#நடராஜப்பெருமானும்
#முயலகனும்:
முயலகன் எனும் உருவம் தட்சிணாமூர்த்தி மற்றும் நடராசர் போன்ற சிவத் தோற்றங்களில், சிவபெருமானின் காலடியில் அமைந்திருக்கும். முயலகனை அறியாமை மற்றும் ஆணவத்தைக் குறிப்பதால், அறிவுப் பிழம்பாகிய சிவபெருமான், அறியாமை மற்றும் ஆணவத்தின் வடிவமான முயலகனைக் காலடியில் மிதிப்பதாகக் காட்டுவது அருட்குறிப்பாகும்.
நடராசர் வடிவங்களில் அவரது ஊன்றிய திருவடியின் கீழ் மிதியுண்டவாறு கிடக்கும் பூதத்தை முயலகன் என்பர். நன்னெறியில் செல்ல முயலும் உயிர்களை அவ்வழியில் தொடர்ந்து மேற்செல்லவொட்டாமல் தடுக்கும் ஆணவ மலத்தின் வடிவமாக அவன் விளங்குகின்றான். அவன் இறைவன் அருளுக்கு மாறான தன்மை உடையவன். உயிர்கள் ஆணவத்தால் பிணிபட்டுப் பிறவியை எடுக்கின்றன. மேலும், தொடர்ந்து வரும் பிறவிகளிலும் துன்பமே இருந்தாலும் அத்துன்பங்களைப் போக்கிக் கொள்ளாமல் மீண்டும் மீண்டும் பிறவி எடுத்து அலைகிறது. உயிர்களின் அந்த விருப்பமே தொடர்ந்து அதற்குப் பிறவியை வழங்குகிறது.
பிறவிச் சூழலுக்குக் காரணமான ஆணவத்தை அடக்கி மிதித்து மேலெழ ஒட்டாமல் செய்து உயிர்களை பிறவிச் சூழலிலிருந்து விடுபடச் செய்வது இறைவனின் அருளாகும். முயலகனின் செயல் அழிதலே மோட்சத்தின் வாயிலாகும். உலக நடப்பிற்கு மும்மலங்களே காரணமாக இருப்பதால், பஞ்சகிருத்திய தாண்டவங்களில் முயலகன் மகிழ்வுடன் இருப்பதாகவும், பாம்புடன் விளையாடிக் கொண்டிருப்பவனாகவும் காட்டப்படுகிறான். முயலகனை மனதில் விளையும் ஆசைகளாகவும் அவன் ஏந்தும் பாம்பை மும்மலங்களாகவும் கூறுவர். சில வடிவங்களில் முயலகன் இறைவனைச் சுட்டிக் காட்டியவாறும் உள்ளான். இவனை அரக்கன் போலவும், கையில் கத்தி, கேடயம் ஏந்தியவனாகவும் அமைக்கின்றனர். இது தத்துவக் கோட்பாடுகளுக்கு மாறுபட்டதாகும்.
தட்சிணாமூர்த்தியின் காலடியிலும் மும்மலங்களின் வடிவான முயலகனை அமைக்கின்றனர். ஆணவம் அடங்கி நிற்கும் இடமே ஞானத்தின் பிறப்பிடம் என்பதால், தட்சிணாமூர்த்தியின் திருவடியிலும் இவனை அமைத்துள்ளனர் என்பர்.சில தலங்களில் நடராசர் முயலகன் மீதின்றி மலர்ப் பீடத்தில் ஆடுவதைக் காண்கிறோம். இது ஆணவம் நீங்கிய நிலையில் உள்ள அன்பர்களின் இருதயத் தாமரையில் இறைவன் ஆடும் நடனமாகும்.திருஞானசம்பந்தப் பெருமான் கொல்லி மழவன் என்ற அரசனின் மகளைப் பற்றியிருந்த முயலகன் என்னும் நோயை நீக்கிய தலம் திருப்பாச்சிலாச்சிரமம் (திருவாசி - திருச்சி மாவட்டம்) என்னும் திருத்தலமாகும். இத்தலத்திலுள்ள நடராசப் பெருமான் திருவடிவத்தில் ஊன்றிய திருவடியின்கீழ் முயலகன் இல்லை. இந்த நடராஜர் பாம்பின் மீது நடனமாடிக்கொண்டிருக்கின்றார். அவர் திருவடியின் கீழ் பாம்பின் படம் உள்ளது. பாம்பின் உடல் அவரது பின்காலில் படிந்துள்ளது. திருஞானசம்பந்தர் முயலகனின் நோயை நீக்கும்படிப் பாடியபோது நடராஜர் படிமத்திலிருந்த முயலகனும் நீங்கிவிட்டான் என்று கூறுவர்.
