_*தினம் ஒரு திருத்தலம்...🛕*_
அழகிய வண்ண ஓவியங்கள்... அமர்ந்த நிலையில் ஆஞ்சநேயர்..!
அருள்மிகு ராமர் பஜனை திருக்கோயில்...!!
*இந்த கோயில் எங்கு உள்ளது?*
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆர்.எஸ்.புரம் என்னும் ஊரில் அருள்மிகு ராமர் பஜனை திருக்கோயில் அமைந்துள்ளது.
*இந்த கோயிலுக்கு எப்படி செல்வது?*
கோயம்புத்தூரிலிருந்து சுமார் 1.5 கி.மீ தொலைவில் ஆர்.எஸ்.புரம் அமைந்துள்ளது. ஆர்.எஸ்.புரத்தில் இருந்து நடந்து செல்லும் தொலைவில் அருள்மிகு ராமர் பஜனை திருக்கோயில் அமைந்துள்ளது.
*இந்த கோயிலின் சிறப்புகள் என்ன?*
இத்தலம் மேற்கு நோக்கி உள்ளது. இந்த அமைப்பு வேறு எந்த தலங்களிலும் காண முடியாத அமைப்பாகும்.
இத்தலத்தின் மூலவர் ராமர், தாயார் சீதா தேவி ஆவார்.
இக்கோயிலின் முகப்பில் ராமர், சீதை, லட்சுமணன் அருள்கிறார்கள்.
இத்தலத்தில் உள்ள மகாமண்டபத்தில் தியாகராஜ சுவாமிகள் சன்னதி உள்ளது.
இக்கோயிலின் உள்ளே நுழைந்ததும் மகாமண்டபத்தைத் தொடர்ந்து கருவறையில் ராமர், சீதை மற்றும் லட்சுமணன் ஆகியோர் நின்ற கோலத்தில் சேவை சாதிக்க, ஆஞ்சநேயர் அவர்களை கைகூப்பி தொழுத வண்ணம் அமர்ந்த நிலையில் உள்ளார்.
கருவறைக்கு இருபுறமும் விநாயகர், முருகப்பெருமான் தரிசனம் தருகின்றனர்.
*வேறென்ன சிறப்பு?*
ராமநவமி திருவிழாவின் போது சீதா-ராமர் கல்யாண வைபவம் இங்கு வெகு விமர்சையாக நடைபெறும்.
ஜெயேந்திரர் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சுவாமிகள் இத்தலத்திற்கு வந்து பூஜித்துள்ளனர் என்பது கூடுதல் சிறப்பாகும்.
இத்தலத்தின் மகாமண்டப உட்புற சுவரில் ராமாயண நிகழ்வுகளான அகல்யா சாப விமோசனம், சீதா சுயம்வரம், குகனை ராமபிரான் கட்டி தழுவும் காட்சி, மூதாட்டி சபரி கனிகளை ராமபிரானுக்கு வழங்கும் காட்சி என அழகிய வண்ண ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.
*என்னென்ன திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது?*
ராமரின் ஜென்ம நட்சத்திரமான புனர்பூசத்தன்று சிறப்பு திருமஞ்சனமும், ஆராதனைகளும் நடைபெறும்.
சனிக்கிழமைகள், வைகுண்ட ஏகாதசி, மார்கழி, புரட்டாசி மாதங்களில் விசேஷ வழிபாடுகள் நடத்தப்பட்டாலும், மூன்று நாட்கள் கொண்டாடப்படும் ராமநவமி தான் வருடப் பெருவிழாவாகும்.
*எதற்கெல்லாம் பிரார்த்தனைகள் செய்யப்படுகிறது?*
நீண்ட நாள் திருமணமாகாதவர்கள் இந்த தெய்வீக திருமண மூர்த்தத்தில் கலந்து கொண்டு, இறைவனை சேவித்து, மாங்கல்ய பூஜைகளை அவர்கள் கையாலேயே செய்யலாம். அவ்வாறு கலந்து கொண்டு சேவிப்பவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும்.
*இத்தலத்தில் என்னென்ன நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படுகிறது?*
திருமணமான தம்பதியினர் சுவாமிக்கு வஸ்திரம் மற்றும் திருமாங்கல்யம் சாற்றி நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.
No comments:
Post a Comment