Tuesday, October 17, 2023

ஸ்ரீராகவேந்திரர் அருளிய அற்புதங்கள்!

ஸ்ரீராகவேந்திரர் அருளிய அற்புதங்கள்!
காஷாயம் கையில் இருந்தால்... பதினேழாம் நூற்றாண்டின் மத்தியில் நடந்த சம்பவம். ஸ்ரீ ராகவேந்திரரின் பெருமை நாடெங்கிலும் பரவ ஆரம்பித்தது. சுவாமிகள் தஞ்சாவூரில் பல ஆண்டுகள் முகாமிட்டு விட்டு மீண்டும் கும்பகோணத்திற்கு வந்திருந்தார். ஒருநாள் வெளியூரிலிருந்து வந்த சில அன்பர்கள், ‘ராகவேந்திரர் கேட்டதைக் கொடுப்பார் என்கிறார்களே, அவர் மற்றவர் மனதிலிருப்பதை அறியவல்லவரா?’ என்று பரீட்சித்துப் பார்க்க எண்ணினார்கள்.

காவிரிக்கரையில் நின்றிருந்த அவர்கள் அன்று மடத்தில், தமக்கு வழங்கப்படும் சாப்பாட்டில் சில பட்சணங்கள் பரிமாறப்பட வேண்டும் என விரும்பினர். அச்சமயம் சீடன் ஒருவன் சுவாமிகளின் காவித் துணியைத் துவைப்பதற்குப் படித்துறையில் இறங்கியவாறே, ‘சீக்கிரம் குளித்து விட்டு வாருங்கள்! நீங்கள் விரும்பிய பட்சணங்கள் மடத்தில் தயாராகிக் கொண்டிருக்கின்றன.’ என்றான். வந்திருந்த அன்பர்கள் திகைத்துப் போனார்கள்.

காஷாயத்தைத் துவைத்துக் கொண்டிருந்த சீடனிடம், ‘நாங்கள் என்ன நினைத்தோம் என்று உனக்கு எப்படித் தெரியும்?’ என வினவினார்கள். அதே சமயம் துவைத்துக் கொண்டிருந்த காஷாயம் சீடன் கையிலிருந்து நழுவி விடவே சீடன், ‘நான் என்ன சொன்னேன்? எனக்கு ஒன்றும் தெரியாதே...’ என்றான். ஆனால் மறுபடி காஷாயத்தைக் கையில் எடுத்ததும் முதலில் சொன்னதையே சொன்னான். சுவாமியின் காஷாயம் கையில் இருக்கும் போது சீடனுக்கு எல்லாம் தெரிகிறது; அது இல்லாவிட்டால் தெரிவதில்லை. காஷாயத்திற்கே இவ்வளவு மகிமை என்றால் ராகவேந்திரரது மகிமை எப்படிப்பட்டதாக இருக்கும் என வியந்தவாறே மடத்தை அடைந்தனர்.

அங்கே சாப்பாட்டில் அவர்கள் விரும்பியவை இருந்ததுமல்லாமல் ஸ்ரீ ராகவேந்திரரே பந்தி விசாரணையில், ‘என்ன, கேட்டது கிடைத்ததல்லவா? திருப்தி தானே...!’ என்று விசாரித்தார். அன்பர்கள் தம் தவறை உணர்ந்து மன்னிப்புக் கேட்டனர். கருணைக் கடலாம் ஸ்ரீராகவேந்திரர், அவர்களை மன்னித்ததுமின்றி அந்த மூன்று அன்பர்களின் வழித்தோன்றல்களே பிற்காலத்தில் தனது பிருந்தாவனத்திற்குப் பூஜை செய்வார்கள்; அவர்கள் விரும்பிய பட்சணங்களையே நைவேத்தியமா வைக்க வேண்டும் என்று அருளினார். இன்றும் மந்த்ராலயத்தில் இவர்கள் பரம்பரையினரே பூஜை செய்து வருகிறார்கள்.

தீயிலிட்ட வைர மாலை திரும்பக் கிடைத்தது சோழ மண்டலத்தில் ஒரு சமயம் (கி.பி. 1642) மழையின்றிக் கடுமையான வறட்சி ஏற்பட்டதுடன் அண்டை அரசர்களின் படையெடுப்பினாலும் கடும் சோதனைக்கு உள்ளாகியிருந்தது. தஞ்சாவூர் அரசர் விஜயராகவ நாயக்கர் அரசாங்கக் கஜானாவிலிருந்த பணத்தையெல்லாம் செலவிட்டும் வறுமை ஒழியவில்லை. ஸ்ரீ ராகவேந்திரரின் மகிமைகளை நினைவு கூர்ந்த அரசர் கும்பகோணம் சென்று அவர் அருளை நாடினார்.

