Monday, February 24, 2025

திருக்கழுக்குன்றம் ருத்ரகோடீஸ்வரர் சிவாலயம் கருவறைக்கு எதிரில் இங்கு நந்தி இல்லை

எல்லாச் சிவாலயங்களும் சிவராத்திரி அன்று வழிபட வேண்டியவை  என்றாலும் ருத்திர கோல சிவனை, ருத்திர அம்ச சிவனை வழிபட்டால் பலன் அதிகம் .
 அந்த ஆலயங்களில் தலையானது திருக்கழுக்குன்றம் ருத்ரகோடீஸ்வரர் சிவாலயம்.

காஞ்சிபுரம் அருகே செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மிக மிக தொன்மையான‌ சிவாலயம் இது.

நான்கு வேதங்களும் நான்கு மலைகளாக வீற்றிருக்கும் தலம் இது. வேதங்களே சிவனை நோக்கித் தவம் செய்யும் இடம் இது. இதனால் "வேத்கிரி" என அவைகளுக்குப் பெயர், காலத்தால் மூத்த தலம் இதுதான்.

 ரிக், யஜுர், சாமம், அதர்வணம் என்ற நான்கு வேதங்களும் 4 பெரிய பாறைகளாக இருப்பதாகவும், அவற்றுள் அதர்வணவேத பாறை உச்சியில் சிவபெருமான் கோவில் கொண்டுள்ளார் என்று தலபுராணம் விவரிக்கிறது.

காசி, தில்லை, திருவாரூர், திருவண்ணாமலை, காஞ்சி, காளகஸ்தி, மதுரை என மகா முக்கிய ஆலயங்கள் இறையனாரின் உடலாகவும்,  இந்த ருத்திரகோடீஸ்வரர் கோவில் இதயமாகவும் அமைந்துள்ளது.

சிவன் வாழும் இமயம் என்பது இமயவானுடையது. கயிலாயம் குபேரன் சிவனுக்காய் உருவாக்கியது. சிவனே தானே தேர்ந்து வேதங்கள் நடுவில் வாழும் ஆலயம் இந்த ருத்திரகோட்டீஸ்வர ஆலயம்.

இந்தத் தல வரலாறு மிக மிக  தொன்மையானது. பாற்கடலை கடைந்த காலத்தினுடையது.

பாற்கடலை கடைய முதலில் மந்தார மலையினை வேகமாக முதலில் இட்டார்கள். அது கடலின் அடித்தளத்தில் மோதி பாதாளத்தில் விரிசல்களை உண்டாக்கிற்று.

பின் பகவான் விஷ்ணு மத்தாகி பாற்கடல் கடைப்பட்டாலும் இந்தப் பிளவுகள் வழியே பாதாளத்தில் அடைபட்ட அசுரர் கோடிக்கணக்கில் வெளிவந்தனர்.

இவர்கள் அந்நேரம் தேவர்களும் இன்னொருபாதி அசுரர்களும் பாற்கடலை கடைந்தபோது காலியாக இருந்த தேவர்களின் ஆசனங்களில் அமர்ந்து அட்டகாசம் செய்தனர்.

இவர்களை அடக்க சிவன் ருத்திர கோலத்தில் மாறி ஒரு கோடி ருத்திரர்களை தோற்றுவித்தார். அவர்கள் 32 வகை ஆயுதங்கள் ஏந்தி அந்த அசுரர்களுடன் போரிட்டு அவர்களை ஒழித்து நின்றனர். பின் அவர்கள் தாங்கள் என்ன செய்வது? எனக் கேட்டனர்.

சிவன் அவர்களைத் தங்களுக்குள் அழைக்க திருவுளம் கொண்டார். அவர்களை இந்தத் தலத்தில் வந்து தன்னில் கலக்கும்படி அருள்புரிந்தார். அப்போது அந்த ஒரு கோடி ருத்திரர்களும் அவரிடம் ஒரு வரம் கேட்டார்கள்.

"எம்பெருமானே, எங்களுக்குத் இத்தலத்தில் முக்தி தந்தது போல, இங்கு வரும் ஒவ்வொரு பக்தர்களுக்கும் வரம் அருளி உம்மோடு சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இங்கு ஒருமுறை வைக்கப்படும் வில்வம் கோடிவில்வமாகவும், ஒரு முறை சொல்லும் மந்திரம் கோடி முறை சொன்னதாகவும் உங்களால்  ஏற்றுக்கொள்ளபடும். கோடி ருத்திரர்களாகிய எங்கள் பொருட்டு அவ்வரம் அருள வேண்டும்.

