Tuesday, February 25, 2025

சிவராத்திரி சிவாலயம் வில்வனேஸ்வரர் திருக்கோவில் திருவைகாவூர்.

சிவராத்திரி சிவாலயம் வில்வனேஸ்வரர் திருக்கோவில் திருவைகாவூர்
அந்த தலம் கும்பகோணத்தில் இருந்து சுவாமிமலைக்கு செல்லும் சாலையில் திருவைகாவூர் எனும் ஊரில் வில்வனேஸ்வரர் தலமாக விளங்குகின்றது

திருகாளகத்தி, திருசைலம், திருகோகர்ணம் வரிசையில் இந்த திருவைகாவூர் முக்கியமான தலம்
"கோழைமிட றாககவி கோளுமில   வாகஇசை கூடும்வகையால்    
ஏழையடி யாரவர்கள் யாவைசொன   சொல்மகிழும் ஈசனிடமாம்    
தாழையிள நீர்முதிய காய்கமுகின்   வீழநிரை தாறுசிதறி    
வாழையுதிர் வீழ்கனிகள் ஊறிவயல்   சேறுசெயும் வைகாவிலே"

என சம்பந்த பெருமாரும்

"தில்லைச் சிற்றம்பலமுஞ் செம்பொன் பள்ளி
 தேவன் குடிசிராப் பள்ளி தெங்கூர்
கொல்லிக் குளிரறைப் பள்ளி கோவல்
 வீரட்டங் கோகரணங் கோடி காவும்
முல்லைப் புறவம் முருகன் பூண்டி
 முழையூர் பழையாறை சத்தி முற்றங்
கல்லிற் றிகழ்சீரார் காளத் தியுங்
 கயிலாய நாதனையே காண லாமே"

என அப்பர் பெருமானும் பாடிய பாடிய தேவார பாடல் தலம் இது.

இந்த ஆலய வரலாறு ம்கா தொன்மையானது

பிரளய காலம் எனும் கொடும்காலம் முடிந்து மீண்டும் உலகம் படைக்கபட தொடங்கும் போது திருமாலுக்கும் பிரம்மனுக்கும் வேதங்களுக்கும் ஒரு சந்தேகம் உண்டாயிற்று, அது மறுபடியும் ஊழிகாலம் வந்தால் நமது நிலை என்னாகும் என்பது

பிரம்மனுக்கு இந்த சந்தேகம் முதலில் வந்து அவன் இந்த இடத்தில் தவம் செய்ய தொடங்கினான், அவனை தொடர்ந்து திருமால் வந்தார் அப்படியே வேதங்களும் வந்தன‌
அவர்கள் நடுவில் தோன்றிய எம்பெருமான் வேதங்களுக்கு முதலில் ஒரு உறுதிமொழி கொடுத்தார் அதன்படி வில்வமரங்கள் எந்த காலத்திலும் எந்த ஊழியிலும் அழியாது என்பதால் அவை மீண்டும் மீண்டும் வரும் என்பதால் வேதங்களை வில்வமரங்களாக நிற்கும்படி உத்தரவு கொடுத்தார்

வேதங்கள் அங்கே வில்வமரமாக நின்று சிவனை வணங்கின, அந்த வனமே வில்வவனம் என்றாயிற்று

அந்த வில்வவனத்தில் பிரம்மனுக்கும் திருமாலுக்கும் சிவன் உறுதிமொழிகளை கொடுத்ததால் அவர்களும் சிவனை போற்றி நின்றார்கள்

இப்படி சிவனை வேதங்களும், திருமாலும் பிரம்மனும் வணங்கினார்கள், இன்னும் உத்தால முனிவரால் சபிக்கபட்ட சப்தகன்னியர் வணங்கி நலம் பெற்றார்கள்

வில்வவனத்தில் ஒரு வில்வ மரத்தடியில் அந்த சிவன் சுயம்புவாய் வீற்றிருந்தார், காலங்கள் கடந்தன தேவர்களும் இதர உலகத்தாரும் வந்து வணங்கி சென்றனர், ரிஷிகளும் வந்து அந்த வனத்தில் வில்வனேஸ்வரரை வணங்கி தவமிருந்தனர் 

