Sunday, August 18, 2024

மறைமலைநகர் திருக்கச்சூர் கச்சபேஸ்வரர் மலையடிவாரத்தில் மருந்தீஸ்வரர்...

பாடல் பெற்ற தொண்டை தாட்டுத் தலங்கள் வரிசையில் 25-வது தலமாக திருக்கச்சூர் உள்ளது. சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு அந்தணர் உருவில் வந்து உணவளித்து அவரின் பசியை போக்கி அருளிய தலம். பசி என்பதும் ஒருவகைப் பிணி (நோய்) என்பது முன்னோர்களின் வாக்கு. பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்ற பழமொழியும் இந்தப் பசிப்பிணியைக் கருத்தில்கொண்டே வழக்கில் உள்ளது. நம் வாழ்நாளில் என்றும் நமக்கு உணவு கிடைத்து பசியில்லாமல் இருக்க வழிபட வேண்டிய தலம் திருக்கச்சூர்.
இறைவன் பெயர்: கச்சபேஸ்வரர், மருந்தீஸ்வரர், விருந்திட்ட ஈஸ்வரர்
இறைவி பெயர்: அஞ்சனாட்சி, இருள்நீக்கி அம்மை
இத்தலத்துக்கு சுந்தரர் பதிகம் ஒன்று உள்ளது.

எப்படிப் போவது?

சென்னை எழும்பூர் - செங்கல்பட்டு ரயில் மார்க்கத்தில் உள்ள சிங்கப்பெருமாள் கோயில் ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் இந்த சிவஸ்தலம் உள்ளது. சென்னை - செங்கல்பட்டு தேசிய நெடுஞ்சாலையில், சிங்கப்பெருமாள் கோயில் சென்று அங்கிருந்து ஸ்ரீபெரும்புதூர் செல்லும் சாலையில் திரும்பி ரயில்வே கேட் தாண்டி சுமார் 1 கி.மீ. தூரம் சென்றபின் வலதுபுறம் பிரியும் சாலையில் மேலும் 1 கி.மீ. தூரம் சென்றால் திருக்கச்சூர் ஆலயத்தை அடையலாம்.
 


ஊரின் நடுவே கோயில் உள்ளது. இவ்வாலயத்தில் இருந்து சற்று தொலைவில் உள்ள மலையடிவாரத்தில் மருந்தீஸ்வரர் கோயில் என்ற மற்றொரு ஆலயமும் உள்ளது.  சிங்கப்பெருமாள் கோயில் பேருந்து நிறுத்தத்தில் இருந்து ஆட்டோ மூலம் செல்வது நல்லது. இல்லாவிடில், சுமார் 2 கி.மீ. தொலைவு நடந்து செல்ல வேண்டும்.

ஆலய முகவரி
அருள்மிகு கச்சபேஸ்வரர் திருக்கோயில்,
திருக்கச்சூர் அஞ்சல்,
வழி சிங்கப்பெருமாள் கோயில்,
செங்கல்பட்டு வட்டம்,
காஞ்சிபுரம் மாவட்டம் – 603 204.

இக்கோயில், காலை 8 மணி முதல் நண்பகல் 11.30 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

தல புராணம்

அமிர்தம் கிடைப்பதற்காக தேவர்களும், அசுரர்களும் பாற்கடலை கடைந்தார்கள். மந்தார மலையை மத்தாக்கி, வாசுகி பாம்பை கயிறாக்கி பாற்கடலைக் கடையும் சமயத்தில், மந்தார மலை கனம் தாங்காமல் மூழ்கத் தொடங்கியது. அது கடலில் மூழ்காமல் இருக்க, திருமால் ஆமை (கச்சபம்) வடிவெடுத்து மந்தார மலையின் அடியில் சென்று மலையைத் தாங்கி நின்றார். திருமால் இவ்வாறு ஆமை உருவில் மலையின் கனத்தைத் தாங்கக்கூடிய ஆற்றலைப் பெற இத்தலத்துக்கு வந்து சிவபெருமானை வழிபட்டதாக வரலாறு கூறுகிறது. ஆமை (கச்சபம்) வடிவத்தில் சிவபெருமானை மஹாவிஷ்ணு வழிபட்டதால், இத்தலம் திருக்கச்சூர் என்று பெயர் பெற்றது. இத்தலம், ஆதிகச்சபேஸம் என்று அழைக்கப்படுகிறது. இத்தலத்தில் உள்ள கூர்ம தீர்த்தத்தில் நீராடி பிரதோஷ நாட்களில் கச்சபேஸ்வரரை வணங்கினால் எல்லா தோஷங்களும் நீங்கும். செல்வம், கல்வி, இன்பம் கிடைக்கும் என்று தல புராணம் கூறுகிறது.
 


