Showing posts with label #sivan #hindu #india. Show all posts
Showing posts with label #sivan #hindu #india. Show all posts

Tuesday, May 9, 2023

அறியாமை நீங்கி இறையருள் பெறுவதே விளக்கு வழிபாட்டின் அடிப்படையாகும்

அறியாமை நீங்கி இறையருள் பெறுவதே விளக்கு வழிபாட்டின் அடிப்படையாகும்.
     “ஆதிப்பிரானே! என் அல்லல் இருள் அகலச்சோதிப்
     பிரகாசமாய்த் தோற்றுவித்தால் ஆகாதோ? 
     ஏதும் தெரியாது எனைமறைத்த வல்இருளை
     நாத! நீ நீக்கஒரு ஞானவிளக்கு இல்லையோ?” (தாயுமானவர்)

அகல், எண்ணெய், திரி, சுடர் இவையெல்லாம் சேர்ந்ததே விளக்கு. நெய் விளக்கு ஏற்றும் இடத்தில் மகாலக்ஷ்மி குடியிருப்பாள்.

எந்த கடவுளுக்கு தீபம் ஏற்றினாலும் அகல் விளக்கில் தீபம் ஏற்றுவது சிறந்தது. அதற்கு காரணமும் உண்டு. அதாவது அகல் விளக்கு ஒரு ஏழை ஒருவனால் ஐம்பூதங்களைக் [மண், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம்] கொண்டு செய்யப்படுகிறது. 

அவன் களிமண்ணில் நீரை ஊற்றி, சூரிய ஒளியில் காய வைத்து, காற்றின் உதவி கொண்டு நெருப்பில் இட்டு ஒரு அழகான அகல் விளக்கை செய்கிறான். அகல் விளக்கில் தீபம் ஏற்றுவதையே அம்பாள் விரும்புகிறாள்.

அகல் விளக்கின் அர்த்தம் தெரிந்து கொள்வோம்.
 
1. அகல் விளக்கு - சூரியன்

2. நெய்/எண்ணெய்-திரவம் - சந்திரன்
 
3. திரி - புதன்
 
4. அதில் எரியும் ஜுவாலை - செவ்வாய்

5. இந்த ஜுவாலையின் நிழல் கீழே - ராகு

6. ஜுவாலையில் உள்ள மஞ்சள் நிறம் - குரு
 
7. ஜுவாலையில் அடியில் அணைந்தவுடன் இருக்கும் கரி - சனி
 
8. வெளிச்சம் பரவுகிறது-இதுஞானம் - கேது
 
9. திரி எரிய எரிய குறைந்துகொண்டே வருவது - சுக்கிரன் (ஆசை)

அதாவது ஆசையை குறைத்துக் கொண்டால் சுகம் என அர்த்தம். ஆசைகள் நம்மை அழிக்கிறது ;  மோட்சம் கிடைக்காமல் மீண்டும் மீண்டும் கர்மா நம்மை  மனிதப்பிறவியாக ஜனனம் எடுக்கச்செய்கிறது. இதுவே அகல் தீபம் நமக்கு உணர்த்தும் தத்துவம்.

இன்னுமொரு காரணம்,

அகல் விளக்கை வாங்குவதால் அந்த ஏழைக் குடும்பமும் பிழைக்கிறது. நம்மை அறியாமல் ஒரு நல்ல செயல்களை செய்கிறோம். இதுவும் புண்ணியக் கணக்கில் போய் சேரும்.

Saturday, March 25, 2023

இறைவன் திருநாமம் ஶ்ரீ திரிபுராந்தகேஸ்வரசுவாமிஇறைவி திருநாமம் ஶ்ரீ பார்வதி தேதி (அ) ஶ்ரீ பாலதிரிபுரசுந்தரி

திரிபுராசுரர்களை 
அழித்த அருள்மிகு திரிபுராந்தகேஸ்வரர் கோயில்...!
இந்த அற்புதமான திருகோயில் ஆந்திர மாநில பிரகாசம் மாவட்டம் திரிபுராந்தகம்  எனும் இடத்தில் அமைந்துள்ளது.

ஓங்கோல் 93 கி.மீ. விஜயவாடா 150 கி.மீ. மார்கபூர் 40 கி.மீ. வினுகொண்டா 40 கி.மீ.தூரத்தில் உள்ளது. 

இறைவன் திருநாமம்  ஶ்ரீ திரிபுராந்தகேஸ்வரசுவாமி
இறைவி திருநாமம் ஶ்ரீ பார்வதி தேதி (அ) ஶ்ரீ பாலதிரிபுரசுந்தரி

திரிபுராந்தகேஸ்வரர் கோவில் மலை உச்சியில் உள்ளது மற்றும் பாலா திரிபுரசுந்தரி கோவில் கீழ்நோக்கி உள்ளது. 

இந்த பார்வதி கோவில் குளத்தின் நடுவில் அமைந்துள்ளது மற்றும் மழை நாட்களில் நீரால் சூழப்பட்டுள்ளது.

சிவபுராணத்தின்படி, இந்த இடத்தில் தான் சிவபெருமான், ஸ்ரீ பால திரிபுர சுந்தரியின் உதவியுடன் திரிபுராசுரர்களை (மூன்று நகரங்களை ஆளும் அரக்கர்கள்) அழித்தார்.

அவள் ஒரு சிறிய பெண் வடிவத்தில் இருப்பதால் இங்கு அவள் பாலா திரிபுர சுந்தரி என்று அழைக்கப்படுகிறாள்.

சிவபெருமான் அசுரர்களுடன் சேர்ந்து மூன்று நகரங்களை அழித்ததால் அவர் திரிபுராந்தகேஸ்வரர் என்றும் இந்த இடம் திரிபுராந்தகம் என்றும் அழைக்கப்படுகிறது. 

திரிபுராந்தக பாலா திரிபுரசுந்தரி தேவி (சுயம்பு) ஆதிபராசக்தியின் முதல் அவதாரம். அவள் அங்கு ஒரு சிறுமியின் வடிவத்தில் வசிப்பதாக நம்பப்படுகிறது.

கோவில் வளாகம் மற்றும் தெய்வம் ஸ்ரீ பால திரிபுர சுந்தரி மலையின் கீழே, ஒரு தொட்டியின் நடுவில் அமைந்துள்ளது மற்றும் திரிபுராந்தகம் தொட்டி நிரம்பியதும் அல்லது பாதி நிரம்பியதும் நீரின் நடுவில் இருக்கும். 

முதலில் திரிபுரசுந்தரி தேவியின் தெய்வம் உக்ர ரூபத்தில் இருந்தது, எனவே பக்தர்கள் அவளுடைய தரிசனத்திற்கு பயந்தார்கள்.

பின்னர், ஸ்ரீ ஆதி சங்கராச்சாரியார் ஸ்ரீ சக்கரத்தை நிறுவினார், இது தெய்வத்தை குளிர்ச்சியாக ஆக்கியது, 

இது அனைத்து பக்தர்களும் தங்கள் அமைதியானவடிவத்தை தங்கள் வாழ்க்கையை நிறைவேற்ற உதவும்.
கடம்ப வ்ருக்ஷம் மிகவும் பிரபலமான மரம், இது திரிபுரா சுந்தரி தேவிக்கு மிகவும் பிடித்திருந்தது. இந்த மரத்தை காசியிலும் இந்த இடத்திலும் மட்டுமே பார்க்க முடியும்.

கடம்ப வ்ருக்ஷம், சித்தி க்ருஹா, ஸ்ரீ சக்ரம் மற்றும் அபராஜேஸ்வரா கோயில் ஆகியவை இங்கு பார்க்க வேண்டிய மற்ற முக்கிய இடங்கள் மற்றும் சித்தி கணபதி, பார்வதி தேவி போன்றவற்றுக்கு அருகிலேயே சில கோவில்கள் உள்ளன.

சிவராத்திரி மற்றும் நவராத்திரி விழாக்கள் இங்கு மிகவும் பிரசித்தி பெற்றவை பௌர்ணமி வசந்தோத்ஸவம்  மற்றும் ஒவ்வொரு ஞாயிறு, திங்கள் மற்றும் செவ்வாய்கிழமைகளிலும் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்

பிறந்த நாள், திருமண நாள், இறப்பு நாள் மற்றும் பிற சிறப்பு நாட்களில் அன்னதானம் வழங்கப்படுகிறது.

தரிசன நேரம் காலை 7 மணி முதல் 1 மணி வரை மாலை 2.30 மணி 
முதல் 6.30 மணி வரை

Thursday, October 27, 2022

தலைமுறை பாவங்கள் தீர நீங்கள் வணங்க வேண்டிய தலம் திருவெண்காடு!!!_

_21 தலைமுறை பாவங்கள் தீர  நீங்கள் வணங்க வேண்டிய தலம் திருவெண்காடு!!!_




மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காட்டில் ஸ்ரீசுவேதாரண்யேஸ்வரர் திருத்தலம் அமைந்துள்ளது. யுகம் பல கண்ட கோயில் இது. நவகிரகங்களில் ஒன்றான புதன் பகவான் இங்கு வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.

காசிக்கு சமமான ஆறு தலங்களில் ஒன்றானது திருவெண்காடு. இத்தலத்திலுள்ள ருத்ர பாதம் மற்றும் நவகிரகங்களில் ஒன்றான புதன் பகவானை வழிபட்டால் பூர்வ ஜன்ம பாவங்கள் யாவும் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 11வது தலம்.

இத்தலத்து இறைவனுக்கு, திருவெண்காடர், திருவெண்காட்டு தேவர், திருவெண்காடையார், திருவெண்காடுடைய நாயனார், திருவெண்காட்டுப் பெருமான் ஆகிய பெயர்களும் இவருக்கு உண்டு. இவரே இத்தலத்தின் நாயகர். இலிங்க வடிவில் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளியுள்ளார்.