அப்படி தவமிருந்தவர்களில் நவநிதி என்பவரும் ஒருவர், அவர் பெரும் தவம் இயற்றி கொண்டிருந்தார். அந்நேரம் அருகில் இருந்த காட்டில் நாளெல்லாம் வேட்டையாடியும் ஒன்றும் கிடைக்காத வேடன் அந்திபொழுதில் ஒரு மானை கண்டான், அதை விரட்டினான்

மான் இந்த வில்வவனத்துக்குள் வந்து முனிவரிடம் அடைக்கலாமனது, வேடனோ விரட்டி வந்தவன் மானை கண்டு வில்லை வளைத்தான்

அந்நேரம் கண்விழித்த முனிவர் மானை கண்டு இரக்கம் கொண்டு அதனை அருகில் அழைத்தார் மான் அஞ்சி நடுங்கி அவரிடம் ஒட்டி கொண்டது, அன்பான அவரிடம் சரணடைந்தது

வேடனோ முன்னேறி ஓடிவந்தான்

அதே நேரம் எமன் அவனை நோக்கி புன்னகைத்தான், காரணம் வேடனின் விதி அதிகாலை முடிவதாக இருந்தது, அவன் உயிரை பறித்து தன் கடமை செய்ய எமன் தயாரானான்

எல்லா மானுடரை போலவே இதை அறியாத வேடன் மானின் உயிர் பறிக்க முனிவர் முன் வந்து வாதிட்டான்

அக்காலத்தில் வேடுவர்க்கும் விதி இருந்தது, தவம் செய் முனிவர்கள் இருக்கும் இடத்துக்கு வரகூடாது அவர்கள் பராமரிப்பில் இருக்கும் விலங்குகளை தொட கூடாது என்பது பொது விதியாய் இருந்தது

முனிவர் அதை சொல்லி மானை காக்க முற்பட்டார் அவனோ இது ஓடிவந்த காட்டுமான் அவர் மான் அல்ல அது தனக்கு சொந்தம் என வாதிட்டான்

முனிவர் அதனை கொடுக்க மறுத்தார், அறம் மறந்து பசியிலும் வேட்டை வெறியிலும் இருந்த வேடனோ மானுக்காக அவரை கொல்லவும் துணிந்தான் மிரட்டினான்

முனிவர் கண்ணை மூடி சிவனை தியானித்தார்

அந்நேரம் ஒரு புலி உறுமிகொண்டு வந்தது, உருவிலும் வலுவிலும் மிக மிக பெரிதாக இருந்த புலியினை தன்னால் கொல்லமுடியாது என உணர்ந்த வேடன் தப்பி ஓடினான், புலி அவனை விரட்ட ஒரு மரத்தின் மேல் ஏறி அமர்ந்து கொண்டான்

புலிக்கு மரம் ஏற தெரியாது என்பதால் புலி மரத்தில் ஏறவில்லை மாறாக மரத்தடியில் படுத்து கொண்டது

வேடனுக்கோ கொடும் பசி பெரும் தளர்ச்சி , மரத்தின் மேல் இருந்து புலியினை நோக்கினான் அது அங்கே பழிக்காவல் கிடந்தது

ஒருவேளை உறங்கினால் கீழே விழலாம் அப்போது புலிக்கு உணவாக வேண்டும் என கருதியவன், தூக்கம் வரமால் இருக்க ஒவ்வொரு மர இலையாக பறித்து கீழே போட ஆரம்பித்தான்

இலைவிழும் மரத்தடியில் புலி படுக்காது என்பது அவனுக்கு தெரியும், அது அவ்வளவுக்கு மிக உணர்வான விலங்கு சிறு பொருளும் தன் மேல் விழ அது அனுமதிக்காது அதன் இயல்பு அப்படி

வேடன் அதனால் இலைகளை பறிந்த்து போட ஆரம்பித்தான், புலியோ அசரவில்லை, அவன் ஆச்சரியபட்டாலும் தூக்கம் வராமல் இருக்க அதை தொடர்ந்து செய்தான்

அது வில்வமரம் என்பதை அவன் அறிந்திருக்கவில்லை

அந்த இரவு முழுக்க அவன் இலையினை பறித்து கீழே வீசிகொண்டிருந்தான், அது மாசிமாதம் கிருஷ்ணபட்சம் சதுர்த்தியன்று அமாவாசைக்கு முதல் நாளாக இருந்தது

அவன் இரவு முழுக்க அப்படி வில்வ இலைகளை வீசினான், அதிகாலையில் அவன் விதிமுடியும் நேரம் எமன் அப்பக்கம் வந்தான்