சுந்தரருக்காக சிவபெருமான் தனது கையில் திருவோடு ஏந்தி பிச்சை எடுத்து சுந்தரரின் பசியைப் போக்கிய தலம் என்ற பெருமையும் திருக்கச்சூருக்கு உண்டு. தன் அடியார்களுடன் தலயாத்திரை சென்ற சுந்தரர், திருக்கழுக்குன்றத்தில் இருந்து இத்தலத்துக்கு உச்சிவேளையில் வந்து சேர்ந்தார். ஆலயத்தினுள் சென்று சிவபெருமானை பக்தியுடன் வழிபட்டு வெளியே வந்தார். வெகு தொலைவில் இருந்து திருக்கச்சூர் வந்த காரணத்தினால், களைப்பும் அதனுடன் பசியும் சேர்ந்து தள்ளாடியபடி கோயிலின் மதிற்புறத்தே உள்ள மண்டப தூணில் சாய்ந்து பசியுடன் அமர்ந்திருந்தார். சுந்தரரின் நிலையைக் கண்ட இறைவன், ஓர் அந்தணர் உருவில் சுந்தரரின் தோளைத் தட்டி எழுப்புகிறார். அவரை உட்காரச் சொல்லி, வாழை இலை விரித்து அன்னம் பரிமாறி, குடிக்க நீரும் கொடுக்கிறார். அன்னம் பலவித வண்ணங்களுடனும் பலவகை சுவையுடனும் இருப்பதைக் கண்ட சுந்தரர், காரணம் கேட்கிறார். சமைத்து உணவு கொண்டுவர நேரம் இல்லாததால், பல வீடுகளுக்குச் சென்று பிச்சை வாங்கிவந்து உணவு கொடுப்பதாக அந்தணர் சொல்கிறார். அந்தணர் செயலில் நெகிழ்ந்துபோன சுந்தரர், எதிரே உள்ள குளத்துக்குச் சென்று கைகளைக் கழுவிக்கொண்டு திரும்பி வந்து பார்த்தால், அந்தணர் மாயமாய் மறைந்துபோயிருக்கக் கண்டார். இறைவனே தனக்காக திருக்கச்சூர் வீதிகளில் தனது திருவடிகள் பதிய நடந்துசென்று பிச்சையெடுத்து அன்னமிட்டதை நினைத்து, இறைவனின் கருணையைக் கண்டு மனம் உருகினார் சுந்தரர்.

கோயில் அமைப்பு

திருக்கச்சூர் தலம் ஆலக்கோயில் என்ற பெயருடனும் அழைக்கப்படுகிறது. இவ்வாலயத்தின் மூலவர் கச்சபேஸ்வரர். இருந்தாலும் இவ்வாலயம் தியாகராஜசுவாமி திருக்கோயில் என்றே அழைக்கப்படுகிறது. தொண்டை நாட்டிலுள்ள பாடல் பெற்ற சிவஸ்தலங்களில் தியாகராஜர் சந்நிதி உள்ள கோயில்களில் இத்தலக் கோயிலும் ஒன்றாகும். கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ள இந்த ஆலயத்துக்குக் கோபுரம் இல்லை. கோயிலுக்கு எதிரில் ஒரு பெரிய குளம் இருக்கிறது. இது கூர்ம தீர்த்தம் என்று வழங்கப்படுகிறது. திருமால் கூர்மாவதாரம் எடுத்தபோது இக்குளத்தை உண்டுபண்ணியதாகக் கருதப்படுகிறது. இக்குளத்துக்கு அருகில்தான் சுந்தரர் பசிக் களைப்பால் படுத்திருந்த 16 கால் மண்டபம் இருக்கிறது. மண்டபத் தூண்களில் அழகிய சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
 


