Showing posts with label # Nataraja #sivan #hindu #india #tamilnadu #nellikuppam. Show all posts
Showing posts with label # Nataraja #sivan #hindu #india #tamilnadu #nellikuppam. Show all posts

Monday, June 26, 2023

உலகிலேயே அழகான நடராஜர் வீற்றிருக்கும் கோனேரிராஜபுரம்.

🛞புண்ணியம் செய்தவர் மட்டுமே உலகிலேயே அழகு ததும்பி வழியும் இந்த நடராஜரை தரிசித்து மகிழும் பாக்கியம் பெற முடியும்…!
உலகிலேயே அழகான நடராஜர் வீற்றிருக்கும் கோனேரிராஜபுரம்.

அந்த சிற்பி, ஆறாவது முறையாக நடராஜப் பெருமாள் திருவுருவத்திற்கு அச்சு செய்து பஞ்ச உலோகங்களை தனியே காய்ச்சி வார்த்துக் கொண்டிருந்தான்.

பெரிய திருவாச்சியை தனியே வார்த்தாகி விட்டது.
சிவனுக்குரிய சடையை, அந்த சடையில் இருக்கும் நாகத்தை கங்கை உருவத்தை வார்த்தாகிவிட்டது.

சிவகாமிக்கும், நடராஜருக்கும் தனித்தனியே பீடம் செய்து முடித்தாகி விட்டது. இப்போது நடராஜரையும், சிவகாமியையும் வார்க்க வேண்டும்.

மழு தொலைவே கொதித்துக் கொண்டிருக்கிறது. அவன் அடுப்பைத் துருத்தியால் வேகமாக ஊதி உலையின் தீவிரத்தை அதிகப்படுத்தி மழுவைக் கொதிக்க வைத்துக் கொண்டிருந்தான். மழு தயார் நிலையில் இருந்தது.

திரும்பி மனைவியைப் பார்த்து துவங்கி விடட்டுமா? என்று கேட்டான். மனைவி சரியென்று தலையசைத்தாள்.

படுக்க வைக்கப்பட்ட பெரிய களிமண் அச்சுக்கு முன் கைகூப்பி நின்றான்.

 இது ஆறாவது முறை. என்ன தவறு செய்தேன் என்று தெரியவில்லை. ஒவ்வொரு முறையும் ஏதேனும் ஒரு பின்னம் நடந்து கொண்டிருக்கிறது.

உன்னை நான் உருவமாகச் செய்கிறேன் என்ற கர்வம் எனக்கில்லை.

ஈசனே, நீயே வந்து குடி கொண்டாலொழிய உன் உருவத்தை ஒரு நாளும் செய்ய முடியாது.எங்கேனும் ஒரு கர்வத்தில் நான் இருப்பின் தயவுசெய்து என்னை தண்டித்துவிடு. இந்த உருவத்திற்குள் வராமல் போகாதே என்று வேண்டினார்.

அந்தப்பகுதி, அரசனுடைய குரல் அவன் காதில் விழுந்தது.
“வேண்டுமென்றே தவறு செய்கிறாய் சிற்பியே, என்னிடம் காசு வாங்குவதற்காகவே நீயாக ஏதேனும் தவறு செய்துவிட்டு, பின்னமாகிவிட்டது குறையாகிவிட்டது, என்று வருத்தப்படுகிறாய்.

கடந்த நான்கு வருடங்களாக நடராஜர் சிலையை செய்வதாக கூறி என்னுடைய சம்பளத்திலே தின்றுகொழுத்து செய்துவருகிறாய், இதுவே கடைசி முறை இன்னும் இரண்டு நாட்களில் நடராஜர் சிலையை செய்யவில்லையெனில் நீ இங்கிருந்து புண்ணியமில்லை!

உன்னை சிற்பி என்று நாங்கள் அழைத்து லாபமில்லை. எனவே உன் கதையை என் வாளால் முடிப்பேன் “என்று சீறினான் அரசன்.

அந்த அரசன் நான்கு வருடங்கள் பொறுமையாக இருந்ததே பெரிய விஷயம். அவன் பொறுமை மீறும்படியாக என்ன ஏற்பட்டது தெரியவில்லை, அரசனிடம் இருந்து நடராஜர் சிலை செய்ய உத்தரவு சிற்பிக்கு வந்ததுமே அற்புதமான ஒரு நடராஜர் ஆயிரமாயிரம் காலத்திற்கு நிற்க வேண்டிய நடராஜர் செய்ய வேண்டும் என்ற வேகம் வந்தது. அந்த வேகத்தோடு கர்வம் வந்ததோ, என்னவோ தெரியவில்லை. ஐந்து சிலைகள் செய்தும் சரியாக வரவில்லை.

இது ஆறாவது சிலை.
ஒரு சிறு தவறும் நேராதவாறு எல்லா விஷயங்களையும் ஒரு முறைக்கு இரு முறை சோதித்து மெழுகால் சிலை செய்து பிறகு அதன் மீது களிமண் பூசி, சரியான இடத்தில் ஓட்டைகள் வைத்து காற்றுப் போக வழிகள் செய்து அவன் மழுவைக் காய்ச்சி இறைவனை வழிபடத் தொடங்கினான்.

மழு உச்ச நிலையில் கொதித்துக் கொண்டிருக்க, “என்னுடைய வாழ்க்கை உயர்வதும், தாழ்வதும் இப்பொழுது உன்கையில் இருக்கிறது. உனக்கு விருப்பம் இருப்பின் இதற்குள் வந்து உட்கார்ந்து கொள் இல்லையெனில் என்னை சாக விடு…! “என்று சொல்லிவிட்டு முழுமனதோடு மழுவை கிளரத் தொடங்கினான்.
உலையின் அனல் உடம்பு முழுவதும் அடித்தது.

 இருட்டில் யாரோ தொலைவிலிருந்து வருவது தெரிந்தது. வந்தவர்கள் ஆணும், பெண்ணுமான வயதான அந்தணர்கள்.
“அப்பா திருநல்லம் என்கிற ஊர் எது, ஏனப்பா மிகப்பெரிய ஊர் என்று சொல்கிறார்கள், ஏன் இப்படி வயல்களுக்கு நடுவே இருக்கிறது. இதை தேடிக் கண்டுபிடித்து வருவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது.