ஆனால் தட்சனாமூர்த்தி வடிவில் சிவன் தோன்றினார் கையில் கம்புடன் அவனை விரட்டினார், நந்தியானவர் சீறி சென்று தன் கொம்பால் அவனை தூக்கி எறிந்தார்

எமன் அரண்டே போனான், தன் கடமையினை செய்யவந்த போது சிவன் தன்னை தடுப்பது சரியல்ல என வாதிட்டான்

அப்போதுதான் சிவன் உரைத்தார் "இவன் இரவெல்லாம் சிவராத்திரி வழிபாடு செய்ததால் அவன் கர்மா தீர்க்கபட்டு ஆயுள் அதிகரித்தாயிற்று இனி அவன் மேல் எமனுக்கு அதிகாரமில்லை" என உத்தரவிட்டார்

எமன் அந்த சிவனை பணிந்து ஒரு தீர்த்தம் உருவாக்கி கொடுத்தான் அதுவே "எம தீர்த்தம்" ஆயிற்று

நடந்ததை அறியாமல் மரத்தில் இருந்து அஞ்சியபடியே இறங்கிய வேடன் புலியினை தேடினான், அதை காணவில்லை ஆனால் அவன் பறித்துபோட்ட இலை குவிந்து கிடந்தது

ஒருவேளை புலி அதனுள் பதுங்கி இருக்கலாம் என் அஞ்சியவன் தன் கத்தியினை உருவியபடியே அந்த இலைகளை மெதுவாக ஒதுக்கினான்

உள்ளே சிவலிங்கம் இருந்தது, வேடனுக்கு கை கால் எல்லாம் ஆடிற்று அப்படியே கத்தியினை விட்டுவிட்டு கதறினான்

நவநிதி முனிவர் அவனுக்கு நடந்ததை எடுத்துரைத்தார்,  சிவராத்திரியின் பெருமையினை சிறப்பை எடுத்துரைத்தார், இரவெல்லாம் வில்வ இலையால் சிவனுக்கு அர்ச்சனை செய்தால் கொடிய விதி மாறும் என போதித்தார்

அங்கே  கொடிய வேடன் சிவனால் ஆட்கொள்ளபட்டு முனிவரின் சீடரானான், மானிடரின் முதல் சிவராத்திரி இங்கிருந்துதான் தொடங்கிற்று

அவ்வகையில் மானிட இனம் சிவராத்திரியினை இந்த தலத்தில் இருந்துதான் தொடங்கிற்று

பின்னாளில் இங்கு கோவில் எழுந்தது, அந்த வில்வனேஸ்வரர் பெரும் ஆலயம் கொண்டார், தலபுராணபடி திருமாலும் பிரம்மனும் துவாரபாலகர்கள் என்றாகி இன்றும் நிற்கின்றார்கள்

வில்வம் அங்கே தலவிருட்சமாயிற்று

சோழர்கள் இந்த ஆலயத்தை மிக சிறப்பாக தலைமுறை தலைமுறையாக பெரிது படுத்தி கொண்டாடினார்கள், குலோதுங்க சோழன் இதனை கொண்டாடினான் அவன் பற்றிய கல்வெட்டு நிரம்ப உண்டு

தேவாரம் பாடபெற்ற 48ம் ஆலயம் இது

இங்கு இரு முருகன் சன்னதிகள் உண்டு, ஒருவர் மயில்மேல் வள்ளி தெய்வானவுடன் அமர்ந்திருப்பார், இச்சிலை எட்டுகுடி முருகனை வடிவமைத்த அந்த தெய்வீக சிற்பியால் அழகுற செதுக்கபட்டது

இன்னொரு முருகன் மயில்மேல் கால்வைத்த முத்துகுமாரசாமியாக நிற்கின்றார், இவர் சம்ஹார மூர்த்தி, அருணகிரியாரால் பாடபட்டவர் இவர்

அப்படியே சண்டிகேஸ்வரர்கள் இங்கு இருவர் உண்டு,  பஞ்ச பைரவர் சன்னதி விஷேஷமானது

இந்த ஆலயத்தில் நந்தி சிவனை பார்க்காமல் வாசலை நோக்கி அமர்ந்திருப்பார், எமனை அவர் விரட்டி அடித்து மேற்கொண்டு வேடனுக்கு காவல் இருந்ததை சொல்லும் காட்சி இது