கிழக்கிலுள்ள நுழைவாயில் வழியாக உள்ளே சென்றவுடன் கிழக்கு வெளிப் பிராகாரத்தில் கொடிமரம், நந்தி, பலிபீடம் ஆகியவை அமைந்துள்ளன. தெற்கு வெளிப் பிராகாரத்தில் 27 தூண்களை உடைய நட்சத்திர மண்டபம் உள்ளது. நட்சத்திர மண்டபத்தைக் கடந்து உள்ளே சென்றால் தியாகராஜர் சந்நிதி உள்ளது. இவர் உபயவிடங்கர் எனப்படுகிறார். மகாவிஷ்ணுவுக்கு இத்தலத்தில் இறைவன் தனது நடனத்தைக் காட்டி அருளியுள்ளார். நட்சத்திர மண்டபத்தில் உள்ள ஒரு தூணில், மகாவிஷ்ணு ஆமை உருவில் சிவலிங்கத்தை வழிபடும் சிற்பம் ஒன்று உள்ளது.
 


மண்டபத்தில் உள்ள தெற்கு வாயில் வழியே உள்ளே சென்றால், இறைவி அஞ்சனாட்சியின் சந்நிதி உள்ளது. நான்கு திருக்கரங்களுடன் நின்ற நிலையில் அம்பாள் அருள்பாலிக்கிறாள். வலம் வருவதற்கு வசதியாக அம்மன் சந்நிதி ஒரு தனிக் கோயிலாகவே உள்ளது. அம்பாள் சந்நிதி முன் உள்ள மண்டபத்திலிருந்து மற்றொரு கிழக்கு நோக்கிய வாயில் வழியாக உள்ளே சென்றால், கருவறையில் கிழக்கு நோக்கிய சந்நிதியில் இறைவன் கச்சபேஸ்வரர் காட்சி தருகிறார். திருமாலுக்கு அருளிய இவர் ஒரு சுயம்பு லிங்கமாவார். கருவறை அகழி போன்ற அமைப்பு கொண்டது.
 


கருவறை சுற்றில் தென்கிழக்கில் வடக்கு நோக்கிய நால்வர் சந்நிதியைக் காணலாம். கருவறை சுற்று வலம் வரும்போது, வடக்குச் சுற்றின் வடகிழக்கு மூலையில் நடராஜர் சந்நிதி அமைந்துள்ளது. கருவறை கோஷ்ட மூர்த்திகளாக விநாயகர், தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். வடக்கு வெளிப் பிராகாரத்தில் கிழக்கு நோக்கிய முருகன் சந்நிதியும், விருந்திட்ட ஈஸ்வரர் சந்நிதியும் அமைந்திருக்கின்றன. விருந்திட்ட ஈஸ்வரர் சந்நிதிக்கு அருகே வடக்கு நோக்கிய சுந்தரர் சந்நிதியும் அமைந்துள்ளது. வடக்கு வெளிப் பிராகாரத்தில் தெற்கு நோக்கிய பைரவர் சந்நிதியும் இருக்கிறது. இத்தலத்திலுள்ள இந்த பைரவர் சந்நிதி மிகவும் சிறப்பு வாய்ந்தது.

இத்தலம் ஒரு திருப்புகழ் வைப்புத் தலம். இங்கு முருகப் பெருமான் ஒரு முகமும், நான்கு திருக்கரங்களும் கொண்டு இரு தேவியருடன் எழுந்தருளியுள்ளார்.
 