ஐயா, சிற்பியே, தயவுசெய்து குடிப்பதற்கு ஒரு குவளை நீர் கொடு” என்று கேட்டார் அந்தணர்.
சிற்பி திரும்பி ஆச்சரியத்தோடு அந்தணர்களைப் பார்த்தான், என்ன இந்த அந்தணர் தன்னிடம் போய் நீர் கேட்கிறாரே, என்று ஆச்சரியப்பட்டான்.
“அய்யா, நான் சிற்பி, கருமார் இனத்தை சேர்ந்தவன்.
அந்தணர்கள் வசிக்கும் பகுதி கோயிலுக்கு பின்புறம் இருக்கிறது. நீங்கள் பார்ப்பதற்கு அந்தணர்கள் போல் இருக்கிறீர்கள். எனவே, கோயிலுக்கு பின்புறம் போய் அந்தணர் வீட்டில் குடிக்க நீர் கேளுங்கள், தருவார்கள் “என்று சொன்னான்.

மறுபடியும் வேலையில் மூழ்கினான். வந்தவர் கைதட்டி அழைத்து “எனக்கு தாகமாக இருக்கிறது ஐயா, அக்ரஹாரம் போகிறவரையில் என்னால் தாங்க இயலாது சுருண்டு விடுவேன் என்று தோன்றுகிறது. எனவே உன் கையால் ஒரு குவளை நீர் கொடு “என்றான்.

“நான் இங்கு வேலை செய்து கொண்டிருப்பது உன் கண்ணில் படவில்லையா, ஒரு சிலை வடிப்பது எவ்வளவு கடினம் என்பது உங்களுக்கு தெரியாது…?

கவலையோடு நான் இங்கு நின்று கொண்டிருக்கிறேன். குடிக்க தண்ணீர் கொடு என்று என் உயிரை ஏன் வாங்குகிறீர்கள். என்னிடம் தண்ணீர் இல்லை, இந்த மழு தான் இருக்கிறது வேண்டுமானல் இதை குடியுங்கள்” என்று பதட்டத்தோடு சொல்ல.

“சரி அதையே குடித்துக் கொள்கிறேன்” என்று அருகே வந்த கிழவர், உஞ்சவர்த்தி பிராமணர் போல ஒரு சொம்பை இடுப்பில் கட்டி தொங்கவிட்டிருந்தார். அந்தச் சொம்பை விட்டு மழுவை மொண்டார், கொதிக்கின்ற நெருப்பு ஒளியோடு வீசுகின்ற மழுவை எடுத்து உயர்த்திக் குடித்தார். மழு வாய்க்குள் போயிற்று, மழுவை அவர் குடித்துக் கொண்டிருக்கும் போது சற்றுத் தொலைவில் நின்றிருந்த அவரது மனைவி வாய்விட்டுச் சிரித்தாள்..

சுற்றியுள்ள உதவியாட்களும், சிற்பியும் பயந்து போய் ஓவென்று கூவ, வந்தவரையும் காணோம், வந்தவர் மனைவியும் காணோம்.

ஐயா, கொதி நிலைக்கு வந்துவிட்டது என்று உதவியாளர் கூவ, எல்லாரும் கொதிக்கும் பாத்திரத்தின் அடிப்பக்க குழாயைத் திறந்து விட்டார்கள். மழு தரைவழிந்து பள்ளத்தின் வழியே சிற்பத்திற்குள் நதிபோல் ஓடி புகுந்து கொண்டது. சரியாய் எண்பது நொடிகளில் எல்லா உருக்கு உலோகமும் சிலைக்குள் போய் தங்கிவிட்டது.

அடுத்தது சிவகாமி சிலைக்கும் அவ்விதமே திறந்து ஊற்ற, அதுவும் சிலைக்குள் போய் அமர்ந்து மெழுகை வெளியே அனுப்பியது, மெழுகு உருகி வெளியேறும் புகையில் அடுத்தவர் முகம் தெரியவில்லை.
கிழவரையும், கிழவியையும் யாரும் தேடவில்லை.

உருக்கு மொத்தமும் வழிந்ததும் அவரவர் ஓரம் போய் திண்ணைகளில் சாய்ந்தார்கள். தலைக்கு துணிவைத்துக் கொண்டு மயக்கத்தில் ஆழ்ந்தவர்கள் போல் தூங்கினார்கள், விடிந்து என்ன நடந்தது என்று விவாதித்தார்கள்…! யோசித்தார்கள்…!

வந்தது சிவபெருமானே என்று முடிவு செய்தார்கள்.
ஓடிப்போய் களிமண்ணில் நீர் ஊற்றி மெல்ல மெல்ல பிரித்து சிலையைப் பார்த்தார்கள். சிலை ஆறடி உயரத்திற்கு மேலாய் அற்புதமாய் வந்திருந்தது.

குமிழ் சிரிப்பும், கோவைச் செவ்வாயும், அகலமான கண்களும், தீர்க்கமான நாசியும் அற்புதமான கோணத்தில் நடனமாடும் சிவனுருவம் மிகச் சிறப்பாக வந்திருந்தது.

நிமிர்த்தி பீடத்தில் நிற்க வைத்தார்கள், சடையையும், திருவாச்சியையும் மாட்டினார்கள். சிவகாமியையும் நிமிர்த்தி பீடத்தோடு பொருத்தினார்கள்.

ஊர்கூடிப் பார்த்து வியந்தது, கன்னத்தில் போட்டு கொண்டது. மன்னனுக்கு ஓடிப்போய் மந்திரிகள் செய்தி சொல்ல, மன்னனும் விரைந்து வந்து பார்த்தான்.

”உங்களுக்கெல்லாம் கத்தி எடுத்தால் தானடா காரியம் செய்ய முடிகிறது. தலையை கொய்து விடுவேன் என்று நான் ஆணையிட்டதனால் தானே இரண்டு நாளில் இத்தனை அற்புதமான ஒரு சிற்பத்தை செய்து முடித்தாய், இதுவரை நீ ஏமாற்றிக் கொண்டிருந்தது உண்மை என்று இப்போது தெள்ளத் தெளிவாக புரிந்து விட்டது பார்” என்று சிரிப்போடும் கடுப்போடும் மன்னன் பேசினான்.

