தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றான சிவபெருமானும் உமையம்மையும் மலையாக காட்சி தரும்
#திருஇந்திரநீலப்பருப்பதம் #நீலாசநாதர் #நீலாம்பிகை வரலாறு:[269]
நீலாசலநாதர் கோயில் (இந்திர நீலப் பருப்பதம்) தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் வட நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் இமயமலைச் சாரலில் அமைந்துள்ளது. இத்தலத்தில் இந்திரன் வழிபட்டான் என்பது தொன்நம்பிக்கை. காளாத்தியிலிருந்து சம்பந்தர் இத்தலம் மீது பதிகம் பாடினார் எனப்படுகிறது.
இறைவர் திருப்பெயர் : நீலாசலநாதர்
இறைவியார் திருப்பெயர் : நீலாம்பிகை
தீர்த்தம் : இந்திரதீர்த்தம்
சிவஸ்தலம்
பெயர்: இந்திரநீலப்பருப்பதம்
தற்போதைய
பெயர்: நீலகண்ட சிகரம்
வழிபட்டோர் : இந்திரன்
பாடியவர்:
சம்பந்தர் - குலவு பாரிடம்
#தேவாரப்_பதிகம்:
"குலவு பாரிடம் போற்ற வீற்றிருந்து
இலகு மான் மழு ஏந்தும் அம் கையன்,
நிலவும் இந்திரநீலப்பர்ப்பதத்து
உலவினான், அடி உள்க, நல்குமே.
குறைவு இல் ஆர் மதி சூடி, ஆடல் வண்டு
அறையும் மா மலர்க்கொன்றை சென்னி சேர்
இறைவன், இந்திரநீலப்பர்ப்பதத்து
உறைவினான்தனை ஓதி உய்ம்மினே!
___திருஞானசம்பந்தர்
இமயமலைச் சாரலில் அமைந்த தலம். பத்ரிநாத்திலிருந்து அதிகாலை 4 மணிக்குப் பார்த்தோமானால் எதிரில் நீல நிறத்தில் ஒரு மலை தெரியும். அதுவே இந்திரநீலபருப்பதம். காலை 5 மணிக்குள் அந்தக் காட்சி மறைந்துவிடும். அதன் பிறகு தங்க நிறத்திலும் பிறகு வெண்மை நிறத்திலும் காட்சியளிக்கிறார். இந்திரன் வழிபட்ட தலம். இங்குள்ளவர்கள்
இம் மலையை நீல்கண்ட் என்று அழைக்கிறார்கள்.
இமயத்துள் அமையப்பெற்றுள்ள பரம புண்ணியமான பர்வதம்.
புராண காலத்துப் பெயர் 'திருஇந்திரநீலப் பருப்பதம்'.
தற்பொழுதைய வழக்கில் நீலகண்டப் பர்வதம் என்று அறியப் பட்டு வருகிறது.
சீர்காழி வேந்தரால் தேவாரப் பாடல் பெற்றுள்ள தலம்.
ஞான சம்பந்த மூர்த்தி தென் கயிலாயம் என்று குறிக்கப் பெறும் திருக்காளத்தியில் (ஸ்ரீகாளஹஸ்தியில்) இருந்த வண்ணம் அகக் கண்களாலேயே இத்தலத்தைத் தரிசித்துப் போற்றியுள்ளார்.
இந்திரன் முக்கண் மூர்த்தியை உபாசித்துப் பேறு பெற்ற தலம்.
ஞான சம்பந்தர் அருளியுள்ள திருப்பதிகத்தின் 11ஆம் பாடலில் 'இந்திரன் தொழு நீலப் பர்ப்பதத்து அந்தம் இல்லியை' எனும் வரி மூலம் இதனை அறியலாம்.
பரமனும் பரமேசுவரியும் 'நீலாச்சலநாதர்; நீலாம்பிகை' எனும் திருநாமம் கொண்டு இப்பர்வதத்தில் எழுந்தருளியுள்ளனர்.
தீர்த்தம்: இந்திர தீர்த்தம்.
