Showing posts with label #KarkateswararTemple #ThirunthudhevanKudi #Nandaankoil #Thevaaram #Thirugnanasambanthar #Thirunavukarasar #Sundarar #Hindu temple #Thiruvisalur #Kumbakonam #Thanjavur ₹₹Tamil Nadu #India. Show all posts
Showing posts with label #KarkateswararTemple #ThirunthudhevanKudi #Nandaankoil #Thevaaram #Thirugnanasambanthar #Thirunavukarasar #Sundarar #Hindu temple #Thiruvisalur #Kumbakonam #Thanjavur ₹₹Tamil Nadu #India. Show all posts

Thursday, April 9, 2026

கடக ராசிக்காரர்கள் வழிபட வேண்டிய கோவில்

திருந்துதேவன்குடி : தற்போது நண்டாங்கோவில் என்று அறியப்படும் இத்தலம் தேவார காலத்தில் திருந்துதேவன்குடி என்று அழைக்கப்பட்டது. கடக ராசிக்காரர்கள் வழிபட வேண்டிய கோவில் கற்கடேஸ்வரர் ஆலயம் ஆகும். 

இறைவர் : ஸ்ரீ கற்கடேஸ்வரர்

இறைவியார் : ஸ்ரீ அருமருந்துநாயகி

தல புராணப்படி உமாதேவி ஒரு சமயம் கைலாயத்தில் இருந்து இத்தலத்திற்கு வந்து நண்டு உருவத்தில் இறைவனை வழிபட்டாள். கோவிலைச் சுற்றி உள்ள அகழியில் இருந்த நீரில் பூத்துக் குலுங்கிய தாமரை மலர்களால் இறைவனை அர்ச்சித்து வழிபட்டு வந்தாள். தேவேந்திரனும் அதே சமயம் இத்தலத்து இறைவனை வழிபட்டு வந்தான். அகழியில் தன்னால் பயிரடப்பட்ட தாமரை மலர்களை நண்டு கொண்டு வந்து இறைவனுக்கு சாத்தி வழிபடுகிறதே என்று கோபம் கொண்டான். 

நண்டு உருவத்தில் இறைவனை வழிபடுவது பார்வதி தேவியே என்று அறியாத இந்திரன் லிங்கத்தின் மீதேறி தாமரை மலர்களைச் சாத்த முயன்ற நண்டை கத்தியால் வெட்ட முயன்றான். முதல் வெட்டு தாடையில் விழுந்தது. அடுத்த வெட்டு சிவபெருமானின் நெற்றியில் விழுந்தது. நண்டு உருவில் இருந்த உமாதேவியைக் காப்பாற்ற நினைத்த சிவபெருமான் லிங்கத் திருமேனியில் உச்சியில் ஒரு துவாரத்தை ஏற்படுத்தி நண்டு உருவில் இருந்த சக்தியை தன்னுடன் ஐக்கியப்படுத்திக் கொண்டார். உண்மையை உணர்ந்த இந்திரன் தன் தவறுக்கு வருந்தி திருந்தினான். எனவே இக்கோவிலுக்கு திருந்துதேவன்குடி என்ற பெயர் வந்ததாக தலபுராணம் கூறுகிறது. நண்டு சிவனை வழிபடும் சிற்பம் ஒன்று கோவிலில் உள்ள ஒரு கற்தூணில் செதுக்கப்பட்டு உள்ளது.

சந்திரனால் ஏற்படும் தோஷங்கள் நீங்க வழிபட வேண்டிய தலம் திருந்துதேவன்குடி தலமாகும். அநேகமாக எல்லா சிவாலயங்களிலும் சந்திரனுக்கு தனி சந்நிதி இருக்கும். சந்திரன் நின்ற நிலையில் காணப்படுவார். இத்தலத்தில் மட்டும் சந்திரன் அமர்ந்த நிலையில், யோக நிலயில் இருக்கிறார். எல்லா வகையான யோகங்களும் கிடைக்க வழிபட வேண்டிய தோஷ பரிகார சந்திரன் இவர். குறிப்பாக கடகராசிக்காரர்கள்(புனர்பூசம், பூசம், ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்) இக்கோவிலுக்கு வந்து வழிபட்டால் அனைத்து தோஷங்களில் இருந்து நிவாரணம் பெறலாம்.

🍁"மருந்து வேண்டில் இவை மந்திரங்கள் இவை
புரிந்து கேட்கப்படும் புண்ணியங்கள் இவை
திருந்து தேவன்குடித் தேவர் தேவு எய்திய
அருந்தவத்தோர் தொழும் அடிகள் வேடங்களே."

பொருளுரை : திருந்துதேவன்குடியில் வீற்றிருக்கும், தேவர்கட்கெல்லாம் தேவனாக விளங்குபவனும், அருந்தவத்தோர்களால் தொழப்படுபவனுமான சிவபெருமானின் திருவேடங்கள்(திருநீறு, உருத்திராக்கம், சடாமுடி) மருந்து வேண்டுபவர்க்கு மருந்தாகவும், மந்திரங்கள் விரும்புவார்கட்கு மந்திரமாகவும், சிவபுண்ணியச் சரிதை கேட்க விரும்புவார்கட்கு அப்புண்ணியப் பயனாகவும் அமையும்.

ஆளுடைய பிள்ளையார், திருவியலூர் அடிகளைப் போற்றி இன்னிசைப் பதிகத்தொடை சாத்தி அம்முழு முதல்வன் காட்டிய கண்ணார்தரும் உருவாகிய அருள் வேடத்தைத் தொழுது, திருந்துதேவன்குடியிற் சென்று சிவபெருமான் கோயிலை எய்திக், காதலொடு புகுந்து, போற்றி வணங்கிப் புனைந்த அருந்தமிழ் மாலை இது.

ஆலய முகவரி : அருள்மிகு கற்கடேஸ்வரர் திருக்கோவில, நண்டாங்கோவில், திருந்துதேவன்குடி, திருவிசலூர் அஞ்சல், கும்பகோணம் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம், PIN - 612 105.

எப்படிப் போவது : கும்பகோணத்திற்கு அருகிலுள்ள திருவியலூர் என்ற மற்றொரு பாடல் பெற்ற சிவஸ்தலத்தில் இருந்து 2 கி.மி. தொலைவில் திருந்துதேவன்குடி சிவஸ்தலம் இருக்கிறது. கும்பகோணத்திலிருந்து திருவிசநல்லூர் செல்ல நகரப் பேருந்து வசதி உண்டு. திருவிசநல்லூரில் இருந்து நடந்தோ அல்லது ஆட்டோ மூலமோ கற்கடேஸ்வரர் கோவில் சென்று வரலாம்.

"மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகம் எல்லாம்"

ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 


Followers

திருக்கோடிக்காவல் திருக்கோடீஸ்வரர்

திருக்கோடிக்காவல் திருக்கோடீஸ்வரர் திருத்தலம். நவக்கிரகத் தலங்களில் சுக்கிரன் தலமான கஞ்சனூருக்குக் கிழக்கே சுமார் 3 கி.மீ. தொலைவிலிருக்கிறது...