சிற்பி இல்லை என்று தலையாட்டினார், “என்ன சொல்ல வருகிறாய்?” மன்னன் மறுபடியும் சீறினான்.

”இது சிவனால் செய்யப்பட்ட சிலை, இப்படி அந்தணர் உருவத்தில் சிவன் வந்து நின்றார். மனைவியுடன் வந்து என்னிடம் பேசினார், தண்ணீர் கேட்டார் மறுத்தேன், இது தான் இருக்கிறது என்று மழுவை காண்பித்தேன், மழுவை ஏந்திக் குடித்தார் மறைந்தார்,” என்று சொல்ல….
“இந்த கதையெல்லாம் என்னிடம் விடாதே” என்று மறுபடியும் சீறினான்.

”இல்லை அரசே .இது சிவன் இருக்கிற சிலை, சிவன் மழுவுக்குள் கரைந்த சிலை. எனவே இதனுள் இறைவன் இருக்கிறான். இது என்னால் செய்யப்பட்ட சிலை அல்ல,” என்று பணிவாக சொல்ல, அரசன் கெக்கலித்து கிண்டலாகச் சிரித்தான்.

உளியை சிற்பியிடமிருந்து பிடுங்கி, இது சிவன் உருவம் சிவன் இருக்கிற உருவம் என்றால் இதை குத்தினால் ரத்தம் வருமோ என்று காலில் ஒரு காயத்தை ஏற்படுத்தினான்.

பளிச்சென்று குருதி கொப்பளித்து கொட்டியது! தரையை நனைத்தது.

மக்கள் பயந்தார்கள், அரசன் திகைத்துப் போனான். பயத்தில் சுருண்டு விழுந்தான்.
இறைவனை சோதித்த அரசனின் உடம்பு முழுவதும் தொழுநோய் பரவியது. அவன் சிற்பியிடமும், இறைவனிடமும் கைகூப்பி மன்றாடி மன்னிப்பு கேட்டான் என்பது கோனேரி ராஜபுரத்தின் கதை.

எங்கே இருக்கிறது இந்த கோனேரிராஜபுரம், கும்பகோணம் காரைக்கால் பேரூந்து பாதையில் புதூர் என்ற ஊரை அடைந்து, அங்கேயிருந்து வலதுபுறமாக போகும் சாலையில் விசாரித்துக் கொண்டு போக வேண்டும்.

வயல் வெளிகளுக்கு நடுவே ஒரு பெரிய கிராமம் அமைதியாக உட்கார்ந்திருக்கிறது.
கோனேரி ராஜபுரத்திற்கு முற்காலப் பெயர்  திருநல்லம். இந்த கோனேரி ராஜபுரத்திற்கு சோழமன்னன் கண்டராதித்தனும் அவன் மனைவி செம்பியன் மாதேவியும் பல நிவந்தங்கள் விட்டிருக்கிறார்கள்.

ஊர் மிகச் செழிப்பான ஊர். நடராஜர் விக்ரகத்தை பார்க்க வேண்டுமானால் அதை கோனேரி ராஜபுரத்தில் தான் பார்க்க வேண்டும்.

உலகத்திலேயே மிகப் பெரிய நடராஜர் சிலை இந்த ஊரில் தான் இருக்கிறது. அழகு என்றால் அழகு அப்படியொரு கொள்ளையழகு. சிற்ப கலை தெரிந்தவர்கள் மட்டுமல்ல, சிற்பக் கலைப்பற்றி தெரியாதவர்கள் கூட அருகே போய் நின்றார்கள் என்றால் அப்படியே பரவசமாகிவிடுவார்கள்.

சிற்பக் கலை தெரிந்தவர்கள் மயக்கமாகி விடுவார்கள்!

 கைரேகை, அக்குள் பக்க கருப்பு, அங்கு வழக்கமாய் எல்லா ஆண்களுக்கும் இருக்கின்ற கொழுப்புக் கட்டி, புறங்கை தேமல் என்று பல்வேறு விஷயங்கள் அற்புதமாக அந்த சிற்பி செய்திருக்கிறான்.

அரசன் உளியால் செதுக்கிய இடமும் பாதத்திற்கு மேல் அப்படியே இருக்கிறது. கோயில் ஆயிரம் வருடத்து கோயில். கோனேரி ராஜபுரம் சுவாமியின் பெயர் உமாமகேஸ்வரர் அல்லது பூமீஸ்வரர்!

 தோட்டமும் துறவுமாய் பூமி பாக்கியம் வேண்டும் என்று விரும்புபவர்கள் இவரை வணங்கினால் நிச்சயம் பெறலாம் என்று சொல்லப்படுகிறது. நான் செழிப்பாக இருக்க நல்ல பூமியை கொடு என்று இந்த இறைவனிடம் வேண்டிக் கொண்டு உழைத்தால் நிச்சயம் அவன் கையகல பூமிக்காவது சொந்தக்காரனாவான் என்று நம்பப்படுகிறது.

தவிர அங்கு வைத்தியநாதன் சன்னதி இருக்கிறது, அந்த வைத்திய நாத சன்னதியில் ஜபம் செய்தால், வேறு யாருக்கேனும் உடம்பு சரியில்லை என்று நாம் இறைவன் பெயரை திரும்பத் திரும்பத் சொன்னால் சம்மந்தப்பட்டபவருக்கு நோய் குணமாவதாகவும் அன்பர்கள் சொல்கிறார்கள்.

இறைவி பெயர் தேகசௌந்தரி,
ஸ்தலமரம் அரசு,
தீர்த்தம் பிரம்ம தீர்த்தம்.

கும்பகோணம் போகிறவர்கள் அரை நாள் கோனேரிராஜபுரத்திற்கு ஒதுக்கி வைத்துவிடவேண்டும். நிதானமாக பார்த்துவிட்டு வரவேண்டும்.

