Showing posts with label #sakthi #hindu #india #tamilnadu. Show all posts
Showing posts with label #sakthi #hindu #india #tamilnadu. Show all posts

Tuesday, April 18, 2023

சிக்கமதுரகாளில்களைத் தீர்ப்பாள் சிறுவாச்சூர் அம்மன்!

சிக்கமதுரகாளில்களைத் தீர்ப்பாள் சிறுவாச்சூர்  அம்மன்!
வடக்கு நோக்கிய காளி என்றால் மிக மிக விசேஷமானவள், ஆவேசமானவளும் கூட. தீமைகளை வேரறுக்கும் உக்கிரமான சக்திகளே வடக்கு நோக்கி வீற்றிருக்கும் என்பது ஆன்மிகம் சொல்லும் ரகசியம். அப்படி சுமார் ஈராயிரம் ஆண்டுகளாக ஆவேசத்தோடு எழுந்தருளி நம்மை எல்லாம் காத்துக் கொண்டிருக்கும் மகா சக்தியே சிறுவாச்சூர் மதுரகாளி அம்மன்.

மதுரகாளி என்றால் அமிர்த வர்ஷிணியாக வரங்களை அள்ளித் தருபவள், மதுரமாக மனங்களை குளிர்விப்பவள் என்றும் சொல்லலாம். ஆனால் இங்கு மதுரையில் இருந்து புறப்பட்டு வந்த காளி என்பதால் இவள் மதுரகாளி என்றானாளாம். ஆம், மதுரையை கடும் கோபம் கொண்டு எரித்த கண்ணகியே இங்கு கோயில் கொண்டு இருக்கிறாள் என்று ஒரு தகவல் இந்த ஊர் மக்களால் கூறப்படுகிறது. மதுரையில் இருந்து நிராதரவாக இங்கு வந்த கண்ணகி ஆவேசம் அடங்கி, இந்த மக்களைக் காக்க சிறுவாச்சூரிலேயே தங்கி விட்டாள் என்று தலவரலாறு கூறுகின்றது.

அதேபோல் வேறொரு கதையும் இங்கு கூறப்படுகிறது. மதுரையில் இருந்து நகர்வலமாக வந்த பாண்டி காளி இந்த ஊரை அடைந்தாளாம். ஊரெங்கும் மயான அமைதி. ஒருவரும் வெளியே தலை காட்டவில்லை. என்ன ஆச்சர்யம் என்று வியந்த காளி, அங்கிருந்த செல்லியம்மன் கோயிலுக்குச் சென்று, தான் வந்திருப்பதைத் தெரிவித்து அங்கே தங்கி இருக்க இடம் கேட்டாளாம். அப்போது செல்லியம்மன் 'அம்மா காளி, நாங்களே இங்கு ஒரு மோசமான அசுரனுக்கு அஞ்சி அடைந்து கிடக்கிறோம். அவனுடைய அபரிமிதமான மந்திர சக்தி எங்கள் எல்லோரையும் கட்டுப்பட வைத்து பெரிதும் துயர் உண்டாக்கி வருகிறது. இதில் நீ வேறு இங்கு தங்கி அவதிப்பட வேண்டுமா, பேசாமல் கிளம்பி விடம்மா' என்று சொல்லி விட்டாள். ஆயிரம் ஆயிரம் அசுர சக்திகளைக் கொன்று எலும்பு மாலையாக அணிந்த மகாகாளி இதற்கெல்லாம் அஞ்சுவாளா!

ஆங்காரச் சிரிப்போடு அன்னை சொன்னாள், 'இதுதான் இந்த ஊர் அமைதியின் ரகசியமா, கவலையை விடு. இன்றோடு அந்த அசுர மந்திரவாதி ஒழிந்தான் பார்!' என்றாள். அதே நேரம் அந்த மந்திரவாதி வந்தான். அன்னையிடம் வம்பு பேசினான். அவ்வளவுதான் அன்னையின் சூலத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் மண்ணோடு மண்ணானான். மதுரையில் இருந்து வந்த மதுரகாளியின் மகிமை உணர்ந்து செல்லியம்மன் வணங்கினாள். மதுரகாளியை அந்த ஊரிலேயே தங்கி இருந்து அந்த மக்களை பாதுகாக்கச் சொன்னாள். அதன்படி மதுரகாளி சிறுவாச்சூர் காளி என்றானாள்.

