Showing posts with label #Subramanya Swamy Temple #Murugan Temple #Hindu temple #Valliyur #Tiruchendur #Tamil Nadu #India. Show all posts
Showing posts with label #Subramanya Swamy Temple #Murugan Temple #Hindu temple #Valliyur #Tiruchendur #Tamil Nadu #India. Show all posts

Monday, December 15, 2025

வள்ளியூர் சுப்பிரமணிய சுவாமி ஆலயம்

முருகபெருமான் ஆலயங்கள் : வள்ளியூர் சுப்பிரமணிய சுவாமி ஆலயம்
தென்னகத்தில் மிக மிக பழமையான முருகபெருமான் ஆலயங்கள் உண்டு, காலத்தால் மூத்த அந்த ஆலயங்களின் தொன்மமும் வரலாறும் சிறப்பும் அபூர்வமானது

அப்படி திருசெந்தூர் ஆலயத்துக்கு நிகரான ஒரு ஆலயம் தெற்கே உண்டு

பாரத தென்முனை சூட்சுமமான பல ஆலயங்களை கொண்டது , அங்கு ஒவ்வொரு ஆலயத்துக்கும் ஒரு வ்ரலாறும் தனிபட்ட அருளும் உண்டு

விசுவாமித்திர மகரிஷிக்கு உலகில் அமைந்துள்ள ஒரே ஒரு ஆலயம் ராதாபுரம் பக்கம்தான் உண்டு, ராமர்கோவில் எழும் நேரம் அதை கண்டுகொள்ள யாருமில்லை

அங்கேதான் தாடகை வதமும் விஸ்மாத்திரரின் யாகமும் நடந்தது, பலா அதிபலா எனும் மந்திரங்கள் ராமனுக்கு உபதேசிக்கபட்ட இடம் அதுதான்

அப்படி பல அதிசயிக்கதக்க ஆலயங்கள் தெற்கேதான் உண்டு
ஆம், நெல்லை மாவட்டத்தின் வள்ளியூர் பகுதிகள் தொன்மையான அடையாளம் கொண்டவை ராமாயண தாடகை வதம் நடத்தியதின் சாட்சியாக விசுவாமித்திரர் ஆலயமும், அனுமன் மகேந்திரகிரியில் இருந்து தாவிய அடையாளமாக அனுமன் நதியாகவும் இன்னும் பலவும் அங்கு நிலைத்திருக்கின்றது

அவ்வகையில் அந்த வள்ளியூர் சுப்பிரமணிய சுவாமி ஆலயமும் பெரும் அடையாளம்

ஒரு ஊருக்கு அழகு சேர்ப்பதில் முக்கியமானவை ஆலயம், ஆறு, குன்று என்பார்கள். இவை இருக்கும் ஊர் இயல்பிலே அழகாகிவிடும்

அவ்வகையில் வள்ளியூருக்கு அந்த அழகு உண்டு, அந்த குன்று கிரவுஞ்ச மலையினை முருகன் தகர்த்தபொழுது விழுந்த துண்டுகளில் ஒன்று என்கின்றது புராணம்

அந்த குன்றின் குகையில்தான் காலத்தால் மிக பழமையான முருகபெருமான் ஆலயம் அமைந்திருக்கின்றது, திருசெந்தூர் ஆலயம் போலவே மகா பழமையான ஆலயம் அந்த முருகன் ஆலயம்

"பூஜிப்போம் தம் நேத்திராடனப்
பீடையோடு வைரியர் தாம்
வைத்த வைப்பகலக் கண்டு நின்றோங்
கேளீர் - வள்ளியூர் நின்றானை வள்ளி
மணாளனைத் தொழுதக்கால் கிட்டும்பேரு
பெரிது பெரிதே’’  -என்கிறார், குதம்பைச் சித்தர். 
அருகிருக்கும் பாபநாசம் மலையில் நிலை கொண்ட அகத்தியர் இங்கு வந்ததாகவும், இங்கு ஓம் வடிவில் இந்த ஆலயம் அமைய வழி செய்ததாகவும் ஒரு குறிப்பு உண்டு, இந்த ஆலயம் அருள் நிறைந்தது என்பதை தன் பாட்டில் சொல்கின்றார்  வன்மீகர் என்னும் சித்தர்.