குறிப்பாக அந்த வைத்தியநாத சன்னதி மண்டபத்தில் உட்கார்ந்து ஜபம் செய்துவிட்டு அல்லது கண்மூடி இறைவன் பெயரைச் சொல்லிவிட்டு வருதல் மிக அவசியம்.
 எல்லாவற்றையும் விட உங்கள் வாழ்நாளில் ஒரு முறையேனும் இந்த நடராஜனை பார்த்து கைகூப்பிவிட்டு வாருங்கள்!

கை நிறைய வில்வம் குடந்தையிலேயே வாங்கி கொண்டு போய் அவன் கால் அடியில் சொரிந்துவிட்டு வாருங்களேன்!

திருநல்லம் ஒரு முறையேனும் சென்று வாருங்கள். சிவ அழகில் சொக்கிப் போய் வருவது கண்கூடான உண்மை.

Saturday, June 24, 2023

சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்:

சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்:
1. பஞ்ச பூதங்களால்தான் இந்த பிரபஞ்சமே இயங்குகிறது. 
பஞ்ச பூதங்களில் ஆகாயம் முதலில் தோன்றியது. அந்த வகையில் பஞ்சபூதத் தலங்களில் முதல் தலமாக சிதம்பரம் உள்ளது. 

2. பஞ்சபூத தலங்கள் மற்றும் பாடல் பெற்ற தலங்களை வழிபட விரும்புபவர்கள் சிதம்பரத்தில் இருந்து தொடங்குவது நல்லது என்பது ஐதீகமாக உள்ளது. 3. வைணவத்தில் கோவில் என்றால் ஸ்ரீரங்கத்தை குறிப்பது போல சைவத்தில் கோவில் என்றால் சிதம்பரம் நடராஜரையே குறிக்கும். 

4. சிதம்பரம் நடராஜர் ஆலயம் சுமார் 40 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமாக அமைந்துள்ளது. 

5. மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய 3 பெருமைகளையும் சிதம்பரம் கொண்டுள்ளது. 

6. சிதம்பரம் நடராஜரை எல்லா கடவுள்களும் வந்து வழிபட்டு பேறு பெற்றனர். இதை உணர்த்தும் வகையில் நடராஜர் ஆலயம் முழுவதும் ஏராளமான சன்னதிகள் உள்ளன. 

7. நடராஜர் ஆலயத்துக்குள் தினமும் 27 லிங்கங்களுக்கு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்படுகின்றன. இது தவிர ஏராளமான லிங்கங்கள் உள்ளன. 

8. சிவாலயங்களில் கர்ப்பக்கிரக கோஷ்டத்தை சுற்றி தெய்வ உருவங்கள் இருக்கும். சிதம்பரத்தில் அத்தகைய அமைப்பு இல்லை. 

9. திருவண்ணாமலை போன்றே எமன், சித்ரகுப்தன் இருவரும் சிதம்பரம் தலத்திலும் வழிபட்டுள்ளனர். இதை உறுதிப்படுத்தும் வகையில் பிரகாரத்தில் எமனுக்கும், சிவகாமி அம்மன் சன்னதி பகுதியில் சித்ரகுப்தனுக்கும் சிலை உள்ளது. 

10. இங்குள்ள 4 கோபுரங்களும் சிறப்பு களஞ்சியங்களாக உள்ளன. கிழக்கு கோபுரம் ஆடல் கலையின் அனைத்து அம்சங்களையும் கொண்டுள்ளது. மற்றொரு கோபுரத்தில் இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞானசக்தி, பராசக்தி, விநாயகர், முருகன், விஷ்ணு, தன்வந்திரி, இந்திரன், அக்னி, வாயு, குபேரன், புதன், நிருதி, காமன், பத்ரகாளி, துர்க்கை, கங்காதேவி, யமனாதேவி, ராகு, கேது, நாரதர், விசுவகர்மா, நாகதேவன், சுக்கிரன், லட்சுமி, வியாக்ரபாதர், அகத்தியர், திருமூலர், பதஞ்சலி ஆகியோர் சிலைகள் உள்ளன. 

11. புத்த மதத்தை தழுவிய மன்னன் அசோகன், தன் படை ஒன்றை அனுப்பி, சிதம்பரம் கோவிலை புத்த விகாரமாக மாற்ற முயன்றான். அவர்களை மாணிக்கவாசகர் தன் திறமையால் ஊமையாக்கி சிதம்பரத்தை காப்பாற்றினார். 

12. தமிழ்நாட்டில் எந்த ஒரு சிவாலயத்திலும் பார்க்க முடியாதபடி சிதம்பரம் ஆலயத்தில் மட்டுமே அரிய வகை வித்தியாசமான சிவ வடிவங்களைப் பார்க்க முடியும். 

13. தமிழ் மொழியை மட்டுமின்றி தமிழர் பண்பாட்டு கலாச்சாரத்தை பாதுகாத்த சிறப்பும் சிதம்பரம் ஆலயத்துக்கு உண்டு. 

14. அறுபத்து மூவர் வரலாறு மட்டும் சிதம்பரம் கோவிலில் பாதுகாப்புடன் வைக்கப்படாமல் இருந்திருந்தால் 63 நாயன்மார்கள் பற்றி குறிப்புகள் நமக்கு தெரியாமல் போய் இருக்கும். அந்த சிவனடியார்களை நாம் தெரிந்து கொள்ளாமலே போய் இருப்போம். 

15. சிதம்பரம் கோவிலுக்குள் திருமுறைகள் உள்ளது என்பதை இந்த உலகுக்கு சொன்னவர் பொல்லாப் பிள்ளையார் ஆவார். எனவே விநாயகரை 'மூத்த நாயனார்' என்கிறார்கள். 

16. சிதம்பரம் தலத்தை நால்வரும் புகழ்ந்து பாடியுள்ளனர். எனவே திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வரின் குரு பூஜை பெரிய திருவிழா போல இத்தலத்தில் கொண்டாடப்படுகிறது. 

17. மாணிக்கவாசகர் மட்டுமின்றி நந்தனார், கணம்புல்லர், திருநீலச் கண்டக் குயவர் ஆகியோரும் தில்லையில் முக்தி பெற்றனர். 