நான்கு அடி உயரத்தில் வடக்கு திசை பார்த்து அட்சய கிண்ணம், உடுக்கை, பாசம், சூலம் தாங்கி இடது திருவடியை மடித்து வலது திருவடியை சிம்மத்தின் மீது ஊன்றி அருள் கோல வடிவில் சாந்தசொரூபியாக காளி இங்கு அரசாட்சி செய்கிறாள். ஆதிசங்கரரும், சதாசிவ பிரம்மேந்திரரும் வணங்கிய காளி இவள். வாரம் இரு நாள்கள் திறக்கப்படும் இந்த சந்நிதியில் உச்சிகால பூஜை மட்டுமே நடைபெறும். உக்கிரமான இந்த பூஜை நேரத்தில் இரண்டு கோடாங்கிகள் ஆலய மண்டபத்துக்கு வெளியே அருள் வந்து ஆடியபடி மதுரகாளி மற்றும் செல்லியம்மனின் கதையைப் பாட்டாகப் பாடுகிறார்கள். இவர்கள் பாடி முடித்த பிறகுதான் காளியம்மனுக்கு பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.

மதுரகாளியம்மன் கோயிலுக்கு எதிரே சோலை முத்தையா கோயிலும் உள்ளது. இவரே அம்மனின் காவல் அதிகாரி என்கிறார்கள். இங்கே வீரபத்திரர் சிலையும் உள்ளது. மதுரகாளியம்மன் கோயிலுக்கு எதிரே குழந்தைப்பேறு வேண்டி வருபவர்களுக்கு அருள்புரியும் சோலை கன்னியம்மன் கோயிலும் அமைந்திருக்கிறது. சித்திரை மாத அமாவாசையன்று நடக்கும் பூச்சொரிதல் விழா இங்கு விசேஷம். மதுரகாளி, செல்லியம்மன், பெரியசாமி போன்ற கடவுளர்களின் தேரோட்டமும் அப்போது நடைபெறும்.

இங்கு கூட்டம் கூட்டமாக பெண்கள் வந்து பல்வேறு நேர்த்திக்கடன்களைச் செய்கிறார்கள். மாவிளக்கு ஏற்றுவதும் பொங்கல் வைப்பதும் இங்கு விசேஷம். நோய்நொடியால் துன்பப்படுபவர்கள், தீராத கடன் கொண்டவர்கள், எதிரிகளால் துன்பப்படுபவர், தீய பழக்கங்களால் வீணானவர்கள் என துக்கப்படுபவர்கள் எல்லோரும் ஒன்று கூடி நன்மை பெரும் தலமாக சிறுவாச்சூர் இருந்து வருகிறது. அதுமட்டுமின்றி போக்கிடம் ஏதுமற்ற ஏழை எளிய மக்களின் காவல் தேவியாகவும் கருணை மாரியாகவும் இந்த காளி இருந்து வருகிறாள். இவளை மனம் குளிர வழிபட்டு வேண்டுவோர்களுக்கு அமிர்த விருட்சமாக இருந்து அருள் மழை பொழியும் தேவியாகவும் மதுரகாளி இருந்து வருகின்றாள்.

சென்னை திருச்சி வழியில் பெரம்பலூரிலிருந்து தெற்கே சுமார் 8 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது சிறுவாச்சூர். அந்த வழி செல்லும் எல்லா பேருந்துகளும் இவ்வூரில் நின்று செல்லும். திங்கள், வெள்ளிக்கிழமைகள், பௌர்ணமி மற்றும் அமாவாசை தினங்களில் மதுரகாளியம்மன் கோயில் திறந்திருக்கும்..