‘‘குடமுனி கொண்ட இல் இதிலுறை
யீசனாஞ் செயண்டீசனை தொழுத
பின் வள்ளி மணாளனை
சரணஞ் செய்தார் அருணகுமரனைக்
கண்ட வறியனொப்பே’’

என்கின்றார் வன்மிகீயார்

‘‘வாரிசு வேண்டி வந்தார் பின்னே
ஏக்கமது நீங்கி புனர் தரிசனம்
செய்து புண்ணியமது பெறுவாரே -
ஏவலுஞ் சூனியமுமேந்தி நைந்து
நின்றார் தீவினையறுந்து இன்ப
மென துள்ளி நின்று வள்ளி
மணாளனை தொழ சத்யமிது தப்பாது’’

என அத்தல பெருமையினை உரைக்கின்றார் சட்டை முனி சித்தர்.

அந்த குகை கோவிலை இடைக்காடர் இன்னும் அழுத்தி சொல்கின்றார்

‘‘பூர்ண கிரியை குடைந்து நின்ற
வள்ளி மணாளரை தொழுதக்கால்
வாடா வனப்பும் மெருமேற
தேடா  திரவியமுங் கூடுங் கண்டோமே’’

-என்கிறார். பூரணகிரி மலையைக் குடைந்து  உருவான இந்த சுப்பிரமணிய சுவாமி-வள்ளியம்மை தம்மை சிரத்தையுடன் தொழுவோருக்கு அழகு கூ டும். மேனி பளபளக்கும். செல்வம் தானே சேரும் என்று கூத்தாடுகின்றார், இடைக்காடர்.

‘‘அருத்தகுடி யமர் மகேந்திரன்
தம்மோடு வியாழனையுங்
கண்டு தொழுவார் வைரியர்
பிடியிலிருந்து விடுபடுவர் நிரந்தரமே’’ என கருவூர் சித்தர் சொல்வது இந்த ஆலயத்துக்கும் பொருந்தும்

‘‘குடத்துதித்தான் கொண்ட வேலால்
கண்ட பொய்கைபுக்கு நன்னீராடி
வள்ளியூர் மணாளன் கிரிதமை
விருச்சிக மதியொளி நாளதனில்
வலஞ்செய்தே நிற்க - அருணகிரி
யானும்  அஃதொப்பவே
நிற்ப தவசு பலம் ஒதற்கரிதே’’

என மனமுருகி பாடும் அருணகிரி நாதர் 

இப்படி சித்தரும் முருகன் அடியார்களும் மிக மனம் உருகி உணர்ந்து பாடிய தலம் அந்த வள்ளியூர் முருகபெருமான் தலம் காலத்தால் அது முந்தையது

எல்லா பாண்டிய மன்னர்கள்ம் அந்த ஆலயத்தை அவ்வளவு கொண்டாடினார்கள், காலம் காலமாக கொண்டாடினார்கள் பின்னாளில் கூட அது வள்ளியூரில் தங்கிய பாண்டிய மன்னர்களாலே காக்கபட்டது
அதன் வரலாறும் தொன்மையும் மிக மிக பழமையானது

சூரசம்ஹாரம் முடிந்து சிவனை வழிபட்டு முருகனுக்கு தெய்வானையினை மணம் முடித்து கொடுக்க முன்வருகின்றது தேவலோக தரப்பு

அப்படியே திருமணமும் நடக்கின்றது பின் முருகன் கயிலைக்குச் சென்றார். அங்கே, நாரதர் வள்ளியின் அழகினை, பெருமைகளையும் சொல்லி, அவள் குறமகளானாலும், அவனுக்காகவே காத்திருப்பவள் என்றும் கூறி அவளைத் திருமணம் செய்து கொள்ள வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தினார்.

முருகப் பெருமானும் தகுந்த காலம் வந்ததையறிந்து வள்ளியைத் தேடி வந்தார். தினைப்புனைக் காவலில் இருந்த வள்ளிமுன் வேடனாய், வேங்கை மரமாய், விருத்தனாய்த் தோன்றி அவளுடைய உள்ளத்தில் ஆவலைத் தூண்டியவனாய் இறுதியில் அண்ணன் கணபதியின் துணையுடன் அவளை அரவணைத்துக் கொண்டார்.