பத்ரிநாத் தலத்திலிருந்து 9 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது இந்திரநீல பர்வதம்.
அச்சமயத்தில் இப்பர்வதம் முழுவதுமே 'ஆலம் உண்ட சிவப்பரம்பொருளின் திரு நீல கண்டத்தினைக் குறிக்கும் விதமாக' இந்திர நீல நிறத்தில் காட்சியளிக்கும்.
பின்னர் சிறிது நேரத்தில் மெல்ல மெல்லப் பொன்னிறத்தில் தோன்றி விளங்கும்.
வார்த்தைகளால் விளக்கவொண்ணா அதி அற்புத தெய்வீகக் காட்சியிது.
பண்டைய தவப் பயனும், உமையொரு பாகனின் திருவருளும் கூடி வரின் நாமும் இத்திருக்காட்சியினைத் தரிசித்து உய்வு பெறலாம்.
சம்பந்தப் பெருந்தகை 3ஆம் பாடலில் சிவபெருமான் இந்திரநீல பர்வதத்தின் மீது அன்பு கொண்டு விரும்பி உறைவதாகவும், 5ஆம் பாடலில் அங்குள்ள அருவிகளைத் தமக்கு மாலைகளாகச் சூடியருள்வதாகவும் குறிக்கிறார்.
தேவதேவர் உறைந்தருளும் இப்பர்வதத்தில் பாதம் பதிக்க விழைவோர் பத்ரிநாத் தலத்திருந்து 9 கி.மீ நடைப் பயணமாகச் செல்லுதல் வேண்டும்.
பர்வதத்தினுள் சிறிது தூரம் பயணித்து அதன் ஏகாந்தம்; ரம்மியமான சூழல் இவற்றை ரசித்து, அங்கு அம்பிகையுடன் இனிது உறைந்தருளும் எந்தை பிரானான சர்வேஸ்வரரையும் போற்றித் துதித்து வரலாம்.
சம்பந்த மூர்த்தியின் திருப்பதிகத்தை மலையினுள் இருந்த படியே பாராயணம் புரிவது கிடைத்தற்கரிய பெறும் பேறன்றோ!
பிற தலங்களின் பாடல்களில் 'அத்தல மூர்த்தியைப் போற்றினால் வினைகள் மாயும்' என்று நேரிடையாகக் கூறும் பண்பினராகிய சம்பந்தப் பெருமான் இத்தலப் பதிகத்தின் 9ஆம் பாடலில் 'இந்த பர்வதத்தில் உறையும் வேத முதல்வனை நினைந்துப் போற்றாதவரை அவர்களின் கர்ம வினைகள் மிகவும் சினந்து துன்புறுத்தும்; கூற்றம் கொல்லும்' என்று எதிர்மறையாக அதே கருத்தினை வலியுறுத்தி அருளியுள்ளார்.
இதன் மூலம் இத்தலத்தின் சீர்மை நன்கு விளங்கும்.
இந்திரநீல பர்வதம் - சம்பந்தர் தேவாரம் 9ஆம் பாடல்:
பூவினானொடு மாலும் போற்றுறும்
தேவன் இந்திர நீலப் பர்ப்பதம்
பாவியா எழுவாரைத் தம் வினை
கோவியா வரும் கொல்லும் கூற்றமே!!
வள்ளலாரும் திருவருப்பா - விண்ணப்பக் கலி வெண்பாவில் இத்தலத்தினைப் போற்றிப் பாடியுள்ளார்.
-
..போகிமுதல்
பாடியுற்ற நீலப் பருப்பதத்தில் நல்லோர்கள்
தேடிவைத்த தெய்வத் திலகமே!!
#தலவரலாறு:
இந்திரன் வழிபட்ட தலம்.
திருக்காளத்தியிலிருந்து, சம்பந்தர் இத் தலத்தை தரிசித்துப் பாடினார்.