தட்சினாமூர்த்தி இங்கு கையில் கம்பு , மான் கொண்டு காட்சியளிப்பார். இது மானை தேடி வந்த வேடனை சிவன், எமனை விரட்டி ஆட்கொண்ட காட்சியினை சொல்லும்

இத்திருத்தலத்திற்கு இராஜ கோபுரம் இல்லை. அதாவது அவ்வளவுக்கு முந்தைய காலம்

கோயிலின் வெளிப்புறம் மிக நீண்ட உயரமான மதில் சுவரும், முகப்பில் வவ்வாலத்தி மண்டபமும் உண்டு

மண்டபத்தில் அந்த தலபுராணமான  வேடனை, புலி விரட்டிய திருவிளையாடல் சுதை சிற்பமாக அமைக்கப்பட்டுள்ளது.

தென்புற வாயிலில் கிழக்கு நோக்கிய சித்தி விநாயகர் சன்னிதி அமைந்துள்ளது.

பிரகாரத்தில், சுந்தரமூர்த்திவிநாயகர் சன்னதி, சூரிய, சந்திர பகவான், அறுபத்து மூன்று நாயன்மார்கள், சப்தகன்னியர் சன்னதி, சுப்பிரமணியர் சன்னதி, முத்துக்குமார் சன்னதி, பஞ்ச பைரவர் சன்னதி, இரண்டு சண்டிகேஷ்வரர்கள் சன்னதி மற்றும் சனீஸ்வரன் தனிச்சன்னதியும் அமைந்துள்ளது. 

மகா மண்டபத்தில் விநாயகர், பிரம்மா, விஷ்ணு, நாராயணி, அகத்தியர் திரு உருவங்களும், கோஷ்டத்தில் கணபதி, அர்த்தநாரீஸ்வரர், பிரம்மா, லிங்கோத்பவர், தட்சிணாமூர்த்தி, துர்க்கை ஆகியோர் அருள்பாலிக்கின்றனர்.

பிரகார வலம் வந்து கருவறைக்குள் நுழைந்தால் இத்தல மூலவர் அருள்மிகு வில்வவனநாதர் சுயம்புமூர்த்தியாக கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். கருணைக்கடலான சிவபெருமானை தரிசித்து விட்டு வெளியேறினால்,

கருணைக்கடலான சிவபெருமானை தரிசித்து விட்டு வெளியேறினால், இடதுபுறம் வளைக்கை நாயகி அம்மன் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் அபய ஹஸ்தத்துடன் தனிச்சன்னதியில் அருள்புரிகிறார். அம்பாளுக்கு எதிரில் ஸ்ரீ சக்கரம் அமைந்துள்ளது.

 இந்த சக்கரத்திற்கு அருகே நின்று வேண்டிக் கொண்டால் அம்பாளே நம்முடன் பேசுவது உணர முடியும் என்பதும் , பக்தர்களின் வேண்டுதல் இத்தனை நாளில் நடக்கும் என அங்கேயே அம்பாளால் சொல்லபடும் என்பதும் அவளிடம் வேண்டி பலன் பெற்ற எல்லா பக்தர்களின் சாட்சி, மெய்சிலிர்க்க வைக்கும் சாட்சி

தன்னிடம்  வேண்டுவோர் குறை அனைத்தும் தீர்க்கும் தாய் என்பதால் அம்பாளுக்கு "சர்வஜன ரட்சகி" எனும் திருநாமம் உண்டு

இந்த ஆலயத்தில் அம்பாள் சன்னதியும் சுவாமி சன்னதியும் நேர்கோட்டில் ஒரே திசையில் அமைந்துள்ளது. இந்த அமைப்பினை கல்யாணத்திருக்கோவில் என்று அழைக்கப்படுகிறது.

