Showing posts with label #nanthi #sivan #prathasam #hindu #india #tamilnadu #nellikuppam. Show all posts
Showing posts with label #nanthi #sivan #prathasam #hindu #india #tamilnadu #nellikuppam. Show all posts

Saturday, November 11, 2023

நந்திகேஸ்வரருக்குக் காப்பரிசி ஏன்?

நந்திகேஸ்வரருக்குக் காப்பரிசி ஏன்?
குழந்தை இல்லாக் குறை நீங்குவதற்காக சிலாத முனிவர் என்பவர்,சிவபெருமானை நோக்கிக் கடுந்தவம் இருந்தார்.சிந்தை குவிந்த அவரது தவம்,அரனை அவர் முன்னால் கொண்டு வந்து நிறுத்தியது.

''சிலாதா!என்ன வேண்டும் கேள்!''என்றார் சிவபெருமான்.

''தெய்வமே...நீயே எனக்குப் பிள்ளையாக வர வேண்டும்!''சிலாதர்.

''என் அம்சமாக உனக்கு ஒரு பிள்ளை பிறக்கும்.

கவலையை விடு!''என்று அருள் புரிந்து மறைந்தார் சிவபெருமான்.இறைவனின் வாக்குப்படி சிலாதருக்கு ஓர் ஆண் குழந்தை அவதரித்தது.அந்தக் குழந்தையே நந்தி.

சிவத்தை நோக்கி தவத்தைச் செய்த நந்தி,

சிவபெருமானுடன் கயிலாயத்தில் இருக்கும் பேறுபெற்றார்.வாயிற்காவல் தொழிலைப் பெற்று,ஒரு கணத்துக்கு(சிவ கணங்களில் ஒரு பிரிவு)தலைவராகவும் சிவபெருமானால் நியமிக்கப்பட்டார்.

தேவர்களும் அசுரர்களும் ஆலகால விஷத்துக்கு பயந்து கயிலாயத்துக்கு வந்து சிவபெருமானிடம் முறையிட்ட போது,''பயப்படாதீர்கள்!'' என்று அபயம் அளித்த சிவபெருமான்,எதிரில் இருந்த நந்திகேஸ்வரனை அழைத்து, ''அந்த ஆலகால விஷத்தை இங்கே கொண்டு வா!'' என்றார்.

ஈசனை வணங்கி விடை பெற்ற நந்தி பகவான்,ஆலகால விஷத்தை நெருங்கினார்.அதன் வெம்மை மாறியது.அதை எடுத்துக் கொண்டு வந்து ஈஸ்வரனிடம் தந்தார்.ஈசன் அதை வாங்கி உண்டார்.

அருகில் இருந்த அம்பிகை,சிவபெருமானின் கழுத்தை மென்மையாகத் தொட்டதால்,விஷம் அங்கேயே நின்று விட்டது.இதைப் பார்த்த நந்தி பகவான் கேலியாகச் சிரித்தார். 

'' இந்த விஷம் அவ்வளவு கடுமையானதா?சர்வ சாதாரணமாக நான் எடுத்து வந்த விஷமான இதற்கு,கொல்லும் அளவுக்குச் சக்தி இருக்கிறதா என்ன?'' என எகத்தாளமாகப் பேசினார்.

உடனே சிவபெருமான், ''நந்தி! இங்கு வா!''என்று அழைத்து,விஷத்தை வாங்கி உண்ட தன் கையை விரித்து,''இதை முகர்ந்து பார்!'' என்றார்.நந்தி பகவான் முகர்ந்தார்.அதே விநாடியில் சுயநினைவை இழந்தார்.

கீழே விழுந்தார்;

எழுந்தார்;

அழுதார்;

சிரித்தார்.

பித்துப் பிடித்தவர் போலப் பலவிதமான சேஷ்டைகளைச் செய்து சுற்றித் திரிந்தார்.

உலகின் அனைத்து ஜீவராசிகளுக்கும் தாயான உமாதேவி அதைக் கண்டு வருந்தினாள். ''ஸ்வாமி!!நந்திக்கு இப்படிப்பட்ட தண்டனை தரலாமா?போதும்..மன்னித்து விடுங்கள்!'' என வேண்டினாள்.

''உமாதேவி!நந்தி ஆணவத்துடன் பேசியதால் அவனை அடக்கவே அவ்வாறு செய்தோம்.விஷத்தின் வாசனையை முகர்ந்ததற்கே இந்தப் பாடுபடுகிறான் என்றால்,அதை உண்டால் என்ன பாடுபட்டிருப்பான்?அதை அவனுக்குக் காட்டவே இவ்வாறு செய்தோம்.அரிசியைப் பொடி செய்து வெல்லத்துடன் சேர்த்துக் கொடு.அவன் தெளிவு பெற்றுப் பழைய நிலையை அடைவான்!'' என்றார் சிவபெருமான்.

அவரது சொற்படியே செய்தாள் அம்பிகை.அதை உண்ட நந்தி பழையபடி சுயநிலையை அடைந்தார்.

அன்று முதல் பிரதோஷ நாளன்று,நந்திக்குக் காப்பரிசி நைவேத்தியம் செய்யப்படுகிறது.

ஓம் நமசிவாய...!

Followers

பிள்ளையார் விரும்பும் 'மோதகம்' நைவேத்தியம் என்றால் என்ன❓

பிள்ளையார் விரும்பும் 'மோதகம்' நைவேத்தியம் மோதக் என்றால் உற்சாகம், மகிழ்ச்சி என்று பொருள். அகம் என்ற சொல்லுக்கு ‘வழங்கக்...