ஸ்ரீராகவேந்திரர் தனது மடத்திலிருந்த செல்வத்தையெல்லாம் நாட்டு மக்களுக்காகச் செலவிட்டார். அத்துடன் கேட்டவற்றையெல்லாம் கொடுக்கும் பீஜாக்ஷர மந்திரத்தை எழுதி, அரண்மனைக் களஞ்சியத்தில் வைத்தார். அதன் காரணமாகத் தானியங்களை வாரி வாரிக் கொடுத்தும் களஞ்சியம் நிறைந்தே இருந்தது! மனம் மகிழ்ந்த மன்னன் ஸ்ரீ ராகவேந்திரரைப் பணிந்து ஒரு வைர மாலையைக் கொடுத்து அதை ஏற்றுக் கொள்ளும்படி வேண்டினான்.

மாலையைப் பெற்றுக் கொண்ட ஸ்ரீராகவேந்திரர் அதை அங்கு எரிந்து கொண்டிருந்த ஹோமத் தீயில் எறிந்து விட்டார்! மன்னன் அவர் தன்னை உதாசீனம் செய்து விட்டதாக எண்ணிக் கோபம் கொண்டான். ஸ்ரீ ராகவேந்திரர் அக்னி தேவனை வேண்ட, அந்த வைர மாலை முன்னிலும் அதிகப் பிரகாசத்துடன் வெளியில் வந்தது! அரசனும், பொதுமக்களும் வியப்பிலும், பக்திப் பரவசத்திலும் மெய் மறந்தனர். அரசன் அதை ஸ்ரீ ராகவேந்திரருக்கு அர்ப்பணித்து, அவர் வழியில் நடக்கலானான். ஸ்ரீராகவேந்திரர் அந்த வைர மாலையை மூலராமர் விக்கிரகத்திற்கு அணிவித்து மகிழ்ந்தார்.

மந்த்ராக்ஷதை மகிமை அக்ஷதை என்றால் உடையாத முழு அரிசி என்று பொருள். எல்லா பூஜைகளிலும் அட்சதை முக்கியம். அதேபோல் பல கோயில்களிலும், முக்கியமாக ஸ்ரீ ராகவேந்திரர் மடங்களில் பக்தர்களுக்கு அட்சதை வழங்கப்படுகிறது. திருமண நிகழ்ச்சிகளில் அட்சதை தூவி வாழ்த்துவது மரபு. மந்த்ராலயத்தில் கொடுக்கப்படும் மந்த்ராட்சதைக்கு பிரத்யேக மதிப்பு உண்டு. குரு ஸ்ரீராகவேந்திரரின் திருக்கரங்களால் அளிக்கப்பட்ட மந்த்ராக்ஷதைக்கு வாழ்க்கையையே மாற்றி வளமாக்கும் சக்தி உண்டு. 

இதை விளக்கும் ஒரு சம்பவம்: அதவானி (ஆதோனி)யின் பக்கத்தில் உள்ள கிராமம் கந்தனாலை. வெங்கண்ணன் அங்கு வசித்த ஒரு இளைஞன். பரம ஏழை, படிப்பறிவில்லாதவன். ஆனால் அவனுக்கு ஸ்ரீ ராகவேந்திரரிடம் மாறாத பக்தி! ஒருநாள் ஸ்வாமிகள் நடந்து போய்க் கொண்டிருக்கையில் அவரை வணங்கி, அருள் புரியுமாறு வேண்டினான். அவரும் தயை கூர்ந்து அவனுக்கு மந்த்ராக்ஷதை வழங்கி, ‘உனக்குக் கஷ்டம் வந்த போது என்னை நினை! நான் உன்னை ரக்ஷிப்பேன்!’ என்றார்.

வெங்கண்ணன் ஆனந்தமடைந்தான். வழக்கம்போல் மாடு மேய்த்துக் கொண்டிருந்த போது ஒரு நாள் அந்த ஊர் நவாப் சித்தி மசூத்கான் பரிவாரங்களுடன் எதிர்ப்பட்டான். பரிவாரம் வெங்கண்ணன் அருகில் வரவும், இரு சேவர்கள் நவாப்பிற்கு இரண்டு கடிதங்கள் கொண்டு வந்து கொடுக்கவும் சரியாக இருந்தது. நவாப்பிற்கு படிக்கத் தெரியாது. அருகில் யாரும் படிக்கத் தெரிந்தவர்கள் இல்லை! நவாப்பிற்கோ கடிதத்தில் உள்ள செய்தியை அறிந்து கொள்ளும் ஆர்வம்! சுற்றுமுற்றும் பார்த்தவன், வெங்கண்ணாவைக் கண்டான். உடனே அவனை சமிக்ஞை செய்து அழைத்துக் கடிதத்தைப் படிக்கச் சொன்னான்.

