Monday, December 11, 2023

நரசிம்மர் அல்லது நரசிங்கர் திருமாலுடைய பத்து அவதாரங்களுள் ஒன்றாகும்.

#நரசிம்மர் யார்?
#வைரவர் யார்?
#நரசிங்கவைரவர் யார்? 


கிழக்கிலங்கையிலும் இன்னும்பல இடங்களிலும்  கிராமிய வழிபாட்டிலும் சரி ஆகம வழிபாட்டிலும் சரி நரசிங்கவைரவர் வழிபாடு சிறப்பாக நடைபெறுகிறது. 

ஆனால் சிவ மூர்த்த பேதங்களுக்கும் ஏனையவற்றுக்கும் வித்தியாசம் தெரியாமல் மக்களும் அவர்களை வழிநடத்துபவர்களும் இருப்பது குறித்த கவலையே இந்த பதிவு. 

இது யார்மனதையும் புண்படுத்தவோ அல்லது குறை சொல்வதாகவோ அல்லாமல் சைவசமய தத்துவங்களை புரிந்து வழிபடவேண்டும் என்ற அடியேனின் எண்ணமேயாகும். 

🔴நரசிம்மர் அல்லது நரசிங்கர் திருமாலுடைய பத்து அவதாரங்களுள் ஒன்றாகும். பிரகலாதனை காக்க இரணியனை அழிக்க திருமால் எடுத்த அவதாரமே அது.
எனவே நரசிம்மரை வழிபடுபவர்கள் பலர் இருக்கிறார்கள். 

🔴அடுத்ததாக வைரவர்.
வைரவ மூர்த்தம் சிவமூர்த்தமாகும் 
பரம்பொருளாகிய சிவபெருமானது அறுபத்துநான்கு மூர்த்தங்களுள் வைரவமூர்த்தம் முக்கியமானதாகும். சிவமூர்த்தங்கள் அவதாரம் என்று கருதப்படலாகாது. அவதாரக்கோட்பாடுகள் சைவசமயத்தில் கிடையாது. சிவபெருமான் பிறப்பிலி ஆதி அந்தம் இல்லாதவர் எனவே அவதாரம் என்று பிறவிக்கடலிலே பிறந்து உழல்கின்றவர்களை குறிப்பது போன்று சிவத்தை குறிப்பிடலாகாது. 

வைரவ வழிபாடு ஆண்டாண்டு காலமாக இலங்கை முழுவதும் வளவு வளவாக, தெருத்தெருவாக சிறுசிறு கோயில்களாக அமைத்து முச்சூலங்களை வைத்து காவல்தெய்வமாக வழிபட்டு வந்தனர். 

🔴அடுத்தது மிக முக்கியமானதொன்று... 

இந்த இரண்டு தெய்வங்களையும் சேர்த்தாற்போன்று நரசிங்க வைரவர் யார்?? 

இதில் தான் பலருக்கும் பெருங்குழப்பம். 

காரணம் கிழக்கிலங்கையிலும் வடபகுதியிலும் முச்சூலங்களை வைத்தே இத்தெய்வங்களை வழிபட்டமையேயாகும். 

எனவே முச்சூலத்திற்கும் திருமாலவதாரமாகிய நரசிம்மருக்கும் எந்த தொடர்புமில்லை.
எனவே அந்த வழிபாடு சிவ வழிபாட்டுடன் தொடர்புடையதே என்ற முடிவுக்கு வரலாம். 

சிங்கமுகமுடைய தோற்றத்தினால் நரசிம்மர் என்று மக்கள் அனுமானித்திருக்கலாம்.
ஆனால் சூலவழிபாடு சிவ வழிபாட்டையே சாரும் என்பதால் நரசிங்கவைரவராக வணங்குவது யாரை??

இரணியனை கொன்ற பின் நரசிம்மருக்குக் கோபம் தணியாமல் இருந்தது. அதைக் கண்டு நடுங்கிய தேவர்கள் தங்களைக் காக்கும்படி சிவனிடம் வேண்டிக் கொண்டார்கள். அவர்களை காக்க சிவன் எடுத்த மூர்த்தமே சரேபேஸ்வர வடிவமாகும்.
நரசிம்மரையே வதம்செய்தமையால் நரசிம்மசம்ஹாரர் என்று போற்றப்படுகின்றார். 