பின் உண்மையறியவே, வள்ளியின் தந்தையும் வேடுவர் குல அரசனுமான நம்பிராஜனின் போர்ப்படை முருகப் பெருமானையும், வள்ளியையும் துரத்திச் சென்றனர். இறுதியில் நடந்த போரில் வெற்றி வேல்முருகனுக்கே. பிறகு, உண்மையுணர்ந்த நம்பிராஜன், திருக்குறுங்குடி பக்கமாக உள்ள வள்ளியூரில், தன் மகள் வள்ளிக்கும், முருகனுக்கும் தானே முன்னின்று திருமணம் நடத்தி வைத்தான் என்கிறது புராணம்.

வள்ளி பிறந்தது அந்த பகுதியாக இருக்கலாம், காரணம் அதனை அடுத்த மலை குறத்திமலை என்றுதான் இன்றும் அழைக்கபடுகின்றது

வள்ளியினை முருகன் அந்த பகுதியில் தான் மணந்திருக்க வேண்டும், ஏகபட்ட அடையாளங்கள் அங்கு சாட்சியாய் நிற்கின்றது

திருப்பதி திருகாளத்தி என அடுத்தது பண்டைய சைவ வைவண தலங்கள் உள்ளது போல நம்பிமலை நம்பியாழ்வார் ஆலயமும் வள்ளியூர் முருகபெருமான் ஆலயமும் அமைந்திருப்பது பன்னெடுங்கால தொடர்ச்சி
நம்பிமலை வள்ளியினை வளர்த்த நம்பியின் பெயரால் அழைக்கபட்டிருக்கலாம்

ஆம் வள்ளியின் திருமணம் திருசெந்தூரை அடுத்திருக்கும் வள்ளியூரில்தான் நடந்தது என்பதும் புராண செய்தி
இன்றும் வள்ளியூர் கோவில் குகையில் குமரப் பெருமான் சுந்தரவல்லி, ஆனந்தவல்லியுடன் அருளாட்சி செய்கிறார். வள்ளித் திருமணக் காட்சி, கந்த சஷ்டிப் பெருவிழா முடிந்தபின், சூரசம்ஹார வதம் முடிந்த ஆறாவது அல்லது ஏழாம் நாளில் நடைபெற்று வருகிறது. 

வள்ளியூர் கோவில் பாண்டிய மன்னர்களால் கட்டபட்டது அருணகிரி நாதர் பாட வரும் காலத்துக்கே முந்தையது

அப்பக்கம் திருசெந்தூர், வள்ளியூர், சித்தூர் ஆகிய ஊர்களின் ஆலயங்கள் பழமையானவை, இதில் சித்தூர் சபரிமலைவரை தொடர்புடைய ஆலயம்

மதுரை உக்கிரம பாண்டியன் காலத்திலே வள்ளியூர் ஆலயம் சிறப்புற இருந்திருக்கின்றது

அவன் வாரிசு அள்ளியுண்ட ராஜா என்வர் வள்ளியூர் மலைக் குகையில் முருகப் பெருமான் குகைநாதனாகக் காட்சியளிப்பதைக் கண்டார். பின் குகையைச் சார்ந்து முன் மண்டபம் அமைத்து வள்ளியூரையும், முருகப் பெருமான் கோயிலையும் எல்லோரும் அறியும்படி செய்தார்.

ஒரு இடைசிறுவன் வேடத்தில் முருகனே அவனை அழைத்து வந்ததாகவும் சில செய்திகள் உண்டு

 அச்சிறுவனுடைய சிற்பம், அதே மேய்க்கும் நிலையில் முருகப் பெருமான் சந்நதிக்குத் தென்புறம் உள்ள மலை தாங்கி சாஸ்தாவின் தென்புற மலைக் குகைப் பாறைச் சுவரில் செதுக்கப்பட்டிருப்பதை இன்றும் காணலாம். 

திருவிளக்கேந்திய நிலையில் உற்சவ விக்கிரகங்கள் வைக்கப்பட்டிருக்கும் சப்பரத்தின் முன் நிற்கும் திருவுருவச் சிலை முதன் முதலில் இந்த குகைக் கோயிலுக்கு முன் மண்டபம் கட்டிய கள்ளியுண்ட ராஜாவினதாக இருக்கலாம் .

