Showing posts with label #sivanadiyargal #Sivan Kovil #Hindu temple #Thanjavur #Tamil Nadu #India. Show all posts
Showing posts with label #sivanadiyargal #Sivan Kovil #Hindu temple #Thanjavur #Tamil Nadu #India. Show all posts

Sunday, June 16, 2024

சிவனடியார் யார்? ஏன் அந்த பெயர் வந்தது?




சிவனடியார்

சைவர்கள் அனைவரும் கட்டாயம் தெரிந்து கொள்ளவேண்டியது இது ஆசாரியார் சிஷ்யருக்கு சமய தீட்சை செய்யும்போது போதிக்கத் தக்கது

1) ஆன்மாக்களுக்கு எந்த சரீரத்திலும் மானிட சரீரம் கிடைப்பது மிக அரிது. மனித சரீரம் கிடைத்தாலும் சைவ சமயம் வழங்கும் தேசத்தில் பிறக்க கிடைப்பது அதினும் அரிது. அப்படி பிறந்தபோதிலும், சைவ சமயத்தில் பிரவேசிக்க கிடைப்பது அதனினும் அரிது. அதனினும் அரிது சைவ நெறி தவறாது தவம் செய்யும் குடியில் பிறத்தல். இவ்வாறு சைவ சமயத்தை அநுட்டித்து முக்தி யின்பம் பெறும்பெருட்டே மனித சரீரம் கிடைத்தது.
2) சைவ சமயம் என்பதற்கு பொருள் சிவபெருமானை வழிபடும் மார்க்கம், சிவபெருமான்பிறப்பு இறப்புஇன்றி என்றும் உள்ளவர. எங்கும் நிறைந்தவர், இயல்பாகவே எல்லாம் அறிபவர், எல்லாஞ் செய்ய வல்லவர், அனுபவத்தின் பொருட்டு பிறிதொன்றையும் வேண்டாதவர், பிறர் வசத்தினராகாது தன் வசத்தினராயே உள்ளவர்.

 பசுக்களாகிய உயிர்களிடத்துள்ள இரக்கமே திருமேனியாக உடையவர். இவ் இலக்கணங்கெல்லாம் உடையவர் சிவபெருமான் ஒருவரே அன்றி வேறு இல்லை. ஆதலால் சிவபெருமான் ஒருவரே பசுக்களுக்கு (உயிர்) பதி (இறைவன்) சிவபெருமானரே, இவரைவிட உயர்ந்தவர் உண்டென்று என்பதும், சிவபெருமானக்கு சமத்துவம் உடையவர் உண்டென்று கொள்வதும் சிவ நிந்தை ஆகும். இவ் உண்மை எல்லாம் அறிந்து சிவபெருமான் ஒருவரையே வழிபடுஞ் சமயம் சைவ சமயம் ஆகும்.

3) பசுபதியாகிய சிவபெருமானை வழிபடு நெறியையும், சிவபெருமானுடைய ஏவல்வழி ஒழுகும் பசு(உயி்ர்)க் களாகிய தேவர்களை வழிபடும் நெறியையும், அறிவிக்கும் பொது நூல் வேதம், சிவபெருமானை வழிபடு நெறியையே விரித்து அறிவிக்கும் சிறப்பு நூல் சிவாகமம்.சிவபெருமானுடைய அடையாளங்கள் விபூதி, உத்திராட்சம், சிவபெருமானுடைய மூல மந்திரம் ஸ்ரீபஞ்சாட்சரம், சிவபெருமானை மிக மகிழ்விக்கும் தோத்திரங்கள் திருத்தேவாரமும், திருவாசகமும், சிவபெருமானை வழிபடும்இடங்கள் குரு, லிங்க,சங்கமம்.

குரு என்றது தீட்சை செய்யும்குருவையும், சைவ சமயத்தை பேதிக்கும் குருவையும், சைவ சமயநூலை படிப்பிக்க வைக்கும் குருவையும் குறிக்கும்
லிங்கம் என்றது (சிவ ஞானிகளுடைய பாவனையுற்று ) திருக்கோயிலுள்ளிருக்கும் திருவுருவங்களையும்
சங்கமம் என்றது சிவதீட்சை பெற்று விபூதி, உத்திராட்சம், தரித்து சிவாலயத் தொண்டு, சிவபூசை, சிவ சாத்திரம் , படித்தல், முதலியன செய்யும் சிவனடியார்களையும் குறிக்கும்