வரும் பக்தர்கள் ஒவ்வொருவரும் எங்கள் கோடிபேரின் அருளையும் பெறவேண்டும்" என்றார்கள்.

சிவன் அவர்களுக்கு அந்த வரத்தை அருளினார்.

சிவன் அங்கு ருத்திர அம்சமாய் நிற்க ருத்திரர்கள் கோடி பேரும் அவரில் கலந்துவிட்டார்கள். இதனால் அந்தச் சிவன் ருத்திரர்கோடி ஈஸ்வரர் என்றானார்.

சிவராத்திரி அன்று அக்னிப்பிழம்பாக அங்கு நின்ற சிவனிடம் ருத்திரர்கள் கோடிப் பேரும் அடைக்கலாமானர்கள். அதனால் இங்கு சிவராத்திரி விசேஷம்.

இங்கு  இன்னும் இரு தலபுராணம் உண்டு.

ஒருமுறை சிவனை சந்திக்க வந்தார் திருமால். அங்கே அவர் வாகனமான கருடனுக்கும் நந்திக்கும் சண்டை வந்து கருடனை அவர் சிதைத்துப் போட்டார்.

கருடனை உயிர்பித்து அதனை மீள உயிர்கொடுத்த சிவன் ஆணவத்தால் நந்தி செய்த காரியத்தை நினைத்து தண்டனை அளித்தார்

அந்தத் தண்டனை தீர நந்தி வந்து தவமிருந்த இடம் இது. அதனால் பிரதோஷம் எக்காலமும் விசேஷம். நந்திக்கும் கருடனுக்கும் நடந்த சண்டையினைச் சொல்ல கழுத்தில்லா கருடன் இன்றும் உண்டு.

இன்னொரு தலபுராணம் சிவன் பார்வதி திருமணம். இமவான் மகளைச் சிவன் திருமணம் செய்தபோது தன் மாமனார் இடத்தில் வசிக்க விரும்பாச் சிவன், பார்வதியின் தெய்வத் திருமேனியுடன் இந்த தலத்துக்கு வந்தார், சிவனுக்கு மிக மிக பிடித்த சொந்த இடமான இங்கு வந்தாள்.

அந்தத் திரிபுர சுந்தரிதான் பக்தவச்சலலேஸ்வரர் ஆலயத்தில் குடியிருக்கின்றாள்.

இதுதான் ஆதிகால ஆலயம், இந்த ஆலயத்தில் இருந்துதான் வேதபுரி என்றும், ருத்ரகோட்டீஸ்வரம் எனும் இந்தத் தலத்தின் வரலாறு தொடங்குகின்றது, இந்த ருத்திர கோடீஸ்வரர்தான் காலத்தால் மூத்த ஆலயம்.

பின்னாளில் அங்கு வேதபுரீஸ்வரர் ஆலயம், பக்தவச்சலம் ஆலயம் என இரு ஆலயங்கள் வந்தன. பின்னாளில் தீர்த்தகிரி சிவன் ஆலயங்கள் வந்தன, அவை தொன்மையானவை எனச் சொல்லபட்டாலும் காலத்தால் பிந்தியவையே.

இந்த ருத்திரகோடீஸ்வரர்தான் வேதநாதன், வேதபுரீஸ்வரர் என அழைக்கப்பட்டார், அது இன்றும் தொடர்கின்றது.

இந்த ஆலயத்தின் சிறப்புக்கள் பல உண்டு. முதல் அதிசயம் நம்பமுடியாத ஆனால் சிலிர்ப்பூட்டும் அதிசயம் 12 ஆண்டுக்கு ஒருமுறை தீர்த்தத்தில் விளையும் சங்கு.

பொதுவாக சங்கு அதுவும் வலம்புரி சங்கு கடலில்தான் உப்புநீரில் விளையும். இங்கு 12 ஆண்டுக்கு ஒருமுறை சங்கு தானே உருவாகி கரைக்கு வரும். அந்தச் சங்கை கொண்டுதான் இறைவனுக்கு அபிஷேகம் செய்யப்படும். பழைய சங்குகள் அறையில் பத்திரமாக வைக்கப்படும்.

