Tuesday, August 20, 2024

தில்லையில் புகழ்பெற்ற சக்தி தலங்களில் ஶ்ரீகாயத்ரி அம்மன்....

ஆன்மீக பூமியான தமிழகத்தில் 
கடலூர் மாவட்டத்தில் உள்ள 
உலகப்புகழ் பெற்ற #சிதம்பரம் என்னும் #தில்லையில் உள்ள புகழ்பெற்ற சக்தி தலங்களில் ஒன்றான 
#வேதமாதாவான #ஶ்ரீகாயத்ரி_அம்மன் திருக்கோவில் வரலாறு:
காயத்ரிதேவியை வழிபட்டு வந்தால், கர்மவினைகள் அகலும் என்பதே காயத்ரி வழிபாட்டின் பலன். காயத்ரிதேவி திருக்கோவில் வரலாற்றை பார்க்கலாம்.
உலக இயக்கத்துக்கு ஆதாரமாக நாம் கருதும் இறைவன் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்ற பிரகலாதன் கூற்றுப்படி ஒவ்வொன்றும் இறையருளால் நிகழ்வதாகவே நாம் நம்புகின்றோம். முற்காலத்தில் வாழ்ந்த முனிவர்களும், ரிஷிகளும் இவ்வாறே நினைத்து உலக நன்மை வேண்டி இறைவனிடம் பல வரங்கள் கேட்டுப்பெற்றனர். இதற்காக அவர்கள் பல மந்திரங்களை உச்சரித்து இறைவனை போற்றினர். நான்கு வேதங்களிலும் சுமார் ஏழு கோடிக்கும் மேற்பட்ட மந்திரங்கள் இடம்பெற்றுள்ளன. பீஜாட்சர மந்திரங்கள் எனப்படும் இவற்றுள் மிக உயர்வானவை காயத்ரி மந்திரம். ‘ஓம் பூர் புவ சுவஹ
தத் சவிதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ யோ ந பிரசோதயாத்’ ‘பூர் எனப்படும் பூலோகம், பவ எனப்படும் புவர்லோகம்(இடைலோகம்), சுவஹ எனப்படும் சொர்க்கலோகம் ஆகிய மூன்று உலகங்களையும் படைத்து எங்கெங்கும் மூலாதாரமாய் நிறைந்து உயிர்கள் யாவும் உடல், ஆன்ம மற்றும் தெய்வீக நிலையில் சிறப்பான வாழ்க்கை வாழ்வதற்கு வழிவகுத்த போற்றுதலுக்குரிய தெய்வீக பேரொளியை நாம் தியானிப்போம். அந்த மேலான தெய்வம் நம் அறிவுக்கு என்றென்றும் ஒளியூட்டட்டும்’ என்பதே இந்த மந்திரத்தின் பொருளாகும். மந்திரங்களில் சிறந்த காயத்ரிக்கு உருவம் தந்தவர் விசுவாமித்திர முனிவர். ஐந்து தலைகளும், பத்து கரங்களும் கொண்ட காயத்ரிதேவியை அவர் உருவாக்கினார். இந்த தேவிக்கு சாவித்ரி, சரஸ்வதி என்ற பெயர்களும் உண்டு. காயத்ரி புலன்களின் தலைவி, சாவித்ரி உயிரின் தலைவி, சரஸ்வதி வாக்கின் தலைவி. எண்ணம், செயல், சொல் மூன்றாலும் தூய்மையையும், மேன்மையையும் உணர்த்துபவரே (திரிகரணசுத்தி) காயத்ரிதேவி. மனிதர்கள் மேற்குறிப்பிட்ட மூன்று நிலைகளிலும் தூய்மையை கடைப்பிடித்து காயத்ரிதேவியை வழிபட்டு வந்தால், கர்மவினைகள் அகலும் என்பதே காயத்ரி வழிபாட்டின் பலன்.
காயத்ரிதேவி அம்மனுக்கு முதன்முதலாக கோவில் எழுப்பப்பட்ட பெருமையும், புகழும் சிதம்பரத்திற்கேச் சேரும். ஒரு காலத்தில் காடாக இருந்த இப்பகுதியில் காயத்ரிதேவிக்கு சிறிய ஆலயம் இருந்தது. இங்குள்ள காயத்ரி தேவியை, அந்தணர் ஒருவர் தினமும் வழிபட்டு வந்தார்.

