திருமாலின் உலகமாக கருதப்படும் வைகுண்டம், சொர்க்கமாக போற்றப்படுகிறது. அத்தகைய வைகுண்டத்திற்கு இணையாக போற்றப்படும் ஒரு கோவில் இந்த பூ உலகில் உள்ளது என்றால் அது தான் குருவாயூரில் உள்ள கிருஷ்ணர் கோவில்.
இந்தியாவின் கேரள மாநிலத்தில் உள்ள திருச்சூர் மாவட்டத்தில் குருவாயூர் எனும் இடத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற கிருஷ்ணர் கோவில் இதுவாகும்.
கிருஷ்ண அவதாரத்திற்கு முன்பே தன் தாய் தந்தையருக்கு இக்கோவிலில் குழந்தை வடிவத்தில் கிருஷ்ணன் காட்சி கொடுத்த சிறப்பு இக்கோவிலுக்கு உள்ளது.
வைணவர்களின் புனித தலமாக போற்றப்படும் இந்த கோவில் 108 திவ்ய தேசக் கோவில்களில் இடம் பெறவில்லை. ஆனால் அதையும் கடந்து இது பூலோக வைகுண்டமாக போற்றப்படுகிறது.
திருத்தல மகத்துவம் :குருவாயூர் கோவில் குளத்தில் சிவபெருமான் ருத்ரனாக இருந்து மகாவிஷ்ணுவை போற்றி கடும் தவம் இருந்ததாக கூறப்படுகிறது. அதனால் இந்த குளத்தின் தீர்த்தமானது ருத்ர தீர்த்தம் என்று போற்றப்படுகிறது. புண் முறுவலோடும், கம்பீர தோற்றத்தோடும் இங்கு காட்சி தரும் கிருஷ்ணர், தனது நான்கு கரங்களில் சங்கு, சுதர்சன சக்கரம், தாமரை, கதை ஆகியவற்றை ஏந்தி காட்சி தருகிறார்.
இந்த கோவிலில் உள்ள மூலவரின் விக்ரகத்திற்கு தனி சிறப்பு உண்டு. இதை வைகுண்டத்தில் மகாவிஷ்ணுவே படைத்து அதை சிவனிடமும், பிரம்ம தேவனிடமும் கொடுத்ததாக நம்பப்படுகிறது.
கிருஷ்ணாவதாரம் முடியும் தருவாயில் அந்த விக்கிரகம் உத்தவரிடம் கொடுக்கப்பட்டது. துவாரகையில் ஏற்பட்ட கடல் சீற்றத்தால் துவாரகை கடலில் மூழ்கிப்போக இந்த விக்ரகம் கடலில் மிதந்த வண்ணம் இருந்தது. இதை கண்ட வாயுவும், குருவும் அந்த விக்ரகத்தை பிரதிஷ்டை செய்ததால் குருவாயூர் என பெயர் பெற்றது.
கோவிலின் சிறப்புகள் :
தேவ சிற்பியான விஸ்வகர்மாவால் குருவாயூர் கோவில் உருவாக்கப்பட்டதாக வரலாறு கூறுகிறது.
அதிகாலையில் ஸ்ரீ குருவாயூரப்பனின் விஸ்வரூப தரிசனம் காண பக்தர்களின் கூட்டம் அலைமோதும். குழந்தை கிருஷ்ணனை எந்த வேளையில் தரிசித்தாலும், அதிகாலையில் தரிசிப்பது கூடுதல் ஆனந்தம்!
விஸ்வரூப தரிசனம் முடிந்ததும் தைலாபிஷேகம் நடைபெறும். குருவாயூரப்பனுக்கு நல்லெண்ணெயில் அபிஷேகம் செய்யப்படுகிறது.
இரவு மூன்றாம் ஜாமம் முடிந்ததும் 3 மணிக்கு நாதஸ்வர இன்னிசை ஒலிக்க, சங்கு முழங்க குருவாயூரப்பனைத் திருப்பள்ளி எழச்செய்வர். அப்போது பகவான் காட்சி கொடுப்பதற்கு 'நிர்மால்ய தரிசனம்" என்று பெயர்.
இந்த அபிஷேகம் முடிந்த பின் நெல்பொரி, கதளிப்பழம், சர்க்கரை முதலியவற்றை நைவேத்தியமாகப் படைப்பர். அப்போது உன்னி கிருஷ்ணனாகத் தோற்றம் அளிப்பார் குருவாயூரப்பன்.
சந்தன அபிஷேகத்தில் நீராடிய குருவாயூரப்பனை அன்றைய தினம் முழுவதும் பக்தர்கள் தரிசிக்கலாம். சந்தன அபிஷேகம் நடந்த தினத்துக்கு அடுத்த நாள் இந்த சந்தனம் களையப்பட்டு பக்தர்களுக்குப் பிரசாதமாக விநியோகிக்கப்படுகிறது.
குழந்தைகளுக்கு முதல் அன்னமிடுதலும் இங்கே சிறப்பு. குழந்தைகளுக்கு முதன் முதலாக இங்கே அன்னம் ஊட்டினால் வாழ்நாள் முழுதும் அந்தக் குழந்தைக்கு ருசியான உணவு கிடைக்கும் என்பதும், உணவுக்குப் பஞ்சம் வராது என்பதும், நோய் நொடிகள் எதுவும் வராது என்பதும் நம்பிக்கை.
இத்தகைய சிறப்பு பெற்றது குருவாயூர் கோவில் மூலவர் விக்ரகம். இப்படி பல சிறப்புகள் நிறைந்ததாலேயே குருவாயூர் கோவில் பூலோக வைகுண்டமாக போற்றப்படுகிறது.....
No comments:
Post a Comment