பிரம்மனிடம் பெற்ற வரத்தால், மருத்துவன் என்னும் அசுரன் தேவர்களுக்கு துன்பத்தை விளைவித்தான். சிவபெருமான் அருளியபடி தேவர்கள் வேற்றுருவில் திருவெண்காட்டில் வாழ்ந்து வந்தனர். அசுரன் திருவெண்காட்டிற்கு வந்தும் போர் செய்தான். அசுரன் சிவனை நோக்கி தவம் இருந்து, சூலாயுதம் பெற்று ரிடப தேவரை சூலத்தால் தாக்கி காயப்படுத்தினான். ரிடப தேவர் சிவனிடம் முறையிட, சிவன் கோபம் கொண்டார். அப்பொழுது அவருடைய ஐந்து முகங்களில் ஒன்றான ஈசான்ய முகத்தினின்று அகோர மூர்த்தி தோன்றினார். இந்த அகோர உருவை கண்ட மாத்திரத்திலேயே அசுரன் சிவனிடம் சரணாகதி அடைந்து வணங்கினான். சரணடைந்த அசுரனை அகோர மூர்த்தியின் காலடியிலும், காயம்பட்ட ரிடப தேவரை சுவேதாரண்யவரர் சுவாமி நிறுத்த மண்டபத்திலும் இன்றும் காணலாம்.

நரம்பு சம்பந்தமான அனைத்து நோய்களும் தீர்க்கும் தலமாக இது கருதப்படுகிறது.

திருவெண்காடு தலத்தில் ருத்ரபாதம் உள்ளது. இதை வழிபட்டால் 21 தலைமுறை பாவங்கள் தீரும் என்பது ஐதீகம். இந்த கோவில் பற்றி 20 அரிய தகவல்களை அறிந்து கொள்ளலாம்.

1. திருவெண்காடு தலத்தில் ருத்ரபாதம் உள்ளது. இதை வழிபட்டால் 21 தலைமுறை பாவங்கள் தீரும் என்பது ஐதீகம். காசியில் உள்ள விஷ்ணு பாதத்தை வழிபட்டால் 7 தலைமுறை பாவங்கள்தான் விலகும். ஆனால் திருவெண்காடு தலத்தில் யார் ஒருவர் ருத்ர பாதத்தை முறைப்படி வழிபடுகிறார்களோ அவர்களுக்கு காசியை விட 3 மடங்கு கூடுதல் பலன்கள் கிடைக்கும்.

2. வித்தயாகரகன் எனப்படும் புதன் பகவான் அன்னை வித்யாம்பிகையின் அரசாட்சிக்குட்பட்டவர் போன்றும், தாயின் அரவணைப்போடும் கூடி வீற்றிருக்கும் சேய் போன்றும், அன்னையர் கோயிலுக்கு இடது பாகத்தில் தன் கோயிலை அமைத்துக் கொண்டு அருள் பாலிக்கிறார்.

3. இத்தலத்தில் புதன், தன் அலி தோசம் நீங்கி நவகோள்களில் ஒருவரானார் என்பது புராண வரலாறு. இவர் செய்த மாதவத்தின் பயனாகவே ரிக் வேதத்தின் ஐந்தாவது காண்டத்துக்கு அதிபதி ஆனார். திருவெண்காடு நவகிரக தலங்களில் மிகவும் புகழும் சிறப்பும் பெறக் காரணமாக அமைந்தவர்.

4. புதன் திசை ஒவ்வொரு வாழ்விலும் 17 ஆண்டுகள் நீடிக்கும். எனவேதான் திருவெண்காட்டில் உள்ள புதன் சன்னிதானத்தில் 17 தீபங்கள் ஏற்றி வைத்து வழிபட வேண்டும் என்கிறார்கள். 17 தடவை சுற்றி வந்து வழிபடுவது மிகவும் நல்லது.

5. ஆலயங்களில் 28 வகையான ஆகம விதிகள் கடைபிடிக்கப்படுகின்றன. ஒவ்வொரு ஆலயங்களிலும் ஒவ்வொரு வகையான ஆகம கடைப்பிடிக்கப்படும். ஆனால் திருவெண்காடு தலத்தில் 3 வகை ஆகமங்கள் கடைப் பிடிக்கப்படுகின்றன.

6. பொதுவாக புதன் கிரகத்தை ஆணும் இல்லாத, பெண்ணும் இல்லாத அலி கிரகம் என்று சொல்வார்கள். ஆனால் திருவெண்காட்டில் புதன் பகவான் ஆண் கிரகமாக வீற்றிருந்து அருள்பாலித்து வருகிறார்.

7. திருவெண்காடு புதனை வழிபட்டால் கல்வி, ராஜயோகம், குபேர சம்பத்து, திருமணம், செல்வம், செழிப்பு, கலைத் துறைகளில் மேன்மை உள்பட 8 வகையான அதிகாரங்கள் கைகூடும்.

8. திருவெண்காட்டில் உள்ள 3 குளத்திலும் நீராடி பிள்ளைஇடுக்கி அம்மனை வழிபட்டால் நிச்சயம் குழந்தைபேறு கிடைக்கும்.

9. சுவாமி, அம்மன், புதன் மூவருக்கும் முறைப்படி பூஜை செய்தாலும் குழந்தை நிச்சயம் உண்டு.

10. சிவனின் 64 மூர்த்தங்களுள் ஒன்றான அகோரமூர்த்தியை இக்கோயிலில் மட்டுமே காணலாம். இவர் நவதாண்டவம் புரிந்தார். எனவே, இதை “ஆதி சிதம்பரம்” என்பார்கள். திருவெண்காடு அகோரமூர்த்தியை குலதெய்வமாக ஏற்று வழிபடுபவர்கள் நாகை மாவட்டத்தில் கணிசமாக உள்ளனர்.

11. ஆலயத்தின் தனிச்சிறப்புக்கு உரியவர் அகோர மூர்த்தி. இவர் மருத்துவாசுரனை அடக்குவதற்காக சிவனின் ஈசான்ய முகத்திலிருந்து தோன்றியவர். இவரது வீரக் கோலம் இங்கு சிறப்பாக இருக்கிறது.

12. சிவபெருமான் தன் பக்தர்கள் பொருட்டு 64 வித உருவங்களில் காட்சியளித்து வருகிறார். இது 43 வது உருவம் ஆகும். இறைவனின் வீரச் செறிவை காட்டும் கோலம். பெயரில் சற்று கடுமை இருந்தாலும் அருள் நிலையில் இந்த மூர்த்தி உள்ளார்.

13. மூலவரைப் போலவே உற்சவரும் உள்ளார். நடப்பவர் ஒருவர் இடது காலை முன்வைத்து எப்படி வலது காலைப் பெயர்த்து அடியெடுத்து வைக்க முனைவாரோ அதே போல் பெருமான் தன் நடையழகைக் காட்டும் விதமாக உள்ளார் என்பது சிறப்பு.

14. அட்ட வீரட்டதலங்களில் இத்தலம் சேராவிட்டாலும் சிவபெருமானின் வீரச்செயல் நிகழ்ந்த தலம் இது. இந்த அகோர மூர்த்தியை திருவெண்காடு தலத்தை தவிர்த்து வேறு எங்கும் கண்டு விட முடியாது.

15. திருவெண்காடு தலத்தில் ஹோமம் செய்தால் பில்லிசூனியம், திருஷ்டிகள் விலகும். கோர்ட்டு வழக்கு களில் வெற்றி கிடைக்கும்.

16. அகோரமூர்த்தியை வழிபட்டால் பித்ரு தோஷம் நீங்கும். சகோதரர்களுக்கு இடையே ஏற்பட்டு மனகசப்பும், கருத்து வேறுபாடுகளும் விலகும்.

17. இத்தலத்து புராணப்படி மருத்துவன் எனும் அசுரனை எதிர்த்து போரிட சென்ற நந்தியை அந்த அசுரன் 9 இடங்களில் ஈட்டியால் குத்தியதாக வரலாறு உள்ளது. அந்த நந்தியை சிவபெருமானுக்கு எதிரே காணலாம். அந்த நந்தி உடம்பில் 9 இடங்களில் ஈட்டியால் குத்துப்பட்ட துளைகள் உள்ளன. நந்திக்கு அபிஷேகம் நடக்கும் அதை பார்க்க முடியும். இந்த நந்திக்குதான் பிரதோஷ வழிபாடுகளும் நடத்தப்படுகின்றன.

18. திருவெண்காடு தலம் மொத்தம் 17 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. இங்குள்ள சன்னதிகளை பொறுமையாக பார்த்து வந்தால் ஆலய வழிபாட்டுக்கான ஆத்ம திருப்தியை பெறலாம்.

18. திருவெண்காடு தலத்தில் புதனை வழிபட வருபவர்களில் சிலர் நேரிடையாக புதன் சன்னதிக்கே சென்று விடுகிறார்கள். இது தவறு. முதலில் சுவாமியையும், பிறகு அம்பாளையும் வழிபட்ட பிறகே இறுதியில் புதன் சன்னதிக்கு சென்று பரிகார பூஜைகளை மேற்கொள்ள வேண்டும்.

20. இத்தலத்தின் தன்னிகரில்லா தலைவி இவள். திருவெண்காடரின் சக்தி வடிவம் இவள். மாதங்க முனிவருக்கு மகளாகத் தோன்றி, மாதங்கி என்ற பெயருடன் சுவேதாரண்யரை நோக்கித் தவம் இருந்து அவரைத் தன் கணவனாகப் பெற்றார். பிரம்மனுக்கு வித்தை கற்பித்ததால் பிரம்ம வித்தயாம்பிகையானாள். நான்கு திருக்கரங்களில் இடது மேற்கரத்தில் தாமரைப்பூ(செல்வச் செழிப்பு) வலது மேற்கரத்தில் அக்கமாலை(யோகம்) அணி செய்வதைக் காணலாம். கீழ்க்கரம் அபய கரம். இடது கீழ்கரம் திருவடிகளின் பெருமையை பேசுவதாகும். பணிந்தார் எவரும் தெய்வம் போல உயரலாம் என்பதாகும். பெருமை வாய்ந்த சக்தி பீடங்களுள் இதுவும் ஒன்று.

