*பஞ்ச சபைகளைப் போல் அமைந்த 'பளிங்கு சபை'*
நடராஜருக்கு அமைந்த மற்றுமொரு சிறப்பு மிகுந்த கோவில்தான், நெய்வேலியில் உள்ள 'அழகிய திருச்சிற்றம்பலமுடையான்' என்னும் நடராஜர் கோவில். இங்கும் நடராஜருக்கு ஆண்டு தோறும் 6 மகா அபிஷேகங்கள் நடத்தப்படுகின்றன. நாம் இன்று படிக்கும் 'திருவாசகம்' என்னும் நூலானது, மாணிக்கவாசகர் சொல்லச் சொல்ல, சிதம்பரம் கோவிலில் வைத்து சிவபெருமானே தன் கரங்களால் எழுதியது. அந்த நூலின் இறுதியில் 'திருச்சிற்றம்பலமுடையான்' என்று இறைவன் கையெழுத்திட்டு இருப்பதே இதற்குச் சான்று. அந்தப் பெயரை நினைவுகூரும் வகையில்தான், நெய்வேலியில் உள்ள ஆலயத்திற்கு 'அழகிய திருச்சிற்றம்பலமுடையான் தியானசபை' என்று பெயர் வந்ததாக சொல்லப்படுகிறது. நடராஜர் இடதுகாலை தூக்கி ஆட, அருகே அவரது நடனத்திற்கேற்ப கையில் தாளத்துடன் சிவகாமி அம்பாள் `ஓசை கொடுத்த நாயகி' என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.
இந்த ஆலயத்தில்தான் உலகிலேயே மிக உயரமான ஐம்பொன்னால் ஆன நடராஜர் சிலை உள்ளது. இந்த சிலை 10 அடி 1 அங்குல உயரமும், 8 அடி 4 அங்குல அகலமும், 2 ஆயிரத்து 420 கிலோ எடையும் கொண்டது. நடராஜர் அருகே வீற்றிருக்கும் சிவகாமி அம்பாள் சிலை, 7 அடி உயரமும், சுமார் 750 கிலோ எடையும் கொண்டது. எல்லா கோவில்களிலும் நடராஜரின் பாதத்தில் மாணிக்கவாசகர் இருப்பார். ஆனால், இந்தக் கோவிலில் நடராஜர் பாதத்தில் திருமூலர் இருக்கிறார். மேலும், வலப்புறம் வியாக்ரபாதரும், இடப்புறம் பதஞ்சலி முனிவரும் உள்ளனர். இந்த இரு முனிவர்களின் பெருந்தவத்திற்கு இறங்கிதான் நடராஜர், தனது ஆனந்த நடனத்தை காட்டி அருளினார்.
நெய்வேலியில் உள்ள நிலக்கரி சுரங்கம் மற்றும் அனல்மின் நிலையங்களில் பணியாற்றிய பக்தர்கள் சிலர், 1980-ம் ஆண்டு சைவத்தை வளர்க்கும் நோக்கத்துடன் பன்னிரு திருமுறை வளர்ச்சிக் கழகம் என்ற அமைப்பை உருவாக்கினார்கள். இதன் தலைவராக அப்போதைய நகர தந்தை ராமலிங்கம் பிள்ளை பொறுப்பேற்றுக்கொண்டார். இக்கழகத்தினர் சிறு அளவிலான வழிபாடுகள், திருமுறை இசை நிகழ்ச்சிகள், திருமுறை பயிற்சிகள், முற்றோதல்கள், தல யாத்திரைகள், உழவாரப்பணிகள் என்று தெய்வீக பணிகளில் ஈடுபட்டு வந்தனர். பல ஊர்களில் உள்ள கோவில்களுக்குச் சென்று வழிபட்டு வந்த பன்னிரு திருமுறை வளர்ச்சிக் கழகத்தினர், தங்கள் ஊரிலும் சிவன் கோவில் ஒன்றை கட்ட முடிவு செய்தனர். பளிங்கு கோவில் ஒன்றை கட்டி, அதில் நடராஜரின் திருமேனியை நிறுவ எண்ணினர். 1986-ம் ஆண்டு சித்திரை மாதம் வளர்பிறையில் மயிலை குருஜி சுந்தரராம் சுவாமிகளால் இக்கோவிலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. பலரின் கடுமையான உழைப்பால் ஒரே ஆண்டில் இந்த ஆலயம் கட்டி முடிக்கப்பட்டது. இக் கோவில் கட்டப்பட்ட பின் இப்பகுதி சிவ புரம் என்று அழைக்கப்படுகிறது. சிவபெருமானின் படைத்தல், காத்தல், அழித்தல் என முத்தொழில் புரியும் வடிவமான திரிமூர்த்தி வடிவம், கோவிலின் முகப்பு பகுதியில் உள்ளது.
