Wednesday, October 18, 2023

நவராத்திரி தினங்களில் அம்மன் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அவதாரம் எடுக்கிறார்

ஒன்பது நாட்கள் ஒன்பது ரூபங்கள்
நவராத்திரி தினங்களில் அம்மன் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அவதாரம் எடுக்கிறார். அந்தந்த நாளுக்கு என்ன வழிபாடு என்பதை விளக்குகிறது கட்டுரை.
நம்மை பெற்றவளை நாம் அம்மா என அழைக்கிறோம். அப்பாவின் பார்வையில் அம்மாவானவள் மனைவி. தாத்தா பாட்டிக்கு அவளே மகள். சித்தி மாமாவிற்கு சகோதரி. இன்னும் மருமகளாக, அண்ணியாக எத்தனையோ உறவுகளின் பெயரால் அம்மா அழைக்கப்படுகிறாள். உறவுமுறை வெவ்வேறாக இருந்தாலும் நபர் ஒன்றுதான்.

கடவுள்கள் விஷயத்திலும் இந்த ஃபார்முலாவே பயன்படுத்தப் படுகிறது. தீமையை அழித்து நன்மையை கொடுக்கும் வகையில் சக்தி பல்வேறு ரூபங்களை எடுக்கிறாள்.

மகேஸ்வரி, கௌமாரி, வராகி, மகாலெட்சுமி, வைஷ்ணவி, இந்திராணி, சரஸ்வதி, நரசிம்ஹி, சாமுண்டி என பலவகை ரூபங்கள் எடுத்தாலும் அடிப்படை ஆதார சக்தி ஒன்றே.

இந்த தெய்வங்கள் அனைத்தையும் நம் வீட்டிற்கே வரவழைத்து போற்றி வணங்கி வழிபடும் விழாவே நவராத்திரி.

‘சரத் காலத்தில் செய்யும் பெறும் வழிபாடான நவராத்திரியில் என்னை துதித்து, என் மகாத்மியத்தை கேட்போரும் படிப்போரும் துன்பங்களிலிருந்து விடுபட்டு சகல நன்மைகளையும் பெறுவார்கள்’ என தேவி மஹாத்மியத்தில் நவராத்திரியின் சிறப்பு பற்றி அம்பிகையே கூறியிருக்கிறாள்.

ஒவ்வொரு வருடமும் மொத்தமாக நான்கு நவராத்திரிகள் வருகின்றன. பங்குனியில் லலிதா நவராத்திரி, மாசியில் ராஜமாதங்கி நவராத்திரி, ஆடியில் மகா வராஹி நவராத்திரி, புரட்டாசியில் பாத்ரபத நவராத்திரி அல்லது சாரதா நவராத்திரி.

இதில், இறுதியாய் கூறிய சாரதா நவராத்திரியே சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

புரட்டாசியில் வரும் மகாளயபட்ச அமாவாசைக்கு அடுத்த நாளாகிய பிரதமை திதியிலிருந்து துவங்கி நவமி வரையாகிய ஒன்பது நாட்களும் பல்வேறு ரூபங்களில் அம்பிகை நமக்கு அருள்பாலிக்கிறாள்.

முதல் மூன்று நாட்கள் துர்க்கையாகவும், அடுத்த மூன்று நாட்கள் மகாலட்சுமியாகவும், இறுதி மூன்று நாட்கள் சரஸ்வதியாகவும் நம்மை காத்து ரட்சிக்கிறாள் தேவி.

முதல் நாளில் அன்னை மகேஸ்வரியாக காட்சி கொடுக்கிறாள். இன்றைய தினம் அவளை மல்லிகை, வில்வம் கொண்டு அலங்கரிக்கவேண்டும். வெண் பொங்கல் நைவேத்தியம் செய்து தோடி ராகப்பாடல்களை பாடலாம்.

இரண்டாம் நாளன்று கௌமாரி ரூபத்தில் இருப்பவளுக்கு முல்லை, துளசியால் அலங்காரம் செய்து புளியோதரை நிவேதனம் பண்ண வேண்டும். இன்றைய தினம் கல்யாணி ராகமே அவளுக்கு சிறந்தது.