ஒரு முறை கடுமையான தோஷங்களால் துன்பப்பட்ட மன்னன் ஒருவன், தில்லை காளியை தரிசித்து விட்டு, நடராஜரை தரிசனம் செய்ய வந்தான். அவனை சந்தித்த அந்தணர், காயத்ரி தேவியின் மந்திரத்தை மன்னனுக்கு சொல்லிக் கொடுத்தார். அதை உச்சரித்து வந்த மன்னன் குணம் பெற்றான். இதையடுத்து மன்னன், காயத்ரி தேவிக்கு மிகப்பெரிய ஆலயத்தை அமைத்தான்.
காலப்போக்கில் அழிந்து போன இந்த ஆலயம் புதுப்பிக்கப்பட்டு, 1990-ல் கும்பாபிஷேகம் கண்டது. இந்த குட முழுக்கின் போது, பல தலைமுறை களாய் பூஜிக்கப்பட்டு வந்த 2 அடி உயர மூலவர் சிலையை மாற்றி, நான்கடி உயரத்தில் உட்கார்ந்த நிலையிலான காயத்ரிதேவி சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. பழைய மூலவரும் கருவறை யிலேயே இருக்கிறார். இந்த ஆலயத்தின் சிறிய ராஜகோபுரத்தைக் கடந்து உள்ளே சென்றால் வலது புறம் விநாயகரும், இடதுபுறம் முருகனும் அருள்பாலிக்கின்றனர். நடுநாயகமாக அன்னை காயத்ரிதேவி தாமரை மலரில் அமர்ந்து பேரருள் புரிகிறாள். பிரம்மா, விஷ்ணு, சிவன், காயத்ரி, சாவித்ரி ஆகிய ஐந்து கடவுளர்களின் வடிவமாக அன்னை திகழ்கிறாள்.
அவரது கரங்களில் கதை, அங்குசம், சங்கு, சக்கரம், தாமரைமலர், சாட்டை, கிண்ணம் ஆகியவற்றை ஏந்தியுள்ளார். அன்னையின் பாதத்தின் அருகே ஸ்ரீசக்கரம் அமைக்கப்பட்டுள்ளது. தேவியின் முன்பு நந்தீஸ்வர பெருமானும், பலிபீடமும் இடம்பெற்றுள்ளது. கருவறைக் கோட்டத்தில் சரஸ்வதி, அமுதக்கலசம் ஏந்திய மகாலட்சுமி, அஷ்டபுஜ துர்க்கை ஆகியோர் உள்ளனர். 

#காயத்ரி தேவி:

காயத்திரி என்பவர் சாவித்ரி மற்றும் வேதமாதா (வேதங்களின் தாய்) என்றும் அழைக்கப்படுகிறார். காயத்ரி பெரும்பாலும் வேதங்களில் சூரிய தெய்வமான சவித்ருவுடன் தொடர்புடையவர்.
சைவ மத நூல்கள் சிவனின் உயர்ந்த வடிவமான ஐந்து தலைகள் மற்றும் பத்து கைகள் உள்ள சிவனின் ஒரு அம்சமான சதாசிவத்தின் மனைவியாக காயத்ரியை அடையாளம் காண்கின்றன. மற்றும் ஸ்கந்த புராணத்தின் படி, காயத்ரி என்பது பிரம்மாவின் மனைவியின் பெயர்.

#சைவ காயத்ரி:
சைவ சித்தாந்தத்த கண்ணோட்டத்தின் படி காயத்ரி யாவருக்கும் மேலான பரமேஸ்வரனான சதாசிவனின் மனைவியாவார். சிவசூர்யா என்ற சூரிய வடிவத்தில் வெளிப்படும் நித்திய ஆனந்தமான முழுமையான பரமசிவனின் மனைவியாக காயத்ரியை சைவ மதம் பார்க்கிறது.அவர் சர்வ வல்லமையுள்ள சதாசிவ மூர்த்தி, அவரின் ஒரு பெயர் பார்கா. சதாசிவனின் துணைவியார் மனோன்மணி, அவருக்குள் கணவர் பார்காவின் சக்தியைக் கொண்டவர்; இவரும் காயத்ரி மந்திரமும் வேறு வேறு இல்லை.
ஐந்து தலைகள்,பத்து கரங்களைக் கொண்ட காயத்ரியின் பிரபலமான வடிவம் ஆரம்பத்தில் வட இந்தியாவில் மனோன்மனியின் சைவ உருவப்படமாக பொ.ஊ. 10 ஆம் நூற்றாண்டிலிருந்து காணப்பட்டது. காயத்ரியைப் பற்றிய சைவ கண்ணோட்டமானது காயத்ரி வழிபாடு, வேத நடைமுறைகளில் சைவத்துடனான சேர்ப்பு, ஆகியவை பிற்கால வளர்ச்சியாக அறியப்படுகிறது.பிற்கால புராணங்கள் காயத்ரியின் அச்சமூட்டக்கூடிய தோற்றமும் விருத்திராசூரன் என்ற அரக்கனை கொன்ற செயலும் ஆதி பராசக்தியுடன் அவளை ஒரு சேர வைத்து அடையாளப்படுத்துகின்றன்.