4) உங்களுக்கு மனித சரீரங் கிடைத்தது அம்மட்டோ ! சைவசமயம் வழங்கும்நேசத்தில் பிறக்கவும் கிடைத்தது, சிவபெருமான் உங்களுக்கு அநுக்கிரக்கும் பொருட்டு இங்கே இந்த கும்பத்திலும், இந்த மண்டலத்திலும், இந்த அக்னியிலும் நம்மாலே ஆவாகித்து பூசிக்கப்பட்டு உங்களுக்கு அண்ணியரானார் சிவபெருமான். உங்களுக்கு தீட்சை யாகிய அநுக்கிரகத்தை செய்யும் பொருட்டு இடங்கொண்டு மறைந்து நின்று செலுத்தும் குருவடிவம் நாம், நாம் இங்கே இப்போது உங்களுக்கு சமய தீட்சை செய்யபெற்றீர்கள்- இந்த சமயத்திலே பரிவேசித்தீர்கள், விபூதியை மந்திரத்தோடு தரிசிக்கப் பெற்றீர்கள், ஸ்ரீபட்சாட்சரத்தை உபதேசிக்க பெற்றீர்கள். குரு, லிங்க சங்கமங்களுக்கு தொண்டு செய்ய உரிமை பெற்றீர்கள். எல்லா வகையிலும் பசுபதியாகிய சிவபெருமானுக்கே அடிமை பூண்டு சிவனடியாராகி விட்டீர்கள்,

5) இனி மரண பரியந்தம் அநுட்டக்கலாகாத கருமங்கள் எவை அநுட்டிக்கத்தக்க கருமங்கள் எவை என்று நீங்கள் நன்றாக ஆராய்ந்துஅறிந்து கொள்ள வேண்டும் அநுட்டிக்கலாகாத கருமங்களை மரண பரியந்தம் விலக்கி விடல் வேண்டும். அநுட்டிக்கதக்க கருமங்களை மரணபரியந்தம் அநுட்டித்தல் வேண்டும்.

6) பெரும்பான்னைமையும எல்லா சமயத்தாரும்விலக்க தக்க பாதகங்கள் உயிர் கொலை, களவு, கள்ளுணல் மாமிசம்புசித்தல், பொய் , வியபிசாரம் முதலியனவாகும். இவைகளை நீங்கள் ஒருபோது செய்யலாகாது.

7) மாதா பிதா முதலிய பெரியோர்களை சிறிதும்அவமதிக்காது எந்நாளும் மிக்க மரியாதை செய்து பாதுகாத்து நடத்தல் வேண்டும். வறியவர்களையும், தொழில் செய்து சீவனஞ் செய்ய வல்லமை இல்லாதவர்களையும், உள்ள உணர் குருடர், முடுவர், வியாதியாளர், கிழவர், இவர்களுக்கு சமயம் வாய்க்கும் பொழுது உங்களாலே கூடிய உதவி செய்தல் வேண்டும். உங்களுக்கு தீமை செய்தவர்களுக்கும், நீங்கள் நன்மையே செய்தல் வேண்டும், இவை எல்லாம் சைவ சமயத்தாருக்கும் வேண்டப்படும்தருமங்கள்

8) சிவ நிந்தை, குருநிந்தை, சிவனடியார் நிந்தை, சிவசாத்திர நிந்தை, சிவத்திரவியத்தை குருத்திரவியத்தை உபயோகித்தல் முதலியன ஆதிபாதங்களாகிய சிவத்துரோகங்கள், இவைகளை நீங்கள் மறந்தும் செய்யாதொழிக!

(9) நியமமாக நாடோறும் அநுட்டானந் ெசய்து சிவபெருமானை தியானித்து ஸ்ரீபஞ்சாட்சரத்தில் இயன்ற உருச் செபித்து சிவபெருமானைத் தோத்திரஞ் செய்தல் வேண்டும். பெண்கள் வீட்டுக் விலக்கானால் மூன்று நாளும் ஸ்ரீபஞ்சாட்சரத்தை மனதினாலே சிந்தித்தல்வேண்டும். நாலாம் நாள் ஸ்நானம்செய்த பின் அநுட்டானம் பண்ணலாம்

10) விபூதி நெற்றியில் எப்போதும் தரித்துக் கொளல் வேண்டும் கீழே சிந்தா வண்ணம் அண்ணாந்து சிவ சிவ என்று சொல்லி வலக்கையின் நடுவிரல் மூன்றினாலும் தரித்தல் வேண்டும். விபூதி தரியாத முகம் சுடுகாட்டுக்கு சமம்.ஆதலால் விபூதி தரித்துக் கொண்டே புறத்தின் புற்படல் வேண்டும்.

