Showing posts with label #mahadevar #chola Mannan #anjai kadathiswarar #Sivan temple #Hindu temple #Trichur #Kerala #India. Show all posts
Showing posts with label #mahadevar #chola Mannan #anjai kadathiswarar #Sivan temple #Hindu temple #Trichur #Kerala #India. Show all posts

Friday, February 28, 2025

இந்த சிவன் சோழ மன்னர்களின் குல தெய்வமாக விளங்கியவர்.

கடவுளின் தேசமான 
இயற்கை எழில் கொஞ்சும் 
#கேரள மாநிலத்தில் உள்ள 
108 சிவாலயங்களில் ஒன்றானதும்,
ஒரேயொரு 
தேவாரப் பாடல் பெற்ற சேரநாட்டுத் (மலைநாட்டு)  தலமான,
நாயன்மார்களில்
சுந்தரமூர்த்தி நாயனார் மற்றும் சேரமான் பெருமான் முக்தி பெற்ற தலமாகவும், சுந்தரமூர்த்தி நாயனார் 
கடைசி தேவாரப் பதிகம் பாடிய தலமாகவும், சுந்தரமூர்த்தி நாயனார் வெள்ளைய யானையின் மீதும் மற்றும் சேரமான் பெருமான் குதிரை மீதும் இங்கிருந்து கைலாயம் சென்ற இடமாகவும்,
பரசுராமர் பிரதிஷ்டை செய்து வழிபட்ட தலமாகவும் அமைந்த 
உள்ள புகழ்பெற்ற 
*திருச்சூர் மாவட்டத்தில் அமைந்துள்ள 
#திருஅஞ்சைக்களம் என்ற
#திருவஞ்சிக்குளம்
#அஞ்சைக்களத்தீஸ்வரர்
(#மகாதேவர்) 
#உமையம்மை (பார்வதி)
திருக்கோயில் வரலாற்றையும் புகைப்படங்களையும் காணலாம் வாருங்கள் 🙏🏻 🙏🏻 🙏🏻 
கேரள மாநிலம் கொச்சி அருகே உள்ளது, திருவஞ்சைக்களம். இந்த திருத்தலத்தில் அமைந்துள்ளது மகாதேவர் கோவில். சிவபெருமானின் தேவார பாடல்கள் இடம்பெற்ற தலங்களில், கேரள மாநிலத்தில் அமைந்த ஒரே ஆலயம் இதுவாகும்.

திருவஞ்சைக்குளம் மகாதேவசுவாமி கோயில்  என்பது பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். சுந்தரர் பாடல் பெற்ற இத்தலம் கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. சேரமான் பெருமான் ஆண்ட ஊரிலுள்ள தலமெனப்படுகிறது.

தென்னிந்தியாவின் மிக பழமையான சிவன் கோயில்களின் ஒன்றாக கருதப்படும் இந்த திருவஞ்சிக்குளம் மஹாதேவா கோயில் கொடுங்கல்லூர் நகரின் தெற்குப்பகுதியில் அமைந்துள்ளது.

மலை நாட்டிலுள்ள ஒரே திருமுறைத்தலம் என்ற சிறப்பினை இத்தலம் பெறுகிறது. 

மூலவர்:மகாதேவர், அஞ்சைக்களத்தீஸ்வரர்,
அம்மன்:உமையம்மை
தல விருட்சம்:சரக்கொன்றை
தீர்த்தம்:சிவகங்கை
புராண பெயர்:திருவஞ்சிக்குளம்
ஊர்:திருவஞ்சிக்குளம்
மாவட்டம்:திருச்சூர்
மாநிலம்:கேரளா

*வழிபட்டோர்:

அப்பர், சேரமான், சுந்தரர், சேக்கிழார் முதலியோர் இத்தல இறைவனை வழிபட்டவர்கள் ஆவர். பரசுராமர், தாயைக்கொன்ற பாவம் நீங்க இங்கு வழிபட்டுள்ளார். கழற்றறிவார் நாயனாரின் அவதார மற்றும் முத்தித்தலமாகும். கழற்றறிவார் நாயனார், பெருமாக்கோதையார் என்றும், சேரமான் பெருமாள் நாயனார் என்றும் அழைக்கப்படுகிறார். 