18. சிதம்பரத்தில் நடக்கும் திருவிழாக்களில் திருவாதிரை திருவிழாவும் முக்கியமானது. அன்று ஒரு வாயாவது திருவாதிரைக்களி சாப்பிட வேண்டும் என்பார்கள். 

19. ஒரு தடவை இத்தலத்தில் கொடியேற்றம் நடந்த போது கொடி ஏறாமல் தடைபட்டது. அப்போது உமாபதி சிவாச்சாரியார் என்பவர் கொடிக்கவி என்ற பாடலை பாடினார். அடுத்த நிமிடம் கொடி மரத்தில் தானாகவே ஏறிய அற்புதம் நடந்தது. 

20. தேவநாயனார் என்பவர் நடராஜர் மீது ஒரு சித்தாந்த பாடலை பாடி கருவறை முன்புள்ள வெள்ளிப்படிகளில் நூலை வைத்தார். அப்போது படியில் உள்ள ஒரு யானை சிற்பம் உயிர் பெற்று அந்த நூலை எடுத்து நடராஜரின் காலடியில் எடுத்து வைத்தது. இந்த அதிசயம் காரணமாக அந்த நூலுக்கு திருக்களிற்றுப்படியார் என்ற பெயர் ஏற்பட்டது. 

21. முத்து தாண்டவர் என்ற புலவர் தினமும் சிதம்பரம் கோவிலுக்குள் நுழைந்ததும், முதலில் தன் காதில் எந்த சொல் விழுகிறதோ, அதை வைத்து கீர்த்தனை இயற்றி, பாடி நடராஜரை துதித்து வழிப்பட்டார். அவர் பாடி முடித்ததும் தினமும் அவருக்கு நடராஜர் படிக்காசு கொடுத்தது ஆச்சரியமானது. 

22. சங்க இலக்கியமான கலித் தொகையின் முதல் பாடல் சிதம்பரம் நடராஜர் துதியாக உள்ளது. எனவே சங்க காலத்துக்கு முன்பே சிதம்பரம் தலம் புகழ் பெற்றிருந்தது உறுதியாகிறது. 

23. சிதம்பரம் நடராஜருக்கு சிதம்பரத்தின் பல பகுதிகளிலும் தீர்த்தங்கள் உள்ளன. 

24. ஒவ்வொரு ஆலயத்துக்கும் ஒரு தல புராணத்தை சிறப்பாக சொல்வார்கள். சிதம்பரம் ஆலயத்துக்கு புலியூர் புராணம், கோவில் புராணம், சிதம்பரப் புராணம் என்று மூன்று தல புராணங்கள் உள்ளன. 

25. சங்க கால தமிழர்கள் கட்டிய சிதம்பரம் ஆலயம் இப்போது இல்லை. தற்போதுள்ள ஆலயம் பல்லவ மன்னர்களால் கட்டப்பட்டு, சோழ மன்னர்களால் திருப்பணி செய்யப்பட்டதாகும். 26. சங்க காலத்துக்கு முன்பு சிதம்பரம் ஆலயம் கடலோரத்தில் இருந்ததாக பாடல்கள் குறிப்பின் மூலம் தெரிகிறது. 

27. சிதம்பரம் தலம் உருவான போது பொன்னம்பலம் எனும் கருவறை தென் திசை நோக்கி இருந்ததாம். பல்லவ மன்னர்கள் புதிய கோவில் கட்டிய போது அதை வடதிசை நோக்கி அமைத்து விட்டதாக சொல்கிறார்கள். 

28. முகலாயர்கள், ஆங்கிலேயர்கள் படையெடுப்பின் போது சிதம்பரம் தலம் பல தடவை இடித்து நொறுக்கப்பட்டது. என்றாலும் பழமை சிறப்பு மாறாமல் சிதம்பரம் தலம் மீண்டும் எழுந்தது. 

29. இத்தலத்துக்கு 'தில்லை வனம்' என்றும் ஒரு பெயர் உண்டு. புலியூர், பூலோக கைலாசம், புண்டரீகபுரம், வியாக்கிரபுரம் முதலிய வேறு பெயர்களும் உண்டு. 

30. மாணிக்கவாசகர் இத்தலத்தில் தங்கி இருந்த போது, கண்டப்பத்து, குயில்பத்து, குலாபத்து, கோத்தும்பி, திருப்பூவல்லி, திருத்தோணோக்கம், திருத்தெற்றோணம், திருப்பொற்சுண்ணம், திருப்பொன்னூசல், திருவுந்தியார், அண்ணப்பத்து, கோவில் பதிகம், கோவில் மூத்த திருப்பதிகம், எண்ணப்பதிகம், ஆனந்த மாலை, திருப்படையெழுச்சி, யாத்திரைப்பத்து நூல்களை பாடினார். 

31. சிவகங்கை தீர்த்த குளம் நான்கு புறமும் நல்ல படிக்கட்டுகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. இது போன்று தமிழகத்தில் வேறு எந்த தலத்திலும் இல்லை. 

32. சிவகங்கை தீர்த்த குளம் அருகில் சிறு தூனை நட்டியுள்ளனர். அங்கியிருந்து பார்த்தால் 4 ராஜகோபுரங்களையும், ஒரு சேர தரிசனம் செய்ய முடியும். 

33. இத்தலத்து பெருமானுக்கு சபாநாயகர், கூத்த பெருமான், நடராஜர், விடங்கர், மேருவிடங்கர், தெட்சிணமேருவிடங்கர், பொன்னம்பலம், திருச் சிற்றம்பலம் என்றெல்லாம் சிறப்புப் பெயர்கள் உண்டு. 

34. சிதம்பரத்தில் நடராஜர் ஆனந்த நடனம் ஆடிய இடத்தை சிற்றம்பலம் என்பார்கள். இதை சிற்சபை, சித்சபை என்றும் அழைப்பதுண்டு. 

35. திருவாதிரையன்று தாமரை, செண்பகம், அத்தி போன்ற மலர்களை பயன்படுத்தி பூஜை செய்தால் நடராஜரின் முழுமையான அருளைப் பெறலாம். 

