திருச்சிவபுரம் : "சிவபுரம்" என்று சிவபெருமானின் நாமத்தினைக் கொண்டு அழைக்கப்படும் சிறப்பினைப் பெற்ற ஒரே தலம் இதுவேயாகும்.
திருமால் வெள்ளைப் பன்றி வடிவிலிருந்து பூசித்து பேறு பெற்ற தலம். இந்நிகழ்ச்சியை அப்பர் பெருமான் இத்தலத்துத் திருத்தாண்டகத்தில் "பாரவன் காண்" என்று தொடங்கும் பாடலில் "பிறை எயிற்று வெள்ளைப் பன்றி பிரியாது பலநாளும் வழிபட்டேத்தும் சீரவன் காண்" என்று பாடியுள்ளார்.
—
இத்தலத்தில் பூமிக்கடியில் ஒரு அடிக்கு ஒரு சிவலிங்கம் இருப்பதாக ஐதீகம். ஆகையால் இத்தலத்தைக் காலால் மிதிப்பதற்கு அஞ்சி திருஞானசம்பந்தர் அங்கப் பிரதட்சினம் செய்து இறைவனை வழிபட்டார்.
பின்பு ஊர் எல்லையைத் தாண்டிச் சென்று அங்கிருந்தபடி இத்தல இறைவனை பதிகம் பாடி வழிபட்டார் என்று வரலாறு கூறுகிறது. சிவாலயங்களில் அங்கப் பிரதட்சணம் செய்யக்கூடிய சிறப்புமிக்க தலம் இது ஒன்றேயாகும்
—
திருநறையூர்ச் சித்தீச்சரம் முதலிய தலங்களை வணங்கிப் பதிகப்பணி செய்த , திருஅரிசிற்கரைப்புத்தூரில் இருக்கின்ற காலத்து, திருஞானசம்பந்தப் பிள்ளையார் திருச்சிவபுரத்திற்கு எழுந்தருளினார்கள்.
இத்தலம் திருமால் வெள்ளைப் பன்றியாய்ச் சிவபெருமானை வழிபட்ட தலமாதலின் அங்கே எழுந்தருளியிருக்கின்ற இறைவன் திருவடியை வணங்கிப் "புவம் வளி கனல் புனல்" என்னும் இப்பதிகத்தை அருளிச்செய்தார்.
—
🙏"மலைபல வளர்தரு புவியிடை
மறைதரு வழிமலி மனிதர்கள்
நிலை மலி சுரர் முதல் உலகுகள்
நிலைபெறு வகை நினைவொடு மிகும்
அலைகடல் நடு அறிதுயில் அமர்
அரி உருவியல் பரன் உறைபதி
சிலை மலி மதில் சிவபுரம்
நினைபவர் திருமகளொடு திகழ்வரே.🙏
——(சம்பந்தர் தேவாரம் : 01.021.02)
—
🙏பொருளுரை : மலைகள் பல வளரும் இம்மண்ணுலகில் வேத விதிகளின் படி நடக்கும் மிகுதியான மக்கள், விண்ணில் நிலை பேறுடையவராய் வாழும் தேவர்கள் ஆகியோரும் மற்றுமுள்ள உலக உயிர்களும் நிலைபெற்று வாழ்தற்குரிய காத்தல் தொழில் நினைவோடு, மிகுந்துவரும் அலைகளை உடைய திருப்பாற்கடல் நடுவில் அறிதுயில் அமர்ந்துள்ள திருமாலை அதிட்டித்துநின்று காத்தல் தொழிலைச் செய்தருளும் சிவபிரான் உறையும் பதி, கற்களால் கட்டப்பட்ட மதில்கள் சூழ்ந்த சிவபுரமாகும். அதனை நினைப்பவர் திருமகளொடு திகழ்வர்
—
ஆலய முகவரி : அருள்மிகு சிவகுருநாதசுவாமி திருக்கோயில், சிவபுரம், சாக்கோட்டை அஞ்சல், கும்பகோணம் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம்,
ஓம் நமசிவாய
படித்து பகிர்ந்தது
இரா .இளங்கோவன்
நெல்லிக்குப்பம்.
—
No comments:
Post a Comment