கந்த சஷ்டிப் பெருவிழாவில் வீரபாகு மூர்த்திக்கு முதன்மையும், முக்கியத்துவமும் அளிப்பது வள்ளியூரில் மட்டுமே. 

சஷ்டி விழாவில் சூரசம்ஹார வடிவம் அமைக்கப் பெற்று, வதம் முடிந்தபின் அது முழுவதும் எரிக்கப்படுகிறது. இந்நிகழ்ச்சி மாயை சுட்டெரிக்கப்பட்டால் உண்மை ஞானம் பெற வழியுண்டு என்பதைத் தெளிவாக்குகிறது.

குகைக் கோயில் என்பதனால் குன்றுக்கு மேலாக கர்ப்பக் கிரக விமானம் அமைக்கப் பட்டிருப்பது 

இக்கோயிலின் தனிச் சிறப்பு. கோயிலுக்கு முன்னே உள்ள சரவணப் பொய்கை நீர் நிறைந்து, கோயிலுக்கு மட்டுமின்றி ஊருக்கும் பல வகைகளில் பயன்படுகிறது. கிரி பிரதட்சணமாகவும் கோயிலை வலம் வரலாம்.
முருக பக்தர்கள் திருசெந்தூர் செல்லும் பொழுது வள்ளியூர் முருகனை தவறவிடுதல் கூடாது கட்டாயம் செல்ல வேண்டும்

இதன் அருகில்தான் சித்தூர் சாஸ்தா ஆலயமும் அமைந்துள்ளது

நெடுங்காலத்துக்கு முன்பு திருசெந்தூர் கோவிலுக்கு கொடிமரம் வைக்க மரங்களை மேற்கே நம்ம்பியாறு புறப்படும் இடத்தில் வெட்டினார்கள், அப்பொழுது மிக நல்லமரம் நம்பியாற்றில் விழுந்து இந்த ஆலயம் பக்கம் ஒதுங்கியது

அதை யாராலும் அசைக்க முடியவில்லை, முடிவில் பிரசன்னம் பார்த்ததில் தான் காலத்தால் மூத்த தெய்வமென்றும் தனக்கு திருவிழா முடிந்த பின்பே திருசெந்தூரில் கொடியேற வேண்டும் எனவும் சாஸ்தா உத்தரவு வந்தது

அப்படியே தேர் செய்து திருவிழா நடத்தினார்களாம், இன்றும் தேர் உள்ள ஒரே ஒரு சாஸ்தா கோவில் அதுதான்

திருசெந்தூர் முருகன் போல சாஸ்தா கையில் வேலும் கொடுத்தார்கள், வேல் கொண்ட ஒரே சாஸ்தா அவர்தான்

இன்று கால மாறுதலில் இங்கு மாசியிலே அதாவது திருசெந்தூர் ஆலய மாசி திருவிழா தொடக்கம் அன்றே கொடியேற்றி மரியாதை செய்வார்கள், ஒருமாதம் கழிந்து பங்குனி உத்திரம் அன்று திருவிழா நடந்தாலும் சாஸ்திரபடி திருசெந்தூர் விழாவுக்கு முந்தைய மரியாதை இங்கேதான் கொடுக்கபடும்

அப்படிபட்ட மிக பெரும் வரலாறுகளும் சக்தியும் கொண்ட ஆலயம் அது,

ஒரு கோணத்தில் சிந்தித்தால் சித்தூர் ஆலயம், வள்ளியூர் ஆலயம், திருசெந்தூர் ஆலயம் சபரிமலை ஆலயம் என எல்லாவற்றுக்கும் ஒரு தொடர்பு மறைந்திருப்பது தெரியும்

அதை விளக்கும் அளவு நமக்கு ஞானமில்லை , அறிவுமில்லை, சொல்வாருமில்லை, அது இன்னமும் மறைந்தே கிடக்கின்றது

காலம் ஒருநாள் அதை காட்டும, அதுவரை எல்லாம் மறைந்திருக்கட்டும், இறைசித்தம் அதுவாகவும் இருக்கலாம்