பாடியவர்கள்:

சுந்தரமூர்த்தி நாயனார் 

தேவாரப்பதிகம்:

"தலைக்குத்தலை மாலை அணிந்த தென்னே சடைமேற்கங்கை வெள்ளம் தரித்த தென்னே அலைக்கும் புலித்தோல் கொண்டு அசைத்த தென்னே அதன்மேற்கத நாகங்கச்சு ஆர்த்த தென்னே மலைக்கு நிகர் ஒப்பன வன்திரைகள் வலித்தெற்றி முழங்கி வலம்புரி கொண்டு அலைக்கும்கடல் அங்கரை மேல் மகோதை அணியார்பொழில் அஞ்சைக் களத்தப்பனே.

-சுந்தரர்

தேவாரப்பாடல் பெற்ற மலைநாட்டுத்தலம்.

பரசுராமர் தாயைக் கொன்ற பாவம் நீங்க வழிபட்ட தலம்.
 
இங்குள்ள நடராசர், சேரமான் பெருமான் பூசித்தது.
 
வீதியின் நடுவில் உள்ள பெரிய மேடை "யானை வந்த மேடை" என்று வழங்கப்படுகிறது.
 
கயிலாயத்திலிருந்து வெள்ளை யானை வந்து இத்தலத்திலிருந்து சுந்தரரைக் கயிலாயத்திற்கு ஏற்றிச் சென்றது வரலாறு.

#தல வரலாறு:

சேரநாட்டை ஆண்டு வந்த பெருமாக் கோதையார் என்ற மன்னன் சிறந்த சிவபக்தன் திருவஞ்சிக்குளம் உமாமகேஸ்வரர் மேல் தீராக் காதல் உடையவன். அவன் உள்ளத் தூய்மையுடன் சிவனை வணங்கும்போதெல்லாம் தில்லை அம்பலக்கூத்தனின் சிலம்பொலி கலீர் கலீரெனக் கேட்கும். சிலம்பொலி நாதம் கேட்டபின்பே மன்னன் அமுதுண்ணுவது வழக்கம்.

ஒருநாள் சேரமான் இறைவனை வழிபடும் போது சிலம்பொலி கேட்க வில்லை. மன்னன் திகைப்படைந்தான் தன் பக்தியில் குறை நேர்ந்துவிட்டதோ! அதனால்தான் சிலம்பொலி கேட்கவில்லையோ எனக் கருதி, தன் உடைவாளால் தன்னுயிரை மாய்த்துக்கொள்ளத் துணிந்தான். அப்போது சிலம்பொலி அதிரசேரமான் முன்பு ஈசன் தோன்றி, வருந்தாதே மன்னா! என் பக்தன் சுந்தரன் தேனினும் இனிய பாடல்களால் தினமும் என்னை அபிஷேகம் செய்வான். இன்று அதில் நான் மெய்மறந்து விட்டேன். எனவேதான் சிலம்பொலி கேட்க சற்று தாமதமாகிவிட்டது என்றார். ஈசனின் இதயத்தையே உருக்கும் பாடல்களைப் புனையும் இத்தகையதோர் சிறப்புமிக்க சிவனடியாரை அறியாது போனோமே என்றெண்ணிய சேரன், தில்லை சென்று அம்பலவாணரைத் தரிசித்தான். பின் திருவாரூர் சபாபதியைத் தரிசித்துவிட்டு சுந்தரரின் இல்லம் தேடிச் சென்றான். அவருடன் நட்பு கொண்டு அளவளாவி மகிழ்ந்தான். சேரன் தனது பூர்வீகமான திருவஞ்சிக்குளத்துக்கு வருமாறு சுந்தரருக்கு அழைப்பு விடுத்தான். அவரது அழைப்பையேற்று வஞ்சிக்குளம் சென்று, சிறிது காலம் அங்கு கோயில் கொண்டுள்ள ஈசனை ஆராதித்து மகிழ்ந்தார் சுந்தரர்.