21. இத்தலத்தில் முறைப்படி பூஜைகள் செய்ய விரும்புபவர்கள் விநாயகர், மூலவர், அகோர மூர்த்தி, அம்பாள் மற்றும் புதன் ஆகிய 5 பேருக்கும் தவறாமல் தனித்தனியாக அர்ச்சனை செய்ய வேண்டும்.

22. இத்தலத்தில் உள்ள காளியின் சிலை பயங்கரமான முக வடிவமைப்புடன் உள்ளது. ஆனால் இந்த காளி சாந்தமானவள். பக்தர்கள் கேட்கும் வரம்களை எல்லாம் தவறாது தருபவள்.

23. சுவேத வனத்தில் எழுந்தருளிய மாசக்தியாதலால் “சுவேதன காளி” என்று அழைக்கப் படுகிறாள். எட்டு கரங்கள், பாசம், சக்கரம், வாள், உடுக்கை, கேடயம், கபாலம் ஆகிய படைக் கலன்களை தாங்கியுள்ளார். காட்சியில் எடுப்பும் மிடுக்கும் கொப்பளிக்கிறது. உடலின் சாய்வுக்கு ஏற்ப வலக்காலைப் பீடத்தின் மீது உயர்த்தி வைத்துக் கொண்டு இடக்காலைத் தொங்க விட்டிருக்கிறார். பக்தியோடு கலையை ஆராதிப்பவர்களுக்கு இவள் அருள் புரிகிறாள்.

24. காளி சன்னதியின் முன்பு மிகப்பெரிய பலி பீடம் உள்ளது. இந்த பலிபீடம் மிக மிக சக்தி வாய்ந்தது. எனவே இந்த பலி பீடத்தை பக்தர்கள் தொடாமல் வணங்க வேண்டும்.

25. துர்க்கையின் உருவைக் கண்ட மாத்திரத்தில் மேற்கண்டு அடிவைக்க மனம் வராது. மகிஷனை அழித்த இந்த மாதேவி இப்படியும் கூட அழகினளாக இருப்பாளா என்ற ஆச்சர்யம் வரும். இவள் தன் எட்டு கரங்களில் சங்கு, சக்கரம், வில், அம்பு உடையவளாக காட்சி தருகிறாள்.

26. திருஞான சம்பந்தர் இத்தலத்தின் வட எல்லைக்கு வந்த போது அவருக்கு ஊரெல்லாம் சிவலோகமாகவும், மணலெல்லாம் சிவலிங்கமாகவும் தோன்றின. எனவே இத்தலத்தில் காலை வைக்க பயந்து “அம்மா” என்றழைத்தார். இவரது குரலைக்கேட்ட பெரியநாயகி இவரை தன் இடுப்பில் தூக்கி கொண்டு கோயிலுக்குள் வந்தார். சம்பந்தரை இடுப்பில் தாங்கிய வடிவில் பெரியநாயகியின் சிலை அம்மன் கோயிலின் பிரகாரத்தில் உள்ளது. இதனால் அம்மன் “பிள்ளையிடுக்கி அம்மன்” ஆனாள்.

27. இத்தலத்தில் உள்ள அகோரமூர்த்தி சன்னதி மண்ட பத்தில் தர வரலாறு ஓவியங்களாக வரையப்பட்டுள்ளது.

28. நடராஜர் சன்னதி சிதம்பரம் தலத்தில் இருப்பது போன்றே வடிவமைத்து கட்டப்பட்டுள்ளது. சிதம்பரத்தை போல நடராஜருக்கு அருகில் பெருமாளுக்கு தனி சன்னதி உண்டு. இந்திரன், ஐராவதம், விஷ்ணு, சூரியன், சந்திரன், அக்னி ஆகியோர் வழிபட்டுள்ளார்கள். பட்டினத்தார் சிவதீட்சை பெற்றதும், மெய்கண்டார் அவதரித்ததும் இங்குதான்.

29. இங்குள்ள நடராஜரை “ஆடவல்லான்” என்று கல்வெட்டு கூறுகிறது. இத்தலம் ஆதிசிதம்பரம் என்றே அழைக்கப்படுகிறது. ஸ்படிக லிங்கமும், இரகசியமும் இங்கும் உள்ளது. தினந்தோறும் ஸ்படிக லிங்கத்துக்கு நான்கு அபிசேகங்களும், நடராஜ பெருமானுக்கு ஆண்டுக்கு ஆறு அபிசேகங்களும் நடைபெறுகிறது.

30. பட்டினத்தார், இத்தலத்தில் வந்து திருவெண்காட்டு நாதரே அவருக்கு குருநாதராக இருந்து சிவதீட்சை தந்த தலம். இத்திருவிழா, இத்தலத்தில் இப்போதும் நடைபெறுகிறது. பட்டினத்தாருக்கு திருவெண்காடர் என்ற பெயர் பெற காரணமாக இருந்து கோயில் இது.

31. இத்தலத்தில் வழிபடுவோர்களுக்கு துயரம் நீங்கி மனஅமைதி கிடைக்கும். மேலும் வேலை வாய்ப்பு, தொழில் விருத்தி, உத்தியோக உயர்வு ஆகியவற்றுக்காகவும் இங்கு பிரார்த்தனை செய்தால் சுவாமி பக்தர்களது வேண்டுதல்களை நிச்சயம் நிறைவேற்றி கொடுப்பார் என நம்புகின்றனர்.

32. திருவெண்காடு தலத்தில் சுற்றுப்பிரகாரங்கள் நல்ல பெரியதாக உள்ளன. ஆங்காங்கே மரங்கள் இருப்பதால் பக்தர்கள் தங்கி ஓய்வெடுக்க வசதி உள்ளது.

33. சுற்றுலா வருபவர்கள் மற்றும் புதன்கிழமைகளில் வருபவர்கள் ஆலய மண்டபத்தில் தங்குவதற்கு வசதி உள்ளது. பக்தர்களுக்காக புதன்கிழமை மட்டும் மதியம் கூடுதலாக சில மணிநேரம் பூஜை நீடிக்கிறது. எனவே பூஜை நேரத்தை கணக்கிட்டு சுற்றுப்பயணத்தை அமைப்பது நல்லது!!

34. நவக்கிரகங்களில் புதன் பகவான், கல்வி, அறிவு, பேச்சுத்திறமை, இசை, ஜோதிடம், கணிதம், சிற்பம், மருத்துவம், மொழிகளில் புலமை ஆகியவற்றை தர வல்லவர். இவருக்கு இத்தலத்தில் தனி சன்னதி உள்ளது. புதனின் தந்தையான சந்திரனின் சன்னதியும், சந்திர புஷ்கரணி தீர்த்தமும், புதன் சன்னதிக்கு எதிரில் அமைந்துள்ளது. ஜாதகத்தில் புதன் சரியாக அமையாவிட்டால் புத்திரபாக்கியம் கிடைக்காது. அத்துடன் அறிவுக்குறைபாடும், நரம்புத்தளர்ச்சியும் ஏற்படும். இப்படி குறைபாடுகள் உள்ளவர்கள் இங்கு வந்து சந்திர புஷ்கரணி தீர்த்தத்தில் நீராடி புதன் பகவானை வழிபட்டால் தோஷ நிவர்த்தி பெறலாம். இசைக்கு அதிபதியான புதனை இசைக்கலைஞர்களும், திரைப்படக்கலைஞர்களும் வழிபட்டுப் பயன் பெறுகின்றனர். நவகிரகங்களில் இது புதன் சிவபெருமானை பூஜித்து பேறு பெற்ற தலம்.

35. இத்தலத்தில் மூர்த்தி, தீர்த்தம், தல விருட்சம் எல்லாமே மூன்று. காசியில் உள்ள 64 ஸ்நானக் கட்டடங்களுக்கு இணையான மணிகர்ணிகை ஆறு இங்குள்ளது.‌

36. இத்தலத்திலுள்ள அக்னி, சூரிய, சந்திர தீர்த்தங்களில் வளர்பிறை புதன் கிழமைகளில், புதன் ஹோரையில், தலைக்கு பச்சை பயிறு வைத்து முழுகி, புதனை தரிசனம் செய்யவேண்டும். அதன்பின் சந்திரத் தீர்த்தம் அருகில் ஆலமர விருட்சத்தின் அடியில் ருத்ர பாதம் உள்ளது. இவ்விடத்தில் சிவபெருமானின் திருவடிகள் வரையப்பட்டுள்ளன.

37. இங்கு முன்னோர்க்கு திதி, தர்ப்பணம் செய்தால் அந்தக் குடும்பத்தினர்க்கு நல்ல பலன்கள் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இங்கு வழிபடுவோர்க்கு 21 தலைமுறைகளின் பிதுர் சாபங்கள் நீங்கி சகல செல்வங்களும் பெறுவார்கள் என்பதை பக்தர்கள் நம்புவதால் பல மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் இக்கோயிலுக்கு குவிந்தவண்ணம் உள்ளனர்.