நெய்வேலி பன்னிரு திருமுறை வளர்ச்சி கழகத்தின் வேண்டுகோளை ஏற்று, குடந்தை அருணஜடேஸ்வர ஸ்தபதி உலகிலேயே மிகப்பெரிய அழகிய திருச்சிற்றம்பல முடையானை வடிவமைக்க ஒப்புக்கொண்டார். 8-9-1986 அன்று குடந்தையை அடுத்த மேலக்கொற்கை என்ற ஊரில் போகர் கூறியபடி பலவகையான மூலிகைகளை கொண்டு, ஓதுவாமூர்த்திகளின் தெய்வத்தமிழ் தேவார பாடல்களுடனும், தில்லைவாழ் அந்தணர்களின் வேத கோஷத்துடனும், மயிலை குருஜி சுந்தரராம் சுவாமிகள் மேற்பார்வையில் திருச்சிற்றம்பலமுடையாரின் ஐம்பொன் செப்புத் திருமேனி வார்க்கப்பட்டது. அதுவே, அழகிய திருச்சிற்றம்பலமுடையான் ஆலயத்தில் உள்ள தற்போதைய நடராஜர் சிலையாகும். நடராஜப் பெருமானுக்கு 'பஞ்ச சபைகள்' என்ற ஐந்து சபைகள் உண்டு. அவை ரத்தின சபை, வெள்ளி சபை, சித்திர சபை, தாமிர சபை, பொற்சபை ஆகியனவாகும். அந்த வகையில் இந்த திருச்சிற்றம்பலமுடையான் கோவிலில் உள்ள நடராஜர் சன்னிதி 'பளிங்கு சபை' என்று அழைக்கப்படுகிறது.
கோவில் அமைப்பு
இந்தக்கோவிலுக்குள் நுழைந்தவுடன் நந்தி பகவான் கம்பீரத்துடன் வீற்றிருக்கிறார். அவரை தரிசித்து விட்டு உள்ளே சென்றதும், தியான மண்டபம் என்னும் பளிங்கு சபையில் நடராஜர், சிவகாமி அம்பாளுடன் காட்சி தருகிறார். அவர்களை தரிசனம் செய்துவிட்டு, வெளியே வந்தவுடன் கோவில் சுற்றுச்சுவரில் திருவாவடுதுறை ஆதீனம் வெளியிட்ட 'விதியை வெல்வது எப்படி?' என்ற புத்தகத்தில் உள்ள அனைத்து தேவாரப் பாடல்களும், பன்னிரு திருமுறை வளர்ச்சிக் கழகத்தினரால் கல்வெட்டுகளில் பதிக்கப்பட்டிருக்கின்றன.
_பகிர்வுசிஎஸ்வி_
பளிங்கு சபையின் மேற்கு புறத்தில் செம்பொற்ஜோதி நாதர் காட்சி தருகிறார். இந்த சிவலிங்கத்தின் பாணமானது நர்மதை ஆற்றில் இருந்து கொண்டு வரப்பட்டது. இந்த சிவலிங்கத்தின் மேற்பகுதியில் இயற்கையாக விபூதி ரேகைகள் அமைந்திருப்பது பக்தர்களை பரவசப்படுத்துகிறது. மேலும் இக்கோவிலில், விநாயகர், தட்சிணாமூர்த்தி, துர்க்கை, அண்ணாமலையார், அறம் வளர்த்தநாயகி, சனீஸ்வரர், சூரியன், சந்திரன், வள்ளி தெய்வானை முருகன், கால பைரவர் உள்ளிட்ட சாமிகள் தனித்தனி சன்னிதியில் அருள்பாலிக்கின்றனர்.
