Monday, February 24, 2025

சிவராத்திரிக்கு சிறப்பான தலங்களில் நான்கு தலங்கள் தவறவிட கூடாதவை.

சிவராத்திரி  வசிஷ்டேஸ்வரர் திருக்கோவில் திட்டை
மகா சிவராத்திரி என்பது ஒவ்வொரு இந்துவும் விரதமிருந்து விழித்திருந்து சிறப்பித்து வரம்பெற வேண்டிய மகா முக்கிய பண்டிகை, அதுவும் மகா கும்பமேளாவில் வரும் இந்த மகா சிவராத்திரி மிக அபூர்வமானது, பெரும் வரம் தர வல்லது

இந்த சிவராத்திரி அன்று வழிபட பல தலங்கள் முக்கியமானவை, அவ்வகையில் சிவராத்திரிக்கு சிறப்பான தலங்களில் நான்கு தலங்கள் தவறவிட கூடாதவை

ஊழி எனும் பிரளய காலம் முடிந்து இந்த பிரபஞ்சம் மீண்டும் ஒரு சிவராத்திரியில் தொடங்கிற்று, அப்போதுதான் ஈசன் தன் தேவியுடன் உலகை சிருஷ்டிக்க தொடங்கினார்
இந்த பிரபஞ்சம் ஈசனில் இருந்து உதித்து ஈசனிலே ஒடுங்கும்,அப்படி ஒடுங்கும் காலமே ஊழி காலம், அந்த ஈசனில் இருந்து அது மீண்டும் உருவாகி வரும் காலம் யுகம் தொடங்கும் காலம்

ஈசன் எனும் அந்த பரம்பொருளே சிவன், ஆதிபராசக்தி, ஆதிநாராயணன் எனும் மூன்றாக பிரிந்து அந்த நாராயணனில் இருந்து பிரம்மா உருவாகி வருவார்

ஈசனுக்கு உள்ள ஐந்தொழில்கள் இப்படி பிரிந்து பல சக்திகளால் செய்யபடும் அவை உதித்தது இந்த தருணத்தில்தான், சிவராத்திரியில்தான்

இன்னும் தேவர்களுக்கான வரமும் அசுரர்களுக்கான வரமும் இன்னும் யட்சர்கள் நாகர்கள் காந்தர்வர்கள் என எல்லாருக்குமான வரமும் அப்போதுதான் கொடுக்கபட்டது

மானுடர் உள்ளிட்ட உயிர்கள் அதன் பின்பே தோன்றின அவர்களுக்கும் ஞானம் அருளபட்டது

சிவராத்திரியின் முதல் சாமம் மானிடர் வழிபடுவது, இரண்டாம் சாமம் யட்சர்கள் நாகர்களுக்கானது, மூன்றாம் சாமம் அசுரர்களுக்கும், நான்காம் சாமம் தேவர்களுக்குமானது
உலகை மீளபடைத்தது தங்களையும் படைத்ததில் எல்லா படைப்புக்களும் சிவனை அந்த இரவில் தொழும் வகை இது

இந்த நான்கு சாமங்களிலும் நான்கு ஆலயங்கள் முக்கியமானவை, சிவராத்திரியோடு தொடர்பு கொண்டவை, இங்கு சிவராத்திரியில் வழிபடுவது சாலசிறந்தது, நான்கு சாமங்களும் நான்கு ஆலயங்களில் வழிபடுதல் நன்று

வாய்ப்பு கிடைத்தவர்கள் செல்லலாம் வாய்ப்பு இல்லாதவர்கள் எங்கிருந்தாலும் மனதால் வழிபடலாம் சிவனருள் நிச்சயம் உண்டு

மகாசிவராத்திரியில் முதல் காலத்தில் நடைபெற்றது எனவே மகா சிவராத்திரி முதல் காலத்தில் வழிபட வேண்டிய ஆலயம் தஞ்சை அருகில் உள்ள திட்டை வசிஷ்டேஸ்வரர் திருக்கோவில்

"கருவினால் அன்றியே கருவெலாம் ஆயவன்
உருவினால் அன்றியே உருவுசெய் தானிடம்
பருவநாள் விழவொடும் பாடலோடு ஆடலும்
திருவினார் மிகுபுகழ்த் தென்குடித் திட்டையே"

என சம்பந்த பெருமனா.னால் தேவாரம் பாடபெற்ற தலம் இது.