Tuesday, October 25, 2022

அன்னாபிஷேகத்தன்று கோடி சிவ தரிசன பலன் தரும் அன்னாபிஷேகம் மேனியிலே சாற்றப்படுகின்ற ஒவ்வொரு பருக்கை அன்னமும் ஒரு சிவலிங்கம்

சிவ சிவ

ஐப்பசி அன்னாபிஷேகம்
*************************************
கோடி சிவ தரிசன பலன் தரும் அன்னாபிஷேகம்
##############################

அன்னாபிஷேக கோலத்தில் சிவபெருமான்
சாம வேதத்திலே ஒரு இடத்தில் "அஹமன்னம், அஹமன்னம், அஹமன்னதோ" என்று கூறப்பட்டுள்ளது, அதாவது எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருள் அன்னத்தின் வடிவில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

அன்னம்தான் உலகில் வாழும் அனைத்து ஜீவராசிகளுக்கும் உயிர்நாடி. உலக வாழ்கைக்கு அச்சாணி. அன்னம் பிரம்ம, விஷ்ணு, சிவ சொரூபம்.
அம்மை பார்வதியும் எல்லா ஜீவராசிகளுக்கும் படியளக்கும் அன்னபூரணியாகவும் தானே காசியிலே அருட்காட்சி தருகின்றாள்.

அந்த இறைவனின் அருவுருவமான லிங்க மூர்த்திக்கு அன்னம் சார்த்தி வழிபடும் நாளே அன்னாபிஷேக நாள், ஐப்பசி பௌர்ணமி நாள்.

பல்குஞ் சரந்தொட்டு எறும்பு கடையானதொரு

பல்லுயிர்க் குங் கல்லிடைப் பட்டதேரைக்கும்

அன்றுற் பவித்திடும் கருப் பையுறு சீவனுக்கும்

மல்குஞ் சராசரப் பொருளுக்கும் இமையாத

வானவர் குழாத்தினுக்கும்
மற்றுமொரு மூவருக்கும் யாவருக்கும்

அமுது படைக்கும் அந்த ஆண்டவனுக்கே அமுது படைக்கும் விழா தான் 

அன்னாபிஷேகம்.

ஐப்பசி மாதப் பௌர்ணமியன்று சகல சிவாலயங்களிலும் சாயரட்சையின் போது பரம கருணைக் கடலாம் ஐயன் சிவபெருமானின் அருவுருவமான லிங்கத்திருமேனிக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுகின்றது.

பௌர்ணமியன்று சந்திரன் தனது பதினாறு கலைகளுடன் பூரண சோபையுடன் விளங்குகின்றான் அன்று அவனது கலை அமிர்த கலையாகும். அத்தகைய ஐப்பசி பௌர்ணமியன்று அறுவடையான புது நெல்லைக் கொண்டு அன்னம் படைத்து சிவனுக்கு அபிஷேகம் செய்து பக்தர்களுக்கு போஜனம் அளிப்பது பெரும் புண்ணியத்தை தர வல்லதாகும்.

சிவன் பிம்பரூபி, அவரது மெய்யன்பர்கள் பிரதி பிம்ப ரூபிகள். பிம்பம் திருப்தி அடைந்தால் பிரதி பிம்பம் திருப்தி பெறும். அனைவருக்கும் அன்னம் பாலிக்கும் அந்த அன்ன பூரணியை தனது வாம பாகத்திலேக் கொண்ட அந்த மாதொரு பாகனை அன்னாபிஷேகம் செய்து வழிபடுவதால் உலகில் பஞ்சம் வராது என்பது உண்மை.

#தில்லை நடனசபாபதிக்கு நித்யமும் அன்னாபிஷேகம்
தில்லையிலே அனுதினமும் காலை பதினோறு மணியளவில் ரத்ன சபாபதிக்கு அன்னாபிஷேகம் நடைபெற்று அந்த அன்னம் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதமாக வழங்கப்படுகின்றது. 

எனவேதான் இத்தலத்தை அப்பர் பெருமான் ""அன்னம் பாலிக்கும் தில்லை சிற்றம்பலம்"""என்று சிறப்பித்துப் பாடினார். இந்த அன்னாபிஷேகத்தை தரிசித்து பிரசாதத்தை ஏற்றுக் கொண்டவர்களுக்கு என்றுமே அன்ன ஆகாரத்திற்கு கவலையே இல்லை.

அன்னாபிஷேகத்தன்று எம்பெருமானின் மேனியிலே சாற்றப்படுகின்ற ஒவ்வொரு பருக்கை அன்னமும் ஒரு சிவலிங்கம், எனவே அன்று சிவதரிசனம் செய்தால் கோடி சிவதரிசனம் செய்வதற்கு சமம்.
இதையே சோறு கண்ட இடம் சொர்க்கம் என்றும் கூறுவார்கள். அன்னாபிஷேக கோலத்தில் எம்பெருமானை தரிசிக்க மோட்சம் கிட்டும் .

சிவன் அபிஷேகப்பிரியர். மொத்தம் 70 பொருட்களால் அவரை அபிஷேகம் செய்யலாம் அவற்றுள் ஒன்றுதான் சுத்த அன்னம். சிவபெருமானுக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்வது உச்சநிலை சிறப்புடையதாகும்.

ஆலய வழிபாட்டில் மாத பௌர்ணமியன்று ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு நடசத்திரத்திற்கு உரிய பொருளால் சிவபெருமானை வழிபடுவது விஷேமானதாகும். அவை என்ன என்று காணலாமா அன்பர்களே,

மாதம் - அபிஷேகப் பொருள் -
பலன்

#சித்திரை - மருக்கொழுந்து - புகழ்

#வைகாசி - சந்தனம்- மனை, வீடு, நிலம், புதையல்

#ஆனி - முக்கனி = மா, பலா, வாழை -
கேட்ட வரம் கிட்டும்

#ஆடி - காராம் பசுவின் பால் - பயம் நீங்கும்

#ஆவணி - வெல்ல சர்க்கரை - சாபம் தோஷம் பாவம் நீங்கும்

#புரட்டாசி - கோதுமை+பசுநெய் கலந்த வெல்ல அப்பம் - அஷ்ட ஐஸ்வரியம்

#ஐப்பசி - அன்னாபிஷேகம் - கல்வி கலை தேர்ச்சி ஞானம் கிட்டும்

#கார்த்திகை - பசு நெய், தாமரை நூல் தீபம் - பழி தீரும், வழக்கு வெற்றி

#மார்கழி - பசு நெய் & நறுமண வென்னீர் - கண்டம் நீங்கி ஆயுள் கூடும்

#தை - கருப்பஞ்சாறு - நோய் நீங்கி ஆரோக்கியம்

#மாசி - பசுநெய்யில் நனைத்த கம்பளி -
குழந்தை பாக்கியம்

#பங்குனி - பசுந்தயிர் - மனைவி, மக்கள், உறவினர் உதவி.

திருமயிலை கபாலீசுரத்திலும், வடபழனி வேங்கீஸ்வரத்திலும் மாதா மாதம் இதே கிரமம் திரவியங்கள் சிவபெருமானுக்கு  சார்த்தப்படுகின்றன.
ஐப்பசி மாதம் அஸ்வினி நட்சத்திரத்திற்குரிய அன்னத்தால் வழிபடுவது சிறப்பானது. முறையாக சிவபெருமானுக்கு ஐப்பசி பௌர்ணமியன்று அன்னாபிஷேகம் செய்து வழிபடுவதால் உலகம் முழுவதும் சுபிக்ஷமாக விளங்கும் என்று சிவாகமம் கூறுகின்றது.

சிவன் பரம்பொருள், அவனது பிரதிபிம்பமே அனைத்து ஜீவராசிகளும், இரண்டும் வேறல்ல. அபிஷேக அன்னப்போர்வையால் ஐயன் அகமும் புறமும் குளிரும் போது எல்லா ஜீவராசிகளும் அவனது பேரருட்கருணையினால் குளிர்வது இயற்கைதானே.
ஆகாயத்தில் பிறந்த காற்றின் துணையுடன் தீ எரிகின்றது. நிலத்தில் விளைந்த நெல் அரிசியாகின்றது. அரிசி நீரில் மூழ்கி, தீயில் வெந்து அன்னமாகின்றது. 

எனவே அன்னமும் பஞ்ச பூதங்களின் சேர்க்கை. இந்த அன்னம் அபிஷேக நிலையில் ஆண்டவன் மேனி முழுவதும் தழுவி அவனை அகப்ப்டுத்தி அடைக்கலமாகின்றது. அதன் மூலம் ஐம்பூதங்களும் அவனுள் அடக்கமென்பது புலனாகின்றது.எனவே அவனே பரம்பொருள் என்பது தெள்ளத் தெளிவாக தெரிகின்றது.

அன்னாபிஷேகம் செய்த சாதத்தை குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் உண்டால் பலன் நிச்சயம் உண்டு என்பது ஐதீகம்.

இனி அன்னாபிஷேகம் எவ்வாறு நடைபெறுகின்றது என்பதைப் பார்ப்போமா? 

ஐப்பசி பௌர்ணமியன்று காலையிலே எம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகின்றது பின் எம்பெருமானின் திருமேனி முழுவதும் அன்னம் வடித்து லிங்கம் முழுவதும் மறையும் அளவிற்கு சாற்றுகின்றனர். 

இது அன்னாபி ஷேகனம் எனப்படுகின்றது. சாயரட்சை பூஜை அன்னாபிஷேகம் கொண்ட பெருமானுக்கு நடைபெறுகின்றது. பின் இரண்டாம் காலம் வரை ( மாலை 6.00 மணியிலிருந்து 8:30 மணி வரை) அன்னாபிஷேகராக அருட்காட்சி தருகின்றார் எம்பெருமான். இரண்டாம் காலம் பூஜை முடிந்த பின் அன்னம் கலைக்கப்பட்டு பிரசாதமாக பகதர்களுக்கு வழங்கப்படுகின்றது. 

பொதுவாக அபிஷேகம் செய்யப்பட்ட அன்னத்தை ஓடும் நீரில் கரைத்து விடுவது வழக்கம். குறிப்பாக லிங்கத்தின் மீது இருக்கும் அன்னத்தின் விடுத்து மற்ற இடங்களில் உள்ள அன்னத்தை எடுத்து தயிர் கலந்து பிரசாதமாக கொடுக்கின்றனர். 

