Tuesday, October 17, 2023

வைகை நதிக்கரைாதுகாக்கும் மேலமடை பாண்டிமுனி... பயம் போக்கும் சமயன் கருப்பன்!

வைகை நதிக்கரை ஆலயங்கள் . பாதுகாக்கும் மேலமடை பாண்டிமுனி... பயம் போக்கும் சமயன் கருப்பன்!
வைகை நதிக்கரை
மதுரை சைவமும் வைணவமும் செழித்து விளங்கும் பூமி. மீனாட்சியும் அழகரும் இந்த மண்ணின் மக்களின் வாழ்வோடு பின்னிப் பிணைந்தவர்கள். அதே நேரம் தம் மரபில் நிலைத்து நிற்கும் குல தெய்வ வழிபாடுகளையும் விட்டு விடாதவர்கள். 

கருப்பசாமியும் முனீஸ்வரரும் இவர்களின் குடும்பத்தில் ஒருவர். எப்படித் தங்களின் குல மூதாதையை தினமும் வணங்குவார்களோ அதேபோன்று தங்களின் குலதெய்வத்தையும் வணங்கு பவர்கள். இக்கட்டான தருணங்களில் இவர்கள் தங்களின் குலதெய்வங்களையே சரணடைகிறார்கள். 

அதே போன்று அவையும் குழந்தையைக் காக்கும் தாய் போலக் கூடவேயிருந்து காக்கிறார்கள். அப்படியான உறுத்தான தெய்வங்களில் ஒன்று பாண்டி முனி. இன்று பாண்டி கோயில் என்று அனைவராலும் அழைக்கப்படும் பாண்டி ஜடாமுனீஸ்வரர் கோயில் மதுரை மேலமடை

"பாண்டி... நீ என்ன செய்வியோ தெரியாது. என்னோட கோரிக்கைய நீ சீக்கிரமே நிறைவேத்தித் தரணும்' என சாமிக்கே கட்டளையிடுவது போலத்தான் வரம் கேட்கிறார்கள் பக்தர்கள். கடவுளைத் தாயாய்- தந்தையாய்- தாயுமானவனாய்- தந்தையுமானவனாய்
பார்த்தார் பாரதியார். காதலனாய் பார்த்தார்கள் ஆண்டாளும் மீராவும். கடவுளைக் காதலியாகவே பார்த்தார் குணங்குடி சித்தர். 

"அண்ணன் 15 நாளா கனவுல வந்து, "வாடா... வந்து என்னய பாத்துட்டுப் போ'ன்னு சொல்லிச்சு. அதான் வந்தேன்'' என பாண்டி முனீஸ்வரனை அண்ணனாகப் பார்க்கிறார்கள்
பாண்டியின் பக்தர்கள். 

பொங்கலோ, ஆடு வெட்டுவதோ, சுருட்டு வாங்கி வைப்பதோ, பாலாபிஷேகம் செய்வதோ... எப்படி வேண்டுமானாலும் படைத்து பாண்டியை வணங்கலாம். "கடவுளின் அருளைப் பெற சடங்குகள் ஒரு தடையாக இருந்து விடக்கூடாது. விரும்பிய வழியில் கடவுளின் அன்பைப் பெறலாம்' என்கிற உயர்ந்த தத்துவத்திற்கு உதாரணமாக இருக்கிறது பாண்டி கோவிலின் பக்தி மார்க்கம்.

பாண்டியைப் பற்றி மதுரை மாவட்ட மக்களிடையே பல செவிவழிக் கதைகள் உண்டு. அதில் சிறுவர்களை மிரள வைக்கும் பிரசித்தி பெற்ற கதை ஒன்று உண்டு.

'வீட்டுக்கே அடங்காத பிள்ளையாய் வளர்ந்த பாண்டி, நாளாவட்டத்தில் யாருக்கும் அடங்காத- அடக்கவும் முடியாத மனிதரானார். ஆனால் அநீதியைக் கண்டால் ஆக்ரோஷத்தோடு பாய்வார். இப்படி வாழ்ந்த பாண்டி இறந்தபின் ஒரு குடும்பத்தின் குலதெய்வமாகி, இன்று தென்மாவட்ட மக்களின் இஷ்ட தெய்வமாகி இருக்கிறார். 

இப்போதும் கூட பாண்டி சிலையை குழந்தை கள் பார்த்தால் பயந்து போகும். முழிகளை உருட்டி, முறுக்கிய மீசையோடு சினந்து காணப்படும் பாண்டி முனி... எப்போது வேண்டுமானாலும் ஆக்ரோஷத்தோடு கிளம்பி விடும் என்பதால், சிலையை இரும்புச் சங்கிலியால் கட்டிப் போட்டிருக்கிறார்கள்' எனச் சொல்வார்கள். இது போல பல கதைகள் உண்டு.