இதன் வரலாறு ஊழிகாலத்தின் முடிவில் புது யுகம் தொடங்கிய காலத்தில் இருந்து வருகின்றது  திட்டை என்றால் மேடான என பொருள்

ஊழி காலத்தில் ஈசனுக்கு உகந்த  28 தலங்களில் 26 தலங்கள் ஊழிக்காலத்தில் மூழ்கிவிட்டன. இரண்டு தலங்கள் மட்டும் திட்டாக நின்றது. அவற்றுள் ஒன்று சீர்காழி.அது வடகிடிதிட்டை என்றானது

சீர்காழியில் ஊழிக்காலத்தில் ஓம் என்ற மந்திர ஒலி எழுந்தது போலவே திட்டையில் ஹம் என்னும் மந்திர ஒலி வெளிப்பட்டதுடன் வேறு பல மந்திர ஒலிகளும் வெளிப்பட்டன. எனவே இத்தலம் ஞானமேடு எனவும் தென்குடி திட்டை எனவும் அழைக்கபட்டது

இன்று  காவிரியாறில் இருந்து கிளைகள் இடையே பிரிந்து வெட்டாறு, வெண்ணாறு இடையே இது அமைந்திருக்கின்றது, இந்த ஆறுகள் காலத்தால் பிந்தியவை இந்த தலம் அதற்கு முந்தையது

இந்த திட்டையில்தான் சிவன் தேவியோடு அமர்ந்தார் அவரும் தேவியும் அமர்ந்து உலகை மீளபடைக்க தேவர்களை இன்னும் எல்லா சக்திகளையும் படைத்தார்கள்

இந்த தலத்தின் பெருமை அறிந்து அங்கு சுயம்புவாய் தோன்றிய சிவனை வழிபட வசிஷ்ட மகரிசி வந்தார், அவர் குடில் அமைத்து வழிபட்ட சிவன் வசிஷ்டேஸ்வரர் என்றானார், சுயம்பாக தோன்றிய ஈசன் சுயம்பூதேஸ்வரர்  என்றும் அழைக்கபடுகின்றார்.

காமதேனு வழிபட்டு சாபம் தீர்த்த இடம் என்பதால் இவருக்கு பசுபதீஸ்வரர் என்ற பெயரும் உண்டு. ரேணுகா தேவி வழிபட்டதால் இத்தலம் ரேணுகாபுரி என்றும் அழைக்கபடுகின்றது

அன்னை உலகாம்பிகை என்றும் மங்களாம்பிகை என்றும் அழைக்கபடுகின்றார்

இந்த தலத்தின் பெருமை இத்தல புராணம் சமஸ்கிருதத்தில் "தெட்சன‌ குடித்வீப மஹாத்மியம்" என்ற நூலில் உள்ளது.  இந்நூல்  "சுயம்பூதேஸ்வரர் புராணம்" என தமிழிலும் உண்டு, அங்கே இதன் வரலாறும் பெருமையும் முழுக்க சொல்லபட்டுள்ளன‌

உலகை இயக்குபவையும் ஆதியானவனையும் வேதங்கள் என்பதால் அவை இங்கு சிவனை வழிபட்டன, நான்கு வேதங்களும் சிவனை பணிந்த தலம் இது

பிரம்மா, மகாவிஷ்ணு, காலபைரவர், சூரிய பகவான், சனீஸ்வரர், யமதர்மன், இந்திரன் என மிக முக்கிய தேவர்கள் வழிபட்டு சக்தியினை மீள பெற்ற தலம் இது அப்படியே மகா ரிஷிகளான‌ கெளதமர், ஜமதக்னி முனிவர் முதலானோரும் ஈசனை நினைந்து தவமிருந்து வரம்பெற்ற இடம் 