மீதமான அன்னம் திருக்குளத்திலோ அல்லது கடலிலோ கரைக்கப் படுகின்றது. எம்பெருமானின் அருட்பிரசாதம் நீர்வாழ் உயிரினங்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதால் இவ்விதம் செய்யப்படுகின்றது.

சர்வ சிவாலயங்களிலும் அன்னாபிஷேகம் நடைபெற்றாலும் மிகவும் சிறப்பாக நடைபெறும் தலங்களுள் சில தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சை மாவட்டத்திலே உள்ள தலங்களில் சிறப்பாககொண்டாடப்படுகின்றது. தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம் மற்றும் கங்கை கொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலயங்கள் ஆகும் 

இவ்விரு ஆலயங்களிலும் எம்பெருமானின் லிங்கத் திருமேனி பெயருக்கேற்றார்ப் போல பெரியதாகியதால் (கங்கை கொண்ட சோழபுரத்தின் லிங்கத்தின் ஆவுடை 43 முழம் நீளம்.) காலையிலேயே அன்னாபிஷேகம் தொடங்குகின்றது புது அறுவடையான அரிசி மூட்டை மூட்டையாக வந்து குவிகின்றது 100 மூட்டை வரை அபிஷேகத்திற்காக தேவைப்படுகின்றது, உழவர் பெருமக்கள் நெல்லை கோவிலுக்கு இலவசமாக வழங்குகின்றனர் அத்தனை அன்னமும் பெருமானுக்கு அபிஷேகம் செய்யப்படுகின்றது., 

அவ்வரிசியைக் கண்டு சமைக்கப்பட்ட அன்னம் கொப்பரை கொப்பரையாக அன்னம் வந்து கொண்டிருக்கும் எம்பெருமானின் திருமேனி மேல் சிறிது சிறிதாக அன்னம் சாற்றப்படுகின்றது. எம்பெருமானின் திருமேனி முழுவது அன்னாபிஷேகம் ஆக மாலை ஆகும். 

பின்னர் மாலை பூஜைகள் முடிந்து அர்த்த சாமத்திற்கு பின் அன்னம் அனைவரும் பிரசாதமாக வழங்கப்படுகின்றது.
அன்னாபிஷேகம் மிகவும் சிறப்பாக நடைபெறும் மற்றோர் தலம், குடமுருட்டி ஆற்றின் தென்கரையில் திருக்காட்டுப் பள்ளிக்கு அருகில் உள்ள செந்தலை என்னும் தலம் ஆகும். 

அன்னாபிஷேகத்தன்று பகல் 11 மணிக்கு முதலில் திருநீற்றால் அபிஷேகம் நடைபெறுகின்றது பிறகு மற்ற திரவியங்களால் எப்போதும் போல அபிஷேகங்கள் நடைபெறுகின்றது. மாலை ஐந்து மணிக்கு எம்பெருமானின் திருமேனி முழுவதும் அன்னத்தாலும் மற்றும் காய்கறிகளாலும் அலங்காரம் செய்யப்படுகின்றது. 

பூர்ண அலங்கரத்தில் விளங்கும் எம்பெருமானுக்கு சோடச உபசாரங்களும் சிறப்பு தீபாரதாணையும் நடைபெறுகின்றது. இரவு 9 மணி அளவில் மீனாக்ஷி சுந்தரேஸ்வரரின் அன்னாபிஷேக திருமேனியின் மீது பூரண சந்திரன், தனக்கு சாப விமோசனம் அளித்து தன்னை ஜடா முடியிலே சூடிக் கொண்ட அந்த சந்திர சேகரனை தனது அமிர்த கலைகளால் தழுவுகின்றான். 

இத்தலத்தின் சிறப்பு இது தான் அன்னாபிஷேகம் செய்யப்பட்ட இறைவனை சந்திரன் தனது அமுத தரைகளால் தழுவி பூஜை செய்கிறான். இவ்வாறு சந்திரன் வழிபடும் மீனாக்ஷ’ சுந்தரேஸ்வரரை பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் செந்தலையில் கூடி அர்த்த சாம பூஜையில் எம்பெருமானை வழிபட்டு நன்மை அடைகின்றனர்.

பொதுவாக அன்னம் எம்பெருமானின் மேனி முழுவதும் சாற்றுவது மிகவும் எளிமையான அலங்காரம்.
ஆனால் பல ஆலயங்களில் அன்னத்தில் எம்பெருமானின் ஒரு முகத்தையோ அல்லது ஐந்து முகங்களையோ அலங்காரம் செய்கின்றனர்.
சில ஆலயங்களில் அன்னத்துடன் அனைத்து காய்கறிகள் மற்றும் பழங்கள், பட்சணங்கள் ஆகியவற்றையும் படைத்து அலங்காரம் செய்கின்றனர்.

இன்னும் சில ஆலயங்களில் கருவறையின் படியிலிருந்தே படிப்படியாக ஆவுடை வரைக்கும் பலப் பல படிகள் அமைத்து அந்த படிகளிலே அனைத்து காய்கறிகளையும் பழங்களையும் பட்சணங்களையும் கொலுவாக அமைத்து அலங்காரம் செய்கின்றனர்.

சென்னை அசோக் நகரில் அமைந்துள்ள கருமாரி திரிபுர சுந்தரி ஆலயத்தில் திரியம்பகேஸ்வரருக்கு மிகவும் நூதனமான முறையில் அன்னாபிஷேகம் நடைபெறுகின்றது. ஒரு வருடம் எம்பெருமானின் மூன்று கண்களை குறிக்கும் வகையில் மூன்று லிங்கங்களாக அலங்காரம் செய்திருந்தனர்,

 ஒரு வருடம் பஞ்ச பூதத் தலங்களை குறிக்கும் வகையில் ஐந்து லிங்கங்களை அமைத்து அலங்காரம் செய்தனர், ஒரு வருடம் பன்னிரண்டு ஜோதிர்லிங்கங்களை குறிக்கும் வகையில் பன்னிரண்டு லிங்கங்களாக அலங்காரம் செய்திருந்தனர் ஒரு வருடம் கருமாரி அம்பாள், புற்றின் கீழ் காமதேனு வாகனத்தில் கற்பகாம்பிகையாக எழுந்தருளி அருள் பாலிக்கும் அருமையான சந்தனக் காப்பு அலங்காரம் செய்திருந்தனர். 

அம்மனை தரிசித்த உடன் அப்படியே மெய் சிலிர்த்தது.
அசோக் நகர் சித்தி விநாயகர் சொர்ணபுரீஸ்வரர் ஜடாமுடியிலிருந்து கங்கை பாய, நாகம் கழுத்தில் ஆட திருக்கயிலை நாதராக முக்கண்களுடன் எழிற்கோலம் காட்டுகின்றார்.
வடபழனி வேங்கிரீஸ்வரர் ஆலயத்தில் கையிலாய மலையையே அன்னாபிஷேகதன்று தரிசனமாக காட்டினர்.

மஹாலிங்கபுரம் மஹாலிங்கேஸ்வரர் யோகியாக அலங்கரிக்கப்பட்டிருந்தார்.
சென்னை மேற்கு மாம்பலம் முருகாஸ்ரமத்தில் பால முருகனுக்கும் இன்று அன்னாபிஷேகம் நடைபெறுகின்றது. முழுவதும் அன்னம் சார்த்தப்பட்டு அழகன் முருகன் அன்று சிவ பெருமானாக அருட்காட்சி தருகின்றார். உத்திராட்ச மலைக்கு கறுப்பு திராட்சைப்பழங்களும், காதுக்கு குண்டலமாக அப்பிள் பழமும் அருமை.

காஞ்சியில் காமாக்ஷியம்மன் ஆலயத்தில்
அன்னபூர்ணே சதாபூர்ணே சங்கர பிராண வல்லபே ஞான வைராக்கிய சித்யர்த்தம் பிக்ஷாம் தேஹி ச பார்வதி
என்று நாம் வழிபடும் அன்னபூரணிக்கு அன்னாபிஷேகம் நடைபெறுகின்றது, சென்னை திருமயிலை முண்டககண்ணியம்மனுக்கும் சிறப்பாக அன்னாபிஷேகம் நடைபெறுகின்றது.

இந்நாளில் உபவாசம் இருந்து மஹாபிஷேகம் செய்து பின் சிவனுக்கு அன்னாபிஶேகம் செய்த பிரசாதத்தை உண்ணும் போது பக்தி புண்ணிய பலன்கள் சேர்கின்றன.

வாடாமல் உயிரெனும் பயிர் தழைத்து
ஓங்கிமிக அருள் மழை பொழிந்தும் 

இன்ப வாரிதியிலே நின்ன தன் பெனுஞ் சிறகால்

வருந்தாமலே யணைத்து
கோடாமல் வளர் சிற்றெறும்பு முதல்

குஞ்சரக் கூட்ட முதலான 
கோடிகள் தமக்கு புசிக்கும் புசிப்பினை

குறையாமலே கொடுக்கும் அந்த சர்வேஸ்வரனை அன்னாபிஷேக கோலத்தில் வருடத்தின் ஒரு நாள் மட்டுமே கிட்டும் அந்த அற்புத திருக்கோலத்தை கண்டு தரிசித்து, ஆலயம் தோறும் அன்னாபிஷேகம் சிறப்பாக நடைபெற நம்மால் முடிந்த உதவி செய்யலாம்.

 பல ஆலயங்களில் அன்னாபிஷேகம் நடைபெறுவதால் முடிந்த அன்பர்கள் சிவபெருமானை அன்னாபிஷேக கோலத்தில் தரிசனம் செய்து கோடி சிவ தரிசன பலன் பெறுமாறு வேண்டுகின்றேன்.

