Showing posts with label #Vajrakandeswarar #sivan temple #Hindu temple #Vallam #Thanjavur #Tamil Nadu #India. Show all posts
Showing posts with label #Vajrakandeswarar #sivan temple #Hindu temple #Vallam #Thanjavur #Tamil Nadu #India. Show all posts

Sunday, April 5, 2026

வல்லம் வஜ்ரகண்டேஸ்வரர் சிவன்கோயில்

தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் வட்டம், வல்லம் வஜ்ரகண்டேஸ்வரர்   சிவன்கோயில் 
வல்லம்; தஞ்சாவூர் -  திருச்சி செல்லும் சாலையில் 12  கி.மீ தொலைவில் உள்ளது. தொல்காப்பிய உரையில் வல்லம் சோழ நாட்டுப் பிவூரும், அழுத்தூரும், நாங்கூரும், கலன்சேரியும் பெருஞ்சிக்கலும், வல்லமும், கிழாரும், முதலிய பதியிற் தோன்றி... என்று குறிப்பிடுவதை நோக்கும்போது வல்லம் என்ற ஊரின் பெருமையும் குறித்து உணர முடிகிறது.

வல்லத்திற்கு அருகே செம்பாறாங்கற்பாறைப் படிவுகளில், தொல்பழங்காலச் சான்றுகள் கிடைக்கின்றன. இங்கு சுரண்டிகள், வெட்டும் கருவிகள் மற்றும் நுண்கற்கருவிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. சிவப்பு மற்றும் கருப்பு நிறப் பானையோடுகளும், இரும்புக்கருவிகள், எலும்புப் பொருள்கள், கல் மணிகள் மற்றும் பிற பொருள்களும் கிடைத்துள்ளன. தமிழ் பிராமி எழுத்துப்பொறிப்புள்ள ஓடுகள் சிலவும் இங்கு கிடைத்துள்ளன.

வரலாற்றுக்காலத்திலும், வல்லம் ஒரு சிறந்த ஊராகத் திகழ்ந்தது. இங்கு ஒரு கோட்டையும், அதைச் சுற்றிலும் அகழியும் இருந்தது. வான்பார்வையில் இதனை இன்றும் காணலாம், 
இங்குள்ள கோட்டை, இடைக்காலத்தைச் சேர்ந்ததாக கருதப்படுகின்றது. தஞ்சாவூருக்குப் பாதுகாப்பளிக்கும் அரணாக வல்லம் செயல்பட்டுள்ளதாகத் தெரிகின்றது. 

வல்லத்தில் சோழர் காலக் கல்வெட்டுகள் உள்ளன. இங்குள்ள சோழீஸ்வரர் கோயிலில் சோழர், போசளர், பாண்டியர் கல்வெட்டுகள் உள்ளன. இக்கோயில் கரிகால சோழீஸ்வரமுடையார் கோயில் என்று குறிப்பிடப்படுகின்றது. இங்குள்ள கோட்டை பகுதிக்குள் வஜ்ராகண்டேஸ்வரர் சிவாலயம் ஒன்றும் நரசிங்கப் பெருமாள் கோயில் ஒன்றும் உள்ளது. இவை தவிர கோட்டைக்கு வெளியில் சோழீஸ்வரர் கோயில் ஒன்றும் ஏகெளரி அம்மன் கோயிலும் பிரசித்தி பெற்றவை

இறைவன்  வஜ்ஜிரேசுவரர் / வஜ்ரகண்டேஸ்வரர் 
இறைவி மங்களாம்பிகை.

கிழக்கு நோக்கிய இந்த சிவாலய வாயிலில் ராஜகோபுரம் காணப்படுகிறது. முன் மண்டம் ஓட்டு கூரையாக உள்ளது. இதில்  நந்தியும் பலிபீடமும், உள்ளன. மூலவர் சன்னதிக்கு முன்பாக இரு புறமும் துவாரபாலகர்கள் உள்ளனர். வலப்புறம் சன்னதியில்  விநாயகர் உள்ளார். இடப்புறம் சன்னதியில் பாலதண்டாயுதபாணி  முருகன் உள்ளார். இதனை ஒட்டி வடபுறம் சஞ்சீவி ஆஞ்சநேயர் ஒரு மாடத்தில் உள்ளார்.  விநாயகர் சன்னதிக்கு முன்பாக மூஞ்சுறும், பலிபீடமும் உள்ளன. முருகன் சன்னதிக்கு முன்பாக மயிலும், பலிபீடமும் உள்ளன. 
மூலவர் கருவறைக்கு முன்பாகவும்  ஒரு நந்தி உள்ளது. மூலவர் கருவறையின் வலப்புறம் தெற்கு நோக்கிய அம்பிகை சன்னதி உள்ளது. கோஷ்டத்தில் தக்ஷணமூர்த்தி, வடக்கில் துர்க்கை சன்னதி உள்ளன. 