பின் தன் நாடு திரும்பிய சுந்தரர் தொண்டை மண்டலம் பாண்டிநாடு என பல சிவத் தலங்களையும் தரிசித்து விட்டு மீண்டும் திருவஞ்சிக்குளம் சென்றார். சேரனின் நட்பு அவரை காந்தமென ஈர்த்தது. தன்னைக் காண வந்த சுந்தரரை மன்னன் மேளதாளங்களுடன் வரவேற்று. யானை மீது அமரச் செய்து ஊர்வலமாக அழைத்துச் சென்று, அரியணையில் அமர்த்தி பாத பூஜை செய்து கவுரவித்தான். சுந்தரரும் அங்கேயே தங்கி மலைநாட்டுப் பதிகள் பல கண்டு வழிபட்டார். சுந்தரர் கயிலை செல்ல வேண்டிய நேரம் வந்தது. தலைக்குத் தலை மாலை என்ற பதிகம் பாடிக்கொண்டிருந்த அவரை, வெள்ளை யானையை அனுப்பி அழைத்துவரும்படி சிவகணங்களுக்கு உத்தரவிட்டார் ஈசன். அமரர்கள் சூழ யானையின்மீது கயிலாயம் சென்ற சுந்தரரின் நெஞ்சம் நண்பனையே நினைத்தபடி இருந்தது. தன் உள்ளுணர்வால் இதையறிந்த சேரமான், சுந்தரர் விண்ணிலேறி கயிலை செல்வதைக் கண்டான். உடனே இந்த தலத்தில் இருந்து தன் வெண்புரவியில் ஏறியமர்ந்து, அதன் காதில் நமசிவாய எனும் ஐந்தெழுத்தை ஓத, விண்ணில் சென்ற யானையைத் தொடர்ந்து சென்றது குதிரை. இருவரும் கயிலையை அடைந்தனர்.

#தல சிறப்பு:

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.தனது 18வது வயதில் தன் நண்பர் சேரமானுடன் கேரளாவில் உள்ள திருவஞ்சிக்குளம் மகாதேவ சுவாமி கோயிலுக்கு வந்தார். அங்குள்ள இறைவனிடம், இவ்வுலக வாழ்வை அகற்றிட வேண்டி தலைக்கு தலை மாலை என்ற பதிகம் பாடினார். சுந்தரர் பூமியில் பாடிய கடைசிப்பதிகம் இதுதான். அப்போது இறைவன் சுந்தரரை வெள்ளை யானையில் ஏற்றி கைலாயம் அழைத்து வரும்படி தேவர்களுக்கு கட்டளையிட்டார். இறைவனின் கட்டளைப்படி சுந்தரரை தேவர்கள் கைலாயம் அழைத்து சென்றனர். அப்போது தன் உயிர்த்தோழன் சேரமானை நினைத்தார் சுந்தரர். உடனே சேரமான் குதிரையில் சுந்தரரை மூன்று முறை வலம் வந்து சுந்தரருக்கு முன்னே கைலாயம் சென்று விட்டார். சுந்தரர் இறைவனின் பெரும் கருணையை நினைத்து வானில் செல்லும் போதும் இறைவனை நினைத்து பதிகம் பாடினார். தானெனை முன்படைத்தான் அதறிந்து தன் பொன்னடிக்கே நானெனை பாடலந்தோ நாயினேனைப் பொருட்படுத்து வானெனை வந்தெதிர் கொள்ள மத்த யானை அருள்புரிந்து ஊனுயிர் வேறு செய்தான் நொடித்தான் மலை உத்தமனே இந்த பாடல் முடிந்தவுடன் சுந்தரர் கைலாயம் சென்றடைந்தார். இறைவனின் உத்தரவுப்படி வருணபகவான் இந்தப்பாடலை திருவஞ்சிக்குளம் மகாதேவர் கோயிலில் சேர்ப்பித்து விட்டார். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 266 வது தேவாரத்தலம் ஆகும்.

#பொது தகவல்:

இந்த சிவன் சோழ மன்னர்களின் குல தெய்வமாக விளங்கியவர். இங்குள்ள சிலையை சிதம்பரத்தில் இருந்து எடுத்து வந்து, 1801ல் பிரதிஷ்டை செய்ததாக கல்வெட்டு கூறுகிறது. தனி சன்னதியில் சுந்தரரும் சேரமானும் சேர்ந்த நிலையில் அருள்பாலிக்கிறார்கள்.

கோயிலின் சுற்றுப்பிரகாரத்தில் 25க்கும் அதிகமான தெய்வங்கள் தனித்தனி சன்னதிகளில் அருள்பாலிக்கிறார்கள். கேரளாவில் உள்ள கோயில்களில் இந்த அளவு சுற்றுப்பிரகாரம் வேறு எந்தக் கோயிலிலும் இல்லை.

கேரள பாணியில் அமைந்த கோயில்.
 

துவஜஸ்தம்பத்தில் அஷ்ட வித்யேஸ்வரர்களின் உருவங்கள் உள்ளன.
 

