குருகை காவலப்பர் என்னும் குருவாலப்பர் கோயில் அறிவோமா?
கங்கைகொண்ட சோழபுரத்திற்கு மிக அருகில் அமைந்துள்ள அழகிய கோயில்.
கங்கைகொண்ட சோழபுரம் தரிசனம் செய்து ஊர் திரும்ப பயணத்தை தொடங்கிய போது
1/2 கி.மீ தூரத்தில் சாலையின் எதிர்ப்புறம் உயர்ந்த கோபுரங்கள்!!!
'கோபுர தரிசனம் கோடி புண்ணியம்' கோபுரத்தை தரிசித்து விட்டோமே, கோடி புண்ணியம் கிடைத்துவிடும் என்று கடந்து போக மனதில்லை. நேரமும் மாலை 6.30 மணிதான் ஆகியிருந்தது. எப்படியானாலும் இரவு 2 மணிக்கு தான் வீடு வந்து சேரமுடியும் என்பது திண்ணம். கோவிலை தரிசித்து விட்டு பயணத்தை தொடர்வோம் என மகிழ்வுந்தை கோயிலை நோக்கி செலுத்தினோம்.
ஸ்ரீ மரகதவல்லி ஸமேத ஸ்ரீ வீரநாராயண பெருமாள் கோவில் என்னும் அழகிய வளைவு வரவேற்றது. நான்கு வழிச்சாலையில் வலது புறம் திரும்பி ஒரு வழிச்சாலையில் சிறிது தூரத்தில் கோயிலை வந்தடைந்தோம்.
கங்கைகொண்ட சோழபுரத்தில் சுமார் 10 வேன்கள், சில மகிழ்வுந்துகள் என நூற்றுக்கணக்கான மக்கள்.
ஆனால் இங்கு கூட்டமே இல்லை.
கூட்டமில்லா கோயில்களின் அழகே தனி தான்.
ஆனால் வந்துபோக ஆள் இல்லாமல் கோயில்கள் வீணாக போய்விடக்கூடாது என்ற ஆதங்கம் ஒருபுறம்.
குருகை காவலப்பர் என ஊர் பெயரும் கோவில் பெயரும் விளங்க வீரநாராயண பெருமாள் சேவை சாதிக்கிறார்.
இந்த குருகை காவலப்பர் யார் என்ற தேடுதல் எங்கள் நெல்லை சீமைக்கு வந்து நின்றது.
தாமிரபரணி சீமையில் குருகூர் எனப்படும் ஆழ்வார்திருநகரியில் பெரும் செல்வந்தராக அவதரித்து, உய்யக்கொண்டார் மூலம் நாதமுனிகளை சரணடைந்து, அவராலே பஞ்ச சமஸ்காரம் செய்யப் பெற்று ஸ்ரீவைஷ்ணவர் ஆகி, அவரிடம் இருந்து அஷ்டாங்க யோக ரஹஸ்யம் என்னும் யோகசாஸ்திரத்தைக் கற்றுக்கொண்டவர்.
நாலாயிர திவ்யப் பிரபந்தத்தை நம்மாழ்வாரிடமிருந்து பெற்றுத் தந்த நாதமுனிகள் அஷ்டாங்க யோக ரஹஸ்யத்தை தனது 11 சீடர்களுள் குருகைக் காவலப்பருக்கு மட்டுமே உபதேசித்தார். அதை தன் பேரனான ஆளவந்தாருக்கு சொல்லித் தரும்படி நியமித்தார்.
நாத முனியின் பேரனான ஆளவந்தர், குருகை காவலப்பனிடம் யோக ரஹஸ்ய தீட்சை பெற வேண்டி அவரது ஆசான் மணக்கால் நம்பியின் வழிகாட்டுதலின்படி இத்தலத்திற்கு வந்தார்.
யோக ரகஸ்யத்தை அடியேனுக்கு அருளிச் செய்ய வேண்டும் என்று குருகை காவலப்பர் காலில் விழுந்தார் ஆளவந்தார் என்ற யமுனைத் துறைவன்.
வருகிற தை மாதத்திலே இந்த நாளில் யாம் பரமபதம் செல்வோம். அதற்கு முன்னதாக வரவேண்டும் என்று ஒரு ஓலையில் எழுதிக் கொடுத்து காவலப்பர் ஆளவந்தாரை அனுப்பிவிட்டார்.
ஓலையை பெற்று கொண்ட ஆளவந்தார் தனது தாத்தாவால் தொடங்கப்பட்ட அரையர் சேவையைக் காணச் ஸ்ரீரங்கம் சென்றார்.