Monday, March 20, 2023

சமயபுரம் #மாரியம்மன்#பச்சைப்பட்டினி #விரதம் #தொடங்குகிறது..🪔


சமயபுரம் #மாரியம்மன்
#பச்சைப்பட்டினி #விரதம் #தொடங்குகிறது..🪔
வருடந்தோறும் மாசி மாத கடைசி ஞாயிறு முதல், பங்குனி மாதகடைசி ஞாயிறு வரை பக்தர்களுக்காக அம்மனே 28 நாட்கள் பச்சை பட்டினி விரதம் இருக்கிறார்.

தன்னை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு நோய்கள், தீவினைகள் அணுகாது, சகல சவுபாக்கியங்களும் கிடைக்க ஆண்டுதோறும் பச்சைப்பட்டினி விரதம் இருக்கிறார் சமயபுரம் மாரியம்மன். மாசி மாத கடைசி ஞாயிறு முதல் பங்குனி மாத கடைசி ஞாயிறு வரை 28 நாட்கள் பச்சை பட்டினி விரதம் இருப்பது சமயபுரம் மாரியம்மன் கோவிலின் தனிச்சிறப்பாகும். மார்ச் 12ஆம் தேதி பச்சைப்பட்டினி விரதத்தை தொடங்குகிறார் சமயபுரம் மாரியம்மன்.

சமயபுரம் மாரியம்மனை வணங்கினால் சங்கடங்கள் போகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. ஒட்டுமொத்த உலகத்தில் உள்ள அத்தனை மாரியம்மன் கோயில்களுக்கும் தலைமை பீடமானதுதான் சமயபுரம் ஆகும். சக்தி தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது இந்த தலம்.

சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி பிறமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வார்கள். வருடந்தோறும் மாசி மாத கடைசி ஞாயிறு முதல், பங்குனி மாதகடைசி ஞாயிறு வரை பக்தர்களுக்காக அம்மனே 28 நாட்கள் பச்சை பட்டினி விரதம் இருப்பது இந்த கோவிலின் தனிச்சிறப்புஆகும். இந்த 28 நாட்களில் இக்கோவிலின் அம்மனுக்கு தளிகை, நைவேத்தியம் கிடையாது. துள்ளுமாவும், நீர்மோர், கரும்பு, பானகம் மற்றும் இளநீர் மட்டுமே நைவேத்தியமாக படைக்கப்படுகிறது.

#ஸ்ரீரங்கநாதன் #தங்கை #சமயபுரத்தாள்:

ஸ்ரீரங்கநாதரின் தங்கை சமயபுரம் மாரியம்மன். அண்ணன் ஸ்ரீரங்நாதரைப் போன்றே சுதையினால் ஆன சுயம்பு வடிவமாக பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறாள். தட்சன் யாகத்துக்குச்சென்ற தாட்சாயணியை தூக்கி சிவபெருமான் ருத்ரதாண்டவம் ஆடியபோது அம்மனின் திருக்கண் இப்பகுதியில் விழுந்ததால் இந்த திருத்தலத்திற்கு கண்ணனூர் என்ற பெயர் புராணகாலம் தொட்டே இருந்து வருகிறது. மிகத்தொன்மையான உற்சவ அம்மனின் திருமேனியில் இன்றும் ஆயிரம் கண்கள் உள்ளன. இது, இத்தலத்தின் பெருமையை விளக்குவதாக அமைந்துள்ளது.

இக்கோவிலில் எழுந்தருளியுள்ள மகாமாரியம்மன் மிகப்பெரிய சுயம்பு திருவுருவமாக, விக்கிரசிம்மாசனத்தில் ஆயிரம் கோடி சூரிய பிரகாசத்துடன் தங்கதிருமுடியுடன் குங்குமநிற மேனியில், நெற்றியில் வைரபட்டை ஒளிவீச, வைரகம்மல்களும், வைரமூக்குத்தியும், சூரிய, சந்திரனைபோல் ஜொலித்து, கண்களில் அருளொளிபாவித்து, அன்னைக்கு அன்னையாய், ஆதிமுதல் ஆதாரசக்தியாய் அருள்பாலிக்கிறார்.