கேரள முறையைப் பின்பற்றி இத்தலத்திலும் வெடி வெடித்துப் பிரார்த்தனை செய்யும் வழக்கமுண்டாம்.

இங்குள்ள நடராசர் பஞ்சலோகச்சிலை; இதன் கீழ் "திருவஞ்சைக் களத்து சபாபதி" என்று எழுதப்பட்டுள்ளது
 

கிழக்கு ராஜகோபுர நுழைவாய் பக்கக்கற்சுவரில், யானை உருவங்கள், வெளியிலிருந்து கோயிலுக்குள் செல்வதுபோலவும், எதிர்சுவரில் கோயிலிலிருந்து வெளியே வருவதுபோலவும் அமைக்கப்பட்டுள்ளன. சுந்தரர், சேரமான் உருவங்கள் செப்புத் திருமேனிகளாக  உள்ளன.
 

சுந்தரர் கயிலை சென்ற ஆடி, சுவாதி நன்னாளன்று ஆண்டுதோறும் சுந்தரர், சேரமான் ஆகியோருக்கு அபிஷேகம் செய்து விழா கொண்டாடுகிறார்கள். இந்த ஒரு நாள் மட்டும் தமிழ்நாட்டு முறைப்படி ஆகம பூஜை செய்யப்படுகின்றது.
 

இங்குள்ள மரவேலைப்பாடுகள் காணத்தக்கவை.

கோபுரம் தேவர், தட்சிணாமூர்த்தி, பசுபதி, நட்டக்கால் சிவன், சந்தியாவேள சிவன், பள்ளியற சிவன், உண்ணி தேவர் மற்றும் கொன்னக்கால் சிவன் ஆகிய சிவபெருமானின் பல்வேறு ரூபங்களின் சித்தரிப்புகளை இந்தக்கோயிலில் காணலாம். 2000 வருடங்கள் பழமையான இந்த கோயில் சிவபெருமானின் பல்வேறு அவதார ரூப சித்தரிப்புகளுக்காகவே பிரசித்தி பெற்றுள்ளது.

தலபெருமை:

சமயக்குரவர்களில் சுந்தரர் பாடிய தலம் இது. இவர் விழுப்புரம் மாவட்டம் திருநாவலூரில் பிறந்தவர். ஒரு முறை சேர மன்னன் திருவாரூர்க்கு வர, சுந்தரர் அவரை வரவேற்று உபசரித்தார். சில நாட்களுக்கு பின் சேரமானுடன் தாமும் புறப்பட்டு பாண்டிய நாடு, சோழநாடு, கொங்கு நாடுகளில் உள்ள தலங்களை வழிபட்டுப் பதிகம் பாடிக்கொண்டே கேரளாவில் உள்ள கொடுங்கலூரை அடைந்தார். அங்கு சேரமன்னனால் உபசரிக்கப்பட்டு சில காலம் அங்கு தங்கினார். மறுபடி தமிழக கோயில்களுக்கு வந்து பாடல் பாடினார்.

தேவாரப்பாடல் பெற்ற திருத்தலங்களில் கேரளாவில் இருக்கும் ஒரே சிவத்தலம் திருவஞ்சிக்குளம் மகாதேவ சுவாமி கோயில் ஆகும். இக்கோயிலில் அம்மன் தனி சன்னதியில் இல்லாமல் சிவனின் கருவறைக்குள் அவருடன் இணைந்து சதாசிவ பாவத்தில் அருள்பாலிக்கிறார். பரசுராமர் தன் தாயின் மரணத்தினால் ஏற்பட்ட பாவம் தீர இங்கு வந்து பூஜை செய்துள்ளார்.

*மூலவர், பிற சன்னதிகள்:

இத்தல மூலவர் மகாதேவர் என்றும் அஞ்சைக்களத்தீஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார். இக்கோயிலில் அம்மன் தனி சன்னதியில் இல்லாமல் மூலவர் கருவறைக்குள் இணைந்து சதாசிவ பாவத்தில் அருள் பாலிக்கிறார்.  மூலவர் தரை மட்டத்திற்கு மேல் சில அங்குல உயரமே உள்ளார். இங்கு கணபதி, ஐயப்பன், அனுமன், நாகராசா, பசுபதி, சப்தமாதர்கள், ரிஷபம், நந்திகேசன், பள்ளியறை சிவன், பிரதோச நிருத்யா, நாகயக்சி, தட்சிணாமூர்த்தி உள்ளிட்டோருக்கான இருபத்தைந்துக்கும் மேற்பட்ட சன்னிதிகள் உள்ளன. சுந்தரருக்கும், சேர மன்னனுக்கும் தனிச்சன்னிதி இருக்கிறது. 
 மலை நாட்டிலுள்ள ஒரே திருமுறைத்தலம் என்ற சிறப்பினை இத்தலம் பெறுகிறது. 

