Showing posts with label #sree agneeswara #Sivan temple #Hindu temple #thirukattupalli #bodalur #Thanjavur #Tamil Nadu #India. Show all posts
Showing posts with label #sree agneeswara #Sivan temple #Hindu temple #thirukattupalli #bodalur #Thanjavur #Tamil Nadu #India. Show all posts

Saturday, July 13, 2024

அக்னீசுவரர் திருக்கோயில் ,திருக்காட்டுப்பள்ளி பூதலூர் ,தஞ்சாவூர் ...

அருள்மிகு அக்னீசுவரர் திருக்கோயில்,
திருக்காட்டுப்பள்ளி - 
613 104, 
பூதலூர் வட்டம்,
தஞ்சாவூர் மாவட்டம்.
*மூலவர்        :     அக்கினீசுவரர், தீயாடியப்பர்

*அம்மன்        :     சௌந்தரநாயகி, அழகம்மை

*தல விருட்சம்  :  வன்னி, வில்வம்

*தீர்த்தம்         :     சூரிய தீர்த்தம்,  அக்னி தீர்த்தம் - இது இன்று கிணறு வடிவில் உள்ளது.
*பாடல்பெற்ற தலம்: திருஞானசம்பந்தர் ஒரு பதிகமும், திருநாவுக்கரசர் ஒரு பதிகமும் பாடியுள்ளனர்.

*புராண பெயர்   :     மேலைத்திருக்காட்டுப்பள்ளி
(திருக்காட்டுப்பள்ளி என்னும் பெயரில், பாடல் பெற்ற தலங்கள் இரண்டு உள்ளன. காவிரியின் வடகரையில் உள்ள  கீழைத் திருக்காட்டுப்பள்ளி   திருவெண்காட்டுக்கு அருகில் உள்ளது.)                          

*தல வரலாறு:
புராண காலத்தில், தேவர்களும், அவர்கள் தலைவனான இந்திரனும் இத்தலத்துக்கு வந்து இறைவனை வணங்கினர். அப்போது அக்னிதேவன், தான் தொட்ட பொருட்கள் யாவும் சுட்டெரிக்கப்பட்டு நாசமாகிவிடுகிறதென்றும், அதனால் ஏற்படும் பழியிலிருந்து விடுபட வழி சொல்ல வேண்டும் என்றும் தனது வயிற்று வலி நீங்கவும் இறைவனிடம் முறையிட்டான். அக்னிதேவன் முன்  சிவபெருமான் தோன்றி, இத்தலத்தில் ஒரு குளம் அமைத்து அதற்கு அக்னி தீர்த்தம் என்று பெயரிட்டு அந்தக் குளத்து நீரால் தன்னை அபிஷேகம் செய்தால், என்னை வழிபடும் உனக்கு அந்தப் பழி தீரும் என்றும், அதில் நீராடும் பக்தர்களுக்கும் அவர்கள் செய்த பாவங்கள் தீரும் என்றும் வரமளித்தார். 
இந்த அக்னி தீர்த்தத்தில் கார்த்திகை ஞாயிறு, மாசி மகம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம் ஆகிய நாள்களில் நீராடி வழிபடுவோர் எல்லா நலன்களும் பெறுவர்.     

*அக்கினி பகவான் இத்தலத்து இறைவனை வழிபட்டதால், இக்கோயிலுக்கு “அக்னீஸ்வரம்” என்று பெயர் வந்தது.  

*அக்னி பகவான் வழிபட்டிற்காக உண்டாக்கிய அக்னி தீர்த்தம், இன்று கிணறு வடிவில், பேருந்து நிலையத்துக்கு அருகே உள்ளது. 

*உறையூர் சோழமன்னனுக்கு இரண்டு மனைவிகள். ஒருத்தி திருக்காட்டுப்பள்ளியிலும், மற்றொருத்தி உறையூரிலும் வாழ்ந்து வந்தனர். மன்னனின் பணியாளன், கோவில் நந்தவனத்தில் உள்ள பூக்களைப் பறித்து மனைவிகளிடம் கொடுக்க வேண்டும் என்பது அரசனின் ஆணை. திருக்காட்டுப்பள்ளியில் வாழும் மனைவி, பூக்களைப் பெற்று இறைவனை அர்ச்சித்தாள். உறையூரில் இருந்தவள், பூக்களைத் தன் தலையில் சூட்டி மகிழ்ந்தாள். 
ஒரு முறை இயற்கை சீற்றத்தால், மண் மாரி பெய்து உறையூரை அழித்தது. திருக்காட்டுப்பள்ளி இந்த அழிவிலிருந்து தப்பியது என்று ஒரு வரலாறு தெரிவிக்கிறது. 