பத்ரிநாத் அடிவாரத்தில் தங்கி காலை 4 மணியளவில் எழுந்து பார்த்தால் இந்திரநீலப்பருப்பதத்தை தரிசிக்கலாம். அந்நேரத்தில் இம்மலை இந்திர நீல நிறத்தில் காட்சி தருகிறது. இந்திரன் வழிபட்ட திருவூர். அர்ச்சுனன் தவம் புரிந்து பாசுபதம் பெற்ற திருத்தலம். மூகாசுரனை வென்ற திருவூர். பனி பிரதேசம் ஆகையால் பத்ரிநாத் ஆலயம் 6 மாத காலம் மூடியிருக்கும். மேலும் மழை இல்லாத காலமான மே முதல் செப்டம்பர் வரை சேவிக்க செல்வது நல்லது. கடுங்குளிர் காரணமாக கம்பளி எடுத்துச் செல்வது நல்லது. இங்கு தங்கும் வசதிகளும் மற்றும் மற்ற வசதிகளும் உள்ளன. இங்கு குளிர் காலத்தில் கோயிலை பனி மூடுவதால் ஜோஷிமட்டில் உள்ள நரசிம்மர் கோயிலில் பத்ரிநாராயணனை வைத்து வழிபடுகின்றனர்.
இந்திரன் பூசித்த காரணத்தால் இப்பெயர் பெற்றது. மேகங்கள் மேலே கவிழ்ந்து
சூழ்ந்திருப்பதால் நீலப்பர்ப்பதம் எனப் பெயர் பெற்றது. இது வடநாட்டு தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். இந்திரன் பூசித்த பதி என்ற செய்தி திருஞானசம்பந்தர் தேவாரத்தின் திருக்கடைக்காப்பில் உள்ள தொழு நீலப்பர்ப்பதம் என்னும் பகுதியால் அறியக்கிடக்கின்றது. இதற்கு திருஞானசம்பந்தரது பதிகம் ஒன்று உள்ளது.
#சிறப்புகள்:
வடநாட்டு தலங்கள் ஐந்துள், இது இரண்டாவது தலம்.
இது கடல்மட்டத்திலிருந்து சுமார் 18000 அடி உயரமுள்ளதெனக் கணிக்கப்பெற்றுள்ளது.
ஈசன் சன்னதிக்குச் சிறிது வடகிழக்கில் பச்சை நிறமுள்ள கற்பாறையே சுயம்பு அம்பிகை.
ஸ்வாமியின் அர்த்தனரீஸ்வர வடிவில் ஒரு பாறையே இந்திரன்.
நீலகண்ட சிகரம் எனப்படுகின்றது.
#திருவிழாக்கள்:
பனி பிரதேசமாகையால் பத்ரிநாத் ஆலயம் 6 மாத காலம் மூடி இருக்கும். மேலும் மழை இல்லாத காலமாகிய மே முதல் செப்டம்பர் வரை தரிசனம் தருகிறது.
இமயமலைச்சாரலில் உள்ளது.
இந்தியாவின் உள்ள உத்தராஞ்சல் மாநிலத்தின் தலைநகரான டேராடூனிலிருந்து
ரிஷிகேஷ் வழியாக பத்ரிநாத் சென்று இந்திரநீலப்பருப்பதத்தை
காலை 4 மணியளவில் தரிசிக்கலாம்.
#செல்லும்_வழி:
காஞ்சிபுரத்திலிருந்து (டெல்லி வழியாக) 2780 கி.மீ., சென்னையிலிருந்து இரயில் மூலமாக 2150 கி.மீ., பயணம் செய்து டெல்லி அடைந்து டெல்லியிலிருந்து பேருந்து மூலம் 555 கி.மீ., சென்றால் வைணவத்தலமான பத்ரிநாத் அடையலாம். இங்கிருந்து பார்த்தால் இந்திரநீலபருப்பதம் தெரியும். திருச்சியிலிருந்து இரயில் மூலம் 3080 கி.மீ. மதுரையிலிருந்து இரயில் மூலம் 3210 கி.மீ.
ஓம் நமசிவாய
படித்து பகிர்ந்தது
இரா இளங்கோவன்
நெல்லிக்குப்பம்.
No comments:
Post a Comment