#நவகிரக #தோஷங்கள் #நீங்கும்
அம்மனின் சுயம்பு திருமேனியில் நவக்கிரக ஆதிக்கத்தை உள்ளடக்கி நவக்கிரகங்களை நவசர்ப்பங்களாக தரித்து அருள்பாலிப்பதால் அம்மனை தரிசனம் செய்வதன் மூலம் நவக்கிரக தோஷம் நீங்கும் என்பது ஐதீகம். இக்கோவிலில் இருக்கும் அம்மனை அமாவாசை, பவுர்ணமி மற்றும் கிரகண காலங்களில் வழிபட்டால் உச்ச பலன் கிடைக்கும். இத்தலத்தில் வழிபட்டால் ராகு, கேது தோஷம் நிவர்த்தியாகும் என்பதற்கு இக்கோவிலின் மேற்கூரையில் சிற்ப சான்றும் உள்ளது. 27 நட்சத்திரங்களின் ஆதிக்கங்களையும் தன்னுள் அடக்கி 27 எந்திரங்களாக திருமேனி பிரதிஷ்டையில் மகா மாரியம்மன் அருள்பாலிப்பது தனிப்பெரும் சிறப்பு அம்சமாகும். மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளின் அதிபதியாக அம்மன் ஆட்சி புரிகிறார் என்பதற்கும் சிற்பச்சான்றுகள் உள்ளன. இக்கோவிலில் அம்மன் அஷ்ட புஜங்களுடன் வீற்றிருப்பது வேறு எந்த மாரியம்மன் கோவிலிலும் காணக்கிடைக்காத அரிய காட்சியாகும். மேலும் மாரியம்மன் வடிவங்களில் ஆதி பீடம் சமயபுரம் ஆகும். எனவே தான் இக்கோவிலில் எழுந்தருளியுள்ள மகாமாரி பதம் மாறி சிவ பதத்தில் மிகப்பெரிய சுதை சுயம்பு திருவுருவமாக காட்சி அளிக்கிறார்.

பச்சைப்பட்டினி விரதம்

உலக நன்மைக்காகவும் இக்கோவிலில் தன்னை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு நோய்கள், தீவினைகள் அணுகாது, சகல சவுபாக்கியங்களும் கிடைக்க ஆண்டுதோறும் மாசி மாத கடைசி ஞாயிறு முதல் பங்குனி மாத கடைசி ஞாயிறு வரை அம்மனே பக்தர்களுக்காக 28 நாட்கள் பச்சை பட்டினி விரதம் இருப்பது இக்கோவிலின் தனிச்சிறப்பு அம்சமாகும். தேவர்களை இம்சித்த மகிஷாசூரனை புரட்டாசி மாதம் ஒன்பது நாட்கள் தவமிருந்து வதம் செய்தார் அன்னை ஆதிபராசக்தி. மகிஷா சூரனை வதம் செய்த பாவம் தீரவும், தன் கோபம் தணியவும் சோழ வள நாட்டின் தலைநகர் திருச்சிக்கு நேர் வடக்கே காவிரி வடகரையில் வேம்பு காட்டில் கவுமாரி என்று பெயர் பூண்டு சிவப்பு நிறம் கொண்டு மஞ்சள் ஆடை தரித்து, உடல் முழுவதும் வாசனை புஷ்பங்களால் மலை போல் குவித்து உண்ணா நோன்பிருந்து பல ஆண்டு காலம் தவம் செய்து அதன் பயனாக சாந்த சொரூபிணியாக சர்வரட்சகியாகி மாரியம்மன் என்ற பெயரில் அருள்பாலிக்கிறார்.