இவ்வாலயத்தில் தினமும் மாலை வேளையில் 'தம்பதி பூஜை' நடத்தப்படுகிறது. அதன் பிறகு, 'பள்ளியறை பூஜை' நடைபெறுகிறது. இந்தப் பூஜைகளில் கலந்து கொண்டு வழிபடும் தம்பதியர்களுக்கு, விரைவில் குழந்தைப்பேறு கிடைக்கும். கணவன்- மனைவி இடையில் கருத்து வேறுபாடு இருந்தால் அவை நீங்கும். பிரிந்தவர்கள் ஒன்று சேருவார்கள் என்பது நம்பிக்கை. பவுர்ணமி தினத்தில் இக்கோவிலில் நடைபெறும் பூஜைகளில் பங்கேற்பது சிறப்புக்குரியது என்கிறார்கள். பரசுராமர் தன்னுடைய தாயைக் கொன்ற பாவம் நீங்க, இவ்வாலய இறைவனை வழிபட்டதாக சொல்லப்படுகிறது.

#ஒரே நாளில் சிவபதம் பெற்ற நால்வர்:

திருவஞ்சைக்களத்தில் இருந்து சுந்தரரும், சேரமான் பெருமானும் கயிலாயம் சென்று, சிவபதம் அடைந்தது, ஒரு ஆடி மாதம் சுவாதி நட்சத்திரம் அன்று ஆகும். இந்த நாளில் இவர்கள் மட்டுமல்லாது, இன்னும் இரண்டு பேரும் சிவதம் அடைந்தனர். அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராகத் திகழ்பவா், மிழலை நாட்டை ஆண்டு

வந்த குறுநில மன்னர் மிழலைக் குறும்பர். சிவனடியார்களுக்கு உணவு அளித்தும், செல்வங்களைக் கொடுத்தும் தொண்டு புரிந்து வந்தார். தினமும் சுந்தரமூர்த்தி நாயனாரின் திருத்தொண்டத் தொகைப் பதிகத்தை விதிப்படி வணங்கியும், பாடியும் சுந்தரரை நினைத்து துதித்து வந்தவர். அஷ்டமா சித்திகளும் கைவரப் பெற்றவர். சுந்தரர் திருக்கயிலையை அடைந்ததை தனது இருப்பிடத்தில் இருந்தே உணர்ந்து கொண்ட மிழலைக் குறும்பர், 'சுந்தரர் போன பின்பு நான் அவரைப் பிரிந்து வாழமாட்டேன்; யோக நெறியின் மூலம் சிவனடியை அடைவேன்' என்று கூறி, அதன்படியே சிவபதம் அடைந்தார்.

வெள்ளை யானை மீது சுந்தரரும், குதிரையில் சேரமான் பெருமானும் கயிலை நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். அப்போது பூமியில் விநாயகரை பூஜித்துக் கொண்டிருந்தார், அவ்வையார். அவரிடம் "நீயும் எங்களுடன் கயிலை வா" என்று அழைத்தார், சுந்தரர். அவ்வையாருக்கும் கயிலை செல்ல வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது. அதனால் விநாயகருக்கு செய்து கொண்டிருந்த பூஜையை விரைவாக முடிக்க எண்ணினார். அதை உணர்ந்து கொண்ட விநாயகப்பெருமான் அசரீரியாக, "அவ்வையே.. எனக்கு செய்ய வேண்டிய வழிபாட்டை வழக்கம் போல நிதானமாகவே செய்.. சுந்தரருக்கு முன்பாக நான் உன்னை கயிலையில் கொண்டு போய் சேர்ப்பேன்" என்றார். அதன்பின்னர் விநாயகரை துதித்து, 'சீதக் களபச் செந்தா மரைப்பூம் பாதச்...' என்ற பாடலைப் பாடினார். 72 அடிகளைக் கொண்ட இந்தப் பாடல் 'விநாயகர் அகவல்' என்று அழைக்கப்படுகிறது. அவ்வை வழிபாட்டை முடித்ததும், விநாயகர் தன்னுடைய துதிக்கையில் அவ்வையாரை தூக்கிக் கொண்டு போய் கயிலாயத்தில் விட்டு விட்டார். அதன்பிறகே சுந்தரரும், சேரமானும் கயிலாயம் வந்து சேர்ந்தனர்.