சிவ சிவ

Monday, October 24, 2022

மகிமை பொருந்திய அய்யர் மலை இரத்தினகிரீஸ்வரர்

மகிமை பொருந்திய அய்யர் மலை இரத்தினகிரீஸ்வரர்
ஆரிய மன்னன் ஒருவன் மாணிக்கக் கற்கள் வேண்டி இறைவனிடம் வந்தான். “மாணிக்கக் கற்களை நீ பெற வேண்டுமென்றால் இந்த தொட்டியை காவிரி நீரால் நிரப்ப வேண்டும்” என்று ஒரு தொட்டியை இறைவன், அரசனிடம் காண்பித்தார்.

அந்த தொட்டியில் எவ்வளவு தான் நீரினை ஊற்றினாலும் நிரம்பவில்லை. இதனால் கோபமடைந்த மன்னன் அவனது வாளை எடுத்து இறைவனிடத்தில் வீசினான்.

அந்த சமயம் இறைவன் மாணிக்கக் கற்களை மன்னனுக்கு தந்து அருள் பாவித்தார். இறைவனை காயப்படுத்தியதில் வருத்தமடைந்த மன்னன், அந்த கோவிலிலேயே இறைவனுக்கு சேவை செய்து முக்தி பெற்றான் என்கிறது வரலாறு.

அந்த மன்னனால், இறைவன் வெட்டு பட்டதால், இத்தலத்தில் சிவனுக்கு ‘முடித்தழும்பர்’ எனும் பெயரும் உண்டு. இன்றளவும் சிவலிங்கத்தின் மேல் பகுதியில் இந்த வடு காணப்படுகிறது. 

சிவலிங்கத்தின் முன்பு அந்த மன்னனால் நிரப்பப்படாத தொட்டி தற்போதும் பொய்வாசிக் கொப்பரை என்னும் நீர் தொட்டியாக இருக்கின்றது. 

சிவனுக்கு நாள்தோறும் அருகிலுள்ள காவிரியிலிருந்து 10 குடம் நீர் கொண்டு வரப்பட்டு, அந்த தொட்டியில் நிரப்பி, காவிரி நீரால் உச்சிப்பொழுதில் அபிஷேகம் செய்யப்படுகிறது.

இரத்தினகிரீஸ்வரர் கோவிலில் சிவன் சுயம்புவாக காட்சி அளிக்கின்றார். இங்கு காட்சியளிக்கும் சிவபெருமான் இரத்தினங்களாக இருப்பதால் இம்மலையைச் சுற்றிலும் உள்ள பகுதிகளில் பூமிக்கு அடியில் பச்சை, சிவப்பு போன்ற கற்கள் நிறைய கிடைக்கின்றன. 

8 பாறைகளுக்கு நடுவே உள்ள ஒன்பதாவது பாறையில் மேலுள்ள மலையின் மீது சிவபெருமான் சுயம்புவாக அருள்பாவிக்கின்றார். 
சித்திரை மாதத்தில் சூரியனின் கதிர்கள், சுவாமி சன்னிதிக்கு நேரே உள்ள துவாரங்களின் வழியே சிவலிங்கத்தின் மீது விழுகின்றது.

ரத்தினங்களின் எண்ணிக்கை 9. அதாவது நவரத்தினம் என்போம்.
இந்த அய்யர் மலையில் உள்ள சிறப்புகள் எல்லாம் 9ஐ குறிப்பதால் இங்குள்ள சிவன் ரத்தினகிரீஸ்வரர் என்று பெயர்.

இம்மலையில் உள்ள பாம்புகள் கடித்தால் விஷம் ஏறுவதில்லை. 
இந்த மலை தற்போது மக்கள் பேச்சு வழக்கில் அய்யர்மலை என்று அழைக்கப்பட்டு வருகிறது. 

முதலில் காலையில் காவிரிக்கரையில் வீற்றிருக்கும் கடம்பரை தரிசித்து விட்டு, இரண்டாவதாக நடுப்பகலில் இரத்தினகிரீஸ்வரர் தரிசித்து வணங்கி, மூன்றாவதாக மாலையில் திரு ஈங்கோய்மலை நாதரையும் ஒரே நாளில் தரிசித்தால் நல்ல பலன் என்பது ஐதீகம். 

குலதெய்வம் தெரியாதவர்கள் இரத்தினகிரீஸ்வரர் குலதெய்வமாக வழிபடலாம். 

திருமண தடை நீங்க, குழந்தை பாக்கியம் பெற, தொழிலில் முன்னேற்றம் அடைய இந்தக் கோவிலில் வேண்டிக் கொண்டால் நிச்சயம் பலன் உண்டு.

இதுதவிர மூட்டு வலி, இதய நோய், ரத்த கொதிப்பு, ரத்த அழுத்தம் உள்ளவர்கள் இந்த கோவிலின் மலையை ஒருமுறை ஏறி வந்தால் மாற்றத்தை உணர முடியும் என்று கூறுகின்றனர்.

ஓம் நமசிவாய 🙏

Sunday, October 16, 2022

_முக்தி அளிக்கும் சிவன் தலங்கள்

_முக்தி  அளிக்கும் தலங்கள்!!!!
1. பிறக்க முக்தியளிப்பது
திருவாரூர்

2. வாழ முக்தியளிப்பது
காஞ்சிபுரம்

3. இறக்க முக்தியளிப்பது
வாரணாசி (காசி)

4. தரிசிக்க முக்தியளிப்பது
தில்லை (சிதம்பரம்)

5. சொல்ல முக்தியளிப்பது
திருஆலவாய் (மதுரை)

6. கேட்க முக்தியளிப்பது
அவிநாசி

7. நினைக்க முக்தியளிப்பது
திருவண்ணாமலை

மேற்கண்ட முக்தி தலவரிசையை நம்மில் பலர் அறிந்திருப்பார்கள்.
இவற்றில் காசியை தவிர மற்ற அனைத்தும் தென்னாட்டில் அமைந்துள்ளன.

இதனால் தான் தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!
என்ற முழக்கம் உருவாயிற்று போலும்.

இறைவன் சிவபெருமான் அவதரித்த நட்சத்திரம் திருவாதிரை ஆகும்.
அதனால் அவருக்கு ஆதிரையான் என்ற பெயரும் உண்டு.

ஆருத்ரா தரிசனமும் மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் வருகிறது என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.

ஒவ்வொரு மாதமும் வரும் திருவாதிரை நாளில் திருவண்ணாமலை கிரிவலம் செல்வது மிக்க நன்று.
இது எல்லோராலும் இயலாது. சிவனருள் பெற்றவர்களுக்கே இந்த வாய்ப்பு கிட்டுகிறது.

மனதில் உறுதி உடையவர்களுக்கும், பிறந்த ஜாதகத்தில் அல்லது எண்கணிதத்தில் அல்லது கைரேகையில் ராகுவின் பலம் உள்ளவர்களுக்குமே இந்த கிரிவலம் சாத்தியமாகிறது.

ஒவ்வொரு மாதமும் வரும் திருவாதிரை நாளில் மேற்கண்ட தலங்களில் ஏதாவது ஒன்றிற்கு சென்று இறைவனை வழிபட்டால் நமது கர்மவினைகள் அடியோடு அழிந்து மிகுந்த புண்ணியம் கிட்டும்.

ஒரு சிலரால் மட்டுமே இது சாத்தியம்.
அவ்வாறு செய்பவர்கள் மிகுந்த புண்ணியசாலிகள்.

மேற்கண்ட தலங்களுக்கு செல்ல இயலாவிடில் அதற்காக கவலை கொள்ள வேண்டாம்.

அருகில் உள்ள சிவதலத்திற்கு குடும்பத்துடன் சென்று சிவபெருமானுக்கு அபிசேகம் செய்து வரலாம்.
அர்ச்சனை செய்யலாம்.
அன்னதானம் செய்யலாம்.
சிவத்தலத்தில் மந்திரம் ஜெபிக்கலாம்...!

Saturday, October 15, 2022

கேதார கௌரி விரதம்.சிவனக்கு சிறந்த விரதங்களில் இவ்விரதமும் ஒன்றாகும்

கேதார கௌரி விரதம் 
இவ்விரதம் புரட்டாசி மாதத்தில் சுக்கிலபக்ஷ அட்டமியில் ஆரம்பமாகி ஐப்பசி மாதத் தேய்பிறை சதுர்த்தசியில் முடிவுறுகின்றது. இருபத்தொரு நாட்ளைக் கொண்ட மஹோன்னத விரதம் இதுவாகும்.

சிவனுக்குரிய சிறந்த விரதங்களில் இவ்விரதமும் ஒன்றாகும். இவ்விரதம் அம்மன் மற்றும் சிவாலயங்களில் மிகவும் சிறப்பாக அனுஷ்டிக்கப்படுகிறது. ஆண்களுக்கு 21 நாட்கள் அமைந்த பிள்ளையார்கதை விரதம் போல பெண்களுக்கு 21 நாட்கள் அமைந்த கௌரி விரதமாகும்

மணமாகிய பெண்கள் தங்கள் மாங்கல்யம் தொடர்ந்தும் மங்களமாக இருக்க வேண்டும் என்றும் மணமாகாத கன்னிப் பெண்கள் நல்ல மாங்கல்ய வாழ்வை வேண்டியும் இந்த விரதத்தினை அனுஷ்டிப்பர். ஆண்களும் இந்த விரதத்தை அனுஷ்டிப்பதுண்டு.

எந்த விரதமாக இருந்தாலும் விரத ஆரம்ப நாளில் விநாயகர் பிடித்து வைத்தே விரதத்தினை ஆரம்பிக்க வேண்டும். களிமண் அல்லது மாட்டுச் சாணம் அல்லது சந்தனம் அல்லது மஞ்சள் ஆகியவற்றில் ஒன்றினால் பிள்ளையார் பிடித்து அதில் அருகம்புல் குற்றி பூசை அறையில் வைத்து விநாயகராக வழிபடல் வேண்டும்.