#பூச்சொரிதல் #விழா

இந்த புராண வரலாற்றின் அடிப்படையில் தான் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஆண்டு தோறும் மாசி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை முதல் பங்குனி மாதம் கடைசி ஞாயிறு வரை அம்பாள் பச்சை பட்டினி விரதம் இருந்து உலக ஜீவன்களை ரட்சித்து வருகிறார். 28 நாட்கள் பச்சை பட்டினி விரதம் இந்த ஆண்டு வரும் மார்ச் 12 ஆம் தேதி தொடங்குகிறது. இப்படி சிறப்புமிக்க இக்கோவிலின் பூச்சொரிதல் விழா வருகிற மார்ச் 12ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று தொடங்குகிறது. அன்று, #அதிகாலை #விக்னேஷ்வர #பூஜை, புண்யாகவாசனம், அனுக்ஞை, வாஸ்துசாந்தி, அங்குரார்ப்பணம் முடிந்து #காலை 6.30 #மணிக்கு மேல் 8 மணிக்குள் #மீனலக்கனத்தில் #அம்மனுக்கு காப்பு #கட்டுதலுடன் #பூச்சொரிதல் #விழா தொடங்குகிறது. சமயபுரம் மாரியம்மன் கோவில் சென்று தரிசிக்க இயலாதவர்கள் அவரவர் வீட்டில் இருந்து அம்பாளை மனதார நினைத்து 
28 நாட்களும் சமயபுரம் மாரியம்மன் (விஹ்கிரகமோ புகைப்படமோ)  விளக்கு ஏற்றி பலவகை பூக்கள் வைத்து  அலங்கரித்து நிவேதனம் செய்து வழிபடலாம்... அம்மாவின் ஆசிகளை பெற்றிட அனைவருக்கும் வாழ்த்துகள்...🪔🌾🌺🙏. 

🪷🍀 *எல்லோருக்கும் சுகம் உண்டாகட்டும் எல்லோருக்கும் அமைதி உண்டாகட்டும் எல்லோரும் எதிலும் முழுமை பெறட்டும் எல்லோருக்கும் எல்லா வளங்களும் உண்டாகட்டும்🍀🪷

Thursday, November 10, 2022

செவ்வாய் தோஷம் நீக்கும் செவ்வாடைக் காளி

_செவ்வாய் தோஷம் நீக்கும் செவ்வாடைக் காளி
ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருக்கும் பெண் களுக்கு திருமணம் தடைபடும் என்று சோதிடர்கள் சொல் வார்கள். அதுபோல, ராகு- கேது தோஷம் உள்ளவர்களுக்குக் குழந்தைப்பேறு தடைபடும். இதை 'நாக தோஷம். என்பார்கள்.

காளியை செவ்வாய் தோஷம், நாக தோஷம் உள்ள பெண்கள் செவ்வாடை அணிந்து, தட்டாங்குளம் வழிபட்டால், தோஷம் நீங்கும் என்றும், இக்கோயிலுக்கு வந்த பெண்களுக்கு தோஷம் நீங்கி திருமணம் நடந்திருக் கிறது, குழந்தை பிறந்திருக்கிறது என்றும் தெரிவிக்கிறார்கள்.

*தேவிபட்டணம்*

ராஜபாளையத்திலிருந்து தென்காசிசெல்லும் பாதையில் தேவிபட்டணம் இருக்கிறது. மகிசாசுரனை தேவி வதைத்த இடம் இது. எனவே, இதற்கு 'தேவிபட்டணம் என்று பெயர் ஏற்பட்டது.

தேவிபட்டணத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் புகழ்பெற்ற தட்டாங்குளம் காளியம்மன் கோயில் இருக்கிறது. இந்தக் காளியம்மனே ‘செவ்வாடைக் காரி' என்று சிறப்பு பெற்றவள்.

*தேடி வந்த அம்மன்*

காளியம்மன் இங்கே எழுந்தருளியது பற்றி ஒரு வரலாறுஉள்ளது.

இங்கேயிருந்த ஒரு ஜமீன்தாருக்கு வாரிசு இல்லை. இதனால் அவர் மிகவும் கவலைப்பட்டார். தேவிபட்டணம் சென்று தேவியை வணங்கி வந்தார்.

