Saturday, August 17, 2024

சதுரகிரி மகாலிங்கம் சாய்ந்த நிலையிலும், தலையில் அடிபட்ட தழும்பையும் காணலாம்..





சில இடங்களின் பெயர்களை சொல்லும்போதே அங்கு செல்ல வேண்டும் என்ற எண்ணம் நம் மனதுள் எழும். அத்தகைய இடங்களில் ஒன்று தான் சதுர கிரி மலை. 
சதுரம் என்றால் நான்கு புறங்களும் சமமானது என்று பொருள். கிரி என்றால் மலை என்று பொருள். 

நான்கு திசைகளிலும் மலைகள் சதுரமாக அமைந்துள்ளபடியால் இந்தப் பெயர் பெற்றுள்ளது. 

ஒவ்வொரு திசையிலும் நான்கு மலைகள் வீதம் நான்கு திசைகளில் பதினாறு மலைகள் அமைந்துள்ளன. 

மலையின் பரப்பளவு சுமார் 64 ஆயிரம் ஏக்கர் ஆக்கும். பெரிய மலைகளும் சிறிய மலைகளும் இங்கு காணப்படுகின்றன. இவைகளைக் கடந்து நாம் மேலே செல்ல வேண்டும்.

சதுரகிரி மாலையில் ஓடுகின்ற தீர்த்தங்களும் மூலிகைகளும் பல நோய்களை தீர்க்க வல்லது. 

இந்த மலை ஏறி இறங்கினால் அந்த மூலிகைகளின் காற்றை நாம் சுவாசிப்பதன் மூலம் பல நோய்கள் குணமடைவதாகக் கூறுகிறார்கள்.

சதுரகிரி மலை ஏறுவது கடினமானது. மலையே சிவமாக இருப்பதால் பக்தர்கள் காலில் செருப்பு இல்லாமல் ஏறுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

தல புராணம்

பிருங்கி முனிவர் சிவனை மட்டும் வழிபடும் தீவிரபக்தர். இறைவி இதனால் தவம் செய்து அர்த்தநாரீ வடிவம் பெற்ற போதும் பிருங்க்கி முனிவர் இறைவியையும் சேர்த்து வழிபட விரும்பாது, வண்டு வடிவத்திலே இறைவன் பகுதியைத் துளைத்துத் தனிப்படுத்தி வழிபட்டாராம். இதனால் கோபமடைந்த இறைவி அவரை வலுவிழந்து போகும்படி சாபமிட்டனர். சாபத்தினால் வலுவிழந்து கொண்டு வந்த போதும் பிருங்கி முனிவர் தன்னிலையில் இருந்து மாறவில்லை. நடக்க முடியாத கட்டத்தினை அடைந்தார். சிவன் தன் பக்தனின் நிலை கண்டு இரங்கி அவருக்கு மூன்றாவது காலை அருளினார்.

தனது இந்த நிலையை மாற்ற எண்ணிய பார்வதி தேவி சிந்தனை செய்தார். சிவனின் சரி பாதியாக தன்னை இணைத்துக் கொண்டால் மட்டுமே தனது விருப்பங்கள் நிறைவேறும் என எண்ணினார். எனவே தவம் செய்வதற்காக அவர் சதுரகிரி வந்து அதன் மலையுச்சியை அடைந்து அங்கு கல்லால மரத்தி‎ன் அடியில் அமர்ந்து சிவனைக் குறித்து தியானம் செய்யலானார். இந்த மரம் சட்டநாத முனிவரின் குகைக்கருகில் இருக்கிறது.

தெய்வத்தி‎ன் வருகையறிந்த சட்டநாதர் அவரை வரவேற்று, உபசரித்தார். வந்த காரணத்தையும் வினவினார். பார்வதி தேவி‎யின் விளக்கத்தைக் கேட்டறிந்த சட்டநாதர், அவரது தவம் நிறைவேற அனைத்து உதவிகளையும் செய்தார். பார்வதி தேவி சந்தனத்தைக் குழைத்து அத‎ன் மூலம் லிங்கம் ஒ‎ன்றை பிரதிஷ்டை செய்தார். அந்த லிங்கத்தை அனுதினமும் தவறாது பூஜித்து வந்த தேவி, கடும் தவத்தை மேற்கொண்டார்.மனமுருகிய சிவ‎ன் தேவியி‎ன் தவத்தினை மெச்சி, த‎ன்னுடைய ரிஷப வாகனத்தில் காட்சி தந்து, தேவி வேண்டிய வரத்தினை அருளினார்.

சந்தன லிங்கத்தை தேவியே பூஜித்து வழிபட்டமையால் அதை தவத்தில் உயர்ந்த ரிஷிகளும், முனிவர்களும், சித்தர் பெருமக்களும் மட்டுமே பூஜிக்க வேண்டுமெ‎ன்று ஆணையிட்டார்.