திருச்சுற்றில் சண்டேசர் சன்னதி உள்ளது. வடகிழக்கில் கோபுரத்தினை ஒட்டி கௌதம முனிவர் ஒரு மாடத்தில் உள்ளார் அருகில் நவக்கிரக சன்னதி காணப்படுகிறது.  அதில் சூரியன் மேற்கு நோக்கியுள்ளார். 

இத்தலத்தில் மாசி மாதத்தில் சூரிய ஒளி சுவாமி மீது வீழ்ந்து ஒரு சிறப்பான நிகழ்வாகும். 

கோயிலின் தென் புறத்தில் அகழி போன்ற குளம் போன்ற அமைப்பு காணப்படுகிறது. கோயிலின் பக்கத்திலிருந்து இப்பகுதிக்குச் செல்வதற்கு படிகள் காணப்படுகின்றன. ஐம்பதடிக்கும் மேல் ஆழம் உள்ள இந்த குளம் இந்த குளம் தான் கோட்டையில் இருந்த அனைவருக்கும் குடிநீருக்காக பயன்பட்டு வந்தது. இன்று மிகவும் பாழடைந்து முள்மரங்களால் மூடி கிடக்கிறது. தஞ்சை பகுதியை சேர்ந்த சில  இளைஞர்கள் இதனை சுத்தம் செய்யும் பணியில் 50 வாரங்களாக ஈடுபட்டுள்ளனர் என்பது வியப்புக்குரியது. இக்குளம் 1300 வருட பழமையான இந்த  வல்லம் சுவரன் மாறன் கோட்டை குளம் எனப்படுகிறது. புராண கதையில் இதனை வஜ்ர தீர்த்தம் என கூறப்படுகிறது. 

 இக்கோயிலுக்கு ஒரு புராண கதையும் சொல்லப்படுகிறது.  கௌதம மகரிஷியின் ரிஷிபத்தினியின் மேல்  இந்திரன் ஆசை கொண்டு, கௌதம மகரிஷியின் உருவத்தோடு வந்து இன்பம் அனுபவிக்கிறான்.  அதனை அறிந்த கௌதமர் அகலிகையைக் கல்லாக மாற சாபமிட்டார். இந்திரனையும் சபிக்கிறார், கல்லாக மாறிய அகலியை  ராமனின் கால்பட்டதால் மீண்டும் மனிதவுருவம் பெற்றதாக  புராணம்.  

கருட புராணத்தின்படி, வஜ்ர கண்டம் என்பது மோகத்தால் குரு, மற்றும் பிறரின் மனைவியுடன் தகா உறவு கொள்ளுதல் போன்ற 
செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு, நரகத்தில் வழங்கப்படும் தண்டனை ஆகும். இது கடுமையான பாவங்களுக்கு அளிக்கப்படும் தண்டனைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. 

இந்திரன் தன் வஜ்ர கண்ட தண்டனை நீங்க  வேண்டி இறைவனை இங்கு வந்து வேண்டி தவம் செய்ததால் இங்கு இறைவனுக்கு வஜ்ரகண்டேஸ்வரர் என பெயர் வந்தது. 

இந்திரன் தன் வஜ்ராயுதத்தால் தென்புறத்தில் ஒரு தீர்த்தம் உண்டாக்கி இத்தல இறைவனை வேண்டியதால் வஜ்ரேஸ்வரர் என பெயர் வந்தாதாக கூறுகின்றனர். இந்திரனது வஜ்ரகண்ட சாபத்தினை நீக்க வேண்டி மும்மூர்த்திகளும் கௌதமரை கேட்டுக்கொண்ட தலம் இது என கூறப்படுகிறது.  

திருவையாறு அருகில் உள்ள வீரமாங்குடியில் அமைந்துள்ள சிவாலயத்திலும் வஜ்ரகண்டேஸ்வரராகவும், அம்மன் மங்களாம்பிகையாகவும் அருள்பாலிக்கின்றனர். வஜ்ராசுரன் என்ற அரக்கனை அழித்த தலமாக இது கருதப்படுகிறது.  

ஒரு பழம்பெரும் கோட்டை நகரில் குடியிருக்கும் இறைவனை காண வாருங்கள். 
ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Followers

சபரிமலையில் உள்ள படிகள் 18 ஆடி18க்கும் சம்மந்தம் என்ன❓

*நீர்நிலைகளை  போற்றி வழிபடும் ஆடிப்பெருக்கு விழா* .. ஆடி 18-  *ஆடிப்பெருக்கு*  சுப தினம்.... விவசாயம் செழிக்கவும், நாடு வளம்பெறவ...