ஒருநாள் அருகிலுள்ள மலையில் பேய் மழை பெய்தது. ஆற்று வெள்ளம் கரைபுரண்டது. அந்த வெள்ளத்தில் ஒரு காளி சிலை அடித்து வரப்பட்டு கரை ஒதுங்கியது. ஊர் மக்கள் ஓடிச்சென்று ஜமீன்தாரிடம் சொன்னார்கள். ஜமீன்தார் விரைந்து வந்து சிலையை எடுத்தார். மொட்டை மலை அடிவாரத்தில் சிலையை நிறுவி கோயில் கட்டினார். நாள்தோறும் காளியை வழிபட்டார். அதன் பலனாக அவருக்கு வாரிசு பிறந்தது.

நின்ற கோலம்

நெல்லை மாவட்டத்திலேயே பெரிய தாமரைக்குளம் தேவிபட்டணம் கிராமத்தில் உள்ளது. ஏராளமான தாமரைகள் எக்காலத்திலும் பூத்துக் குலுங்கும். தட்டாங்குளத்துக்குக் கிழக்குப்புறம் வடக்கு நோக்கி காளியம்மன் நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார். மிகவும் பழமையான இச்சிலை 7 அடி உயரம் கொண்டது.

அசுரனை வதம் செய்யும் கோலத்தில் ஆங்காரமாய்க் காட்சியளிக்கும் காளிக்கு நான்கு கைகள் உள்ளன.

வலப்பக்கக் கையில் சூலாயுதம். ஆனந்தக் கூத்தாடும் முறையில் உடுக்கை. இடப்பக்கக் கையில் அகரனின் வெட்டப்பட்ட தலை. எலுமிச்சைப் பழம் ஏந்தியவண்ணம் ஒரு கையும், பாம்பினைப் பிடித்த ஒரு கையும், மற்ற இரண்டு கைகளில் மணிச்சட்டத்தினை ஏந்திப் பிடித்தவண்ணமும் சிலை உள்ளது.

சிங்க வாகனத்தில் சாந்த முகத் தோற்றத்தில் பராசக்தி. மாரியம்மன் சன்னதிக்கு மேற்கே கிழக்கு நோக்கி விநாயகர் தனிப்பீடத்தில் அமைக்கப்பட்டு-கோபுரம் கட்டப்பட்டுள் ளது. அதற்கருகே கையில் அரக்கனைத் தூக்கியவண்ணம் வனப்பேச்சியம்மன் 8 அடி உயரத்தில் பெரிய சிலை உள்ளது. ஏழு கன்னியர்கள் அமர்ந்த நிலையில் உள்ளனர்.

இவையனைத்தும் வரிசையாக தனிப்பிரகாரத்தில் கிழக்கு நோக்கி உள்ளன. அதற்கடுத்து திறந்த வெளியில் வரிசையாக ஆறு சக்திபீடங்கள் உள்ளன. உள் பிரகாரத்தில் அம்மனுக்கு முன்பு கீழ்ப்பக்கம் மேற்கு நோக்கிக் கையில் விளக்கு ஏந்தியவண்ணம் 'கமலாட்சி' என்ற பாட்டியின் சிலை உள்ளது. இந்தப் பாட்டி தன் வாழ்நாள் முழுதும் அம்மனுக்கு சேவை செய்வதே தன் பணி என இருந்தவர். வெளிப்பிர காரத்தில் கோயிலுக்குக் கீழ்ப்பக்கம் கையில் அரிவாளுடன் தலைமலை வீரப்பனும் கையில் வெட்டரிவாள், நாயோடு கூடி வேட்டைக்குப் போவதுபோல் கருப்பசாமி. தனி கட்டடத்தில் காளியம்மன் கோயிலுக்கு மேல்புறம் நாகப்புற்றுடன் கூடிய ஆவுடைப் பார்வதி சந்நிதி கிழக்கு நோக்கி உள்ளது.

