Showing posts with label #ujjivaneswarar #thrukark kudi #uyya Kundan #Sivan temple #Hindu temple #markeandyan #Tamilnadu #India. Show all posts
Showing posts with label #ujjivaneswarar #thrukark kudi #uyya Kundan #Sivan temple #Hindu temple #markeandyan #Tamilnadu #India. Show all posts

Thursday, June 12, 2025

உஜ்ஜீவனேஸ்வரர் மார்க்கண்டேயனுக்குக் காட்சி கொடுத்து தலம் உய்யக்கொண்டான்.

திருக்கற்குடி(உய்யக்கொண்டான் மலை) : தேவாரப் பாடல் பெற்ற காலத்தில் கற்குடி என்றும், தற்போது உய்யக்கொண்டான் மலை என்றும் வழங்கும் சிவஸ்தலம் 50 அடி உயரமுள்ள ஒரு சிறிய குன்றின் மீது அமைந்திருக்கிறது. குன்றின் அடிவாரத்தில் முருகப் பெருமானின் சந்நிதி உள்ளது. கிழக்கு நோக்கிய 5 நிலை இராஜகோபுரத்துடன் இவ்வாலயம் அமைந்துள்ளது.
மிருகண்டு முனிவர் தனக்கு சந்தான பாக்கியம் இல்லாத குறையை நீக்கும் படி சிவபெருமானிடம் முறையிட்டு தவமிருந்தார். அவரின் தவத்திற்கு இரங்கி சிவபெருமான் அவர் முன் தோன்றி "உனக்கு உபயோகமில்லாத அறிவற்ற 100 குழந்தைகள் வேண்டுமா அல்லது 16 வயது மட்டுமே வாழக்கூடிய அறிவும், படிப்பும், இறை வழிபாட்டில் சிறந்தும் விளங்கும் ஒரு மகன் வேண்டுமா" என்று கேட்ட போது, அறிவில் சிறந்த ஒரு மகன் போதும் என்று வரம் பெற்றார். அதன்படி பிறந்த குழந்தைக்கு மார்க்கண்டேயன் என்று பெயர் சூட்டினார். மார்க்கண்டேயனுக்கு 16 வயது நெருங்கும் போது மிருகண்டு முனிவர் அவனுடைய ஆயுள் விபரத்தைக் கூறி இறைவன் சிவபெருமானைத் தஞ்சம் அடைந்து பூஜிக்கும்படி கூறினார். 
மார்க்கண்டேயன் பல சிவஸ்தலங்களுக்குச் சென்று ஈசனை வழிபட்டு பின்பு கற்குடி சிவஸ்தலம் வந்து சேர்ந்தான். இத்தலத்தில் தான் இறைவன் உஜ்ஜீவனேஸ்வரர் மார்க்கண்டேயனுக்குக் காட்சி கொடுத்து அவன் என்றும் 16 வயதுடன் சிரஞ்ஜீவியாக வாழ வரம் கொடுத்தார். இத்தலத்தில் வசிப்போர் நீண்ட ஆயுளையும், நிறைந்த செலவங்களையும் பெறுவர். வழிபடுவோர்க்கு எம பயமில்லை என்று தலபுராணம் கூறுகிறது.
தேவார மூவர் என்று போற்றப்படும் அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவராலும் பாடல் பெற்ற பெருமையுடைய சிவஸ்தலங்களில் இத்தலமும் ஒன்று. திருநாவுக்கரசர் இத்தலத்து இறைவன் மேல் பாடிய பதிகத்தில் ஒவ்வொரு பாடலிலும் கற்குடி இறைவன் உஜ்ஜீவ நாதரைக் கண்ணாரக் கண்டதை குறிப்பிட்டுப் பாடியுள்ளார். இப்பதிகம் ஆறாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.
இறைவர் : ஸ்ரீ உஜ்ஜீவனேஸ்வரர்
இறைவியார் : ஸ்ரீ அஞ்சனாட்சி
தம்பிரான் தோழர் திருவெஞ்சமாக்கூடல் பணிந்து நெடுந்தூரம் கடந்து கற்குடியில் விழுமியாரைத் தொழுது பாடியருளியது இத்திருப்பதிகம். இத்திருப்பதிகம், இறைவரைப் பல படியாக ஏத்தி, அவர்பால் அபயம் வேண்டி அருளிச்செய்தது.
🌺"விடையாரும் கொடியாய் வெறியார் மலர்க் கொன்றையினாய்
படையார் வெண்மழுவா பரமாய பரம்பரனே
கடியார் பூம்பொழில்சூழ் திருக்கற்குடி மன்னி நின்ற
அடிகேள் எம்பெருமான் அடியேனையும் அஞ்சல் என்னே."🌺
——(சுந்தரர் தேவாரம் : 07.027.01)
பொருளுரை : இடபம் எழுதப்பெற்ற கொடியை உடையவனே, நறுமணம் பொருந்திய கொன்றை மாலையை அணிந்தவனே, படைக்கலமாகப் பொருந்திய கூரிய மழுவை ஏந்தியவனே, மேலார்க்கும் மேலானவனே, மணம் நிறைந்த பூஞ்சோலைகள் சூழ்ந்த திருக்கற்குடியில் நிலையாக எழுந்தருளியிருக்கும் தலைவனே, எங்கள் கடவுளே, அடியேனையும் "அஞ்சாதி" எனச் சொல்லி உய்யக் கொண்டருள்.
🌺"அலையார் தண்புனல் சூழ்ந்து அழகாகி விழவு அமரும்
கலையார் மாதவர்சேர் திருக்கற்குடிக் கற்பகத்தைச்
சிலையார் வாணுதலாள் நல்ல சிங்கடி அப்பன் உரை
விலையார் மாலை வல்லார் வியன் மூவுலகு ஆள்பவரே."🌺
——(சுந்தரர் தேவாரம் : 07.022.11)
— 
பதிகப் பலன் : அலை நிறைந்த தண்ணிய நீரால் சூழப்பட்டு அழகுடையதாகி விழாக்கள் நீங்காதிருக்கின்ற, கலை ஞானங்கள் நிறைந்த பெரிய தவத்தவர் சேர்கின்ற திருக்கற்குடியில் எழுந்தருளியிருக்கின்ற கற்பகம் போல்பவனை, விற்போலும் ஒளி பொருந்திய நெற்றியையுடைய நல்ல "சிங்கடி" என்பாளுக்குத் தந்தையாகிய நம்பியாரூரன் பாடிய, விலை மிகுந்த இத்தமிழ்ப் பாமாலையைப் பாட வல்லவர்கள், அகன்ற மூன்றுலகத்தையும் ஆளுதற்கு உரியவராவர்.
ஆலய முகவரி : அருள்மிகு உஜ்ஜீவநாதசுவாமி திருக்கோயில், உய்யக்கொண்டான் மலை, உய்யக்கொண்டான் மலை அஞ்சல், சோமரசம்பேட்டை(வழி) S.O. திருச்சி மாவட்டம், PIN - 620 102. 
ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Followers

தென்னாடுடைய சிவன் என்பது ஏன் ..?

சிவன் வீற்றிருக்கும் கயிலாயம்  வடக்கில் இருக்கும் போது ...... தென்னாடுடைய சிவன் என்பது ஏன் ..? .. வடக்கில் இருப்பது பூலோக கயிலாய...