12 ஆண்டுகொரு முறை சங்கு தீர்த்தம் எனும் தீர்த்தத்தில் இது தவறாமல் நடக்கும். இது "சங்கு புஷ்கர விழா" என அழைக்கப்படும்.

சங்கு உருவாகும் நாளுக்கு முன் நுறை பொங்கும். தீர்த்தம் ஆர்ப்பரிக்கும். அதன் பின் ஓங்கார சத்ததுடன்  சங்கு கரை ஒதுங்கும்.

இந்த அதிசயத்தை தொடங்கி வைத்தவர் மிருகண்டு முனிவரின் மகனும் சிவனால் சாகாவரம் பெற்றவருமான மார்கண்டேய மகரிஷி.

மார்கண்டேயன் 16 வயதில் சாக வேண்டும் என்பது விதி, அந்த விதியினை வெல்ல பல சிவாலயங்களில் அவர் வழிபட்டார். அப்போது இந்த ஆலயத்துக்கும் வந்தார். அங்கு சிவனுக்கு அபிஷேகம் செய்ய நினைத்த போது பாத்திரம் ஏதுமில்லை.

அந்நேரம் குருபகவான் கன்னி லக்னத்தில்  வரும் நாளாய் இருந்தது.  அந்நாளில் இங்கு பெரிய விழா கொண்டாடப்படும், லட்ச தீபம் ஏற்றி பிர்சித்தியாகக் கொண்டாடப்படும்.

இந்த ஏற்பாட்டின் படி பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்தச் சுழற்சி வரும். அந்தச் சுழற்சியில் சங்கும் ஓங்காரச் சத்தத்துடன் வரும்.

இந்த அதிசயம் காலம் காலமாக உண்டு. இப்போதுவரை 12 ஆண்டுக்கு ஒருமுறை உண்டு. கடந்த ஆண்டும் சங்கு வந்தது.

இந்த மலை வேதமலை, வேதகிரி என்றே அழைக்கப்பட்டது. வேதங்கள் அழியாத் தவமிருக்கும் மலை என்பதால் அப்படிப்பெயர் பெற்றது. இது கழுங்குன்றம் திருகழுங்குன்றம் என்றானது கழுகு வடிவில் வந்த ஞானியரால்.

மறுபிறப்பு என்பதில் யார் என்ன வடிவம் எடுப்பார் என்பது தெரியாது. கழுகு வடிவம் பெற்ற சில ரிஷிகள் இங்கு வந்து பணிந்து முக்தி பெற்றதால் இது கழுங்குன்றமாகி திருக்கழுக்குன்றம் என்றுமானது.

பிரம்மனின் எட்டு மானச புத்திரர்கள் சாருப்ய பதவிக்காக தவம் இருந்தனர். அது அழிவற்ற நிலைக்கான ஆனால் தவத்தின்  முடிவில் சாருப்ய என வரம் கேட்பதற்குப் பதில், சாயுட்சய என கேட்டதால் கழுகாக மாறிவிட்டனர் என்பது புராணம்.

எனவே நான்கு யுகத்திற்கு இருவர், என கழுகுகளாக இங்கு வரும் அவர்கள், சர்க்கரைப் பொங்கல் பிரசாதம் உண்டு செல்வர். கழுகு சர்க்கரைப் பொங்கல் உண்ணும் அதிசயம் இங்குதான் நடைபெறும்.

ஆம். கழுகுகள் பூசித்துப் பேறு பெற்ற காரணத்தால் கழுகுன்றம் என்று பெயர் ஏற்பட்டது. முதல் யுகத்தில் சண்டன், பிரசண்டன் என்னும் கழுகுகளும், இரண்டாம் யுகத்தில் சம்பாதி, ஜடாயு என்னும் கழுகுகளும், மூன்றாம் யுகத்தில் சம்புகுத்தன், மாகுத்தன் என்னும் கழுகுகளும், நான்காம் யுகத்தில் சம்பு, ஆதி என்னும் கழுகுகளும் முறையே வழிபட்டுப் பேறு பெற்றன.

இப்போதும் பூஷா, விதாதா எனும் இரு கழுகுகள் இந்த யுகத்திலும் உண்டு. அவை  இக்காலத்தில் உண்டு. அவை இங்கு உணவு பெற்று காசிக்கு சென்று வழிபட்டு திரும்பும். இந்த அதிசயம் இன்றும் உண்டு.