அம்மனை வழிபடும் முறை

இக்கோயிலுக்கு வருபவர்கள் பேருந்து நிலையத்தில் இறங்கி கோயிலுக்கு நடந்து வரவேண்டும். தட்டாங்குளத்தில் நன்றாக மூழ்கிக் குளிக்க வேண்டும். செவ்வாடை அணிந்துகொள்ள வேண்டும். அம்மனை ஒருமுகமாக மனதில் நினைத்துக்கொண்டு முதலில் அரச மரத்தின் கீழ் எழுந்தருளியுள்ள ஆவுடைப் பார்வதியம்மனை வணங்க வேண்டும். புற்றுக்குப் பால், முட்டை வைத்து, சூடம் ஏற்றி வழிபட வேண்டும். கோயிலுக்குள் நுழையும் வாசல் முன்பு அம்மனைக்கண்டு, தலைகுனிந்து வணங்கி கோயிலுக்குள் செல்ல வேண்டும். கருவறையை ஒன்பது முறை சுற்றி வரவேண்டும். பின்பு காளியம்மனை தரிசிக்க வேண்டும். சூடம் ஏற்றுவதைத் தவிர்க்க வேண்டும். நெய், நல்லெண்ணெய், குங்குமம் மஞ்சக்காப்பு போன்றவற்றைக் கொண்டுவந்து பூசாரியிடம் கொடுத்து பூஜை செய்து வணங்க வேண்டும்.

தோஷம் நீங்கும்

காளியம்மன் கேரளா பகுதியிலிருந்து வந்ததால் சக்தி மிக அதிகம். கேட்டவருக்கு கேட்ட வரம் தரும் அன்னை யாகக் காளியம்மன் இருக்கிறாள். செவ்வாய்தோறும் நாகதோஷம் மற்றும் பல குறைகளால் திருமணம் தடைப் பட்டவர்கள் செவ்வாய்தோறும் இங்கு வரவேண்டும். செவ்வாடை உடுத்தி தட்டாங்குளத்தில் குளிக்க வேண்டும். ஈரத்துணியுடன் கோயிலை 9 முறை சுற்றி வரவேண்டும். மஞ்சள் அல்லது கருப்பு நிற கயிற்றினை விநாயகருக்கு எதிரே உள்ள அரச மரத்தில் கட்டிவிட்டு வணங்கவேண்டும். பிறக்கிற குழந்தை ஆண் என்றால் 'காளியப்பன்' என்றும், பெண் என்றால் 'காளியம்மாள்' என்றும் பெயர் சூட்டுவேன் என்று உறுதி சொல்ல வேண்டும்.

9 செவ்வாய் தொடர்ந்து இடைவிடாமல் இங்கு வந்து வணங்க வேண்டும். நிச்சயம் நினைத்த காரியம் வெற்றியாக
நிறைவேறும். குடும்பத்தில் கணவன்-மனைவிக்குள் பிரச்சினை, பொருளாதாரத் தடை, பில்லி, சூனியம், எல்லாவற்றுக்கும் தடைக்கற்கள், மருத்துவர்களால் கவனிக்க முடியாத நோய்கள், மற்றும் படித்து வேலையில்லாமல் அவதிப்படுவோர்க்கும் நல்ல பலன் கிடைக்கும். வெள்ளிக் கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் வந்து வழிபாடு செய்ய வேண்டும்.

நடைதிறப்பு

இக்கோயில் காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை திறந்திருக்கும். செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் 18 வகை யான நீராட்டுடன் மதியம் 12 மணிக்கு பூஜை நடத்தப்படும். பௌர்ணமி அன்று நள்ளிரவு 12 மணிக்கு சிறப்புப் பூஜை நடத்தப்படுகிறது.

ஆனி மாதத்தில் அனைத்து செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் இவ்வூரில் உள்ள அனைத்து சமூகத்தினரும் பொங்கல் வைத்து வழிபட்டு வருகின்றனர். சித்திரை பௌர்ணமி அன்று தட்டாங்குளத்தில் பெருமாள்சாமி நீராடுதல் நிகழ்ச்சி வெகு விமரிசையாகக் கொண்டாடப் படும். ராஜபாளையத்திலிருந்து இங்கு பேருந்துகள் வருகின்றன.

Followers

வியாக்ரபுரீஸ்வரர் திருப்பெரும்புலியூர், தஞ்சாவூர்

வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில்,  திருப்பெரும்புலியூர்,  தஞ்சாவூர் மாவட்டம்-613204 *மூலவர்: வியாக்ரபுரீஸ்வரர் *இறைவி:...