திருக்கச்சூர் கோயிலின் இணைக்கோயிலான மலைக்கோயில், ஆலக்கோயிலில் இருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இக்கோயிலில் குடிகொண்டிருக்கும் இறைவன் மருந்தீஸ்வரர் என்றும், இறைவி இருள்நீக்கியஅம்மை என்றும் அழைக்கப்படுகின்றனர். மலையடிவாரத்தில் உள்ள இந்த மருந்தீசர் கோயிலுக்கு ராஜகோபுரம் இல்லை. தெற்கு நோக்கிய வாயில் வழியே உள்ளே சென்றால் சிறிய மண்டபம் உள்ளது. இம்மண்டபத் தூண்களில் துவாரபாலகர் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இவை தவிர, லிங்கோத்பவர், மாவடிசேவை, பட்டினத்தார், வள்ளலார், விநாயகர், தண்டபாணி, அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகியோர் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இவற்றுள் சுந்தரரை நோக்கியவாறு, கையில் அமுதுடன் காட்சி தரும் இறைவனின் சிற்பம் ஒன்று இருப்பதையும் நாம் காணலாம்.
மருந்தீஸ்வரர் சந்நிதி மேற்கு நோக்கி உள்ளது. எதிரில் சாளரம் உள்ளது. இதன் வெளியே கொடிமரம் நந்தி பலிபீடங்கள் உள்ளன. படிகளில் இறங்கி நீர் அருந்தும் அமைப்புடைய 'நடைபாதைக் கிணறு' உள்ளது. பக்கத்தில் நவக்கிரக சந்நிதி, அம்பாள் சந்நிதியும் மேற்கு நோக்கி உள்ளது. மூலவர் கருவறை சுற்றுப் பிராகாரத்தில் கோஷ்ட மூர்த்தங்களாக, விநாயகர், தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, ஆகியோர் உள்ளனர். கோஷ்டத்திலுள்ள பிரம்மாவுக்கு எதிரே சண்டேசுவரர் நான்கு முகங்களுடன் சதுர்முக சண்டேசுவரராகக் காட்சி தருகின்றார். இந்த அமைப்பு இக்கோயிலில் உள்ள ஓர் அரிய உருவ அமைப்பாகும்.

மாசி மாதத்தில் மருந்தீஸ்வரர் கோயிலில் திருவிழா நடைபெறுகின்றது. இத் திருவிழாவின் 9-ஆம் நாளில், இறைவன் பிச்சையெடுத்துச் சுந்தரருக்கு அமுதிட்ட ஐதிகம் நடைபெறுகிறது.
 

இரந்திட்ட ஈஸ்வரர் வீற்றிருக்கும் சிறிய கோயில் மேற்கில் உள்ளது. சித்திரையில் பெருவிழா நடைபெறுகிறது. சுந்தரர் தனது பதிகத்தில் மலைமேல் மருந்தே என்று மருந்தீஸ்வரர் கோயில் இறைவனைப் பாடியுள்ளார். தேவாரப் பதிகம் பெற்ற கோயில் மலையடிவாரத்திலுள்ள இந்த மருந்தீஸ்வர் கோயிலே.
 

சுந்தரர் இயற்றிய இத்தலத்துக்கான இப்பதிகம், 7-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.

1. முதுவாய் ஓரி கதற முதுகாட்டு
எரி கொண்டு ஆடல் முயல்வானே
மதுவார் கொன்றைப் புதுவீ சூடும்
மலையான் மகள்தன் மணவாளா
கதுவாய்த் தலையிற் பலி நீ கொள்ளக்
கண்டால் அடியார் கவலாரே
அதுவே ஆமாறு இதுவோ கச்சூர்
ஆலக் கோயில் அம்மானே.

2. கச்சு ஏர் அரவு ஒன்று அரையில் அசைத்துக்
கழலுஞ் சிலம்புங் கலிக்கப் பலிக்கு என்று
உச்சம் போதா ஊர்ஊர் திரியக்
கண்டால் அடியார் உருகாரே
இச்சை அறியோம் எங்கள் பெருமான்
ஏழேழ் பிறப்பும் எனையாள்வாய்
அச்சம் இல்லாக் கச்சூர் வடபால்
ஆலக் கோயில் அம்மானே.

3. சாலக் கோயில் உள நின் கோயில்
அவை என் தலைமேற் கொண்டாடி
மாலைத் தீர்ந்தேன் வினையும் துரந்தேன்
வானோர் அறியா நெறியானே
கோலக் கோயில் குறையாக் கோயில்
குளிர்பூங் கச்சூர் வடபாலை
ஆலக் கோயிற் கல்லால் நிழல்கீழ்
அறங்கள் உரைத்த அம்மானே.

