திருமணத்தடை நீக்கும்
நித்ய கல்யாணப் பெருமாள்...!
கைகளை இடப்பக்கம் ஏந்திய திருத்தலம் என்பதால் `திருஇடந்தை' என்ற பெயர் ஏற்பட்டது.
அதுவே திருவிடந்தை ஆக மாறிவிட்டது.
திருவிடந்தை ஸ்தல வரலாறு
முன்னொரு காலத்தில் வாழ்ந்த மேகநாதன் என்ற அசுர மன்னனுக்கு பலி என்ற மகன் பிறந்து நீதிமானாய் அரசு புரிந்து வந்த போது மாலி, மால்யவான், சூமாலி என்ற அசுரர்கள் தேவர்களுடன் போரிட அழைத்ததாகவும், பலி மறுத்து விட்டதாகவும், மூவரும் சென்று தேவர்களுடன் போரிட்டு தோற்று வந்து பலியிடம் சரணாகதி அடைந்ததாகவும்,
அவர்களுக்காக தேவர்களுடன் போராடி பலி ஜெயித்ததாகவும், தேவர்களுடன் யுத்தம் நடத்திய பாவம் நீங்க இத்தலத்தில் உள்ள வராக தீர்த்தக்கரையில் பலி கடும் தவம் புரிந்ததாகவும், அவனது தவத்தை மெச்சிய மெருமாள் ஆதிவராக மூர்த்தியாக அவனுக்கு காட்சியளித்து மோட்சமளித்ததாகவும் புராணம் கூறுகிறது.
கண்ணிகை தவம்
சரஸ்வதி ஆற்றங்கரையில் உள்ள சம்பு என்று அழைக்கப்பட்ட தீவில் குனி என்னும் முனிவர் தவம் செய்து வந்தார்.
அவருக்குப் பணிவிடை செய்வதற்காக கன்னிகை ஒருத்தி அங்கு வந்து சேர்ந்தாள். ஒரு காலகட்டத்தில் அந்த முனிவர் வீடுபேறு அடையவே, அவரைப் போலவே வீடுபேறு அடைய அந்தக் கன்னிகை கடுந்தவம் செய்து வந்தாள்.
ஒரு நாள் அங்கு வந்த நாரத முனிவர் அவளிடம், "திருமணம் செய்து கொள்ளாமல் வீடுபேறு அடைய இயலாது' என்று கூறினார். எனவே பல முனிவர்களிடமும் சென்று தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு வேண்டினாள்.
எல்லாரும் மறுத்துவிட, காலவ முனிவர் அவள்மீது இரக்கம் கொண்டு அவளை மணந்து கொண்டார். அவர்களுக்கு 360 பெண் குழந்தைகள் பிறந்தார்கள்.
முதலாவது பெண் குழந்தையின் பெயர் கோமளவல்லி. அவர்களைப் பெற்ற சிறிது காலத்தில் குழந்தைகளின் தாய் மறைந்து விட்டாள்.
360 பெண் குழந்தைகளை வளர்க்க மிகவும் சிரமப்பட்டார் காலவமுனிவர். பெண் குழந்தைகள் மளமளவென்று வளர்ந்து பருவமடைந்து, திருமணத்திற்குக் காத்திருக்கும் கன்னிகளானார்கள்.
இத்தனை பெண்களையும் எப்படி திருமணம் செய்து கொடுப்பது என்று தவித்தார் காலவ முனிவர். சம்புத்தீவிற்கு வந்து மற்ற முனிவர்களிடம் அந்தப் பெண்களுக்கு எவ்வாறு திருமணம் செய்து வைப்பது என்று வருத்தத்துடன் ஆலோசனை கேட்டார்.
அவர்கள் திருவிடந்தை சென்று பெருமாளை வழிபடக் கூறினார்கள்.
இத்தலத்திற்கு தனது 360 கன்னிகைகளுடன் வாழ்ந்து வந்த காலவரிஷியின் வேண்டுதலை ஏற்று பிரம்மச்சாரியாக வந்து தினம் ஒரு கன்னிகையாக 360 நாட்களில் அனைவரையும் திருமணம் செய்து கொண்டு கடைசி நாளன்று அனைவரையும் ஒருவராக்கி தனது இடபாகத்தில் வைத்துக் கொண்டு காட்சி தந்து உலகினர்க்கு தேவி மூலமாக சரம சுலோகத்தை உபதேசித்ததாக புராணம் கூறுகிறது.
திவ்ய தேசங்களில் முக்கியமான் ஒன்று திருவிடந்தை
வரலாற்று புகழ்பெற்ற திருவிடந்தை கோயில் திவ்ய தேசங்கள் 108ல் 62வது திவ்யதேசமாகவும்,
தொண்டை நாட்டில் உள்ள திருப்பதிகள் 22ல் சீரும் சிரப்புமாக விளங்குகிறது
திருவிடந்தை கோவில். திருமங்கை ஆழ்வாரால் இத்திருக்கோயில் 'மங்களாசாசனம்' செய்யப்பட்டுள்ளது.