இந்தக் கோவிலில் உள்ள நவக்கிரக மண்டபம் சற்று வித்தியாசமாக அமைக்கப்பட்டுள்ளது. அதாவது ஒரே கல்லில் நவக்கிரக சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. தாமரை பீடத்தில், பெரிய வட்ட வடிவிலான தேரில் சூரிய பகவான் நடுநாயகமாக வீற்றிருக்கிறார். இந்த தேரை, பாகன் ஓட்ட, 7 குதிரைகள் இழுத்த நிலையில் உள்ளது. தேரை சுற்றி அஷ்டதிக்கு பாலகர்கள் உள்ளனர். மற்ற கிரகங்கள் எட்டு திசையை நோக்கி, தவக்கோலத்தில் உள்ளனர். இவ்வாலயத்தில் 'திருத்தொண்டர் திருக்கோவில்' என்ற பெயரில் 63 நாயன்மார்களுக்கு என்று தனிச் சன்னிதி அமைந்துள்ளது.
ஆண்டுதோறும் சித்திரை மாதம் 1-ந் தேதி அறுபத்து மூவர் விழா சிறப்பாக நடைபெறும். அன்றைய தினத்தில் சுவாமியும், அம்பாளும் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளி வீதிஉலா செல்வர். இவர்களுடன் 63 நாயன்மார்களும் வீதிஉலா வருவது கண்கொள்ளாக்காட்சியாகும். இது தவிர பிரதோஷம், ஆனி திருமஞ்சனம், மார்கழி ஆருத்ரா தரிசனம், ஐப்பசி மாத அன்னாபிஷேகம், கார்த்திகை மாத சோமவார வழிபாடு-சங்கு அபிஷேகம், மாசி மாத சிவராத்திரி வழிபாடு போன்றவை சிறப்பாக நடைபெறுகிறது. இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையும், பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.
அமைவிடம்
கடலூரில் இருந்து 43 கிலோமீட்டர் தொலைவிலும், விருத்தாசலத்தில் இருந்து 29 கிலோ மீட்டர் தொலைவிலும், சிதம்பரத்தில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவிலும், நெய்வேலி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 500 மீட்டர் தொலைவிலும் இக்கோவில் அமைந்துள்ளது.
ஆராய்ச்சி மணி
கோவில் நுழைவு வாசலின் வலது புறத்தில் ஆராய்ச்சி மணி என்ற பெயரில் ஆலய மணிமண்டபம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. அதன் அருகே மனுநீதி முறைப் பெட்டி ஒன்றும் வைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் தங்களின் குறைகளையும், நியாயமான விருப்பங்களையும் ஒரு தாளில் நடராஜருக்கு கடிதமாக எழுதி, மனுநீதி முறைப் பெட்டியில் போட வேண்டும். பின்னர் ஆராய்ச்சி மணியை 3 முறை ஒலிக்க செய்து விட்டு கோவிலை வலம் வந்து வீட்டிற்குச் செல்கின்றனர். பின்னர் அந்த கோரிக்கை கடிதங்கள், காலை நேர பூஜையில் தீட்சிதர்களால் நடராஜர் முன்பு ரகசியமாக படிக்கப்பட்டு பின்னர் எரியூட்டப்படும். அதைக் கேட்டு பக்தர்களின் குறைகளை இறைவன் நீக்குவதாக நம்பிக்கை நிலவுகிறது. இவ்வாறு குறை நீங்கியவர்கள், இறைவனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், நன்றிக் கடிதத்தையும் எழுதி அந்த மனுநீதி முறைப் பெட்டியில் போடுவதையும் வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.🌹
ஓம் நமசிவாய
படித்து பகிர்ந்தது
இரா இளங்கோவன்
நெல்லிக்குப்பம்.
No comments:
Post a Comment