11 தினந்தோறுமாவது,புண்ணிய காலங்களிலாவது திருக்கோயிலுக்கு போய் சிவலிங்க பெருமானை தரிசித்து வணங்கி,வலம் வந்து துதித்தல் வேண்டும், உங்களாலே கூடிய பொழுது திருக்கோயிலிலே சுகந்த தூபம் இடுங்கள். திருவிளக்கு ஏற்றுங்கள், திருவலகிடுங்கள், திருமெழுக்கிடுங்கள், திருநந்தவனம் அமையுங்கள், புஷ்மெடுத்து திருமாலை கட்டி கொடுங்கள். திருவீதியில் உள்ள புல்லை செதுக்குங்கள் இன்னும் பல வாரான திருக்கோயில் உழவாரப்பணி செய்யுங்கள்

12) குருவையும் சிவனடியார்களையும் கண்டால் உடனே இருக்கை விட்டு எழுந்து கும்பிட்டு நமஸ்காரம் செய்யுங்கள்.அவர்களுக்கு எதிரே இருக்கும் முறை அறிந்து இருங்கள், பேசும்முறை அறிந்து பேசுங்கள், அவர்களை ஏவரேனும் குற்றம் பேசினால் உடனே காதை பொத்திக் கொண்டு அவ்விடத்தைவிட்டு போய் விடுங்கள்.

13) சிவபெருமானி்ன் வேறாகாத திருவருள் என்கிற சிவசக்தியே பார்வதி தேவியார், ஆதலால் அவரை வழிபடுவது சிவபெருமானை வழிபடுவதே ஆகும். புண்ணியம் செய்தவர்களுக்கு அனுக்கிரகமும், பாவம் செய்தவர்களுக்கு நிக்கிரகமும் செய்யும் பொருட்டு சிவபெருமான் கருணை யினாலே கொண்டருளிய மூர்த்தங்கள் அவருடைய திருக்குமாரர்கள் எனப்படுகிற விநாயகர், சுப்பிரமணியர், வீரபத்திரர், பைரவர், ஆதலால் அவர்களையும் வழிபடுவதும் சிவபெருமானை வழிபட்டதாகும்.

 குருவினிடத்தும் சிவனடியார்களிடத்தும் சிவ சின்னம் சிவ மந்திரமும் சிவ நாமமும்,சிவ மகிமையும் சிவ சாத்திரமும், விளங்க காண்படுவர்களையும் சிவபெருமானாகவே பாவித்து வழிபடுவதே ஆகும். இப்படியன்றி உயிர் பலியேற்கும், துட்ட தேவதைகளையும், வீரன், மாடன், கருப்பன் முதலிய பிசாசுகளையும் வணங்கலாகாது. வணங்குவீர்களானால் சிவபெருமானுடைய சாபம் உங்களுக்கு தப்பாது கிடைக்கும்.

14) தேவார திருமுறை, திருவாசகம் , சிவபுராணத் திருமுறையும் மடியிலாவது, நிலத்திலாவது ஆசனத்திலாவது, சயனத்திலாவது வைக்கலாகாது, பீடத்திலாவது, பட்டு பரிவட்டத்திலாவது, காவிப்பரிவட்டத்திலாவது வைத்தல் வேண்டும்.

15) திருக்கோயலாவது திருமடத்திலாவது தேவார திருவாசகம் ஓதப்படும் பொழுதும் சைவப் பிரசங்கங்கள் சச்சங்கஙகள் செய்யப்படும்பொழுதும் சிவபுராணம் படிக்கப்படும் போதும், நீங்கள் போய் சிரத்தையோடு கேட்டல் வேண்டும்.

16) நீங்கள் ஒரோர் காலத்து அறிந்தேனும் அறியாதேனும் அநுட்டிக்கலாத கருமங்களை அநுட்டித்தாலும்,அநுட்டிக்கத்தக்க கருமங்களை அநுட்டியாதொழிந்தாலும், மனம் பதை பதைத்து குருவை அடைந்து விண்ணப்பம் செய்து குரு முன்னிலையில் பிராயசித்தமாவது, செய்த பாவத்தை போக்கும் வாயின செய்துகொள்ளல் வேண்டும்.

17) பெறுதற்கரிய மனித சரீரமும் சைவ சமய தேசம் பிறப்பும் சைவ சமய பிரவேசமும் பெற்ற நீங்கள் ( ஒரு சிவனடியாரே ) இவை வீண் போகா வண்ணம் நாம் இங்கே போதித்தபடி ஒழுகி சிவபெருமானுடைய திருவருளை பெற்று சிறப்புடன் வாழ்க... 

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்... 

Followers

பிள்ளையார் விரும்பும் 'மோதகம்' நைவேத்தியம் என்றால் என்ன❓

பிள்ளையார் விரும்பும் 'மோதகம்' நைவேத்தியம் மோதக் என்றால் உற்சாகம், மகிழ்ச்சி என்று பொருள். அகம் என்ற சொல்லுக்கு ‘வழங்கக்...