இரு நூறு ஆண்டுகளுக்கு முன்பு பெரியசாமி - வள்ளியம்மாள் என்னும் தம்பதி காட்டு வழிப்பாதையில் மதுரையை நோக்கி நடந்து வந்தனர். பயணக்களைப்பு வள்ளியம்மாளுக்கு. உறக்கம் வந்தது. தற்போதைய மேலமடை, மாட்டுத்தாவணி அப்போது பெருங்காடு. அந்தப் பகுதியை அடைந்ததும் ஒரு மரத்தின் நிழலில்தான் ஓய்வெடுப்பதாகச் சொல்லி அங்கேயே அமர்ந்து உறங்கத் தொடங்கினாள்.

ஆழ்ந்து உறங்கும் அவளுக்கு ஒரு கனவு வந்தது. அதில் பத்மாசனம் போட்டு ஜடாமுனி தரித்த முனிவர் ஒருவர் தோன்றினார். அவரைக் கண்டதுமே வள்ளியம்மாளுக்கு உடல் சிலிர்த்தது. கை எடுத்து வணங்கினாள். காட்டு வழியில் தோன்று இவர் யாரோ... ஒருவேளை ஏதேனும் துஷ்ட சக்தியாக இருக்குமோ என்று பதறினாள். ஆனால் அவரோ தன் புன்னகையால் அவளைத் தேற்றினார். 

பின்பு,பெண்ணே, நான் பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன். கோவலனும் கண்ணகியும் மதுரைக்கு வந்த போது ஆட்சி செய்து கொண்டிருந்தவன். ஆராயாமல் கோவலனை தண்டனைக்கு ஆளாக்கியதும் நானே. 

அதனால் தான் அநீதி என்று தெரிந்த கணத்தில் பொறுக்காமல் அந்த நொடியிலேயே உயிரை விட்டேன். நான் மாண்டு சிவலோகம் போன போது சிவபெருமான், 'நீ பாவம் செய்தாய். ஆனால் அதை அறிந்து வருந்திய கணத்திலேயே உயிர் விட்டாய். எனவே நீ மீண்டும் பூமி சென்று பிறந்து வாழ்ந்து பின் சிவலோகம் வருவாயாக' என்று கூறினார். 

ஆனால் நானோ, 'பூமி சென்று மறுபடி பிறந்து வாழ விரும்பவில்லை. பூமிக்கு அடியிலேயே அந்த ஈசனை எண்ணித் தவம் செய்யலாம் என்று முடிவு செய்தேன். பூமிக்கடியில் என் தவம் இப்போது முடிவுக்கு வந்தது. எனவே என்னை மேலே எடுத்து வழிபட்டால் உன்னையும் உன் குடும்பத்தையும் என்னை நாடு வந்து வணங்கும் அனைவரையும் நான் பாதுகாப்பேன்" என்று கூறினார்.

அசரீரி போன்ற அந்தக் குரலைக் கேட்டதும் வள்ளியம்மாளின் உறக்கம் கலைந்தது. தான் கண்டது கனவு என்று அவள் உள்ளம் நம்ப மறுத்தது. நிச்சயமாக அந்த இடத்தில் அந்த சக்தி உறைந்திருப்பதை அவள் ஆன்மா உணர்ந்தது. தன் கணவனிடம் சொல்லி ஊர்காரர்களை அழைத்துவரச் சொன்னாள். அவர்களும் வந்து அந்த இடத்தைத் தோண்டிப் பார்த்தபோது ஜடாமுடி கொண்ட ஒரு வீரன் பத்மாசனத்தில் அமர்ந்திருப்பது போன்ற ஒரு சிலை கிடைத்தது. அங்கேயே அந்தச் சிலையைப் பிரதிஷ்டை செய்து வழிபட ஆரம்பித்தனர். இன்றும் வள்ளியம்மையின் உறவினர்களே பாண்டி முனி கோயில் பூசாரிகள்.

அன்றுமுதல் இன்றுவரை பல ஆயிரம் குடும்பங்கள் பாண்டிமுனியைத் தங்கள் குலதெய்வமாகக் கொண்டு வாழ்ந்துவருகின்றனர். பாண்டிமுனி அவர்கள் கூடவே யிருந்து காத்தருள்கிறார். பல பக்தர்களுக்கு அவர் காட்சியும் கொடுத்திருக்கிறார். கவலையோடு கோயிலுக்கு வரும் சில பக்தர்களிடம் பாண்டிமுனி வயதானவர் போலத் தோற்றம் கொண்டு வந்து பேசுவாராம். 