#புராணக் காயத்ரி:

சில புராணங்களில், காயத்ரி என்பது பிரம்மாவின் மனைவி சரஸ்வதியின் மற்ற பெயர்களுள் ஒன்று என்று கூறப்படுகிறது. மத்சய புராணத்தின் படி, பிரம்மாவின் இடது பாதி ஒரு பெண்ணாக வெளிப்பட்டது, அவர் சரஸ்வதி, சாவித்ரி மற்றும் காயத்ரி என்ற பெயர்களில் கொண்டாடப்படுகிறார். கூர்ம புராணத்தில், கௌதமரிஷி காயத்ரி தேவியால் ஆசீர்வதிக்கப்பட்டதால் அவரது வாழ்க்கையில் அவர் எதிர்கொண்ட தடைகளை அகற்ற முடிந்தது. காயத்ரி பிரம்மாவின் மனைவி என்று ஸ்கந்த புராணம் கூறுகிறது, அவரை சரஸ்வதியின் ஒரு வடிவமாக்குகிறது.

காயத்ரி சரவதியிலிருந்து வேறுபட்டவர், பிரம்மாவை மணந்தார் என்று சில புராண வசனங்கள் கூறுகின்றன. அவர்களைப் பொறுத்தவரை, பிரம்மாவின் முதல் மனைவி சாவித்ரி, காயத்ரி இரண்டாவது. காயத்ரியின் பிரம்மாவுடன் திருமணத்தை அறிந்த சாவித்ரி கோபமடைந்து, திருமணத்தில் கலந்துகொண்ட அனைத்து தேவர், தெய்வங்களையும் சபித்ததாக கதை தொடர்கிறது. இருப்பினும், பத்ம புராணம் அதே கதையை சிறிய மாற்றங்களுடன் விவரிக்கிறது. சாவித்திரியை பிரம்மா, விஷ்ணு மற்றும் லட்சுமி சமாதானப்படுத்திய பிறகு, காயத்ரியை தனது சகோதரியாக மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கிறாள்.

மேலும் காயத்ரிஒரு அரக்கனைக் கொல்லக் கூடிய ஒரு வலிமையான தெய்வமாக வளர்ந்தார். வராக புராணம், மகாபாரதத்தின் படி தேவி காயத்ரி விருத்திரனுக்கும் வேத்ராவதி நதிக்கும் பிறந்த மகனாகிய அரக்கன் விருத்திராசூரனை ஒரு நவமி நாளில் அழித்தொழிக்கிறார்.

பவுர்ணமிதோறும் இவ்வாலயத்தில் சிறப்பு ஹோமமும், திருவிளக்கு வழிபாடும் நடத்தப்படுகிறது. இதில் கலந்து கொண்டு மந்திரங்களை ஜபித்து வழிபாடுகளை மேற்கொண்டால் கல்வி கேள்விகளில் ஞானம் கைவரப்பெறும், வேலையின்மை, தொழில்முடக்கம் ஆகியவை நீங்கும். தோஷங்கள் மற்றும் வினைகள் அகலும், அனைத்து செல்வங்களும் பெற்று பரிபூரண வாழ்வும் கிட்டும் என்பது நம்பிக்கை. ஆலயம் காலை 9 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும். இந்தக் கோவிலில் ஆவணி பவுர்ணமியை முன்னிட்டு மூன்றுநாள் திருவிழா நடைபெற உள்ளது. காயத்ரிதேவியின் திருக்கோவில் சிதம்பரம் நகரில் வடக்கு தேர் வீதியும், மேற்கு தேர் வீதியும் இணையுமிடத்தில் மேற்கு நோக்கி பிரியும் காயத்ரி அம்மன் கோவில் தெரு வழியாக அரைகிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. 

இக்கோயிலில் காயத்ரி அம்மன் சன்னதியும், விநாயகர், நவகிரகங்கள் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. 
ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்.... 

No comments:

Post a Comment

Followers

சங்கர நாராயணன் மேலராஜவீதி தஞ்சாவூர்..

அருள்மிகு சங்கர நாராயண சுவாமி திருக்கோயில் மேலராஜவீதி தஞ்சாவூர் மாவட்டம் இறைவன் :- சங்கர நாராயணர் இறைவி :- பாலாம்பிகா தாயார்   த...