Friday, October 13, 2023

ஆவரண தேவதைகளுக்கும் தனித்தனி வாகனங்கள் உள்ளன.

_*திருவீதியுலா வாகனங்கள்*_ 
ஆலயங்களில் உள்ள தெய்வத் திருமேனிகள் திருவீதி உலா வரும் போது ஒவ்வொரு தெய்வத்திற்கும் என தனித்தனி வாகனங்கள் அமைக்கப் பட்டுள்ளன.

ஆவரண தேவதைகளுக்கும் தனித்தனி வாகனங்கள் உள்ளன.

இந்த வாகனங்களில் முதலாவதாக வருவது மர வாகனமாகும்.

ஒரு மரத்தின் வேராக இறைவன் இருக்கிறான்.இலைகளும்,கிளைகளும் தத்துவங்களாக இருக்கின்றன.

எனவே,மர வாகனங்களை அமைத்து அவற்றின் மீது இறைவனை எழுந்தருளச் செய்வார்கள்.

இந்த மர வாகனத்திற்கு "விருஷ வாகனம்"என்று பெயர்.

வாகனங்களில் அதிகார நந்தியும்,பூத வாகனமும் முக்கிய இடம் பெற்றுள்ளன.ஆன்ம வர்க்கங்களில் சிறந்தவர் அதிகார நந்தி.

எனவே அவரது தோள்களில் அமர்ந்து இறைவன் திரு வீதி உலா வருகிறான்.

இறந்தவுடன் நமது ஆன்மாவைக் கொண்டு செல்லும் தன்மை உடையவை பூதகணங்களாகும்.

எனவே,அப்பூத வாகனத்தில் விருத்திக் கிரக சம்ஹாரக் கோலத்தில் பரமசிவன் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சி தருகிறார்.

பாம்பிற்கு என்று சில குணங்கள் உண்டு. 

நஞ்சு,மாணிக்கம்,படம் ஆகிய இம்மூன்றையும் மறைத்து வேண்டும் போது வெளியில் நீட்டும்.

அது போல பாம்பு தானும் புற்றில் மறைந்து இருந்து,வேண்டும் போது புற்றில் இருந்து வெளி வரும்.

இச்செயல் இறைவனது மறைத்தல் தொழிலை உணர்த்துவதாக உள்ளது.

இது இறைவனது திரோபவ சக்தியைக் காட்டுவதல் நாக வாகனக் காட்சி அற்புதமாக நடைபெறுகிறது.

பெருமாள் கோவில்களில் இறைவன் ஆதிசேசன் என்று அழைக்கப்படும் ஐந்து தலை நாக வாகனத்தில் எழுந்தருளுவது வழக்கம்.

சிவபெருமானின் இன்னொரு வாகனம் ரிஷபம்.
இந்த வாகனத்திற்கான தத்துவ விளக்கம் ஒன்றுள்ளது.
ஆன்மா வெண்மை நிறம்.

அது தூய்மைக்கு அடையாளமாக இருக்கிறது

சமம் ,விசாரம்,சந்தோஷம்,சாதுசங்கம் ஆகிய நான்கு குணங்களாகும்.
நான்கு வேதங்கள் கால்களாக இருப்பதாக ஒரு கருத்து உள்ளது.

ஞானமும் கண்களாக உள்ளன.ஆகமங்களும் சாஸ்திரங்களும் இரு கொம்புகளாக உள்ளன.

தர்மம் உடலாகவும்,தவமே நடையாகவும் உள்ளன.இத்தகைய தத்துவ விளக்கமாகத் திகழும் ரிஷப வாகனத்தின் மேல் சிவ பெருமான் எழுந்தருளி காட்சி தருகிறார்.

யானை வாகனமும் ஒரு முக்கிய இடம் வகிக்கிறது.

யானையின் உடம்பு மிகப் பெரியது .
உலகப் பொருட்கள் அனைத்தும் அடங்கும் ஒரே பிண்டமாக யானையின் உடம்பு தோற்றம் அளிக்கிறது. 

அதிலிருந்து திரும்பித் தோன்றுவது லயத்தின் பின் ஸ்ருஷ்டி தொடங்குவதைக் குறிப்பதாகும். 

ஜடத்துவம்,சுவாச சூட்சுமம்,ஜீவத்வம்,பிராணா யாமம் இவைகளைக் குறிக்கிறது.

கருடனை பெரிய திருவடி என்று அழைப்பார்கள். இறைவன் தன தோள்களில் எழுந்தருள வேண்டும்,என்று வேண்டி கருடாழ்வார் தவமிருந்தார்.

அதை ஏற்றுக் கொண்ட மஹா விஷ்ணு கருடாழ்வாரின் தோள்களில் அமர்ந்து எல்லா ஆன்மாக்களும் பரம ஆனந்தம் அடையும் வகையில் வீதியுலா வருகிறார்.

அனுமனை சிறிய திருவடி என்று அழைப்பார்கள்.

அனுமார் தனது தோள்களில் ஸ்ரீமந் நாராயண மூர்த்தியைத் தங்கியபடிக் காட்சி தருகிறார்.

இதில் ஒரு தத்துவ விளக்கம் உள்ளது."ஆன்மாக்கள் உலக சுகங்களை நீக்கி இறைவனது நாமத்தை ஜெபித்து ,அவன் திருவடிகளைப் பணிந்து இன்பம் அடையுங்கள் "என்று விளக்குவது இதன் தத்துவமாகும்.

இறைவனின் முக்கிய வாகனங்களில் ஒன்று குதிரை வாகனமாகும்.இந்த வாகனம் சம்ஹார கோலத்தைக் காட்டுவதாகும்.

குதிரையின் கால்களாக தர்மம்,அதர்மம்,காமம்,மோட்சம் ஆகியவை உள்ளன. கிரியை,ஞானம் ஆகியவை கண்களாகவும்,விதியானது குதிரையின் முகமாகவும்,மந்திரங்கள் ஆபரணங்களாகவும்,வால் ஆகமங்களாகவும்,பிரணவ மந்திரம் கடிவாளமாகவும்,சேணம் உபநிஷதங்களாகவும் இருக்கும்.

குதிரை வேதக் குதிரையாக இருக்கிறது.

முருகனின் வாகனம் மயில். மயில் ஓங்கார விஸ்வரூபம். மயில் சுத்த மாயை. மயிலின் வாயில் உள்ள பாம்பு அசுத்த மாயை. மயிலின் காலில் கீழ் பட்டு இருக்கும் பாம்பு பிரகிருதி மாயை எனத் தத்துவ அடிப்படையில் கூறுவர்.

இந்திரனே மயிலாக வந்து முருகப் பெருமானின் வாகனமாக முதலில் விளங்கினர்.

அடுத்து சூரபன்மனின் உடலின் இரு கூறுகளில் ஒன்று மயிலாகி முருகப்பெருமானின் வாகனமானது.

மற்றொன்று செவ்வழகு பெருமானின் கொடியானது.

No comments:

Post a Comment

Followers

மூன்று தீர்த்தம், மூன்று மூர்த்திகள், மூன்று தலமரம்!

மூன்று  தீர்த்தம், மூன்று மூர்த்திகள், மூன்று தலமரம்! நாகை மாவட்டத்தில், கிழக்குக் கடற் கரையோரம் அமைந்த திருத்தலம், திருவெண்காடு...