பரிகாரம் செய்யுங்கள் பலனைப் பெருங்கள்
குழந்தைகள் நன்றாகப் படிக்க...
சில குழந்தைகள் ஆர்வக்குறைவினால் படிப்பில் ஈடுபாடு இல்லாமலும், சிலர் மணிக்கணக்காய் படித்தாலும், பாடங்கள் புரியாமலும் சிரமப்படுவர். சிலர் விளையாட்டு புத்தியால் படிப்பில் கவனமில்லாமல் இருப்பர். இன்னும் சிலர், வீட்டில் நன்றாகப் படிப்பர். ஆனால், தேர்வு அறைக்கு போனதும் பதட்டத்தில் படித்ததை மறந்து விடுவர். இப்படி எந்த பிரச்னையாக இருந்தாலும், அதை நீக்கி, படிப்பில் முன்னேற்றத்தை அருள லட்சுமி ஹயக்ரீவர் வழிபாடு உதவி செய்யும். குதிரை முகத்தோடு இருக்கும் இப்பெருமானை வழிபட்டே, சரஸ்வதியே அனைத்து வித்தைகளையும் கற்றதாகச் சொல்வர். காலை, மாலை நேரத்தில் வீட்டில் படிக்கத் தொடங்கும் முன், ""ஞானானந்தம் மயம் தேவம் நிர்மல ஸ்படிகாக்ருதிம் ஆதாரம் சர்வ வித்யானாம் ஹயக்ரீவம் உபாஸ்மஹே!'' என்ற ஸ்லோகத்தை சொல்லிய பிறகு படிக்கத் தொடங்கச் சொல்லுங்கள். அதோடு கூட, கல்விக்குரிய புதன் கிழமையில் பெருமாள் கோயில்களில் ஹயக்ரீவர் சந்நிதியில் நெய்தீபம் ஏற்றி வாருங்கள். நிச்சயம் பிள்ளைகளுக்கு படிப்பில் ஆர்வம் ஏற்படத் தொடங்கும்.
உடல்நிலை பாடாய் படுத்துகிறதா
சிலருக்கு எப்போதும் ஏதாவது ஒரு உபாதை உடலில் இருந்து கொண்டே இருக்கும். ஆரோக்கியம் இல்லாவிட்டால் வாழ்வில் எதையும் அனுபவிக்க முடியாது. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது நிதர்சனமான உண்மை. அடிக்கடி உடம்புக்கு முடியாதவர்களுக்கான பரிகார தெய்வம் சூரிய பகவான். ஞாயிற்றுக்கிழமையில் இவரை வழிபடுவது சிறப்பு. சிவாலயத்தில் சுவாமியின் வலப்புறத்தில் இவருக்கு சந்நிதி இருக்கும். நவக்கிரக மண்டபத்திலும் வீற்றிருப்பார். இவருக்கு செந்தாமரை மலர் சூட்டி வழிபடலாம். செலவில்லாத எளிய பரிகாரம் ஒன்றும் இருக்கிறது. காலையில் நீராடிய பின், கிழக்கு முகமாக நின்று சூரியனை இருகரம் கூப்பி வணங்குங்கள்.
ஜபாகு ஸும சங்காஸம் காஸ்யபேயம் மகாத்யுதிம் தமோரிம் சர்வ பாபக்னம் பிரணதோஸ்மி திவாகரம்' என்னும் ஸ்லோகத்தை சொல்லி வாருங்கள். ஆரோக்கியம் பெறுவீர்கள்.
கணவன் மனைவி ஒற்றுமைக்கு...
கணவன் மனைவியும் விட்டுக் கொடுத்து வாழ்ந்தால் அதைப்போல ஆனந்தம் வேறில்லை. அதே நேரம் வெறுப்பு வளர்ந்து விட்டால் நிலைமை தலைகீழாகிவிடும். சில நேரங்களில் விவாகரத்து வரை போய் விடுகிறது. இந்த நேரத்தில், மற்றவர்களின் யோசனையைக் கேட்டு மனதைக் குழப்புவதை தவிர்க்க வேண்டும். கணவன், மனைவி விஷயத்தில் முடிவெடுக்க வேண்டியது சம்பந்தப்பட்டவர்கள் மட்டுமே. ""பக்திக்கு மிஞ்சிய பரிகாரம் இல்லை'' என்று அமைதியாக இறைவனை சரணடைவது ஒன்று தான் இதற்கு எளிய வழி. ஆணும் பெண்ணும் சரிசமம் என்பதை சிவபெருமானே நமக்கு எடுத்துக்காட்டியிருக்கிறார். ஆண்பாதி பெண்பாதியாக இருக்கும் "அர்த்தநாரீஸ்வரர்' கோலத்தில் இருக்கும் இறைவனை வழிபடுங்கள். பவுர்ணமி நாளில் விரதமிருந்து மாலையில் அர்த்தநாரீஸ்வரருக்கு பால்நிவேதனம் செய்து பருகி வாருங்கள். அர்த்தநாரீஸ்வரர் சந்நிதி இல்லாத ஊர்களில், சிவாலயத்துக்கு சென்று, ""மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும் எண்ணில் நல்லகதிக்கு யாதுமோர் குறைவிலை கண்ணில் நல்லஃதுறும் கழுமல வளநகர்ப் பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே'' என்ற தேவாரப்பாடலை மூன்று முறை சொல்லுங்கள். உங்கள் வாழ்க்கையில் வசந்தம் மலரும்.
No comments:
Post a Comment