*மூலவர்:
பெருவுடையார், பிரகதீசுவரர்
*தாயார்:
பெரியநாயகி, பிரகன்நாயகி
*தல விருட்சம்:
வன்னி மரம்
*தீர்த்தம்:
சிவகங்கை தீர்த்தம்
*இது திருவிசைப்பா பாடல் பெற்ற தலம். பாடியவர் :கருவூரார்
*தஞ்சாவூரில் காவிரியின் தென்கரையில் அமைந்திருக்கும் இந்தக் கோயில், ராஜராஜேச்சரம், பெருவுடையார் கோயில், பிரஹதீஸ்வரர் ஆலயம் என பல பெயர்களில் குறிப்பிடப்படுகிறது.
*10-ஆம் நூற்றாண்டில் புகழ் பெற்ற தமிழ் சோழ பேரரசர் முதலாம் இராசராச சோழன் இக்கோயிலைக் கட்டுவித்தார். 1003-1004 ஆம் ஆண்டு தொடங்கி 1010 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. 2010 ஆம் ஆண்டில், இந்தக் கோவில் கட்டி முடிக்கப்பட்டு 1000 ஆண்டுகள் நிறைவடைந்தன. இதை கொண்டாடும் வகையில், இந்திய அரசு சிறப்பு அஞ்சல் தலை மற்றும் நாணயங்களை வெளியிட்டது.
*இந்தக் கோயில், திராவிடக் கோயில் கலையின் உன்னதமான சான்றாகக் கருதப்படுகிறது.
*காவிரிச் சமவெளியில் கற்களே இல்லாத பகுதியில், முற்றிலும் கருங்கற்களைக் கொண்டு இக்கோவில் கட்டப்பட்டது.
*985 முதல் 1070 வரை சோழர் கலை உயர்வடைந்து உச்ச நிலையில் இருந்தது. ஏராளமான கோயில்கள் கட்டப்பட்டன. பரந்து கிடந்த சோழப் பேரரசு எங்கும் கோயில்கள் கட்டும் பணி தொடர்ச்சியாக நடந்தது.
"உலகப் பாரம்பரியச் சின்னம்: இக்கோயில், கங்கைகொண்ட சோழபுரம் மற்றும் தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில் ஆகியவற்றுடன் சேர்த்து, Great Living Chola Temples என்ற பெயரில் யுனெஸ்கோ, உலகப் பாரம்பரியச் சின்னமாக 1987 ஆம் ஆண்டு அறிவித்தது.
*இந்தக் கோயில், இந்தியத் தொல்லியல் துறையால் பராமரிக்கப்படுகிறது.
*பிற்காலக் கோயில்களில்
கோபுரங்கள் உயரமாக அமைந்திருக்கும் நிலையில், இந்தக் கோவிலில் விமானம் மிக உயரமாக அமைக்கப்பட்டுள்ளது.
*தஞ்சை பெரிய கோயிலின் சில பகுதிகள் பிற்காலப் பாண்டியர்கள், விஜயநகர மன்னர்களால் கட்டப்பட்டன. முன்தாழ்வாரம், நந்தி மண்டபம், அம்மன் சன்னிதி, சுப்ரமணியர் சன்னிதி போன்ற இந்தப் பகுதிகளைத் தவிர கோயிலின் மற்ற பகுதிகள் ராஜராஜ சோழன் காலத்திலேயே கட்டப்பட்டவை.
*விமானத்தின் உச்சியில் கலசத்திற்கு கீழே உள்ள பகுதி ஒரே கல்லால் ஆனது என்றும், விமானத்தின் நிழல் தரையில் விழாது என்றும் கூறப்பட்டாலும் அது உண்மையல்ல.
*பெருவுடையார் என்று அழைக்கப்படும் மூலவர் சிவபெருமான் லிங்க வடிவில் உள்ளார். இந்த மூலவரை இராசராச சோழன், இராசராசீச்சரமுடையார் என்ற பெயரில் வழிபட்டுள்ளார்.
*கருவறையில் உள்ள சிவலிங்கம் உலகிலேயே பெரியதாக திகழ்கிறது. ஆறு அடி உயரமும் 54 அடி சுற்றளவு உள்ள ஆவுடையாரின் மேல் 13 அடி உயரமும் 23 அரை அடி சுற்றளவு உள்ள லிங்கம் பிரம்மாண்டமாய் இருக்கின்றது.
*பெரியநாயகி அம்மனுக்கு தனி சந்நிதி உள்ளது.
*இக்கோவிலில் கருவூர் சித்தருக்கென தனி சந்நிதி அமைந்துள்ளது.
*வராகி அம்மன் சந்நிதி சோழர் கால கட்டுமானமாக இருக்க வேண்டும் என்றே கருதப்படுகிறது. வேறெங்கிலும் இல்லாத வகையில் இந்த திருவுருவிற்கு இரண்டு கரங்கள் மட்டுமே இருப்பது வியக்கத்தக்கது.
*ஒரே கல்லில் அமைக்கப்பட்டுள்ள நந்தி 20 டன் எடையும், இரண்டு மீட்டர் உயரம், ஆறு மீட்டர் நீளம், இரண்டரை மீட்டர் அகலமும் கொண்டது.
*"நாம் கொடுத்தனவும், நம் அக்கன் கொடுத்தனவும், நம் பெண்டுகள் கொடுத்தனவும், கொடுப்பார் கொடுத்தனவும் இந்த கல்லிலே வெட்டி அருள்க...."
என்று ராஜராஜசோழன்
தன்னுடைய பங்களிப்பு மட்டுமன்றி மற்ற எல்லோரின் பங்களிப்பையும் ஆவணப் படுத்தியது வியத்தகு ஒன்று.
*இக்கோயிலின் தலைமைச் சிற்பியாக குஞ்சர மல்லன் ராஜராஜப்பெருந்தச்சன் என்ற பெயர் கோயிலின் கல்வெட்டுகளில் குறிப்பிடப்படுகிறது.
*தஞ்சை பெரிய கோவில், வெறும் வழிபாட்டுத் தலமாக மட்டுமல்லாமல், சோழர் காலத்தின் கலை, அறிவியல், மற்றும் சமூக வாழ்க்கையின் ஒரு முழுமையான பிரதிபலிப்பாகவும் திகழ்கிறது.
*தரணி போற்றும் தஞ்சை பெரிய கோவில் இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் நிலைத்து நின்று தமிழனின் பெருமையை பறைசாற்றி கொண்டு இருக்கும்.
ஓம் நமசிவாய
படித்து பகிர்ந்தது
இரா இளங்கோவன்
நெல்லிக்குப்பம்.
No comments:
Post a Comment