சக்தி வாய்ந்த இந்த ஸ்தலத்தை முறையாக ஸ்தாபித்தவர் வசிஷ்ட மாமுனி அவர் நடுவில் இந்த முக்கிய லிங்கத்தையும் நான்கு மூலைகளில் நான்கு சிவலிங்கங்களையும் ஸ்தாபித்தார்

வசிஷேடேஸ்வரரை சுற்றி நான்கு லிங்கள் உள்ள இந்த அமைப்பு "பஞ்ச லிங்க ஷேத்திரம்" என கொண்டாடபடுகின்றது, வேறு எங்கும் காணமுடியா அமைப்பு இது

பஞ்சராட்சர மந்திரத்தை விளக்கும் தத்துவமாக இது அமைந்துள்ளது
 
இத்தலம் யுகத்தின் தொடக்கத்தில் உருவான தலம், ஆதி தொன்மையான தலம் இந்த‌ தலத்தை வழிபட்டால் சிதம்பரம், காளஹஸ்தி, திருவண்ணாமலை, திருஆனைக்கா மற்றும் காஞ்சிபுரம் ஆகிய பஞ்சபூத திருத்தலங்களில் வழிபட்ட பலன் கிடைக்கும்

பஞ்ச பூத தலங்களின் மொத்த பலன்களையும் ஒரே இடத்தில் தரும் ஆலயம் இது

இந்த ஆலயம் சந்திரன் வழிபட்ட தலமுமாகும், தட்சனால் சாபம் பெற்ற சந்திரன் தன் சாபத்தை போக்கிய ஈசனை இங்கேவழிபட்டார்

இதனால் இந்த கருவறையில் மேல் சந்திரகாந்த கல் பதிக்க்பட்டுள்ளது, இது காற்றில் இருந்து நீரை தானே எடுத்து சிவலிங்கத்துக்கு அபிஷேகம் செய்யும் வகையில் அமைக்கபட்டுள்ளது

இதனால் இங்கு சிவலிங்கம் மேல் நீர் தாரை இல்லை, மாறாக சந்திரகாந்த கல்லே குறிப்பிட்ட நேரத்திற்கு ஒருமுறை நீரை சொட்டு சொட்டாக சிவலிங்கம் மேல் பொழிகின்றது, மாபெரும் அற்புதம் இது

இறைவன் இந்த பிரபஞ்சத்தை தனியாக படைக்கவில்லை தன் சக்தி தேவியுடன் இணைந்தே படைத்தார்,அந்த சக்திக்கு உரிய இடம் இங்கு தனியாக கொடுக்கபட்டுள்ளது

எங்குமில்லா ஒரு விஷேஷ அமைப்பு இங்கு உண்டு,  ஆம், அம்மன் சன்னிதிக்கு முன்புள்ள மண்டபத்தின் மேலே 12 ராசிகள் செதுக்கப்பட்டுள்ளன. 

அந்தந்த ராசிக்காரர்கள், தங்களுக்கான ராசிக்கட்டத்தின் கீழ் நின்று அம்மனை வேண்டினால் வேண்டிய வரம் கிடைக்கும். திருமணத் தடை, மாங்கல்ய தோஷம் நீங்க அருள் புரிவதால், இந்த அன்னை ‘மங்களாம்பிகை’ என்றும் அழைக்கப்படுகிறார்.