கழுகு வடிவில் சிவனடியார்களின் ஆன்மாக்கள் கர்மம் கழிக்கும் தலம் இது.

இந்த மலையில்தான் மாணிக்கவாசகருக்கு சிவன் குருவடிவாக காட்சியளித்தார்.

இந்த மலை வேதங்கள் வாழும் மலை என்பதால் சைவ குறவர்கள் மூவரும் இம்மலையினை மிதிக்கத் தயங்கினார்கள். ருத்திரகோடீஸ்வரரை வெளியில் இருந்தே பாடினார்கள். அவ்வகையில் இந்த ஆலயம் தேவாரம் வைப்பு தலம்.

" தோடுடை யானொரு காதில் தூய குழைதாழ    
ஏடுடை யான்த லைகல னாக இரந்துண்ணும்    
 நாடு டையான் நள்ளிருள் ஏம நடமாடும்    
 காடு டையான் காதல்செய் கோயில் கழுக்குன்றே"

என்பது சம்பந்த பெருமான் பாடிய பதிகத்தின் வரி.

"கொன்று செய்த கொடுமையால் பல சொல்லவே 
நின்ற பாவ வினைகள் தாம் பல நீங்கவே 
சென்று சென்று தொழுமின் தேவர் பிரானிடம்
கன்றினோடு பிடிசூழ் தண் கழுக்குன்றமே"

என்பது சுந்தரர் வரி.

"மூவிலைவேற் கையானை மூர்த்தி தன்னை
  முதுபிணக்கா டுடையானை முதலா னானை
ஆவினிலைந் துகந்தானை அமரர் கோனை
    ஆலால முண்டுகந்த ஐயன் தன்னைப்
பூவினின்மேல் நான்முகனும் மாலும் போற்றப்
    புணர்வரிய பெருமானைப் புனிதன் தன்னைக்
காவலனைக் கழுக்குன்றம் அமர்ந்தான் தன்னைக்
    கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே"

என்பது அப்பர் சுவாமிகளின் இத்தலம் பற்றிய‌ பாடல் .

மாணிக்க வாசகர் தன் திருக்கழுக்குன்ற பதிகத்தில் பாடுகின்றார்

"பிணக்கிலாத பெருந்துறைப்பெரு மான் உன்நாமங்கள் பேசுவார்க்
கிணக்கிலாததோர் இன்ப மேவருந் துன்ப மேதுடைத் தெம்பிரான்
உணக்கிலாததோர் வித்துமேல்விளை யாமல் என்வினை ஒத்தபின்
கணக்கி லாத்திருக்கோலம் நீவந்து காட்டினாய் கழுக்குன்றிலே"

இந்திரன் தன் சாபம் தீர்ந்து வழிபட்ட இடம் இது. தேவர்கள் வந்து வழிபடும் இடமும் இது. இன்றும் இந்திரன் இன்றும் அங்கு  பூஜித்து வருகிறான் என்பதற்கு அறிகுறி இன்றும் உண்டு. அவ்வப்போது இம்மலைமீதுள்ள கருவறைக்கோபுரக் கலசத்தின் அருகில் உள்ள துவாரத்தின் வழியாக இடிவிழுந்து, சிவலிங்கத்தைச் சுற்றிப் பரவிப் பாய்ந்து விடும்.

மறுநாள் அங்கு வெப்பத்தை  கருவறை திறக்கும்போது காணலாம். அவ்வப்போது இந்த அபூர்வம் நடக்கும்.

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சிவத்தலங்களில் கருவறைக்கு எதிரில் இருக்கும் நந்தி இங்கில்லாமல் இருப்பது மாறுபட்டதாகும்.

சுந்தரர் ஈசனிடம் பொன் பெற்ற தலம் இதுதான்.
 
"என்உடல் வீழும்போதும் நீதான் எனக்குத் துணை" என்று ஈசனைப் பட்டினத்தார் உருக்கமாக வழிபட்ட தலம்.
 
தேவர்கள் எல்லோரும் வழிபடுவதால் இது அமராவதிக்கு நிகரான தலம் என்பது அருணகிரியார் வாக்கு.
 