 ஈசன் கயிலாயத்தில் நடந்த கல்யாணக் காட்சியை அகத்தியர்ருக்கு காட்சிதந்து அருளிய ஆலயங்களில் ஒன்று என்பதால் இந்த அமைப்பு உண்டு

சிவராத்திரியில் நான்காம் சாமத்தில் வழிபட வேண்டிய ஆலயம் இது

இந்த ஆலயத்தின் தாத்பரியமும் போதனையும் எளிதானது, வேடன் ஒருவன் அறியாமல் தன்னை அறியாமலே என்ன செய்கின்றோம்  என தெரியாமலே சிவராத்திரியில் விழித்திருந்து வில்வ இலையால் சிவனை அர்சித்து மோட்சம் பெற்ற சம்பவத்தை சொல்லும் தத்துவம் இது

ஆம், பெரிய ஞானம் வேண்டாம் , ஆத்ம தத்துவ அறிவு வேண்டாம், வேத ஞானமோ சிவனின் தாத்பரியமோ எதுவும் அறிந்திருக்க வேண்டாம்

சிவராத்திரியில் விழித்திருந்து வில்வ இலையால் சிவனை அர்சித்தாலே, சூரியன் அதிகாலையில் தானாக எழுவது போல் சிவனருள் தானாக வந்து மனதில் உதிக்கும் ஞானம் கொடுக்கும் என்பதை இந்த தலம் சொல்லி சிவராத்திரி வழிபாட்டின் நான்காம் சாம முக்கியத்துவத்தை சொல்கின்றது

சிவராத்திரியின் நான்காம் சாமத்தில் தேவர்கள் சிவனை வழிபடும் நேரம், இந்த ஆலயத்தில் திருமால், பிரம்மன் இன்னும் சூரிய சந்திரர் உள்ளிட்ட தேவர்கள், சப்த கன்னியர் என எல்லா தேவர்களும் வந்து வணங்கினார்கள்

வேதங்கள் வணங்கிற்று

இன்னும் மானிடரில் இருந்து தேவர் நிலைக்கு உயர்ந்த அகத்தியர், நவமுனி போன்றோரும் வணங்கினார்கள்

இதனால் இந்த தலம் தேவர்கள் வழிபடும் நான்காம் சாமத்தின் தலமாயிற்று, புது யுக தொடக்கத்தில் அவர்கள் அச்சமெல்லாம் போக்கி புது படைப்பாய் புது சக்தியாய் இயங்கும் வரத்தை இந்த ஆலயமே கொடுத்தது

சிவராத்திரியின் நான்கு பொழுதுகளின் தத்துவமும் அருமையானவை பெரும் ஞானம் போதிப்பவை

முதல் சாமம் மனிதன், இரண்டாம் சாமம் யட்சர்கள் நாகர்கள் , மூன்றாம் சாமம் அசுரர்கள், நான்காம் சாமம் தேவர்கள் என்பது ஒரு படிநிலை தத்துவம்

மனிதன் தன் ஞான தேடலால்  குண்டலி எனும் நாகத்தால் சக்தி பெற்று யட்சன் போல் பரம்பொருளை நெருங்கி, அசுர குணத்தை ஒழித்து தேவர் நிலைக்கு உயர்தல் வேண்டும் என்பதே சிவராத்திரி தத்துவம்

முழு விழிப்பு நிலையில் ஆத்ம விழிப்பு நிலையில் அவன் மானிடரில் இருந்து தேவராக உயர்தல் வேண்டும் என்பதே அந்த அற்புதமான ஏற்பாட்டின் போதனை

மாசிமாத சுக்லபட்ச 14ம் நாள் இரவு அதற்கான பலனை வானியல் ரீதியாக தரும், நல்ல அலைகளை தரும்

அந்த இரவில் இந்த நான்கு தலங்களையும் நான்கு சாமத்தில் தரிசித்தல் நன்று சோழநாட்டு தஞ்சை கும்பகோணம் பக்கம் உள்ளவர்கள் அந்த இரவில் இதனை எளிதில் தரிக்கலாம்

முடியாதவர்கள் ஒவ்வொரு சாம வழிபாட்டிலும் இந்த ஆலயங்களையும் அந்த சிவனையும் அந்த ஆலய தத்துவத்தையும் மனதார வணங்கி வழிபடலாம், வில்வம் சாற்றி வழிபடலாம், அதை முறையே செய்தால் உங்கள் மனமும் வீடும் செழிக்கும், அந்த வீடும் குடியும் செழித்து வாழும் இது சத்தியம். 

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம். 

No comments:

Post a Comment

Followers

சிவராத்திரி சிவாலயம் வில்வனேஸ்வரர் திருக்கோவில் திருவைகாவூர்.

சிவராத்திரி சிவாலயம் வில்வனேஸ்வரர் திருக்கோவில் திருவைகாவூர் அந்த தலம் கும்பகோணத்தில் இருந்து சுவாமிமலைக்கு செல்லும் சாலையில் தி...