மூன்றாம் நாள் வராகி ஆகிறாள் அன்னை. செண்பகம் மற்றும் சம்பங்கிகள் இவளுக்கு உகந்தவை. சர்க்கரை பொங்கல் படைத்து காம்போதி ராகம் பாட வேண்டும்.

நான்காம் நாள் மகாலட்சுமியாக காட்சியளிக்கிறாள் தேவி. மல்லிகை பூக்களால் அலங்காரம் செய்து, அன்னம் நைவேத்தியம் பண்ண வேண்டும். இவளுக்கு உகந்தது பைரவி ராகம்.

ஐந்தாம் நாளில் வைஷ்ணவி ஆகிறாள் அம்பிகை. முல்லைப்பூ அலங்காரமும் தயிர் சாதமும் இவளுக்கு ஏற்றவை. பந்து வராளி ராகப்பாடல்கள் பாட வேண்டும்.

ஆறாம் நாள் இந்திராணியாக காட்சியளிக்கும் தேவிக்கு ஜாதி மலரே உகந்தது. இவள் விரும்புவது நீலாம்பரி ராகமும், தேங்காய் சாதமுமே.

ஏழாம் நாளில் சரஸ்வதியாக அருள் தரும் அன்னைக்கு தாழம்பூ சூடி, தும்பை இலைகளால் அர்ச்சனை செய்ய வேண்டும். எலுமிச்சை சாதம் நிவேதனம் செய்து, பிலஹரி ராகம் பாடலாம்.

எட்டாம் நாளில் நரசிம்ஹி ரூபத்தில் காட்சி தருகிறாள் அம்பிகை. இவளுக்கு உகந்த ரோஜா மலரை சூடி, புன்னக வராளி இசைக்கலாம். சர்க்கரை பொங்கல் தேவிக்கு உகந்தது.

ஒன்பதாம் நாள் சாமுண்டியாக தோற்றம் கொள்கிறாள் அன்னை. இன்றைய தினம் பால் பாயாசம் நைவேத்தியம் செய்து வழிபடலாம். தாமரை மலர்களால் அலங்கரித்து வசந்தா ராகம் இசைக்கலாம்.

இத்துடன் நித்தம் ஒரு சுண்டலால் நிவேதனம் பண்ணுவது நவக்கிரகங்களை சாந்தப்படுத்தி நமக்கு நன்மை அளிக்க வைக்கும்.

அவரவர் வீட்டின் இட வசதி, பொருளாதார நிலையை பொறுத்து படிகளை 3, 5, 7, 9 என ஒற்றை படையில் அமைத்துக் கொள்ளலாம்.

இந்த நாட்களில் சுமங்கலிப் பெண்களை வீட்டிற்கு அழைத்து, அவர்களை அம்பிகையாக பாவித்து மஞ்சள் குங்குமம் தாம்பூலம் வழங்கி வணங்கிட வேண்டும்.

ஒன்பது நாளும் விரதமிருந்து வழிபடுவது விசேஷம். இன்றைய தினங்களில் இரவு ஒரு வேளை மட்டுமே உணவு உண்ணவேண்டும்.

நவராத்திரி முழுமையும் கொண்டாட இயலாதவர்கள், கடைசி மூன்று நாட்களாகிய சப்தமி, அஷ்டமி, நவமி திதிகளில் மட்டுமாவது வழிபட்டால் ஒன்பது நாட்களும் அன்னையை வணங்கிய பலன்கள் கிட்டும். இதுவும் முடியாதவர்கள், எட்டாவது தினமாகிய அஷ்டமி திதியிலேனும் பூஜை செய்வது அம்பிகையின் கடைக்கண் பார்வையை நம்மீது விழ வைக்கும் என்பது நிதர்சனம்.....

படித்ததில் மனம் கவர்ந்தது.

No comments:

Post a Comment

Followers

நல்லாத்தூர் சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில் கடலூர்...

            செல்வங்களை வாரித்தரும் நல்லாத்தூர் சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில் கடலூர் மாவட்டம்                          தன்னை நாடி ...