#புராண_வரலாறு:
வேத ஞானமிக்க முனிவர்கள் தாருகா வனத்தில் வாழ்ந்திருந்தனர். நால்வகை வேதம் சாஸ்திரம் எல்லாம் கற்றதனால் கர்வம் மிகக் கொண்டிருந்தனர். கர்ம மார்க்கமே சிறந்தது. அவரவர் செய்த கர்மங்களே பலன்களை அளிப்பதால் உயிர்கள் தாங்களாகவே கர்மபலன்களை அனுபவிப்பதாலும் ஈஸ்வரன் என்ற ஒருவர் தேவையில்லை என்று கர்வம் கொண்டனர்.
அந்தக் கர்வத்தினால் தங்களால் எல்லாம் செய்ய முடியும் தங்களால் செய்ய முடியாததையா சிவன் செய்யப் போகின்றார் என்றிருந்தனர். அவர்களின் கர்வத்தை ஒடுக்க பெருமான் பிட்சாடனார் கோலத்தில் விஷ்ணுவை மோகினி வடிவில் கூட்டிக் கொண்டு தாருகாவனம் வந்தார். பெண்கள் பிட்சாட்னர் அழகில் மயங்கி அவர் பின் செல்ல பல முனிவர்கள் மோகினியின் அழகில் மயங்கினர்.. இதனால் யாகங்கள் பாதிக்க மற்ற முனிவர்கள் இந்நிலையை சரிசெய்ய அபிசார வேள்வி நடத்தினர். அதிலிருந்து புலி ஒன்று தோன்ற அதை பிட்சாடனர் மேல் ஏவினர். பெருமான் அந்தப் புலியைக் கொன்று அதன் தோலை இடையில் உடுத்திக் கொண்டார். அடுத்து வேள்வியிலிருந்து மான், நெருப்பு என்று அனுப்ப அவற்றின் வீரியத்தைக் குறைத்து அவைகளைக் தன் கைகளில் தாங்கிக் கொண்டார். மீண்டும் யாகத்தில் தோன்றிய யானையை ஏவ அதன் தோலை உரித்து மேலாடையாகப் போர்த்திக் கொள்ள இதைக் கண்ட முனிவர்கள் தங்களின் முழு ஞானத்தையும் பிரயோகித்து வேள்வியிலிருந்து அரக்கன் முயலகனை உருவாக்கி பிட்சாடனர்மேல் ஏவினர். அவர் அவனை தன் காலடியில் போட்டு அமுக்கிவிட, செய்வது அறியாது விழித்த முனிவர்கள் வந்திருப்பது தங்களை மீறிய சக்தியான ஈசன் என்றுணர்ந்து மன்னிக்க வேண்டினர். அங்கு வந்த நந்தி மத்தளம் வாசிக்க மோகினியான விஷ்ணு புல்லாங்குழல் வாசிக்க கடவுள் இல்லை கர்மாவே பெரியது என்ற எண்ணம் கொண்ட தாருகாவனத்து முனிவர்களின் அறியாமையை நீக்க பேரருள் கொண்ட சிவபெருமான் நடராஜ மூர்த்தியாக ஆனந்த தாண்டவம் ஆடினார்.இதைக் கண்ணுற்ற தாருகாவனத்து முனிவர்கள் மற்றும் அனைவரும் புண்ணியம் அடைந்தனர்.