#திருச்செந்தூரில் வெள்ளை யானை உலா:

ஆடி மாதம் சுவாதி நட்சத்திரத்தில், 63 நாயன்மார்களில் ஒருவரான சுந்தரர் கயிலாயம் சென்று சிவபதம் அடைந்தார். அவர் கயிலாயம் செல்ல உதவியது, வெள்ளை யானை ஆகும். மேலும் அவர் கயிலாயம் சென்றதும், சிவபெருமான் சுந்தருக்கு ஐராவதம் என்னும் வெள்ளை யானை வடிவில் காட்சி தந்ததாகவும் சொல்லப்படுகிறது. இதை நினைவுகூரும் வகையில், திருச்செந்தூர் சுப்பிரமணியர் கோவிலில், ஆடி மாத சுவாமி நட்சத்திரம் அன்று, வெள்ளை யானை வீதி உலா நடத்தப்படுகிறது. அப்போது கோவில் யானைக்கு, திருநீறு கொண்டு உடல் முழுவதும் பூசி வெள்ளையாக மாற்றுகின்றனர். அந்த வெள்ளை யானையும், தங்கச் சப்பரத்தில் சுந்தரமூர்த்தி நாயனாரும் கோவிலில் இருந்து புறப்பட்டு, சன்னிதி தெரு, உள் மாடவீதி மற்றும் ரத வீதிகள் வழியாக உலா வந்து மீண்டும் கோவிலை அடைவர்.

#கல்வெட்டுக்கள்:

கோயிலின் ஒரு பகுதியை கொடுங்கல்லூரை தலைநகராகக் கொண்டு இந்த இடத்தை ஆண்ட சேரமான் பெருமாளால் கட்டப்பட்டது.

கி.பி 1670 இல் டச்சுக்காரர்கள் கோயிலைத் தாக்கி இரண்டு கோபுரங்களை இடித்துத் தள்ளினர். பாரம்பரியக்  கதைகளின்படி, சேரமான் பெருமாள் கொடுத்ததாகக் கருதப்படும் சாமோரின் வாளும் அழிக்கப்பட்டது/எரிக்கப்பட்டது. 

மைசூரைச் சேர்ந்த திப்பு சுல்தானும் இந்த இடத்தை ஆக்கிரமித்து தங்க நகைகள் மற்றும் சிறந்த செப்பு முலாம் பூசப்பட்ட பொருட்களை கொள்ளையடித்தார். தளவா கேசவதாஸ் பிள்ளையின் திருவிதாங்கூர் இராணுவத்தால் அவர்கள் தப்பி ஓட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. நமஸ்கார மண்டப கல்வெட்டு, "சாஸ்திர பாஹ்யா" என்பவரால் இந்த கோயில் அழிக்கப்பட்டதாக பதிவு செய்கிறது. இந்த கோயில்  கி.பி 1801 ஆம் ஆண்டில் கொச்சி இராச்சியத்தின் பாரம்பரிய முதலமைச்சர் பாலியத் அச்சன் / பெரும்படப்பு ஸ்வரூபம் என்பவரால் மீண்டும் கட்டப்பட்டது. சமஸ்கிருதத்தில் உள்ள கல்வெட்டு இவ்வாறு கூறுகிறது...

யாஹ்; கச்சித் சாஸ்த்ர பாஹ்யோயம் அதாஹ துஹிதை,
கரயத்வ ததாதா
காலே தேவாதிரம்யாம் த்ருவமிஹனிலயம்,
மடபூபஞ்சயம்தம்
கோவிந்দ பாலியேஸோ গிரிஸமாভிநவீ
கரயன் வஞ்சுலேசம்
ந்யக்ஷேநோந்நாগধா ஸௌயம் கலிதখদா
சஸ்ரபிக்ஷிக்தாக்ய தத்தா"

மேலே உள்ள கல்வெட்டு, மாட பூபதி (கொச்சி ஆட்சியாளர்) கட்டளையிட்ட ஒரு கோவிந்தரான பாலியேசா, வஞ்சுலேசா கோயிலை மீட்டெடுத்ததாகவும், சிறிது காலத்தில் ஒரு சாஸ்திர பாஹ்யா அல்லது மதவெறியரால் இழிவுபடுத்தப்பட்டதாகவும் பதிவு செய்கிறது. இந்த புனரமைப்பு கி.பி 1801 இல் நடந்தது, மேலும் மதவெறி இழிவு 18 ஆம்  நூற்றாண்டின் பிற்பகுதியில் மைசூர் படையெடுப்புகளைக் குறிக்கலாம் .