இவ்வுலக வாழ்க்கையை விரும்பும் பக்தர்கள் த‎ன்னை இங்கே வந்து வழிபட்டால், இவ்வுலக வாழ்வி‎ன் இன்பத்தை அனுபவித்துக் கொண்டே அவர்கள் மோட்சகதியை அடையும் பக்குவத்திற்கு உட்படுத்தப்படுவார்கள் எனவும், இறுதியாக த‎ன்னுடன் இணைவார்கள் எ‎ன்றும் அறிவித்தார்.

அதன் பின் சிவபெருமான் சக்தியை தன்னுடன் இணைத்துக் கொண்டு அர்த்தநாரீஸ்வரராக அங்கிருந்து புறப்பட்டார்.

மற்றொரு தல வரலாறு:

சதுரகிரி மலை அடிவாரத்திலுள்ள கோட்டையூரில் பிறந்தவன் பச்சைமால். இவன் பசுக்களை மேய்த்து பிழைத்தான். இவனது பெற்றோர் தில்லைக்கோன்-திலகமதி. மனைவி சடைமங்கை. இவள் மாமனார் வீட்டில் பாலைக் கொடுத்து விட்டு வருவாள். ஒருமுறை, பால் கொண்டு சென்ற போது எதிரில் வந்த துறவி அவளிடம் குடிக்க பால் கேட்டார். சடைமங்கையும் கொடுக்கவே, தினமும் தனக்கு பால் தரும்படி கேட்டார். சடைமங்கையும் ஒப்புக்கொண்டாள்.

வழக்கத்தை விட சற்று பால் குறைவதைக் கவனித்த சடைமங்கையின் மாமனார், இதுபற்றி மகன் பச்சைமாலுக்கு தெரிவித்து விட்டார். பச்சைமால் தனது மனைவியை பின் தொடர்ந்து சென்று, அவள் துறவிக்கு பால் தந்ததை அறிந்து கோபம் கொண்டு அடித்தான். தனக்கு பால் கொடுத்ததால் அடி வாங்கிய சடைமங்கை மேல் இரக்கம் கொண்ட அவர், அவளுக்கு "சடதாரி' என்று பெயரிட்டு காக்கும் தேவியாக சிலையாக்கி விட்டு மறைந்தார். மனைவியை பிரிந்த பச்சைமால், மனம் திருந்தி, சதுரகிரிக்கு வந்த அடியவர்களுக்கு பால் கொடுத்து உதவி செய்தான்.

சுந்தரானந்த சித்தர் என்பவர் செய்த பூஜைக்கும் பால் கொடுத்து உதவினான். சித்தர்கள் செய்த பூஜையில் மகிழ்ந்த சிவன் இத்தலத்தில் அவர்களுக்கு காட்சி கொடுத்தார். பச்சைமாலுக்கும் சிவதரிசனம் கிடைத்தது. ஒருநாள், சிவன் ஒரு துறவியின் வேடத்தில், சிவபூஜைக்கு பால் கொடுக்கும் காராம்பசுவின் மடுவில் வாய்வைத்து பால் குடித்து கொண்டிருந்தார். இதைக்கண்ட பச்சைமாலுக்கு கடும் கோபம் ஏற்பட்டு, துறவியின் தலையில் கம்பால் அடித்தான். அப்போது, சிவன் புலித்தோல் அணிந்து காட்சி கொடுத்தார். சிவனை அடித்துவிட்டதை அறிந்த பச்சைமால் மிகவும் வருந்தி அழுதான்.

சிவபெருமான் அவனை தேற்றி, " நீ தேவலோகத்தை சேர்ந்தவன். உன் பெயர் யாழ்வல்லதேவன். நீ யாழ் மீட்டி என்னை பாடி மகிழ்விப்பாய். சிற்றின்ப ஆசை காரணமாக என்னால் சபிக்கப்பட்டு பூலோகத்தில் மனிதனாக பிறந்தாய். உன்னை மீட்டு செல்லவே வந்தேன்,'' என்று கூறி அவனுக்கு முக்தி அளித்தார். அத்துடன் அங்கிருந்த சித்தர்களின் வேண்டுகோளின்படி "மகாலிங்கம்' என்ற திருநாமத்துடன் அங்கேயே எழுந்தருளினார். இது லிங்கங்களிலேயே பெருமை வாய்ந்தது என சதுரகிரி புராணம் கூறுகிறது. இன்றும் கூட மகாலிங்கம் சாய்ந்த நிலையில் இருப்பதையும், தலையில் அடிபட்ட தழும்பையும் காணலாம்.. 
ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம்.. 

No comments:

Post a Comment

Followers

புல்லாங்குழல் இசையால் "நமசிவாய" என்னும் மந்திரத்தை இசைத்த ஆனாய நாயனார்...

தனது புல்லாங்குழல் இசையால் "நமசிவாய" என்னும் திருவைந்தெழுத்து (பஞ்சாட்சர மந்திரம்) மந்திரத்தை இசைத்து, சிவபெருமானால் ...