36. நடராஜருக்கு பொன்னம்பலம் என்ற பெயர் எப்படி வந்தது தெரியுமா? பொன்+அம்பலம்= பொன்னம்பலம். அம்பலம் என்றால் சபை. பொன்னாலாகிய சபையில் நடராஜர் ஆனந்த தாண்டவம் ஆடுவதால் அவருக்கு பொன்னம்பலம் என்ற பெயர் ஏற்பட்டது. 

37. உலகில் உள்ள எல்லா சிவகலைகளும் அர்த்த ஜாமத்தில் இத்தலத்துக்கு வந்து விடுவதாக ஐதீகம். எனவே இத்தலத்தில் மட்டும் அர்த்தஜாம பூஜை தாமதமாக நடத்தப்படுகிறது. 

38. சிதம்பரம் நடராஜருக்கு தினமும் 6 கால பூஜை நடத்தப்படுகிறது. 

39. நடராஜரின் ஆனந்தத் தாண்டவத்தில்தான் இப்பிரபஞ்சத்தின் இயக்கமே அமைந்துள்ளது. அண்ட சராசரங்களும் நடராஜரின் தாண்டவத்தால் இன்பம் அடைகிறதாம். 
 
40. மனித உடலில் இருதய பகுதி உடலின் இரு பக்க பகுதிகளை இணைப்பது போல இதயப் பகுதியாக சிதம்பரம் கோவில் உள்ளது. நடராஜ பெருமானுக்குரிய விமானம் கூட இதய வடிவில்தான் அமைந்துள்ளது. 

41. சிதம்பர நடராஜரின் வடிவம் சிவசக்தி ஐக்கியமான உருவமாகும். அதாவது அர்த்த நாரீஸ்வரத்தன்மை உடைபவர் வலப்பக்கத்தில் சிவனும், இடது பக்கத்தில் சக்தியும் உறைந்துள்ளனர். எனவே அன்னை சிவகாமி இல்லாமலும் நாம் நடராஜ பெருமானை தரிசனம் செய்யலாம். 

42. சிதம்பர ரகசியம் என்று கூறப்படும் பகுதியில் வில்வத்தளம் தொங்கும் காட்சியைப் பார்த்தால் முக்தி கிடைக்கும். இதைத்தான் 'பார்க்க முக்தி தரும் தில்லை' என்கிறார்கள். 

43. சிவபெருமானுக்கும், காளிக்கும் நடந்த நடனப்போட்டி திருவாலங்காட்டில் நடந்ததாகவும், ஆனால் தில்லைக்கு சிறப்பு ஏற்படுத்த அந்த வரலாற்றை சிதம்பரத்துக்கு மாற்றி விட்டார்கள் என்றும் மூதறிஞர் அ.ச.ஞானசம்பந்தனார் குறிப்பிட்டுள்ளார். 

44. சிதம்பரத்தில் சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகளும் திருக்கோவில் கொண்டுள்ளனர். 

45. இத்தலத்தில் மட்டுமே ஒரே இடத்தில் நின்றபடி சிவன், விஷ்ணு, பிரம்மன் ஆகிய மூவரையும் தரிசனம் செய்ய முடியும். 

46. ஓம் எனும் பிரணவ மந்திரத்தின் வடிவில் இந்த ஆலயம் உள்ளது. 

47. இத்தலத்தில் பொன்னம்பலம் எனப்படும் சிற்றம்பலம் மற்றும் திருமூலட்டானர் கோவில் ஆகிய 2 இடங்களில் இறைவனும், இறைவியும் எழுந்தருளி உள்ளனர். 

48. சிதம்பரத்தில் அதிகாலை தரிசனமே மிக, மிக சிறப்பு வாய்ந்தது. 

49. சிதம்பரம் ஆலயத்துக்குள் நுழைந்ததும் எந்த பிரகாரத்துக்கு எப்படி செல்வது! எந்த மூர்த்தியை வழிபடுவது? என்பன போன்ற குழப்பம் ஏற்பட்டு விடும். அந்த அளவுக்கு இது பெரிய ஆலயம். 

50. மனிதரின் உடம்பும் கோவில் என்பதனை விளக்கும் வகையில் சிதம்பரம்நடராசர் கோவில் அமைந்துள்ளது. மனித உடலானது அன்னமயம், பிராணமயம், மனோமயம், விஞ்ஞான மயம், ஆனந்தமயம் என்னும் ஐந்து சுற்றுக்களைக் கொண்டது. அதற்கு ஈடாக சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஐந்து பிரகாரங்கள் உள்ளன. 

51. நடராஜர் ஆலயமும், தில்லையம்மன் ஆலயமும், இளமையாக்கினார் ஆலயமும், திருச்சித்திரக்கூடமும் இங்கு இருப்பதால், இது ‘ கோவில் நகரம்’ என்றும் அழைக்கப்படுகிறது. 

52. நடனக்கலைகளின் தந்தையான சிவ பெருமானின் நடனமாடும் தோற்றம் நடராஜ ராஜன் எனப்படுகிறது. இதுவே மருவி நடராஜர் என அழைக்கப்படுகிறது. இக்கோவிலில்நாட்டியாஞ்சலி என்ற நாட்டிய விழா ஒவ்வொரு வருடமும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. 

53. உலகில் பல்வேறு இடங்களில் நாட்டியம் பயிலும் கலைஞர்கள், தங்களுடைய நாட்டியத்தை இங்கு அர்ப்பணிக்கின்றனர். அவர்கள் இங்கு வந்து நாட்டியார்ப்பணம் செய்வதை மிகப்பெரிய பாக்கியமாகவே கருதுகின்றனர். 

54. பக்தி இலக்கியத்திலும், சங்க இலக்கியத்திலும் தில்லை சிவபெருமான் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. 

55. இத்தலம் தில்லை என்னும் மரங்கள் அடர்ந்த காடாக இருந்ததால் இப்பெயர் பெற்றது. தில்லை என்னும் மரங்கள் இப்பொழுது சிதம்பரத்தில் காணக் கிடைக்கவில்லை. சிதம்பரத்திற்கு கிழக்கில் உள்ள பிச்சாவரத்திற்கு அருகே அமைந்துள்ள உப்பங்கழியின் கரைகளில் இம்மரங்கள் மிகுதியாக இருக்கின்றன. 