1831 ஆம் ஆண்டு சுத்ரு மண்டபத்தின் ஆதிஸ்தானத்தில் உள்ள மற்றொரு கல்வெட்டு, கொச்சி மன்னர் ராம வர்மா, தீப மண்டபத்தை தனது மந்திரியான வஞ்சுலேசன் என்றும் அழைக்கப்படும் சிவபெருமானுக்குக் கட்டியதாகக் கூறுகிறது. மற்றொரு வட்டெழுத்து கல்வெட்டு, ஒரு தோட்டம்/நந்தவனத்தின் பரிசைப் பதிவு செய்கிறது.

இந்த செப்புத் தகடு, கி.பி 345 ஆம் ஆண்டில் சேர மன்னரால் சிரிய கிறிஸ்தவ குடியேறிகளின் தலைவரான க்னை தோமாவுக்கு வழங்கப்பட்டதாக ரெவ். டாக்டர் ஹெர்மன் குண்டர்ட் பதிவு செய்துள்ளார், இது இந்தக் கோயிலின் வடக்கு நுழைவாயில் கோபுரத்தில் தோண்டப்பட்டது. இதன் நகல் பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் உள்ளது.

ஸ்ரீ காசி மடம் ஸ்ரீ-ல-ஸ்ரீ காசி வாசி அருள் நந்தி  தம்பிரான் "தேவர பரிசு அரகட்டளை" என்ற அறக்கட்டளையை நிறுவினார், அதற்காக ரூ.5000 நன்கொடையாக வழங்கினார். மேலும் மகேஸ்வர பூஜை நடத்துவதற்கான அறக்கட்டளையையும் நிறுவினார்,  அதற்காக ரூ.7000 இந்த கோயிலுக்கு நன்கொடையாக வழங்கப்பட்டது.

இந்தக் கோயில் இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையின் (ASI) கட்டுப்பாட்டில் உள்ளது.

திருவிழா:

இந்த கோயிலில் நடத்தப்படும் ஆனயோட்டம் எனப்படும் யானைப்பந்தயமும் மிகப்பிரசித்தமான நிகழ்ச்சியாக அறியப்படுகிறது. வருடாந்திர கோயில் திருவிழாவின் அங்கமாக இந்த ஆனயோட்டம் நடத்தப்படுகிறது. 

மாசி மாதம் மகாசிவராத்திரி 8 நாள் உற்சவமாக கொண்டாடப்படுகிறது. அமாவாசையில் ஆறாட்டு நடக்கிறது.

சுந்தரர் கயிலாசம் சென்ற ஆடி சுவாதி நாளன்று ஆண்டுதோறும் சுந்தரருக்கும், சேரமானுக்கும் அபிஷேகம் செய்து விழா கொண்டாடப்படுகிறது. இந்த ஒரு நாள் மட்டும் தமிழ்நாட்டு முறைப்படி ஆகம பூசை செய்யப்படுகிறது.

இத்தகைய சிறப்புகளைக்கொண்ட இந்த திருவஞ்சிக்குளம் மஹாதேவா கோயில் இந்திய தொல்லியல் துறையினரால் பாதுகாக்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

திறக்கும் நேரம்:

காலை 5 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி:

அருள்மிகு மகாதேவர் கோயில், திருஅஞ்சைக்களம்,கொடுங்கலூர்-680 664. திருச்சூர் மாவட்டம், கேரளா மாநிலம்.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்

Followers

பிள்ளையார் விரும்பும் 'மோதகம்' நைவேத்தியம் என்றால் என்ன❓

பிள்ளையார் விரும்பும் 'மோதகம்' நைவேத்தியம் மோதக் என்றால் உற்சாகம், மகிழ்ச்சி என்று பொருள். அகம் என்ற சொல்லுக்கு ‘வழங்கக்...