Showing posts with label #Uchcha Nadar #Sivan temple #Hindu temple #child food eating first time #Shivpuri #Chidambaram #Tamil Nadu #India. Show all posts
Showing posts with label #Uchcha Nadar #Sivan temple #Hindu temple #child food eating first time #Shivpuri #Chidambaram #Tamil Nadu #India. Show all posts

Tuesday, August 19, 2025

குழந்தைகளுக்கு முதல் சோறு ஊட்ட உகந்த கோயில்!

பச்சிளம் குழந்தைகளுக்கு முதல் சோறு ஊட்ட உகந்த கோயில்!
சிதம்பரத்திலிருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது சிவபுரி அருள்மிகு உச்சநாதர் திருக்கோயில். சிதம்பரம் - கவரப்பட்டு நகரப் பேருந்தில் பயணித்தால் இத்தலத்தை அடையலாம்.

சிவபெருமான், அகத்தியருக்குக் காட்சி தந்த தலங்களில் இதுவும் ஒன்று. இக்கோயில் சிவலிங்கத்தின் பின்புறம் சிவ - பார்வதி திருமணக்கோலத்தில் அருளுகின்றனர். சம்பந்தர் சிதம்பரத்தில் தங்கியிருந்த காலத்தில் தினமும் இத்தலம் வந்து தரிசனம் செய்ததாக வரலாறு.

சிதம்பரம் நகருக்குட்பட்ட ஒரு பகுதியில் நெல் வயல்கள் அதிகம் இருந்தன. அப்பகுதி, ‘திருநெல்வாயில்' என அழைக்கப்பட்டது. தற்போது இத்தலம் ‘சிவபுரி’ எனப்படுகிறது. இங்குதான் இக்கோயில் அமைந்துள்ளது. உமையன்னை சக்தியிடம் ஞானப்பால் அருந்திய ஞானசம்பந்தருக்கு இறைவன் உணவளித்த திருத்தலம் இது.
திருஞானசம்பந்தர், சீர்காழியில் வசித்த சிவபாத இருதயர் - பகவதி அம்மையார் தம்பதியரின் மகனாக அவதரித்தார். தனது மூன்றாம் வயதில் தந்தையுடன் சீர்காழி சட்டைநாதர் கோயிலில் உள்ள பிரம்ம தீர்த்தத்திற்கு வந்தார். தந்தை இவரை குளக்கரையில் உட்கார வைத்து விட்டு, தான் மட்டும் கோயில் குளத்தில் நீராடச் சென்றார். அப்போது சம்பந்தருக்கு பசி ஏற்பட, ‘அம்மா! அப்பா!' என அழுதார்.

இவரது அழுகுரல் கேட்ட சிவன், பார்வதி தேவியை நோக்கி, அக்குழந்தைக்குப் பால் கொடுக்குமாறு கூறினார். அதன்படி சிவபெருமானுடன் சம்பந்தருக்கு தரிசனம் தந்து மெய்ஞானம் கலந்த பாலை புகட்டினாள் அம்பிகை. பசி தீர்ந்த சம்பந்தர் வாயில் பால் வழி அமர்ந்து விட்டார்.

திருக்குளத்தில் நீராடி விட்டு வந்த தந்தை, "உனக்குப் பால் கொடுத்தது யார்? யாராவது ஏதாவது கொடுத்தால் வாங்கிச் சாப்பிடக் கூடாது என்பது உனக்குத் தெரியாதா? அபச்சாரம் செய்து விட்டாயே'' எனச் சொல்லி குச்சியால் சம்பந்தரை அடிக்க கையை ஓங்கினார். அப்போது சிவ - பார்வதி தரிசனம் தந்த திசையை நோக்கி கையை நீட்டிய சம்பந்தர், ‘தோடுடைய செவியன்' என்று பதிகம் பாடினார். தனது குழந்தைக்கு அம்பாளே பாலூட்டியது அறிந்து பரவசப்பட்டார் சிவபாதர்.

சம்பந்தருக்கு 12 வயதில் திருமணம் நிச்சயமானது. மணமகள், உறவினர் மற்றும் சிவனடியார்கள் 63 பேருடன் சிதம்பரத்திலிருந்து ஆச்சாள்புரம் சிவன் கோயிலுக்கு அவர் சென்றார். செல்லும் வழியில், மதிய நேரம் உச்சிப்பொழுதாகி விட்டதால் பசியின் காரணமாக இவர்கள் அனைவரும் சிவபுரி திருத்தலத்தில் தங்கினர்.

சம்பந்தரும், அவருடன் வந்தவர்களும் பசியுடன் இருப்பதை அறிந்த இத்தல இறைவன், கோயில் பணியாளர் வடிவில் வந்து அனைவருக்கும் அறுசுவை விருந்தளித்தார். இதனால் இத்தல இறைவன், ‘உச்சிநாதர்' என்றும் ‘மத்யானேஸ்வரர்' என்றும் அழைக்கப்படுகிறார். அம்மன் கனகாம்பிகை. இப்பகுதி மக்கள் இக்கோயிலை ‘கனகாம்பாள் கோயில்' என்றே அழைக்கின்றனர்.

ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Followers

பிள்ளையார் விரும்பும் 'மோதகம்' நைவேத்தியம் என்றால் என்ன❓

பிள்ளையார் விரும்பும் 'மோதகம்' நைவேத்தியம் மோதக் என்றால் உற்சாகம், மகிழ்ச்சி என்று பொருள். அகம் என்ற சொல்லுக்கு ‘வழங்கக்...