56. சிதம்பரம் நடராஜர் கோயிலில் எட்டுத் திசைகளிலும் சாஸ்தாவின் எட்டு அவதாரங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. அந்த அவதாரங்கள் மகா சாஸ்தா, ஜகன்மோகன சாஸ்தா, பாலசாஸ்தா, கிராத சாஸ்தா, தர்மசாஸ்தா, விஷ்ணு சாஸ்தா, பிரம்ம சாஸ்தா, ருத்ர சாஸ்தா. 

58. இங்குள்ள ஈசனை வழிபடுவோர்க்கு மனநிம்மதி கிடைக்கும். இது உடல் சம்பந்தப்பட்ட எந்த நோயானாலும் தீருகிறது. 

59. நடராஜருக்கும் சிவகாமசுந்தரியம்பாளுக்கும் பால், பொரி, பழம் முதலியவை நைவேத்தியம் செய்து, தீபாராதனை செய்வதை திருவனந்தல் என்றும் பால் நைவேத்தியம் என்றும் அழைக்கின்றனர். இதை பக்தர்கள் தங்களின் கட்டளையாக ஏற்று செய்யலாம். 

60. நல்லெண்ணெய், திரவிய பொடி, பால், தயிர், பழச்சாறு, இளநீர், பஞ்சாமிர்தம், சந்தனம், பன்னீர், திருநீர் ஆகியவற்றால் அபிசேகம் செய்யலாம். தவிர உலர்ந்த தூய வஸ்திரம் சாத்தலாம். 

61. அம்பாளுக்கு மஞ்சள் பொடி அபிசேகம், புடவை சாத்துதல் ஆகியவற்றை செய்யலாம். 

62. இறைவன் இத்தலத்தில், நடராஜர் என்ற உருவமாகவும், ஆகாயம் என்ற அருவமாகவும், ஸ்படிக லிங்கம் என்ற அருவுருமாகவும் அருள்பாலிக்கிறார். 

63. இத்தலத்து முருகப்பெருமான் (சுப்ரமணியர்) குறித்து அருணகிரிநாதர் பத்து திருப்புகழ் பாடல்கள் பாடியுள்ளார். 

64. பெரும்பாலான பக்தர்கள், சிதம்பரம் கோயிலின் மூலவர் என்றாலே அது நடராஜர் தான் நினைத்துக் கொண்டிருப்பர். கோயிலுக்குள் நுழைந்ததும், நடராஜர் சன்னதியை தேடியே ஓடுவர். ஆனால், இத்தலத்து மூலவர் லிங்கவடிவில் ஆதிமூலநாதர் என்ற பெயரில் அருள் செய்கிறார். 

65. நந்தனார் தாழ்த்தப்பட்டவர்களை கோயிலுக்குள் வரக்கூடாது என ஒதுக்கிய காலத்திலும், சிவன் மீது கொண்ட நிஜமான பக்தியால், சர்வ மரியாதையுடன் கோயிலுக்குள் சென்று, நடராஜருடன் ஐக்கியமானார்.

66. இத்தலத்து நடராஜரைக் காண ஏராளமான வெளிநாட்டவர்கள் கூட, வருகின்றனர். அப்படிப்பட்ட அபூர்வ சிலையை, திருவிழா காலத்தில் தேரில் எடுத்து வருகிறார்கள். 

67. சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சிவகங்கை தீர்த்தக்கரையில் திருத்தொண்டத் தொகையீச்சரம் என்ற பெயரில் ஒன்பது லிங்கங்கள் உள்ளன. இந்த லிங்கங்களை ஒன்பது தொகையடியார்களாக எண்ணி வழிபடுகின்றனர். 

68. இந்த கோவில் அமைந்திருக்கும் இடமானது உலகின் பூமத்திய ரேகையின் சரியான மையைப்பகுதி என்று கூறப்படுகின்றது. 

69. பஞ்சபூத கோவில்களில் ஆகாயத்தை குறிக்கும் தில்லை நடராஜர் ஆலயம், காற்றை குறிக்கும் காலஹஸ்தி ஆலயம், நிலத்தை குறிக்கும் காஞ்சி ஏகாம்பரரேஸ்வர ஆலயமும் சரியாக ஒரே நேர்கோர்ட்டில் அதாவது சரியாக 79 டிகிரி தீர்க்க ரேகையில் அமைந்துள்ளது.

 70. சிதம்பரம் நடராஜர் ஆடிக் கொண்டிருக்கும் ஆனந்த தாண்டவம் என்ற கோலம் 'காஸ்மிக் டான்ஸ்' என்று பல வெளிநாட்டு அறிஞர்களால் அழைக்கப்படுகின்றது. 

71. திருநீலகண்ட நாயனார் அவதரித்து வாழ்ந்தபதி இதுதான். 

72. திருப்பல்லாண்டு பாடிச் சேந்தனார் தடைப் பட்ட தேரை ஓடச் செய்த மந்திரத்தலம். 

73. நடராச சந்நிதிக்கான கொடி மரம் தங்கத்தகடு வேய்ந்ததாகும். 

74. சிதம்பரம் சிவகாமியம்மன் கோவில் முன் மண்டப விமானத்தில் சிதம்பரத் தல புராணக் காட்சிகளும் தாருகா வனத்து முனிவர்களின் செருக்கைச் சிவபெருமான் அழித்த காட்சிகள் ஓவியங்களாக இடம் பெற்றுள்ளன. 

75. சென்னையில் இருந்து சுமார் 250 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்த ஆலயத்துக்கு சென்று வர மாநிலத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் பஸ் வசதி உள்ளது....

