாக, சமீபத்தில் கட்டப்பட்ட மண்டபத்துடன்), லிங்கோத்பவர் மற்றும் துர்க்கை உள்ளனர். கோஷ்டத்தில் பிரம்மா காணப்படவில்லை, மேலும் அனைத்து கோஷ்டங்களும் முதலில் காலியாக இருந்ததற்கான சாத்தியத்தை இது குறிக்கிறது.

தனித்துவமாக, கோஷ்டத்தில் உள்ள தட்சிணாமூர்த்தி வழக்கமான ஆலமரம் இல்லாமல் காட்சி அளிக்கிறார்.

பிரகாரத்தில் விநாயகர், முருகன் துணைவியார் வள்ளி, தெய்வானை, கஜலட்சுமி, சண்டிகேஸ்வரர், பைரவர், சனி சன்னதிகள் உள்ளன. தனி நவக்கிரகம் சன்னதி உள்ளது. கர்பக்ரிஹம் மற்றும் அர்த்த மண்டபத்தின் வெளிப்புறச் சுவர்களில் பல அழகிய சிற்பங்கள் மற்றும் பாசிப் படிமங்கள், கல்வெட்டுகள் உள்ளன.

வழிபாட்டு முறையைப் பொறுத்தவரை, இந்த கோவிலின் தனித்துவமான அம்சம் என்னவென்றால், அஸ்திர தேவர் சிவனின் திரிசூலத்திலும் வெளிப்படுவதால், சிவனாலேயே நியமிக்கப்பட்ட அஸ்திர தேவர் இங்கு முதல் வழிபாட்டைப் பெறுகிறார்.

 #சூலமங்கைத் திருக்கோயில்:

     தஞ்சாவூர் - கும்பகோணம் பேருந்துப் பாதையில் ஐயம்பேட்டை மாற்றுப்பாதையில் வந்து இரயில்வே நிலையச் சாலையில் திரும்பிச் சென்றால் வெகு சமீபத்தில் உள்ளது சூலமங்கலம் (சூலமங்கை) என்னும் இவ்வூர். ஸ்ரீஅலங்காரவல்லி சமேத ஸ்ரீகிருத்திவாசேஸ்வரர் திருக்கோயிலே சூலமங்கை என்பதாகும். சூலமங்கை என்னும் இக்கோயிலின் பெயரே இவ்வூரின் பெயராக வழங்கலாயிற்று; இஃது மருவி தற்போது சூலமங்கலம் என்று இவ்வூர் விளங்குகின்றது.

 

     அஸ்திரதேவர் (சூலதேவர்) வழிபட்டு, திருவிழாக் காலங்களிலும், தீர்த்தவாரியிலும் தான் முதன்மையாக விளங்கத்தக்க வரத்தைப் பெற்ற தலமாகும். ஊரின் பெயருக்கேற்ப, கோயில் உள்வாயிலின் புறத்தில் சூலத்தை தலைமீது ஏந்தியவாறு சூலதேவர் உள்ளார். சப்த மங்கையரில் சூலமங்கை வழிபட்டதால் இத்தலம் சூலமங்கை என்றாயிற்று என்போரும் உளர். அப்பர் தம் திருவாக்கில் இடம்பெற்ற வைப்புத் தலமுமாகும் (6.70.10).

சோழர் கால கற்றளியில் மூன்றாம் குலோத்துங்கன், சுந்தரபாண்டியன், போசள வீரராமனாதன் கல்வெட்டுகள் நிவந்தங்கள் பற்றிய செய்திகளையும், சமூக பொருளாதார வாழ்க்கையையும் குறிப்பிடுகின்றன.

கெளமாரி வழிபட்ட சூலமங்கலம் கிருத்திவாகேஸ்வரரை மனதால் நினைத்து வேண்டிக்கொண்டால், பேரும்புகழும் கிடைக்க வாழலாம். நோய் நொடியின்றி வாழலாம். அம்பிகையின் அருளைப் பெற்ற ஐஸ்வரியத்துடன் வாழலாம் என்கிறார்கள் ஆச்சார்யர்கள். சப்தமாதர்களில், கெளமாரி தனம் வழங்கும் தேவதை. பொன்னும் பொருளும் தரக்கூடிய தேவதை. தனம் தானியம் பெருக்கித் தரும் தேவதையாகவே சொல்கிறார்கள் பக்தர்கள்.

இவ்வளவு தூரம் சிறப்பினை தெரிந்துகொண்ட நாம் சூலமங்கலத்தின் இன்னொரு சிறப்பான சூலமங்கலம் சகோதரிகள்பற்றி பார்ப்போம். இசைத்துறையில் சூலமங்கலம் சகோதரிகள் என அழைக்கப்படும் ஜெயலட்சுமி, ராஜலட்சுமி ஆகிய இருவரும் இவ்வூரில் பிறந்தவர்கள். பக்திப் பாடல்களுக்குப் புகழ்பெற்ற இச்சகோதரிகள். கர்நாடக இசையிலும் பக்திப்பாடல்களிலும் புகழ்பெற்று விளங்கியவர்கள்.

ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம். 

Followers

பிள்ளையார் விரும்பும் 'மோதகம்' நைவேத்தியம் என்றால் என்ன❓

பிள்ளையார் விரும்பும் 'மோதகம்' நைவேத்தியம் மோதக் என்றால் உற்சாகம், மகிழ்ச்சி என்று பொருள். அகம் என்ற சொல்லுக்கு ‘வழங்கக்...