விரத நாட்களில் தினமும் கேதாரேஸ்வரனுக்கு இருபத்தொரு எண்ணிக்கை கொண்ட அதிரசம், அப்பம், வடை, பழம், பாக்கு, வெற்றிலை, பாயாசம், சர்க்கரைப் பொங்கல், புளிஅன்னம் முதலிய நைவேத்தியங்களை படைத்து கௌரி நோன்பு பாடல் படித்து வழிபடல் வேண்டும்.

விரதம் ஆரம்பமான நாளிலிருந்து இருபத்தொரு இழைகளைக் கொண்ட நூலில் நாள்தோறும் ஒவ்வொரு முடிச்சுகளாக இடப்பட்டு, இருபத்தோராவது திதியான இறுதி நாளன்று அந்நூலை கோயில்களில் குருக்களைக் கொண்டும் அல்லது வீடுகளில் தாமாகவேனும் ஆண்கள் தமது வலது கையிலும், பெண்கள் தமது இடதுகையிலும் அணிந்து கொள்வர்.

விரத வரலாறு:-

மலையைச் சார்ந்த வயல் பகுதியை கேதாரம் என் அழைப்பர். அப்படியான இமயமலை கேதாரப் பகுதியில் சுயம்பு லிங்கமாக கேதாரேஸ்சுவரர் தோன்றினார். 

சக்திரூபமான பார்வதிதேவி சிவனை நினைந்து சுயம்பு லிங்கத்தினை வழிபட்டு கேதார கௌரி நோன்பிருந்து அதன் பலனாக சிவனுடன் பாதியாக அதாவது அம்மை, ஐயனின் இடப்பாகம் பெற்று அர்தநாரீசுவராக இணைந்து கொண்டார் என்பது புராணம். 

சிவனை நோக்கி இவ்விரதம் அனுஷ்டிக்கப்பட்டதால் கேதாரகௌரி விரதம் எனவும் தேவி வழிபட்டபடியால் கேதாரேஸ்வரி விரதம் எனவும் பெயர் பெறுகின்றது.

விரிவான வரலாறு:-

முன்னொரு காலத்தில் கைலை மலையிலே தேவாதி தேவர்கள், முனிவர்கள் சித்தர்கள், புடைசூழ சிவன், பார்வதி தேவியோடு வீற்றிருந்து. பிருங்கிகிருடி முனிவரின் நடனத்தைக் கண்டு களித்த சிவனும் ஏனையோரும் முனிவரைப் பாராட்டினார்கள். 

இதனால் மகிழ்வுற்ற பிருங்கி முனிவர் அம்பிகையைத் தவிர்த்து சிவனை மட்டும் வலம்வந்து நமஸ்கரித்து நின்றார். இதனால் கோபம் கொண்ட அம்பிகை கைலாயமலையை விட்டுத் தவம் செய்வதற்காக இமயமலை கேதாரப்பகுதியில் கௌதம முனிவரின் ஆசிரமத்திற்கு புறப்பட்டார். 

அம்பிகை வரவினால் ஆசிரமும் சூழலும் புதுப்பொலிவுடன் விளங்கியது. மாபெரும் தவஸ்தியான கௌதம முனிவர் தமது ஆசிரமம் பொலிவுற்றதன் காரணம் அம்பிகையின் வரவே என அறிந்து அவளை அர்ச்சித்து பூஜை செய்து அம்பிகையிடம் “இங்கு தாங்கள் வந்தமைக்குக் காரணம்” என்ன என்று கேட்டார். 

அதற்கு அம்பிகை முனிவரை நோக்கி “சிவபெருமானின் பாதியுடம்பை நான் பெறவேண்டும் என்றாள்”. முனிவரும் புராணங்கள், சாஸ்திரங்கள் யாவற்றையும் அலசி ஆராய்ந்து கேதாரேஸ்வர விரத்தை அனுஷ்டிக்கும் முறையை விளக்கமாக அம்பிகைகுக் கூறியருளினார். 

முனிவரின் கூற்றுப்படி அம்பிகையும் 21 நாளும் சிவனைப் பூஜித்து சிவனின் பாதி உடலைப் பெற்று அர்த்தநாரீஸ்வரன் தோன்றினான். 

இந்நாளில் அம்பிக்கை சிவனை நோக்கி “எம்பெருமானே இவ்விரத்தை உலகில் யார் செய்தாலும் விரும்பிய யாவற்றையும் பெறுவதற்கு அருள் புரியவேண்டும்” என்று கேட்டுக்கொண்டார். 

சிவனும் அம்பிகையின் வேண்டுக்கோளை ஏற்று எற்று “அங்கனமே ஆகுக” என்று அருள் புரிந்தார் என்பது புராணம்.

கேதார கௌரி விரத பாடல்:-

காப்பு:-

முன்னின்று செய்யுள் முறையாய்ப் புனைவதற்கு
என்னின் றருள்செய் எலிவா கனப்பிள்ளாய்
சொற்குற்ற மொடு பொருட்குற்றம் சோர்வு தரும்
எக்குற்றமும் வாராமற்கா.

வேண்டுதற் கூறு:-

காப்பெடுக்க வந்தேனே கௌரியம்மாள் தாயாரே

காத்தென்னைத் தேற்றிடுவாய் காளிமகா தேவியரே

காலமெல்லாம் நின்னரிய காப்பெடுத்தே வாழ்ந்திடுவேன்

எண்ணும் கருமம் இனிதாக முடித்திடுவாய்

பண்ணும் வினையாவும் பனிபோலப் போக்கிடுவாய்

உண்ணும் உணவாக உயிரினுக் குயிராக

என்றும் இருந்தே எனைக்காத்து வந்திடுவாய்

காடும் கடந்துவந்தேன் மலையும் கடந்து வந்தேன்

காளிமகா தேவியரே காப்பெனக்குத் தந்திடுவாய்

சூலம் கொண்டவளே சுந்தர முகத்தவளே

அரியை உடையவளே அம்மா காளிதாயே

கொடிய மகிஷாசுரனைக் கூறு போட்டவளே

அசுரக் குணம் யாவும் அழிக்கும் சுடர்க்கொடியே

சிவனை நினைத்தல்லோ சீர்விரதம் நீயிருந்தாய்

பரனை நினைத்தல்லோ பதிவிரதம் நீயிருந்தாய்

அரனை நினைத்தல்லோ அம்மாநீ நோன்பிருந்தாய்

சங்கரனை எண்ணீயல்லோ சங்கரிநீ நோன்பிருந்தாய்

ஐங்கரனைப் பெற்றவளே அன்று நீ நோன்பிருந்தாய்

விரதத்தைக் கண்டே விழித்தான் சிவனவனும்

அம்மா உமை அணைத்தே அருள்மாரி பொளிந்தானே

வகையாற்றுப் படலமிதை வழிவழியாக் காட்டிடுவீர்

நெறியறியாத் திகைப்போர்க்கு நெறிமுறையைக் காட்டிவிடு

காப்பைப் புனைந்துவிடு காலபயம் ஓட்டிவிடு

நூலைப் புனைந்துவிடு நுண்ணறிவை ஊட்டிவிடு

வல்லமையைத் தந்துவிடு வையகத்தில் வாழவிடு

காளிமகா தேவியரே காப்பருளும் தேவியரே

காப்பைப் புனைபவளே காப்பாய் இருப்பவளே

நாடு செழிக்கவென்றே நற்காப்பு அருளுமம்மா

வீடு செழிக்கவென்றே விழைகாப்பு அருளுமம்மா

நல்வாழ்வு வாழ்வதற்கு நறுங்காப்பு அருளுமம்மா

அல்லல் அறுப்பதற்கே அருட்காப்பு அருளுமம்மா

பிள்ளை அற்றவர்க்குப் பெருங்காப்பு அருளுமம்மா

பூமணியே மாமணியே புனிதவதி தாயவளே

நான் விரும்பும் காப்பை நலமுடனே தாருமம்மா

கல்வி சிறப்பதற்குத் கலைமகளே வாருமம்மா

செல்வம் சிறப்பதற்குத் திருமகளே வாருமம்மா

வீரம் சிறப்பதற்கு வீரசக்தி தாருமம்மா

பாட்டுடைத் தலைவியரே பராசக்தி தாயவளே!

