Friday, August 16, 2024

சிக்கல்கள் தீர்க்கும் சிங்காரவேலர்! '

_சிக்கல் சிங்காரவேலனை வணங்கினால் வாழ்க்கையில் இருக்கும் எத்தனை சிக்கல்களும் தீரும். 
சிக்கல்கள் தீர்க்கும் சிங்காரவேலர்! '‘

முருகனை தொழப்போய் மூவரையும் வணங்கினேன்'’ என்பார்கள். ஆனால், இங்கோ மிக அரிதாக சிவன், சக்தி, நாராயணன், அனுமார், கணபதி என்று ஐந்து கடவுள்கள் புடைசூழ அருள் பாலிக்கிறார் முருகன். சிக்கல் கிராமத்தில் வீற்றிருக்கும் இந்த சிறப்பு மிக்க சிங்காரவேலர், பக்தர்களின் சிக்கல்களைத் தீர்க்கும் சிங்கார வேலராக விளங்குகிறார். நாகை மாவட்டம், நாகை - திருவாரூர் சாலையில் நாகப்பட்டினத்திலிருந்து மேற்கே 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது சிக்கல் கிராமம். இங்கு 80 அடி உயரத்தில் அமைந்துள்ள கோயிலில் கம்பீரமாகக் காட்சி அளிக்கிறார் சிங்காரவேலர். சோழ வள நாட்டில் இயற்கையில் மலைகள் கிடையாது. செயற்கையாக அமைக்கப்பட்ட மலைக் கோயி லான இந்தத் தலம், அறுபடை வீடுகளுக்கு இணையானதாகப் போற்றப்படுகிறது. வலப்புறம் சிவனாகிய ‘நவநீதேஸ்வரர்’, இடப்புறம் பார்வதிதேவியான ‘வேல் நெடுங்கண்ணி’.. இப்படி அம்மை - அப்பனுக்கு இடையில் அமர்ந்து அருள் பாலிக்கும் சிங்காரவேலரின் பார்வை. . .

மூலவர் விக்கிரகம் தவிர, கணபதி, மகாலட்சுமி, நடராஜன், வைரவர், சூர்ய சந்திரர் ஆகிய தெய்வங்களுக்கான ஆகம விதிகளின் படி அமைக்கப்பட்ட தனிச் சன்னதிகளும், அறுபத்து மூன்று நாயன்மாரின் திருவுருச்சிலைகளும் வழிபாட்டில் இருக்கின்றன.

தல விருட்சமாக மல்லிகைச் செடியும், ஷீரா என்னும் பாற்குளமும், காயா, லட்சுமி எனுக் குளங்களும் புனித தீர்த்த குளங்களாகக் காணப்படுகின்றன.

இத்தலத்தில் கந்த சஷ்டி விழாவின்போது பக்தர்களின் கூட்டம் கடல் எனச் சூழ்கிறது. சூரபத்மனை அழிப்பதற்காக தன் அன்னை பராசக்தியிடமிருந்து வேதூவன் வேல் பெற்றது இத்தலத்தில் தான் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இன்றும் திருச்செந்தூரில் இருந்துதான், தன் அன்னையிடமிருந்து வள்ளி தெய்வானை சமேதராக வேலைப் பெற்றுக் கொள்கிறார் செந்தில் வேலவன். இந்த நிகழ்வை “வேல் வாங்குதல் விழா” என்பார்கள். வேலைப் பெற்றுக் கொள்ளும் உற்சவ மூர்த்தியான முருகன் திருமுகத்தில் வியர்வைத் துளிகள் அரும்புவது தெய்வீகமானதும் அற்புதமானதும் ஆகும்.

கோயிலின் முன்புறத்தில் அழகானதொரு அலங்கார வளைவு அமைக்கப்பட்டுள்ளது. கோயிலின் ஏழுதளங்களையுடைய ராஜகோபுரம் எண்பது அடி உயரத்தில் அமைந்துள்ளது. இங்கு இருக்கின்ற கார்த்திகை மண்டபம், வேலவனின் புராண வழிச் சம்பவங்களைக் குறிக்கும் அழகிய ஓவியங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இங்கு அமைந்திருக்கும் கல்யாண மண்டபத்தில் திருமணங்கள் தினந்தோறும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன..இத்திருத்தலத்தில் நடைபெறுகின்ற திருவிழாக்களில் தலையாய திருவிழா கந்த சஷ்டப் பெருவிழாவே.