இத்திருக்கோயில் 1000 ஆண்டுகள் மேல் பழமை வாய்ந்தது. இத்திருக்கோயில் அருள்மிகு நித்ய கல்யாணப் பெருமாள் கோயில் என்று வழங்கப்படுகிறது.
ஸ்ரீ ஆதிவராகர்
ஸ்ரீவராக மூர்த்தியின் இடப்பக்கத்தில் உள்ள நாச்சியாருக்கு அகில வல்லி நாச்சியார் என்றும், பிரதி தினம் கல்யாணம் செய்து கொண்டபடியால், பெருமாளுக்கு நித்திய கல்யாண பெருமாள் என்றும் திருநாமம் வழங்கலாயிற்று.
இக்கோயிலில் தனிக்கோயில் கொண்டு எழுந்தருளியுள்ள தாயாருக்குக் கோமளவல்லித் தாயார் என்று திருநாமம்.
கருவறையில் மூலவரான ஸ்ரீ ஆதிவராகப் பெருமாள் சுமார் ஆறரை அடி உயரமுள்ள கல் விக்ரகமாக- தேவியை மடியில் அமர்த்திக் கொண்டு அற்புதமாக வீற்றிருக்கிறார்.
பெருமாளின் திருவடியின்கீழ் தன் பத்தினியுடன் ஆதிசேடன் உள்ளார்.
திருஷ்டி தோஷம் போக்கும் உற்ச்சவர்
உற்சவரான ஸ்ரீ நித்ய கல்யாணப் பெருமாள்,
ஸ்ரீ தேவி, பூதேவி ஆகியோர் பஞ்சலோக விக்ரகங்களாகக் காட்சி தருகின்றனர். ஸ்ரீ நித்ய கல்யாணப் பெருமாளின் திருமுகத்தில் திருஷ்டிப் பொட்டு ஒன்று உள்ளது. இது இயற்கையிலேயே அமைந்ததாம்.
இந்த திருஷ்டிப் பொட்டையும் தனிச்சந்நிதி தாயாரான கோமள வல்லித் தாயாரின் திருமுகத்தில் இருக்கும் திருஷ்டிப் பொட்டை யும் தரிசிப்பவர்களுக்கு திருஷ்டி தோஷம் விலகும் என்கிறார்கள்.
இந்த கோவிலுக்கு வந்து வேண்டிக்கொண்டால் சட்டென்று திருமணம் முடிந்து விடும்.
அவ்வாறு திருமணம் முடிந்த தம்பதியர், இந்த கோவிலுக்கு வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்திக் கொள்வார்கள்.
திருமணம் ஆகாத ஆண், பெண்கள் இந்த கோவிலுக்கு தங்களது பெற்றோர் அல்லது நெருங்கிய உறவினர்களுடன் வர வேண்டும். ஒரு பூ மாலையை வாங்கிக்கொண்டு சுவாமிக்கு அர்ச்சனை செய்ய கொடுக்க வேண்டும்.
சுவாமிக்கு அர்ச்சனை செய்து முடித்ததும் அந்த மாலையை கொடுப்பார்கள். அதை கழுத்தில் போட்டுக்கொண்டு, கோவிலை 9 முறை வலம் வர வேண்டும்.
வலம் வந்து முடித்ததும், கோவில் கொடிக்கம்பம் முன்பு சாஷ்டாங்கமாக விழுந்து வணங்க வேண்டும். பிறகு, அந்த மாலையுடன் நேராக வீட்டிற்கு செல்ல வேண்டும். வீட்டு பூஜை அறையில் அந்த மாலையை வைத்துவிட வேண்டும். திருமணம் முடிந்ததும், தம்பதியராக வந்து அந்த மாலையை கோவிலில் சேர்த்துவிட வேண்டும்.
இதற்கென்று கோவில் பின்புறம் ஒரு மரம் உள்ளது. அந்த மரத்தில் மாலையை கட்டி வைத்து விடுகிறார்கள். இந்த எளிய பரிகாரத்தை செய்து திருமண வாழ்க்கையில் அடியெடுத்து வைப்பவர்கள் ஏராளம்.
அமைவிடம் :
சென்னையில் இருந்து மாமல்லபுரம் செல்லும் கிழக்கு கடற்கரைச்சாலையில், 40 கிலோமீட்டர் தொலைவில் கோவளத்திற்கு முன்னதாக திருவேடகத்தில் அமைந்துள்ள இக்கோவிலுக்கு செல்ல சென்னை, மாமல்லபுரம் பகுதிகளில் இருந்து போக்குவரத்து வசதி உள்ளது.
No comments:
Post a Comment