4. விடையும் கொடியும் சடையும் உடையாய்
மின் நேர் உருவத்து ஒளியானே
கடையும் புடைசூழ் மணி மண்டபமும்
கன்னி மாடம் கலந்து எங்கும்
புடையும் பொழிலும் புனலும் தழுவிப்
பூமேல் திருமாமகள் புல்கி
அடையும் கழனிப் பழனக் கச்சூர்
ஆலக் கோயில் அம்மானே.

5. மேலை விதியே வினையின் பயனே
விரவார் புரம்மூன்று எரிசெய்தாய்
காலை எழுந்து தொழுவார் தங்கள்
கவலை களைவாய் கறைக்கண்டா
மாலை மதியே மலைமேல் மருந்தே
மறவேன் அடியேன் வயல் சூழ்ந்த
ஆலைக் கழனிப் பழனக் கச்சூர்
ஆலக் கோயில் அம்மானே.

6. பிறவாய் இறவாய் பேணாய் மூவாய்
பெற்றம் ஏறிப் பேய் சூழ்தல்
துறவாய் மறவாய் சுடுகாடு என்றும்
இடமாக் கொண்டு நடமாடி
ஒறுவாய்த் தலையில் பலி நீ கொள்ளக்
கண்டால் அடியார் உருகாரே
அறவே ஒழியாய் கச்சூர் வடபால்
ஆலக் கோயில் அம்மானே.

7. பொய்யே உன்னைப் புகழ்வார் புகழ்ந்தால்
அதுவும் பொருளாக் கொள்வானே
மெய்யே எங்கள் பெருமான் உன்னை
நினைவார் அவரை நினைகண்டாய்
மையார் தடங்கண் மங்கை பங்கா
கங்கார் மதியஞ் சடைவைத்த
ஐயா செய்யாய் வெளியாய் கச்சூர்
ஆலக் கோயில் அம்மானே.

8. ஊனைப் பெருக்கி உன்னை நினையாது
ஒழிந்தேன் செடியேன் உணர்வு இல்லேன்
கானக் கொன்றை கமழ மலரும்
கடிநாறு உடையாய் கச்சூராய்
மானைப் புரையும் மடமென்னோக்கி
மடவாள் அஞ்ச மறைத்திட்ட
ஆனைத் தோலாய் ஞானக் கண்ணாய்
ஆலக் கோயில் அம்மானே.

9. காதல் செய்து களித்துப் பிதற்றிக்
கடிமாமலர் இட்டு உனை ஏத்தி
ஆதல் செய்யும் அடியார் இருக்க
ஐயம் கொள்வது அழகிதே
ஓதக் கண்டேன் உன்னை மறவேன்
உமையாள் கணவா எனை ஆள்வாய்
ஆதற் பழனக் கழனிக் கச்சூர்
ஆலக் கோயில் அம்மானே.

10. அன்னம் மன்னும் வயல்சூழ் கச்சூர்
ஆலக்கோயில் அம்மானை
உன்ன முன்னும் மனத்து ஆரூரன்
ஆரூரன் பேர் முடிவைத்த
மன்னு புலவன் வயல் நாவலர்கோன்
செஞ்சொல் நாவன் வன்தொண்டன்
பன்னும தமிழ்நூல் மாலை வல்லார்
அவரெந் தலைமேல் பயில்வாரே.

சுந்தரர் இயற்றிய தேவாரம் 
சென்று வருவோம் சிவன் ஆலயம்

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் நெல்லிக்குப்பம்...

No comments:

Post a Comment

Followers

புல்லாங்குழல் இசையால் "நமசிவாய" என்னும் மந்திரத்தை இசைத்த ஆனாய நாயனார்...

தனது புல்லாங்குழல் இசையால் "நமசிவாய" என்னும் திருவைந்தெழுத்து (பஞ்சாட்சர மந்திரம்) மந்திரத்தை இசைத்து, சிவபெருமானால் ...