வெங்கண்ணன் தனக்குப் படிக்கத் தெரியாது என்று சொன்னதை நம்பாமல் நவாப் கோபப்பட்டான். ‘‘அந்தணன், படிக்கத் தெரியாதென்று பொய்யா சொல்கிறாய்? இதற்கு நீ தண்டிக்கப்படுவாய்!’’ என்று மிரட்டினான். சட்டென்று வெங்கண்ணனுக்கு மந்த்ராக்ஷதை நினைவிற்கு வந்தது. அவன் அதைக் கையால் தொட்டு கொண்டு ஸ்ரீ குருராயரை ஸ்மரணை செய்தான். தனக்குப் படிக்கும் சக்தி அருளும்படி மனமுருகிப் பிரார்த்தித்தான். கடிதத்தைப் பிரித்துப் படிக்க ஆரம்பித்தான்!

ஒரு கடிதத்தில் நவாப்பின் சைனியம் போரில் வெற்றியடைந்த செய்தி இருந்தது. இன்னொன்றில் நவாப்பிற்கு ஆண் குழந்தை பிறந்துள்ள செய்தி. இரண்டையும் கேட்டு நவாப் மகிழ்ச்சியின் உச்சிக்கே போய் விட்டான்! வெங்கண்ணனை அழைத்துப் போய் அவனுக்குத் திவான் பதவி அளித்துத் தன் பத்திர விவகாரங்களை நிர்வகிக்கும் பொறுப்பைக் கொடுத்தான்! வெங்கண்ணனும் ஸ்ரீ குருராகவேந்திரரின் அருளால் எல்லா வேலைகளையும் திறம்பட நடத்தினான்.

ஸ்ரீராகவேந்திரரிடம் மாறாத பக்தியுடன் வாழ்ந்தான். பிற்பாடு மந்த்ராலய கிராமத்தை ஸ்ரீ ராகவேந்திரருக்குத் தானமாகக் கொடுக்கும்
படி நவாப்பிடம் விண்ணப்பித்து, அதில் வெற்றியடைந்தான். அந்த மஞ்சாலை என்ற மந்த்ராலயத்திலேயே ஸ்ரீ ராகவேந்திரர் நிலைத்து ஜீவன் முக்தராக இன்றும் அருட்பாலித்துக் கொண்டிருக்கிறார். இவ்வளவு பெருமைவாய்ந்த மந்த்ராலய மந்த்ராக்ஷதையில் ஸ்ரீராகவேந்திரர் திருக்கரத்தால் ஸ்பரிசிக்கப்பட்ட ‘ஒரிஜினல்’ அம்சம் இன்றளவும் இருப்பது விசேஷம். அது எப்படியென்றால் தினமும் ஸ்ரீமூலராமருக்கு சமர்ப்பிக்கும் மந்த்ராக்ஷதையை ஸ்ரீராகவேந்திரர் பிருந்தாவனத்திற்குச் சமர்ப்பிக்கின்றனர். 

பீடத்தில் அமரும் சுவாமிகள் கொடுக்கும் அக்ஷதையும் வேத மந்திரங்களால் புனிதமாக்கிய பிறகே வினியோகிக்கின்றனர். மந்த்ராக்ஷதை வைத்திருக்கும் பாத்திரம் அக்ஷய பாத்திரம் எனப்படும். இது ஸ்ரீராகவேந்திரரின் காலம் தொட்டே இருந்த பாத்திரம் என்கின்றனர். 

கோடிக்கணக்கான பக்தர்களுக்கு அளித்தும் இந்தப் பாத்திரத்தைக் காலியானதே இல்லை. கொஞ்சம் மிச்சம் இருக்கும் போதே மறுபடியும் புது மந்த்ராக்ஷதையைக் கலந்து விடுகின்றனர். அதனால் ஸ்ரீராயர் திருக்கரம் பட்ட மந்த்ராக்ஷதையின் அம்சம் இன்றளவும் உள்ளது எனலாம். 

இந்தப் பாத்திரத்தை சுத்தப்படுத்துவதும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. பிற்பாடு வந்த பீடாதிபதிகளின் அருளாசியும் கலந்து இந்த மந்த்ராக்ஷதையின் மகிமை பல மடங்கு அதிகரித்துள்ளது. ஸ்ரீ ராகவேந்திரர் ஆராதனை சமயத்தில் 50 குவிண்டாலுக்கும் அதிகம் மந்த்ராக்ஷதை வினியோகிக்கப்படுவது இதன் மகிமையை விளக்குகிறது. ஸ்ரீராகவேந்திரர் கிருபையால் நம் அனைவருக்கும் சகல நன்மைகளும் உண்டாகட்டும். ஸ்ரீகுருப்யோ நமஹ!

பகிர்வு.படித்ததில்
உணர்ந்தது.

No comments:

Post a Comment

Followers

வயலூர் முருகன் குமரன் இங்கு குன்றில்லாத சமவெளியில் உள்ளார்

வயலூர் முருகன் கோவில் அருணகிரி நாதர் இங்கு நீண்டகாலம் தங்கியிருந்து முருகப்பெருமானை வழிபட்டு, பாடிப் பரவசமடைந்ததலம்.  வயலூர்.  வ...