ஆலய வரலாறு

எட்டிக்குடி என்ற நாட்டை முத்தையா என்ற அரசர் ஆட்சி செய்து வந்தார். இவர் ஆட்சியில் விஸ்வ குலத்தை சேர்ந்த சிறந்த கலைதிறன் படைத்த ஒரு சிறுவன் தீவிர முருகன் பக்தனாக திகழ்ந்தான். ஒருநாள் அவன் கனவில் முருகப் பெருமான் காட்சி தந்து, உன் திறமையை வைத்து என்னை சிலையாக வடிவமைத்து வணங்கு. இதனால் உனக்கும் உன் வம்சத்திற்கும் பூலோகம் இருக்கும்வரை புகழ் இருக்கும்.” என்றார். தன்னுடைய கனவை மறுநாளே நிறைவேற்ற முடிவு செய்து, ஒரு மலை பகுதிக்கு சென்று சிலையை வடிவமைக்க ஏற்ற பல கற்களை பரிசோதித்து அதில் ஒரு கல், நல்ல தரமாகவும் உயிரோட்டத்துடனும் இருப்பதை கண்டுபிடித்து, அந்த கல்லை எடுத்து வந்து அழகான முருகன் சிலையை செய்ய துவங்கினான். முருகனின் திருநாமத்தை உச்சரித்து கொண்டே சிலையை வடிவமைத்து வந்தான். அப்போது முருகனின் சிலையில் இருந்து வியர்வை வடிய ஆரம்பித்தது. இதை கண்ட சிற்பியான அச்சிறுவன், ஊர் மக்களிடம் தகவல் சொன்னான். ஊர் மக்களில் ஒருவர் பின் ஒருவராக வந்து பார்த்துவிட்டு, முருகனின் சிலையில் வியர்வை வடிவதை கண்டு வியந்தார்கள். பிறகு இந்த தகவல் அரசர் முத்தையாவின் காதில் விழுந்தது. இது உண்மையான தகவலா என அறிய அரசரே நேரில் வந்து முருகனின் சிலையை கண்டார். நேரில் பார்த்த அரசர் ஆச்சரியமும் அதிர்ச்சியும் அடைந்தார். முருகனின் முகத்தில் இருந்து வியர்வை வடிந்து கொண்டே இருந்தது. ஏன் இது போல் நடக்கிறது.? ஏதாவது தெய்வ குற்றமா? என்று அறிய அருள்வாக்கு கேட்கப்பட்டது. சூரபத்மனை கொல்ல முருகப் பெருமான், அன்னை பராசக்தியிடம் வீரவேல் வாங்கினார். அன்னையின் சக்தி முழுமையாக அவ்வேலில் இருந்ததால் வேலின் உஷ்ணமும் உக்கிரமும் தாங்காமல் முருகனின் உடலில் இருந்து வியர்வை வடிந்தது. அந்த சம்பவத்தை மனதில் நினைத்துக்கொண்டே சிற்பியான சிறுவன் இச்சிலையை வடிவமைத்ததால் முருகப்பெருமான் இந்த சிலையின் வடிவில் இங்கே வந்துவிட்டார். அதனால்தான் முருகனின் சிலையிருந்து வியர்வை வடிகிறது. அதனால் பயம் வேண்டாம்.” என்று அருள்வாக்கு சொல்லப்பட்டது. இதை கேட்ட அரசர், “சிங்காரவேலனே இந்த சிலையின் உயிராக வந்துள்ளாரா… இந்த முருகனை இடத்தில் கோயில் கட்டி பிரதிஷ்டை செய்ய வேண்டும்.” என்று கூறினார். முருகப் பெருமானை பிரதிஷ்டை செய்து சிக்கல் சிங்காரவேலனுக்கு ஆலயம் எழுப்பினார் அரசர். சூரபத்மனை வீழ்த்துவதற்காக அன்னையிடம் வேல் வாங்கும் போது வேலின் சக்தியின் உஷ்ணத்தை தாங்காமல் முருகனின் முகத்தில் வியர்வை வடிந்தது. இன்றுவரை ஐப்பசி மாதம் விழாவில் முருகனின் சிலையில் இருந்து வியர்வை வடியும் காட்சியை பார்க்கலாம். சிக்கல் சிங்காரவேலனை வணங்கினால் வாழ்க்கையில் இருக்கும் எத்தனை சிக்கல்களும் தீரும்.. 

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்.. 

No comments:

Post a Comment

Followers

திண்டுக்கல் சென்றாயப்பெருமாள் ஆலயம்......

*திண்டுக்கல் மாவட்டம் தமிழ்நாடு கோட்டைப்பட்டி அருள்மிகு சென்றாயப்பெருமாள் ஆலயம்* *மூலவர் சென்றாயப்பெருமாள் முறுக்கு மீசை, தாடியு...