 திருச்சிற்றம்பலம்

Wednesday, June 21, 2023

ஆனி திருமஞ்சனம் என்பது என்ன?ஆனி உத்திர மகிமைகள்..25,06,2023, நடராஜர் அபிஷேகம்,

ஆனி திருமஞ்சனம் என்பது என்ன?
ஆனி உத்திர மகிமைகள்..25,06,2023,  நடராஜர் அபிஷேகம்,

26,06,2023,ஆனிதிருமஞ்சனதரிசனம்,,திங்கள்கிழமை

எல்லா சிவத்தலங்களில், ஆனி உத்திரம் நட்சத்திரத்தில் அருள்மிகு நடராஜப்பெருமானுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைப்பெற்று வீதி உலா நடைபெறும்.
சிவாலயங்களில் அமைந்துள்ள நடராஜர் சபையில் ஆனித் திருமஞ்சனம் விசேஷமாகக் கொண்டாடப்படும். 

நடராஜப் பெருமானுக்கு ஆனிமாதம் உத்திர நட்சத்திரத்தன்று சாயரட்சை பூஜையில் சிறப்பு அபிஷேகமும் அலங்காரமும் செய்வதுதான் ஆனித்திருமஞ்சனம். 
அன்று சிதம்பரம் ஆலயத்தில் மூலவர் நடராஜரே தேரில் எழுந்தருளி 4 மாட வீதிகளிலும் உலா வரும் அதிசயம் இங்கு மட்டுமே நடக்கிறது.
பக்தர்கள் நடராஜரைத் தரிசித்து தங்கள் வேண்டுதலை வைக்க ஆனித்திருமஞ்சனம் மிக நல்லநாள்.

கலையார்வம் மிக்க மாணவர்கள் இன்றைய தினம் அவசியம் நடராஜரைத் தரிசிக்க வேண்டும்.

அன்று சிதம்பரம் ஆலயத்தில் ஆதிமூலவர் சந்திர மௌலீஸ்வரருக்கு ஆறுகால பூஜைகள் வெகு விமர்சையாக நடக்கும். 
அப்போது கனக சபையில் சிறப்பு அபிஷேகம் நடைபெறும். இது முடிந்த பின் சிவகாமியம்மை சமேத நடராஜருக்கு 16 வகை தீபங்களால் ஆராதனை காட்டப்படும். ஆனித் திருமஞ்சன விழாவை சிதம்பரத்தில் ஆரம்பித்து வைத்தவர் பதஞ்சலி மகரிஷி. 

இவர் ஆதிசேஷனின் அம்சம். இவ்விழா சிதம்பரத்தில் பத்துநாட்கள் சிறப்பாக நடக்கும். அதில் 9ம் நாள் தேரோட்டம் மிக முக்கியமானது. 

தேர்த் திருவிழாவில் பஞ்ச மூர்த்திகளும் 5 தேர்களில் எழுந்தருளி உலா வருவது கண்கொள்ளாக்காட்சி. 
அன்றிரவு மீண்டும் சித்சபையாகிய சிற்றம்பலத்தில் கடாபிஷேகம் நடைபெறும்.
அடுத்த நாள் விடையாற்றி உற்சவம் முடிந்தபின் கொடியிறக்கம் கண்டு விழா இனிதே நிறைவுறும்
சிவாலயங்களில் நடராஜருக்கு நடத்தப்பெறும் அபிஷேக விழாக்களில் சிறப்பான விழாக்கள் இரண்டு. ஒன்று மார்கழித்திருவாதிரை. மற்றொன்று ஆனி உத்திர நட்சத்திரத்தன்று நடக்கும் திருமஞ்சனம்.
இவ்விரு நாட்களில் மட்டுமே அதிகாலையில் அபிஷேகம் நடக்கும்.

சித்திரை திருவோணம், ஆவணி சதுர்த்தசி, புரட்டாசி சதுர்த்தசி, மாசி சதுர்த்தசி ஆகிய நாட்களில் மாலைநேரத்தில் அபிஷேகம் நடத்தப்படும்.
பொன்னம்பலமான சிதம்பரத்தில், பத்துநாட்கள் நடைபெறுவது ஆனி உத்திரத்திருவிழா. 

ஆனிஉத்திர நட்சத்திரத்தன்று இங்குள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் அதிகாலையில் அபிஷேகம் நடக்கும். அன்று பகல் ஒருமணிக்கு நடராஜரும், சிவகாமியம்மனும் ஆனந்த நடனம் செய்தபடியே எழுந்தருள்வர். இன்றைய தினத்தில் தான் நடராஜர் சன்னதிகளில் ஆனித்திருமஞ்சனம் நடக்கிறது. 

கோயில் என்பது எல்லா கோயிலுக்கும் பொதுப்பெயர் என்றாலும், சிவத்தலங்களில் சிதம்பரம் மட்டுமே கோயில் என்று குறிப்பிட்டு வழங்கப்படுகிறது. 

தில்லைவனம், பெரும்பற்றப்புலியூர், சிதாகாசம், ஞானாகாசம், பொன்னம்பலம், பூலோககைலாசம், புண்டரீகபுரம், வியாக்கிரபுரம் போன்ற பெயர்களும் இவ்வூருக்கு உண்டு. 
                                   சிதம்பரம், பழநி, பாபநாசம், குற்றாலம், ஸ்ரீரங்கம்(ன்) போன்ற திருத்தலங்களின் பெயரை குழந்தைகளுக்கு இடும் வழக்கம் உண்டு. அதுபோல சிதம்பரம், பொன்னம்பலம் என்று பெயரிடும் வழக்கமும் நீண்டகாலமாக இருந்து வருகிறது.

தேவி மஹாத்மியம்
யா தேவி சர்வ பூதேஷு சக்தி ரூபேண ஸம்ஸ்திதா
நமஸ்தஸ்மை ; நமஸ்தஸ்மை ; நமஸ்தஸ்மை நமோ நமஹ ! ,
 பொருள் : 
``எந்தத் தேவியானவள் எல்லா உயிர்களிலும் சக்தியின் உருவமாக அமைந்திருக்கிறாளோ அவளுக்கு  நமஸ்காரம்

Followers

பிள்ளையார் விரும்பும் 'மோதகம்' நைவேத்தியம் என்றால் என்ன❓

பிள்ளையார் விரும்பும் 'மோதகம்' நைவேத்தியம் மோதக் என்றால் உற்சாகம், மகிழ்ச்சி என்று பொருள். அகம் என்ற சொல்லுக்கு ‘வழங்கக்...