இவரை சிம்மக்ன மூர்த்தி,சிம்ஹாரி,நரசிம்ம சம்ஹாரர்
,சரபேஸ்வரர்,சரபர் என்றும் நடுக்கந்தீர்த்பெருமான் என்றும் போற்றுகின்றனர். 

சிவபெருமானின் நடராஜர்,ஆலமர்செல்வர்(தெட்சணாமூர்த்தி) மூர்த்தங்களைப்போன்றே சரபரும் முழுச்சிவதத்துவ அம்சமாகும். 

சரபவழிபாடு கிழக்கிலங்கையில் பரவலாக கிராமிய வழிபாட்டில் மேற்கொள்ளப்பட்டு வந்தது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆலயங்களில்  சிவ பூசைக்கு வருடம் ஒருமுறை சரபர் தெய்வமுற்று ஆடுபவரில் மக்கள் நோய் அகற்றுவதாக நம்புகின்றனர். 

எனவே முச்சூலத்தில் வழிபடுகின்ற நரசிங்க வைரவர் சரபரே என்ற முடிவுக்கு வரலாம். 

இப்பொழுதும் கிழக்கிலங்கையில்  வழிபடுகின்ற முச்சூல நரசிங்கவைரவ வழிபாடு சரபரையே குறிக்கும். நரசிம்மரை அல்ல.
எனவே நரன் என்று சொல்லப்படுகின்ற மனித உடம்பும் சிங்க தலையும் கொண்டவராக சரபரை கொள்ளலாகாது. அது திருமாலின் நரசிம்ம அவதாரத்தையே குறிக்கும். 

இந்த குழப்பம் நாம் கிழக்கிலங்கையில் ஒரு திருக்குடமுழுக்கில் கலந்துகொள்வதற்கு சென்றபோது நிகழ்ந்தது. அங்கும் நாம் இதை தெளிவுபடுத்தியிருந்தோம். 

சரபருக்கு இரணியனை ஒழித்தவனே பக்தபிரகலாதனை காத்தவனே என்றெல்லாம் போற்றிகள் நடக்கின்றன. 

சரபர் நரசிம்மரை வதம்செய்தவரே என்று போற்றப்படவேண்டியவர். 

யாழ்ப்பாணத்திலும் கவுணாவத்தை போன்ற தலங்களில் சரபரே நரசிங்கவைரவராக காட்சியளிக்கிறார். 

எனவே மக்களும் வழிநடத்துகின் சிவாச்சாரியார்களும் இந்த தெளிவுடன் சரபரை நரசிம்மவைரவராக வணங்குங்கள் தாயினும் நல்ல தலைவனாகிய சிவபெருமான் அனைவருக்கும் அருள்வாராக... 

"ஆகம் கனகனைக் கீறிய கோளரிக்கு அஞ்சி விண்ணோர்
பாகம் கனங்குழையாய் அருளாய் எனத் தில்லைப்பிரான்
வேகம் தரும் சிம்புள் விட்டு அரி வெங்கதம் செற்றிலனேல்
மோகம் கலந்தன்று உலந்ததன்றோ இந்த மூவுலகே"

"அடுக்கிய சீலைய ராய்அகல் ஏந்தித் தசைஎலும்பில் 
ஒடுக்கிய மேனியோ டூண்இரப் பார்ஒள் இரணியனை 
நடுக்கிய மாநர சிங்கனைச் சிம்புள தாய்நரல 
இடுக்கிய பாதன்தன் தில்லை தொழாவிட்ட ஏழையரே" 

- கோயில் திருப்பண்ணியர் விருத்தம் 

"சிம்மாந்து சிம்புளித்து" 
- சுந்தரர் 

"மடங்கலாய்க் கனகன் மார்புகீண் டானுக்கு
அருள்புரி வள்ளலே!" 
- திருவிசைப்பா

ஓம் நமசிவாய 

படித்து பகிர்ந்தது 
இரா .இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

No comments:

Post a Comment

Followers

இருதய கமலநாதேஸ்வரர் கோவில் திருவலிவலம் ....

இருதய கமலநாதேஸ்வரர் கோவில் திருவலிவலம் ! வலியன் என்ற கரிக்குருவி இத்தலத்தை வலம் வந்து பூஜை செய்ததால் திருவலிவலம் என்ற பெயர் ஏற்ப...