ஸ்ரீ ரங்கநாதசுவாமி கோவிலில், ராபத்து திருவாய்மொழி விழாவின் போது அனந்த புர நகர் பாசுரத்தின் விளக்கக்காட்சியைக் கேட்டவுடன் திருவனந்தபுரத்தில் உள்ள அனந்த பத்மநாபசுவாமியைத் தரிசிக்க வேண்டும் என்ற ஆவலில் அங்கு சென்றார்.
அங்கே அனந்த பத்மநாபனை சேவிக்கும் போது குருகை காவலப்பர் எழுதிக் கொடுத்த ஓலை நினைவுக்கு வர அதை எடுத்துப் பார்க்கையில் அன்று தான் குருகைக் காவலப்பர் பரமபதம் செல்லும் தினம் என்பதை அறிந்து பதைபதைக்கிறார்! ஆளவந்தார் அங்கு சென்று சேர்வதற்கு முன்னர் குருகைக் காவலப்பர் பரமபதம் ஏகிவிட்டார்.
இதனால் குருகை காவலப்பனுடனான ஒரு முக்கியமான சந்திப்பை ஆளவந்தார் தவறவிட்டார்.
அஷ்டாங்க யோக ரகசியம் எதிர்கால சந்ததியினருக்குத் தொலைந்து போய் மறைந்து விட்டது.
தனது ஆச்சார்யார் நாதமுனிகளின் தியானத்தில் குருகை காவலப்பன் இந்த இடத்தில் யோக நிலையில் காணப்பட்டதால், கிராமமும் கோயிலும் அவரது பெயரால் குருகை காவலப்பன் கோயில் என்று பெயரிடப்பட்டன. தற்போது, இந்த இடம் குருவாலப்பர் கோயில் என்று குறிப்பிடப்படுகிறது
கிழக்கு நுழைவாயிலில் ஐந்து நிலை கோபுரம் அதை அடுத்து மூன்று நிலை கோபுரம் என இரண்டு ராஜகோபுரங்கள் உள்ளன. மன்னர் ராஜேந்திர சோழனின் மனைவி இந்த கோயிலை கட்டியதாக கூறப்படுகிறது.
இறைவன் பெயர் : அருள்மிகு வீரநாராயணப் பெருமாள் (அழகிய மூலவர்)
இறைவியின் பெயர்: அருள்மிகு மரகதவல்லித்தாயார்.
நின்ற திருக்கோலம்
கிழக்கே திருமுகமண்டலம்
பார்க்கவ ஷேத்திரம்
மரகதவல்லித்தாயார், ஆண்டாள், இராமர், ஆஞ்சநேயர் , ஆழ்வார்கள், விஷ்வக்சேனர் ஆகியோருக்குச் சன்னதிகள் தனித்தனியாக அமைந்துள்ளன.
உற்சவமூர்த்தி-துவாரகாநாதர்
நாதமுனிகளுக்குக் கிருஷ்ணனாக சேவைசாதித்த தலம்.
இங்கு வந்து வணங்கியவர்களின் கொடிய பாவங்களும் தீரும் என்கிறார்கள்.
நாத முனிகள், குருகை காவலப்பன் மற்றும் ஆளவந்தார் ஆகியோர் தெற்கு நோக்கி ஒன்றாகக் காணப்படும் ஒரு தனி சன்னிதி உள்ளது.
குருகைக் காவலப்பர் வாழி திருநாமம் :
"மகரமதில் விசாகம் நாள் வந்துதித்தான் வாழியே
மாறன்தாள் நாதமுனி மலரடியோன் வாழியே
நிகரில் நன் ஞானயோகம் நீண்டு செய்வோன் வாழியே
நிர்ணயமாய் ஐந்து பொருள் நிலையறிவோன் வாழியே
அகமறுக்கும் இராமர்பதம் ஆசையுள்ளோன் வாழியே
ஆழ்வார்கள் மறையதனை ஆய்ந்துரைப்போன் வாழியே
செகதலத்தில் குருகூரில் செனித்த வள்ளல் வாழியே
செய்ய குருகைக் காவலப்பன் திருவடிகள் வாழியே"
புகழ்பெற்ற கோயில்களுக்கு சென்று வழிபடும் போது அருகில் உள்ள கூட்டமில்லாத கோயில்களுக்கும் சென்று தரிசனம் செய்யுங்கள்.
ஓம் நமசிவாய
படித்து பகிர்ந்தது
இரா இளங்கோவன்
நெல்லிக்குப்பம்.
No comments:
Post a Comment