முருக பக்தர்கள் என்றல்ல சபரிமலை செல்லும் பக்தர்களும் இத்தலங்களுக்கு சென்றுவிட்டு சபரிமலை அய்யனை காண சென்றால் முழு பலனும் கிடைக்கும் என்பதால் அவர்களும் தவறாமல் செல்வார்கள்
திருச்செந்தூர் செல்பவர்கள் தவறாமல்  அங்கு செல்லுங்கள், திருச்செந்தூரில் முருகனை வணங்கி இங்கும் வணங்கினால்தான் முழு பலனும் கிடைக்கும்

நாயக்க மன்னர்கள் காலம் வரை மங்கம்மாள் சாலை இந்த ஆலயத்தையும் திருசெந்தூர் ஆலயத்தையும் பல வகையில் இணைத்திருந்தன, பின்னாளில் நவாப் மற்றும்  பிரிட்டிஷார் காலத்தில்தான் எல்லாம் குழம்பிற்று
முருகபெருமான் எங்கு குடிகொண்டாலும் அவர் ஆலயத்தில் சித்தர்கள் இருப்பார்கள், சித்த பீடமும் சமாதியும் நிலைத்திருக்கும்

சித்தர்கள் சமாதியோ ஜீவசமாதியோ இல்லா முருகன் ஆலயங்கள் பெரும்பாலும் இல்லை

பழனிக்கு போகர், மருதமலையில் பாம்பாட்டி சித்தர், திருசெந்தூரில் ஆலயம் கட்டிய மூன்று சித்தர்கள் என முருகபெருமான் சித்தரோடுதான் அமர்ந்திருப்பார்

அப்படி வள்ளியூரிலும் பரதேசி சித்தர் சமாதி, வேலான்டி சித்தர் சமாதி என இருபெரும் சித்தர்கள் உண்டு
இருவரும் முருகபெருமான்மேல் பக்திகொண்டு தவமிருந்து சித்தநிலை அடைந்தவர்கள், பரதேசி சித்தர் அக்கால் சூழலால் ஆலயத்துக்குள் நுழையாமல் வெளியில் இருந்தே தரிசித்து பெரும் அருள் அடைந்த சித்தராகி ஏகபட்ட சித்துக்களை முருகபெருமான் அருளால் செய்து அங்கேயே சமாதியானார்

வேலாண்டி சித்தர் காலத்தால் பிந்தையவர், பெரும் திருபணிகளை தனிமனிதனாக தன் வாழ்வையே அர்பணித்த்து செய்தவர், ஏகபட்ட அதிசயங்களை முருகபெருமான் அருளால் செய்தவர்
இந்த இருவரின் சமாதிகள் ஆலயத்தின் தெற்குபக்கம் உண்டு

திருசெந்தூருக்கு செல்வோர் தங்கள் முழு பலனையும் பெற இந்த ஆலயத்துக்கு வருவது மரபாயிருந்தது அதில் உன்மையும் இருந்தது

அந்த மரபுகள் மீட்டெடுக்கபடவேண்டும்

தெற்கே செல்வோர் மறக்காமல் இந்த முருகனை வழிபட்டு அவரின் அடியாராக வாழ்ந்த அந்த சித்தர்களையும் வழிபட்டு வந்தால் உங்கள் வாழ்விலும் அற்புதம் நடக்கும், வாழ்வே மாறும் இது சத்தியம்

இன்று அந்த வள்ளியூர் முருகபெருமான் கோவிலில் கார்த்திகை தெப்பதிருவிழா நடைபெறும், பிரமாண்டமான அந்த தெப்பகுளத்தில் முருகபெருமான் பக்தர்களுக்கு அருள் வழங்கி வரும் பண்டிகை நாள் இது

தெப்பமேறி வரும் அந்த தெய்வமகன் எல்லாரையும் ஆசீர்வதிக்கட்டும், எல்லா மக்களுக்கும் எல்லா வரத்தையும் அந்த பரம்பொருள் அள்ளி அள்ளி தரட்டும்.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 


Followers

பிள்ளையார் விரும்பும் 'மோதகம்' நைவேத்தியம் என்றால் என்ன❓

பிள்ளையார் விரும்பும் 'மோதகம்' நைவேத்தியம் மோதக் என்றால் உற்சாகம், மகிழ்ச்சி என்று பொருள். அகம் என்ற சொல்லுக்கு ‘வழங்கக்...