சுரகுரு மன்னனுக்கு சுயம்புவாய் சுவாமி காட்சி தந்த தலம் இது. ஆண்டுதோறும் சித்ரா பௌர்ணமி அன்று அறுபத்து மூவருடன் பஞ்ச மூர்த்திகள் எழுந்தருளி கிரிவலம் வரும் திருவிழா சிறப்பாக நடைபெறும் தலம் இது. கிரிவலம் வரும் வழக்கம் வேதங்கள் மலையாக இருக்கும் இங்கிருந்துதான் வந்தது.

இங்கு 12 தீர்த்தங்கள் உண்டு.
 
இந்திர தீர்ததம, சம்பு தீர்த்தம், உருத்திர தீர்த்தம், சிட்ட தீர்த்தம், மெய்ஞான தீர்த்தம், அகத்திய தீர்த்தம்,  மார்க்கண்ட தீர்த்தம்,  கோசிக தீர்த்தம், நந்தி தீர்த்தம், வருண தீர்த்தம், அகலிகை தீர்த்தம், பட்சி தீர்த்தம் என உண்டு.

இத்தலத்திற்கு அந்தகக்கவி வீரராகவப் புலவர் பாடியுள்ள தலபுராணம் உள்ளது.

இங்குள்ள திரிபுர  அன்னை, இந்த அன்னை சக்திவாய்ந்தவள். ஆடிப்பூரம், நவராத்திரி கடைசி நாள், பங்குனி உத்திரம் ஆகிய ஆண்டுக்கு மூன்று நாட்கள்தான் முழு அபிஷேகம் செய்வார்கள். மற்ற நாட்களில் பாதத்திற்கு மட்டும்தான் அபிஷேகம் செய்வார்கள். அம்பாளுக்கு மார்பில் ஸ்ரீ சக்கரப் பதக்கம் சார்த்தப்பட்டுள்ள அன்னை என்பதால் இங்கு அவள் அருள் அதிகம்.

(பார்வதி தெய்வமேனியுடன் குடியேறி நிற்கும் இடம் இதுதான். அதனாலே மிகுந்த அச்சத்துடன் அவளுக்கு பாத பூஜை மட்டும் செய்வார்கள். அன்னை திரிபுர சுந்தரியாக சிவனின் இல்லத்தில் ஆட்சி செய்யும் தலம் இது)
 
மகாகமம் இங்கு சிறப்பு. கும்பமேளா, கும்பகோணம் மகாமகம் போல், 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை ‘சங்கு தீர்த்த புஷ்கர மேளா’ என்னும் விழா நடைபெறுகிறது.

இந்த ஆலயம் காலத்தால் மூத்தது. இதை அடுத்தே வேதபுரீஸ்வரர் ஆலயம், பக்தவத்சலம் ஆலயமெல்லாம் வந்தது.

சிவராத்திரி அன்று ருத்திர மந்திரம் சொல்லி வழிபடுவது பெரும் பலன் தரும். மகா முக்கிய கடமை அது.

அந்நாளில் ருத்திர அம்சமாக, கோடி ருத்திரர்களை தன்னில் ஏற்று நின்ற சிவனை வழிபடுதல் கோடி பலன் தரும்.

அதுவும் ஒரு வில்வம் வைத்தால் கோடி வில்வம் வைத்த பலன் அங்கே உண்டு. ஒருமுறை மந்திரம் சொன்னால் ஒருகோடி முறை மந்திரம் சொன்ன பலன் உண்டு.

அங்கே சிவனை தரிசித்தால் கோடிமுறை தரிசித்த பலன் உண்டு. சிவனருளை பெற்றால் அது கோடி மடங்குக்குச் சமம்.

அங்கே எதனை நீங்கள் செலுத்துகின்றீர்களோ அது கோடி மடங்கு திரும்ப உங்களுக்கே கிடைக்கும்.

சிவராத்திரியில் வாய்ப்பு கிடைத்தவர்கள் அந்த ருத்ரகோடீஸ்வரர் கோவிலுக்குச் செல்லுங்கள். எல்லா நலமும் உங்களை வந்தடையும்.

இந்த ஆலயத்தின் தாத்பரியம் எளிதானது. கடலலுக்கு அடியில் பாதாளத்தில் இருந்து வந்த அசுரர்கள் என்பது மானுட அடிமனதில் இருந்து எழும் ஆசைகளைக் குறிப்பது.

அடிமனதின் ஆசைகள் ஆபத்தானவை. அடக்கி வைக்கப்பட்டாலும் ஒரு வாய்ப்பு கிடைக்கும் போது வெடித்தெழுந்து வந்து மானிடரை வீழ்த்தக் கூடியவை.