ஈசனுக்கு இணையான  பீடத்தில் அன்னை  அமர்ந்திருக்கின்றார்,  பெண்களுக்கு மங்கள வாழ்வளிப்பதால் அம்பாள் மங்களாம்பிகை எனப் போற்றப்படுகிறாள்

இந்த ஆலயத்தின் விஷேஷம் அந்த‌ ராஜா தக்ஷிணாமூர்த்தி சன்னதி. இங்கு குருவுக்கு தனி சன்னதி உள்ளது. அம்மன் சன்னதிக்கும் ஈஸ்வரன் சன்னதிக்கும் நடுவில் தனி சன்னதி கொண்டிருக்கிறார் குரு பகவான் 

இங்கு குரு நின்ற கோலத்தில் 4 கைகளுடன் காணபடுகிறார். எல்லா தலத்திலும் அமர்ந்திருக்கும் குரு பகவான் இங்கு நின்ற நிலையில் அருள் பாலிக்கின்றார்

விநாயக பெருமானும், பைரவரும் தனி தனி சன்னதிகளில் அருள் பாலிக்கின்றார்கள்
 

தட்சாயண காலத்தில் சூரிய பகவான் ஆவணி மாதம் 15, 16, 17 தேதிகளிலும் இன்னும் உத்ராயண புண்ணிய காலத்தில் பங்குனி மாதம் 25, 26, 27  தேதிகளிலும்  வசிஷ்டேஸ்வர் திருமேனியில் பட்டு சூரியபூஜை செய்கிறார்.
 

இந்த தலத்தின் முருகபெருமானும் சிறப்பானவர், பிரபஞ்ச இயக்கம் என்பதோ படைத்தல் என்பதோ சாதாரணம் அல்ல என்பதால் அங்கு பெரும் ஞானம் அவசியம் , அந்த ஞானத்தை மும்மூர்த்திக்கும் தேவர்களுக்கும் வழங்க இங்கு முருகன் அமர்ந்திருக்கின்றார்

எல்லா தேவர்களுக்கும் ஞானத்தை வழங்குவதால் இந்த ஆலயம் ஞானமேடு, ஞான திட்டை என முருகபெருமானை முன்னிட்டு அழைக்கபடுகின்றது

இந்த ஆலயம் முழுக்க கருங்கல், ஆலய கலசம் கொடிமரம் என எல்லாமே கருங்கல் ,அந்த அளவு உறுதியாக காலத்தை வென்று நிற்கும்படி கட்டபட்ட ஆலயம் இது
 

இந்த ஆலயம் சிவராத்திரிக்கு ஏன் விஷேஷம் என்றால் இங்கு தேவர்கள் மட்டுமல்ல எல்லா தரப்பும் வழிபட்ட தலம், அப்படியே ராவணனின் முப்பாட்டன் தாயவழி முப்பாட்டர் சுமாலி வழிபட்ட தலம் இது

அவனின் தேர் இங்கே பதிந்து நின்றதால் இது ரதபுரி , தேருர் என்றும் அழைக்கபடும்

நாகங்களில் ஆதிசேஷன்  வழிபட்ட தலம் இது , யட்சர்களில் குபேரனும் இதர லோகத்தவரும் வந்து ஈசனை வணங்கி அருள்பெற்ற தலம் இது

இங்கு ஆலயத்துக்கு வெளியே தீர்த்தம் உண்டு அதன் கரையில் தேவ கன்னியர் மல்லிகை, முல்லை என கொடிகளாக உண்டு, அப்படியே தேவர்கள் வில்வ மரங்களாக உண்டு

இந்த ஆலயத்தின் கல் முதல் மரம் செடி கொடிவரை எல்லாமே தெய்வாம்சம் கொண்டவை, ஒவ்வொன்றும் ஒரு தேவசாயலும் வரமும் கொண்டிருக்கும்

இந்த ஆலயத்தின் தாத்பரியம் புரிந்து கொள்ள எளிதானது

ஒரு விஷயத்தை படைத்து காத்துவருவது எளிதானது அல்ல அதற்கு பெரும் ஞானமும் அறிவும் வேண்டும், இங்கே சிவன் அதை அருளுகின்றார்

வசிஷ்டர் இந்த சிவனை வழிபட்டுத்தான் அயோத்தி எனும் ராமபிரானின் அரசுக்கே ராஜகுருவாக இருக்கும் பெரும் பாக்கியம் அடைந்தார், இன்றுவரை ஒரு ராஜ்ஜியத்தின் அமைப்புக்கும் ஆளுகைக்கும் ராமராஜ்ஜியமே எடுத்துகாட்டு என்றால் அந்த ஞானம் எப்படிபட்டதாக இருந்திருக்க வேண்டும்?