ஒருநாள் இந்த நிகழ்வை நினைத்து பாற்கடலில் பள்ளி கொண்டிருந்த பரந்தாமன் தன்னை மறந்து ஆனந்தித்து இருப்பதைகண்ட ஆதிசேஷடன் அது பற்றி விசாரிக்க தாருகாவனத்தில் நடந்த நிகழ்வுகளையும் அங்கு சிவபெருமானின் அற்புத நடனம் பற்றியும் திருமால் சொல்லக்கேட்ட ஆதிசேஷனுக்கு அந்த அற்புத நடனத்தைக் காண ஆவல் ஏற்பட்டது. பாதி உடல் மனிதனாகவும் மீதி பாம்பாகவும் தோன்றி பூவுலகில் தவம் புரியத்தொடங்கினார். அந்த தவத்தின் பயனாக அவர்முன் தோன்றிய ஈசன் பதஞ்சலி உன்னைப் போன்றே வியாக்ரபாதனும் என் ஆடலைக் காண ஆவல் கொண்டுள்ளான். நீங்கள் இருவரும் தில்லைவனம் என்ற சிதம்பரத்திற்கு வாருங்கள் அங்கே உங்கள் ஆவல் நிறைவேறும் என்றார்.
மார்கழிமாதம் திருவாதிரை நட்சத்திரத்தன்று வானில் முழு நிலவு பிரகாசிக்கும் நான்னாளில் மீண்டும் அந்த ஆனந்த நடனத்தை சிவபெருமான் தில்லையில் ஆடிக்காட்டினார். அந்த ஆனந்த நடனத்தினை உலக மக்கள் அனைவரும் கண்டு களிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் அத்திருவுருவை முனிவர்கள் சிலையாக வடித்தெடுத்தனர். உடுக்கை ஏந்திய திருக்கை-படைத்தல், அபய திருக்கை-காத்தல்,
தீ ஏந்திய திருக்கை அழித்தல், ஊன்றிய திருவடி –மறைத்தல் தூக்கிய திருவடி-அருளல் என தில்லை நடராஜப் பெருமானின் நடனம் உலகத்தின் இயக்கத்தை குறிக்கும்.
திருவாதிரை நட்சத்திரத்திற்கு வடமொழியில் ஆர்த்ரா என்பது மருவியதால் ஆருத்ரா எனப்பெயர்.ஆருத்ரா எனப்பெயர். மேலும் திருவாதிரை நட்சத்திரம் ருத்ர அம்சம். திருவாதிரை நட்சத்திரத்தன்று சிவபெருமானின் நடன தரிசனக் காட்சி கிடைத்ததால் அது ஆருத்ரா தரிசனம் என்றானது. விரத நோம்பிருந்து வழிபட்டு ஆருத்ரா தரிசனம் கிடைக்கப் பெற்றவர்கள் சகலவிதமான மங்களங்கள் பெற்று பிறவிப் பிணி நீங்கப் பெறுவர் என்கிறது புராணங்கள்.
தீயகுணமுடைய முயலகன் அறியாமை என்ற அஞ்ஞானத்தைக் குறிக்கும். தட்சிணாமூர்த்தி மற்றும் நடராஜப்பெருமானின் திருவுருவச் சிலைகளின் கீழே காலில் மிதிபட்டவாறு இருக்கும் அசுரன் முயலகன் என்பது அனைவரும் அறிந்ததே. முயலகன்- அபஸ்மாரம் (தீய குணமுடையோன்) எல்லோர்க்கும் எல்லா குணங்களும் உண்டு. அவற்றில் நல்லதை வெளிப்படுத்தி தீயதை அடக்க வேண்டுமென்பதே முயலகனை திருவடியில் இருத்திய தத்துவம்.