சிவன் கோடி ருத்திரரை தன்னில் இருந்து வெளிப்படுத்தி அவர்களை அழித்தார் என்பது சிவனை வழிபட்டால் நம் அடிமனதின் ஆசைகளெல்லாம் அழிந்துவிடும், சிவனருளால் அடிமனதில் பதுங்கியிருக்கும் ஆசைகளெல்லாம் ஒழிக்கப்படும் என்பது.

கழுகு என்பது பேராசைகான ஒரு தத்துவம். ஒவ்வொருவர் மனமும் கழுகைப் போல் சிறகை விரித்து உயர உயர செல்ல ஆசைப்படும். பெரும் ஆசைப்படும் இயல்புடையது.

இந்தத் தலம் அதனை ஒழித்து மாய ஆசைகளை ஒழித்து மனதை கட்டுப்படுத்தி முக்தியினைத் தரும் என்பதைச் சொல்லும் தத்துவம் இவை.

மனதில் பதுங்கிய மாயைகள் என்றாலும் உயர பறக்கும் மாய ஆசைகளின் போராட்டம் என்றாலும் சிவனருளால் அது அழியும். அந்த மாயைகள் அழியுமிடம் ஞானம் கிடைக்கும். ஞானம் கிடைக்குமிடம் முக்தி கிடைக்கும் என்பதுதான் இந்தத் தலத்தின் தாத்பரியம்.

சிவராத்திரி அன்று ருத்ரவழிபாடு பிரசித்தி. ருத்திரம் என்பது எதெல்லாம் இந்த வாழ்வில் நம்மை தடுக்குமோ? எதெல்லாம் நம்மை முடக்குமோ அதையெல்லாம் லௌகீகமகாவும் ஆன்மீகமாகவும் எரித்து ப் போடும் சிவனருளின் வடிவம்.

வேண்டாததை சிவன் எரித்துப் போடும் அம்சம்.

அந்த ருத்திரரை, கோடி ருத்திரர்கள் வழிபட்ட மகா ருத்திரரை இங்கு வழிபடுதல் கோடிப் பலன்களைத் தரும்.

கோடி என்றால் எண்ணிக்கையில் மட்டுமல்ல, கோடி என்றால் துவக்கம், கோடி என்றால் புதிது, கோடி என்றால் புதிய தொடக்கம் என்றெல்லாம் பொருள் உண்டு. இந்தச் சிவனை சிவராத்திரி அன்று ஒரு வில்வமிட்டு, ஒரு ரூபாய் தட்சணை வைத்து, ஒரு பூ இட்டு, ஒருமுறை ஓம்நமசிவாய எனச் சொன்னால் போதும்.

அது கோடி வில்வமிட்டு, கோடி ரூபாய் வைத்து, கோடி பூக்கள் கொட்டி, கோடி முறை 'ஓம் நமசிவாய' எனச் சொன்ன பலனைத் தரும். கோடிப் புண்ணியம் உங்களைச் சேரும்.

சிவராத்திரியின் முழுப்பலனும் உங்களுக்குக் கிடைக்கும்.

இந்த ருத்திரகோடீஸ்வரை வணங்கிவிட்டு வேதபுரீஸ்வரர், பக்தவச்சலேஸ்வரர், தீர்த்தநாத சிவன் சன்னதிகளை வணங்கி வருதல் சிவராத்திரி அன்று பெரும் பலனைக் கொடுக்கும்.

ஆனால், இந்த ருத்திரகோடீஸ்வரரை எல்லோரும் நினைத்த மாத்திரத்தில் சந்திக்கமுடியாது, யாருக்கு அவரின் அனுக்கிரஹமும் அருளும் அழைப்பும் உண்டோ அவர்களே அங்குச் செல்லமுடியும். அப்படிச் செல்பவர்கள் நிச்சயம் வரம்பெற்றவர்கள். 

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

No comments:

Post a Comment

Followers

திருக்கழுக்குன்றம் ருத்ரகோடீஸ்வரர் சிவாலயம் கருவறைக்கு எதிரில் இங்கு நந்தி இல்லை

எல்லாச் சிவாலயங்களும் சிவராத்திரி அன்று வழிபட வேண்டியவை  என்றாலும் ருத்திர கோல சிவனை, ருத்திர அம்ச சிவனை வழிபட்டால் பலன் அதிகம் . ...