ஏட்டுடைத் தேவியரே எல்லாம்மிகு வல்லபையே

காப்பெடுக்க வந்தேனம்மா கனிவுடனே பாருமம்மா

பால்பழங்கள் வெற்றிலைகள் பல்வகைத் திரவியங்கள்

நானுமக்குத் தாறேனம்மா நயந்து எம்மைக் காருமம்மா

காளிமகா தேவியரே காசினிக்கு வித்தவளே

வித்தை விதைப்பவளே வினையாவும் காப்பவளே

எத்தால் வாழ்ந்திடுவோம் எல்லாம் உமதருளே

காசினியில் வேற்றுமையை கணப்பொழுதே மாற்றிவிட்டால்

ஏசலின்றி வாழ்ந்திடுவோம் ஏத்துபுகழ் தேவியளே

காப்பெனக்குப் போட்டுவிட்டால் கல்மனது இளகிவிடும்

ஞானம் பெருகிவரும் நல்வாழ்வு மிகுந்துவரும்

தொடர்ந்து அணிவோர்க்கு தொட்டதெல்லாம் ஜெயமாகும்

இசைந்து அணிவோர்க்கு நினைத்ததெல்லாம் ஈடேறும்

நம்பி அணிவோர்க்கு நல்லதெல்லாம் பெருகிவரும்

நாள்கள் கோள்களெல்லாம் நலமுடனே இணைந்துவரும்

சந்தனச் சாந்தவளே சங்கரியே சாந்தினியே

குங்குமப் பூச்சுவளே குலக்கொழுந்தே கௌரியம்மா

காப்புக் கட்டிவிட்டுக் கடமை முடிந்ததென்று

ஏப்பம் மிகவிட்டு என்றுமே இருந்தறியேன்

நாளும் பொழுதிலெல்லாம் நறுங்காப்புக் கட்டதனில்

பூவும் நீருமிட்டுப் போற்றி வணங்கிடுவேன்

காலைப் பொழுதெழுந்து காப்பதனில் விழித்திடுவேன்

ஞானச் செழுஞ்சுடரே காளியுன்னைக் காணுகின்றேன்

காப்பெனக்குக் கையிலுண்டு கடமைகளைச் செய்திடுவேன்

ஏய்ப்பவரைக் கண்டால் எரிமலைபோற் கனன்றிடுவேன்

தீமைச் செயலெதுவும் தெரியாது செய்கையிலே

காப்புக் கையிலிருந்து கண்திறந்து காட்டுமடி

சொல்லற்கு அரிதான சோதிமிகு காப்பதனை

இருபது நாள் வரையில் இசைவோடு தவமிருந்து

பக்தி மனதுடனே பரவி அணிவோர்க்கு

சித்தியெல்லாந்தருவாள் சீர்பெருகு கௌரியவள்

முத்திக்கு வழியுமுண்டு முக்கால உணர்வுமுண்டு

எச்சகத்தில் உள்ளோர் எல்லாம் ஏற்றியெமைப் போற்றிடுவர்

சொற்சக்தி பொருட்சக்தி துலங்கி வந்திடவே

அச்சக்தி எல்லாம் அருள்வாள் கௌரியவள்

கௌரிக் காப்பதனைக் காலம் தவறாமல்

முறையாய் அணிந்துவர முன்வினைகள் நீங்கிவர

ஞானம் ஓங்கிவர நல்லறிவு துலங்கிவர

தேவிமகா காளியரே தெவிட்டாத தீங்கனியே

காளியாய் வந்தமர்ந்த கௌரியே காப்பருளும்.

*எல்லோருக்கும் சுகம் உண்டாகட்டும் எல்லோருக்கும் அமைதி உண்டாகட்டும் எல்லோரும் எதிலும் முழுமை பெறட்டும் எல்லோருக்கும் எல்லா வளங்களும் உண்டாகட்டும்*

Sunday, September 25, 2022

யாரும் பசியாக இருக்கின்றீர்களா?.... நடைசாத்தும் முன் வைக்கம் சிவன் கோயிலின் அதிசய நடைமுறை

🌷அகிலம் காக்கும் அண்ணாமலை ஈசனே எனை ஆளும் நேசனே சிவனே சரணாகதி 🌷

🌷 யாரவது பசியா இருக்கீங்களா ,வைக்கம் மஹாதேவர் கோயில் 
யாரும் பசியாக இருக்கின்றீர்களா?.... நடைசாத்தும் முன் வைக்கம் சிவன் கோயிலின் அதிசய நடைமுறை

யாரும் பசியாக இருக்கின்றீர்களா?.... நடைசாத்தும் முன் வைக்கம் சிவன் கோயிலின் அதிசய நடைமுறை
ஒவ்வொருமுறை நடை சாத்தும்போதும் பகலிலும் , இரவிலும் கோவில் அர்ச்சகர் ஒருவர் நான்கு கோபுர வாசல்களிலும் கையில் பந்தத்துடன் வந்து யாரும் பசியாக இருக்கின்றீர்களா? என்று கேட்டு விட்டு செல்லும் நடைமுறை கேரள மாநிலத்தில் உள்ள கோயில் ஒன்றில் இன்றும் கடைபிடிக்கப்படுகிறது.
கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், வைக்கம் நகரிலுள்ள வைக்கத்தப்பன் கோவில் தான் அது. வேண்டுபவர்களுக்கு, விரும்பியதை வழங்கும் தலமாகக் இந்த கோயில் திகழ்கிறது.

சிவபெருமானின் பக்தனான கரன் என்ற அசுரன், முக்தி வேண்டிக் கடுந்தவம் செய்து வந்தான். அவனது தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான், அவனிடம் மூன்று சிவலிங்கங்களைக் கொடுத்து, ‘இதனை மூன்று இடங்களில் நிறுவி வழிபட்டால் முக்தி கிடைக்கும்’ என்று சொல்லி அனுப்பி வைத்தார். அவனைப் பின் தொடர்ந்து செல்லும்படி புலிக்கால் முனிவரான வியாக்ரபாதரையும் அனுப்பி வைத்தார்.

ஒரு லிங்கத்தை வலது கையிலும், மற்றொரு லிங்கத்தை இடது கையிலும், மூன்றாவது லிங்கத்தை வாயிலும் எடுத்துக் கொண்டு சென்ற அசுரன், பயணக் களைப்பால் சிறிது ஓய்வு பெறுவதற்காக வலது கையில் இருந்த சிவலிங்கத்தை ஓரிடத்தில் வைத்தான். சிறிது நேரத்திற்குப் பின்பு கீழே வைத்த சிவலிங்கத்தை அவன் எடுக்க முயன்றான். ஆனால், அது முடியாமல் போனது.
அப்போது அங்கு வந்த வியாக்ரபாதரிடம், அந்தச் சிவலிங்கத்தைப் பூஜை செய்து வழிபடும்படி வேண்டிக் கொண்டான். அதை ஏற்ற வியாக்ரபாதரும் அவ்விடத்திலேயே தங்கிக் கொண்டார். அவர் அந்தச் சிவலிங்கத்திற்கு நீண்ட காலம் பூஜை செய்து வழிபட்டு வந்தார்.
அசுரன் மீதமிருந்த இரண்டு சிவலிங்கங்களுடன் பயணத்தைத் தொடர்ந்தான். 

ஏற்ற மானூர் என்னும் இடத்தில் சென்ற போது இடது கையில் இருந்த சிவலிங்கத்தை அங்கே மேற்கு நோக்கி நிறுவி வழிபாடு செய்தான். பின்னர் வாயில் எடுத்துச் சென்ற சிவலிங்கத்தை கடித்துருத்தி என்ற இடத்தில் கிழக்கு நோக்கி நிறுவி வழிபட்டான். இதன் மூலமாக அவனுக்கு முக்தி கிடைத்தது.
பிற்காலத்தில் பரசுராமர் வான்வழியில் வடதிசை நோக்கிப் பயணம் செய்து கொண்டிருந்த போது, ஓரிடத்தில் கீழே பார்த்தார். 

அங்கு நாவல் பழ நிறத்தில் ஒரு சிவலிங்கம், நீரில் பாதியளவு மூழ்கிய நிலையில் இருப்பது தெரிந்தது. இதையடுத்து கீழே இறங்கி வந்த பரசுராமர், அந்தச் சிவலிங்கத்திற்காக பீடம் ஒன்றை அமைத்து, அந்த பீடத்தில் சிவலிங்கத்தை நிறுவி வழிபாடுகளைச் செய்யத் தொடங்கினார்.
இது கரன் என்ற அசுரனால் வலது கையில் எடுத்துவரப்பட்டு, வியாக்ரபாத முனிவரால் பூஜிக்கப்பட்ட சிவலிங்கம் என்று வைக்கம் மகாதேவர் தல வரலாறு குறித்து, பார்க்கவ புராணம் தெரிவிக்கிறது.

இந்தக் கோவில் கருவறையில் இரண்டு அடி உயரப் பீடத்தில், நான்கு அடி உயரமுடைய சிவலிங்கம் கிழக்கு நோக்கிய நிலையில் அமைந்திருக்கிறது. மூலவரான இவரது பெயர் மகாதேவர் என்பதாகும். இருப்பினும் அனைவருக்கும் பரவலாக அறியப்பட்ட பெயர் வைக்கத்தப்பன் என்பதுதான். புலிக்கால் முனிவரான வியாக்ரபாதர் வழிபட்டதால் ‘வியாக்ரபுரீசுவரர்’ என்றும் இத்தல இறைவனை அழைப்பதுண்டு.
இந்த ஆலயத்தில் அம்மனுக்கு என்று தனியாகச் சன்னிதி இல்லை. கோவிலின் பின்புறம் உள்ள விளக்கில் எண்ணெய் ஊற்றி வழிபட்டால், அம்மனை வழிபட்ட பலன்கள் அனைத்தும் கிடைக்கும் என்கின்றனர்.

ஒவ்வொருமுறை நடை சாத்தும்போதும் பகலிலும் , இரவிலும் கோவில் அர்ச்சகர் ஒருவர் நான்கு கோபுர வாசல்களிலும் கையில் பந்தத்துடன் வந்து யாரும் பசியாக இருக்கின்றீர்களா? என்று கேட்டு விட்டு செல்லும் நடைமுறை இந்த கோயிலில் இருக்கிறது.
அப்படி யாரேனும் பசியாக உள்ளேன் என்று சொன்னால் அவரை கோவிலுக்கு அழைத்துச் சென்று அவருக்கு உணவிட்டு பின் தான் கோவில் நடையை சாத்த வேண்டும் . 

இதை ஈசனின் கட்டளையாகவே இன்றும் பின்பற்றுகின்றனர்.

சிவமே தவம். எங்கும் சிவ நாமம் ஒலிக்கட்டும்

அகிலம் காக்கும் அண்ணாமலையார் மலர் பாதம் சரணம்

உலகின் முதல்வன் எம் பெருமான் நம் தந்தை சிவனாரின் இனிய ஆசியுடன் அன்பான சிவ வணக்கங்கள்.

ஆலவாயர் அருட் பணி மன்ற எம் குருவான சிவ  தந்தைக்கு சிவ  ஆத்ம நமஸ்காரங்கள்

அப்பனே அருணாச்சலா உன் பொற் கழல் பின்பற்றி 🦜🦜🦜

Followers

பிள்ளையார் விரும்பும் 'மோதகம்' நைவேத்தியம் என்றால் என்ன❓

பிள்ளையார் விரும்பும் 'மோதகம்' நைவேத்தியம் மோதக் என்றால் உற்சாகம், மகிழ்ச்சி என்று பொருள். அகம் என்ற சொல்லுக்கு ‘வழங்கக்...