அந்த பெரும் ஞானத்தை , உச்ச ஞானத்தை தரும் ஆலயம் இது , அதனாலே இது குரு தலம், ராஜகுரு தலம் என்றும் அழைக்கபடும்

குரு பகவான் இங்கு வழிபட்ட்டே தேவர்களுக்கும் குருவாகும் யோகம் பெற்றார்

ராமனின் முன்னோர் மட்டுமல்ல ராவணனின் முன்னோரும் வழிபட்டு பெரும் வரம் பெற்ற ஆலயமும் இதுதான்

இந்த யுகத்தின் தொடக்கம் இந்த ஆலயத்தில் இருந்துதான் வந்தது அங்கிருந்தே எல்லா மும்மூர்த்தியும் தேவரும் அசுரரும் பலரும் வரம் வாங்கி வந்தார்கள்

இங்கு சிவராத்திரி அன்று வழிபடும் போது ஒரு மனிதன் புது பிறப்பாகின்றான், சிவராத்திரியின் முதல் வழிபாட்டை இங்கு செய்யும் போது அவன் புதுபிறப்பாக ஞானமும் அறிவும் கொண்ட பிறப்பாக மாறுகின்றான்

இதனாலே இந்த ஆலயத்தில் சிவராத்திரி மகா முக்கியம், மிக பெரிய இடம் அந்த ஆலயத்துக்கு உண்டு

வசிஷ்ர் என ரிஷிகளுக்கும், முப்பெரும் தேவர்களுக்கும், அசுரர்களுக்கும், நாகங்களுக்கும் இன்னும் பலருக்கும் தொடக்க ஞானமும் அறிவும் தெளிவும் வரமும் அருளிய ஆலயமிது, புது யுகத்தின் தொடக்க புள்ளி இது

வாய்ப்பு கிடைத்தவர்கள் தவறாமல் முதல் பூஜையினை இந்த் தலத்தில் செய்தல் மிக்க நன்று அது பிறப்பையே புதிதாக்கும், வாய்ப்பு இல்லாதவர்கள் முதல் சாம பூஜையில் இந்த வசிஷேஸ்டரை நினைந்து ஒரு வில்வ இலை எடுத்து வைத்து வணங்குங்கள், எல்லா அருளும் உங்களை அந்நொடி தேடிவரும்

புது பிறப்பாக முழு ஞானமும் குருவருளும் திருவருளும் சிவனின் தனி அருளும் உங்களை தேடி வரும் இது சத்தியம்
 
வசிஷ்டேஸ்வரர் மும்மூர்த்திகளுக்கு சக்தியையும், ஞானத்தையும் அருளியவர். கால பைரவரின், பிரம்மஹத்தி தோஷம் நீக்கியவர். குரு பகவானுக்குத் தேவகுரு என்ற பதவியை அருளியவர். நான்கு மூலைகளிலும் நான்கு லிங்கங்களின் நடுவில் மூலவர் வசிஷ்டேஸ்வரர் அமர்ந்து பஞ்ச லிங்கேஸ்வரராக அருள்பாலிக்கின்றார்.

ஓம் நமசிவாய
படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

No comments:

Post a Comment

Followers

சிவராத்திரிக்கு சிறப்பான தலங்களில் நான்கு தலங்கள் தவறவிட கூடாதவை.

சிவராத்திரி  வசிஷ்டேஸ்வரர் திருக்கோவில் திட்டை மகா சிவராத்திரி என்பது ஒவ்வொரு இந்துவும் விரதமிருந்து விழித்திருந்து சிறப்பித்து ...