திருவாதிரைக்களி- சேந்தனார் பட்டினத்தாரிடம் தலைமைக் கணக்கராக பணிபுரிந்து வந்தார். பட்டினத்தார் துறவறம் பூண்டபோது தம்மிடமிருந்த எல்லாவற்றையும் சேந்தனாரிடம் அளித்தார். ஆனால் அவற்றையெல்லாம் அரசன் கவர பட்டினத்தாரின் ஆலோசனைப்படி சேந்தனார் சிதம்பரம் வந்து விறகு வெட்டி அதை விற்று அன்னம் செய்து அடியவர்க்கு அமுது செய்தார். ஒருநாள் நல்ல மழை. விறகு விறகவில்லை. வீட்டில் மீதியிருந்த மாவினைக் கொண்டு களியாகக் கிளறினார். சிவனுக்கு படைத்துவிட்டு அடியாருக்கு அளிக்க எதிர் பார்த்திருந்தார். யாரும் வரவில்லை. மனம் வருந்தியபோது சிவன் அடியாராக வந்து களி அமுதைப் பெற்றார். அன்று மார்கழி திருவாதிரை திருநாள். அன்று முதல் களி அமுது ‘திருவாதிரைக் களி எனச் சிறப்பு பெற்றது.
திரேதாயுகா என்றபெண் அம்பிகையின் தீவிர பக்தை. அவருக்குத் திருமணம் நடைபெற்றது. அந்த காலத்திய வழக்கப்படி திருமணம் நடந்த நான்காவது நாள்தான் சாந்தி முகூர்த்தம் நடைபெறும். கர்ம விதிப்படி மூன்றாம் நாள் அவளின் கணவன் இறந்து விட்டான். திரேதயுகா, அன்னையே உன்னை வழிபட்டு வந்ததன் பலனா இது என்று அழுது புலம்ப அம்பிகை அப்பெண்ணுக்கு உதவ பெருமானிடம் வேண்டுகோள் வைக்க, பெருமான் யமதர்மனை நோக்க அவள் கணவன் உயிர்பெற்றான். சிவபார்வதி தரிசனம் அவர்களுக்கு கிட்டிய நாள் மார்கழி திருவாதிரை நாள்.
திருவாதிரையன்று சேந்தனாருக்கும் திரேதாயுகா விற்கும் சிவபெருமான் தரிசனம் தந்த மார்கழி திருவாதிரை நட்சத்திர நாளே ஆருத்ரா தரிசனம் எனக் கொண்டாடப்படுகின்றது.
#முயலக_நோய்:
முயலகன் என்பது ஒரு வித வலிப்பு நோய் ஆகும். முயலக நோய் கொல்லி மழவனின் மகளுக்குக் கண்டிருந்தது என்றும், அந்நோயை திருஞானசம்பந்தர் திருப்பதிகம் ஓதி அருளிய அளவில் முயலகன் எனும் வலிப்பு நோய் தீர்ந்தது என திருஞானசம்பந்தர் அருளிச்செய்த திருப்பாச்சிலாச்சிராம தேவாரத் திருப்பதிகத்தின் நாற்பதாவது திருமுறை வாயிலாக அறிய இயலுகிறது.
முயலகன் இறைவனை தாக்க தருகாவனத்து முனிவர்களால் அபிசார வேள்வி செய்து அனுப்பப்பட்டவனை அடக்கி அவன் முதுகின்மீது நின்று நடன மாடிய தலம்- தலையாலங்காடு.தி.த-210+அ-76. சிமிலி, நடனேஸ்வரர் நர்த்தனபுரீஸ்வர்(சு), ஆடவல்லநாதர்-உமாதேவி. திருமடந்தையம்மை. திருவாரூர்-18, குடவாசல்-8,
திருச்சிற்றம்பலம்
🙏🙇
No comments:
Post a Comment