பக்தர்களின் கவலை தீருமாறு பேசி அவர்கள் செய்ய வேண்டியவற்றையும் சொல்வாராம். அதைக் கேட்டதும் பக்தர்களின் கவலை எல்லாம் மறந்துபோகும். பக்தர்கள் ஒரு சில நிமிடங்கள் தங்கள் கவனத்தை திசை திருப்பி மீண்டும் அந்த வயதானவர் இருந்த இடத்தில் தேடினால் அவர் மாயமாக மறைந்திருப்பாராம். 

இது ஒருவருக்கல்ல. அந்த ஆலயம் நாடி வந்த பலருக்கும் நடந்ததுண்டாம். பாண்டிமுனி இரவில் உலாவரும் போது சங்கிலிச் சத்தம் கேட்குமாம். அதனால் இன்றும் இரவில் அந்த வழியாகச் செல்பவர்கள் பய பக்தியோடே செல்கிறார்கள்.

பாண்டிமுனியின் இந்த ஆலயத்தில் விநாயகர், சமையன் கருப்பசாமி, ஆண்டிச்சாமி, சுப்பிரமணியர் ஆகியோருக்கும் சந்நிதி உள்ளது. இதில் சமையன் கருப்பசாமி அங்கு கோயில் கொண்ட நிகழ்வும் ஆச்சர்யமானது. 

வெள்ளையர்கள் ஆட்சிக்காலத்தில் அங்கு சமையன் கருப்பசாமியிடம் வந்து குறிகேட்கும் வழக்கம் இருந்தது. அப்போது ஒரு வெள்ளைக்கார அதிகாரி சமையன் கருப்பனிடம் வந்து 'நான் இன்று வேட்டைக்குப் போகிறேன். எனக்கு எத்தனை விலங்குகள் கிடைக்கும்?' என்று குறி கேட்டாராம். ஆனால் சமையன் கருப்பன் பதில் சொல்லாமல் இருக்கவே அந்த அதிகாரி கோபத்துடன் வேட்டைக்குச் சென்று விட்டாராம். அன்று அவருக்கு ஒரு விலங்குகூடக் கிடைக்கவில்லை. வெறும் கையோடு திரும்பி வந்த அந்த அதிகாரி கருப்பசாமியின் தலையையும் கைகளையும் வெட்டி வீழ்த்தினாராம்.

அந்த அதிகாரி காட்டின் எல்லையைத் தாண்டுவதற்குள்ளாக அவனும் அவன்குதிரையும் கல்லாக மாறிவிட்டனர். எல்லோரும் அது சமையன் கருப்பசாமியின் லீலைதான் என்று புரிந்து கொண்டனர். தலையும் கைகளும் இல்லாத கருப்பசாமிக்கு சந்நிதி எடுத்து வழிபட்டனர். 

சமையன் கருப்பன் துடியான சாமி. இந்த ஆலயத்தில் இவருக்குதான் பலி இடப்படுகிறது. பாண்டிமுனிக்கு பொங்கல் போன்ற சைவ உணவுகளே படையல் இடப்படுகின்றன. அதேபோன்று ஆண்டி சாமிக்கு வெண்பொங்கலும் மாம்பழங்களுமே பிடித்தமான நிவேதனம்.

பாண்டிமுனியை நாடிவந்த காரியம் கட்டாயம் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. துஷ்ட சக்திகளால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த ஆலயம் வந்தால்போதும். அனைத்தும் விலகி ஓடும். நன்மைகள் அதிகரிக்கும். குழந்தை இல்லாதவர்கள் பாண்டிமுனியை வணங்கித் தொட்டில் கட்டி வேண்டினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். தொழிலில் நஷ்டம், நோய், எதிரிகளால் பிரச்னை என எது இருந்தாலும் பாண்டிமுனியின் சந்நிதிக்கு வந்து வணங்கினால் விரைவில் நிவாரணம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

மதுரை மாநகரின் அடையாளங்களில் ஒன்றாக மாறியிருக்கும் பாண்டிக்கோயிலுக்கு வாய்ப்பு கிடைக்கும்
போது சென்று வாருங்கள். பாண்டிமுனியின் பாதுகாவல் எப்போதும் உங்களைக் காக்கும்.

No comments:

Post a Comment

Followers

நல்லாத்தூர் சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில் கடலூர்...

            செல்வங்களை வாரித்தரும் நல்லாத்தூர் சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில் கடலூர் மாவட்டம்                          தன்னை நாடி ...