*கோயில் சிறப்புகள்:
மூலவர் அக்னீஸ்வரர் கருவறை, தரை மட்டத்திலிருந்து கீழே ஒரு தாழ்வான  பகுதியில் இருக்கிறது.
 
 *மூலவர் அக்னீஸ்வரர் சுயம்புலிங்கமாக கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். 
 
 *இறைவன் சந்நிதிக்கு இடது பக்கத்தில் பிரம்மாவுக்குத் தனி சந்நிதி உள்ளது.   
பிரம்மா இத்தலத்தில் இறைவனை வணங்கி மும்மூர்த்திகளில் ஒருவர் என்ற அங்கீகாரம் தர வேண்டும் என்று பிரார்த்தனை செய்தார். சிவன் அவருக்கு தனியிடம் தந்து தங்க அனுமதித்தார் என்று இத்தலத்து கல்வெட்டு கூறுகிறது. 

*இங்குள்ள லிங்கம், அகத்தியரின் சீடாராகிய உரோமரிஷி சித்தரால் பிரதிஷ்டை செய்யப்பட்டு, வழிபாடு செய்யப்பட்டது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். *இக்கோயிலின் உரோமரிஷி சித்தர் தனி சன்னதியில் எழுந்தருளியுள்ளார். 

*இறைவி சௌந்தரநாயகி தெற்கு நோக்கிய தனி சந்நிதியில் வீற்றிருக்கிறாள்.

*இத்தலத்தில்  ஸ்ரீனிவாசப் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் தனி சந்நிதியில் பிரகாரத்தில் பக்தர்களுக்கு அருள்புரிகிறார்.       

*மூலவரைச் சுற்றிவரும் பிராகாரத்தில் கோஷ்ட மூர்த்தமாக யோக தட்சிணாமூர்த்தி விளங்குகின்றார்  
குருபகவான் இரண்டு கரங்களுடன், மகர கண்டி, ருத்ராட்ஷம் அணிந்து யோக குருவாகக் காட்சி தருவது சிறப்பு.   
யோக குருபகவானுக்கு வாரந்தோறும் வியாழக்கிழமையில் ஐந்து நெய் தீபங்களை ஏற்றி வழிபட்டால் கல்வியில் மேன்மை பெறலாம். மேலும் திருமணத் தடை விலகுகிறது என்ற நம்பிக்கையும் பக்தர்களிடையே உள்ளது. இதற்காக கோயிலின் முகப்பில் தீப மண்டபம் கட்டப்பட்டுள்ளது. அங்கு விளக்கேற்றி வழிபடலாம்.  

*இரண்டாம் பிராகாரத்தில் உள்ள தட்சிணாமூர்த்தி, குரு தட்சிணாமூர்த்தி எனப்படுகிறார். 

*லிங்கோத்பவர், கோஷ்ட மூர்த்தமாக இல்லாமல்,  தனி சந்நிதியில் காணப்படுகிறார். லிங்கோத்பவர் இயல்பாக இருக்கும் இடமான மேற்கு கோஷ்டத்தில் அர்த்தநாரீஸ்வரர் இருக்கிறார்.  

*சட்டநாதருக்கு தனி சந்நிதி உள்ளது.       

*வயிற்றுநோய் போக்கும் கோயிலாக திருக்காட்டுப்பள்ளி அக்னீஸ்வர சுவாமி திருக்கோயில் விளங்குகிறது.      

*இத்தலம் பரணி நட்சத்திரம் மற்றும் பிரதமை திதியில் பிறந்தவர்களுக்கு பரிகாரத்தலமாக விளங்குகிறது. 
பிரதமை திதியின் அதிபதி அக்னி தேவன். அவன் வழிபட்ட தலமாதலால், அந்தத் திதியில் பிறந்தவர்கள் இத்திருக்கோயிலில் வழிபட்டால், பிரதமை திதி தோஷம் விலகும். 
  
ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்.. 

Followers

பிள்ளையார் விரும்பும் 'மோதகம்' நைவேத்தியம் என்றால் என்ன❓

பிள்ளையார் விரும்பும் 'மோதகம்' நைவேத்தியம் மோதக் என்றால் உற்சாகம், மகிழ்ச்சி என்று பொருள். அகம் என்ற சொல்லுக்கு ‘வழங்கக்...