Monday, January 16, 2023

_கருவூர் சித்தர் வரலாறு_

_கருவூர் சித்தர் வரலாறு_



சோழ நாட்டின் கருவூரில் பிறந்த கருவூர்ச்சித்தர், துள்ளி விளையாடும் பருவத்திலேயே ஆர்வத்துடன் ஞான நூல்களைக் கற்றார்.

கருவூராரின் பெற்றோர் ஊர் ஊராகச் சென்று, ஆங்காங்குள்ள கோவில்களில் விக்ரகங்கள் செய்து கொண்டு வாழ்ந்தார்கள்.

ஒரு சமயம் போகர் திருவாவடுதுறைக்கு வந்தார். அதையறிந்த கருவூரார் அவரைச் சென்று வணங்கி தம்மை அவருடைய சீடராக ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டினார்.

“கருவூராரே! உன் குல தெய்வம் அம்பாள், தினந்தோறும் அவளை வழிபடு, அவள் உனக்கு வழிகாட்டுவாள்” என்று கூறி வழிபாட்டு நெறிகளை கருவூராருக்கு உபதேசித்தார். போகர் உபதேசப்படி, கருவூரார், உள்ளம் உருகி அம்மனை வழிபட ஆரம்பித்தார். போகரின் வாக்கு பலித்தது. கருவூரார் சித்துக்கள் புரியும் ஞானவானாக உயர்ந்தார்.

கருவூரார், சிவாலயங்களில் தங்கத்தால் சிவலிங்கங்களை உண்டாக்கி வைத்தார். சித்தரின் இரசவாத வித்தையின் மூலம் உருவான அச்சிவலிங்கங்கள் ஒருமுறை பார்த்தால் செம்பு போலவும், மற்றொரு முறைப் பார்த்தால் பொன் போலவும் தோன்றும். கருவூரார் காசிக்குச் சென்று விசுவநாதர் ஆலயத்திலும் தாமிரத்தில் வேதை செய்து தங்கமயமான லிங்கத்தை உருவாக்கி வைத்தார்.

போகர் தமிழ் நாட்டில் வசித்த காலத்தில் கருவூர் சித்தரும், திருமளிகைத் தேவரும் அவரின் பிரதான சீடர்களாக திகழ்ந்தனர்.

சோழ மன்னன் இரணிய வர்மன் தீர்த்த யாத்திரை புறப்பட்டு பல் புண்ணிய தலங்களை தரிசித்துவிடு தில்லையை அடைந்தார். சிற்றம்பல திருக்குளமான சிவகங்கைத் தீர்த்தத்தில் நீராடும்போது தண்ணீருக்குள் ஓங்கார நாதம் ஒலித்தது. அரசருக்கு ஆச்சரியம் தாளவில்லை. தண்ணீரை விட்டு வெளியே எழுந்தவுடன் அந்நாதம் கேட்கவில்லை. மீண்டும் நீருக்குள் மூழ்கினார், ஓங்கார ஒலி தெளிவாகக் கேட்டது.

என்ன இது அதிசயம்? மறுபடியும் மூழ்கினார். கண்களைத் திறந்தார். அங்கு ஆடல் வல்லாரின் அற்புத நடனமும் கூடவே ஓங்கார ஒலி; அரசர் வியப்பில் ஆழ்ந்து போய் மீண்டும் மீண்டும் நீரினுள் மூழ்கி அந்நடனத்தையும் ஓங்கார ஓசையையும் கேட்டார்.

தாம் கண்ட காட்சியை ஓவியமாக வரைந்தார். தான் அனுபவித்த இந்த அற்புத இன்பத்தை உலகிலுள்ள அனைவரும் கண்டு அனுபவிக்க வழியை யோசித்தார். இறுதியில், தான் கண்ட வடிவத்தை மிகவும் தூய்மையான சொக்கத் தங்கத்தில் விக்ரகமாகச் செய்து பொன்னம்பலத்தில் எல்லோரும் தரிசனம் செய்யும்படி அமைக்க வேண்டுமென முடிவு செய்தார்.

“கலப்படமில்லாத சொக்கத்தங்கத்தில் உருவாக்க வேண்டும். செம்போ அல்லது வேறு எந்த உலோகமோ கடுகளவும் சேர்க்காமல் நாற்பத்தி எட்டு நாட்களுக்குள் செய்து முடிக்க வேண்டுமென்று சிற்பிகளிடம் கூறினார்.

ஆனால் சிற்பிகள் என்ன முயன்றும் விக்கிரகத்தை முடிக்க முடியவில்லை. ஏதேனும் ஒரு வகையில் விக்கிரகத்தில் குறைவு ஏற்பட்டுக் கொண்டே இருந்தது.

மன்னர் கொடுத்த கெடுவில் நாற்பத்தேழு நாட்கள் பலனில்லாமல் போய்விட்டன.

தில்லையில் நடராசர் திருவுருவம் அமைக்கச் சிற்பிகள் வருத்தப்படுகிறார்கள் என்ற விவரத்தை அறிந்த போகர், தமது பிரதான சீடரான கருவூராரை அழைத்து, “கருவூரா! அந்த விக்கிரகம் செய்ய வேண்டிய வழிமுறைகளை நான் உனக்கு சொல்கிறேன். நீ போய் செய்து முடி” என்று சொல்லி கருவூராருக்கு வழிமுறைகளை அறிவித்து வழியனுப்பினார்.

நாற்பத்தெட்டாவது நாள் சிற்பிகளுக்கு மன்னர் கொடுத்த கடைசி நாள். சிற்பிகளெல்லோரும் சொல்லவியலாத துன்பத்தில் இருந்தனர்.

மரண பயத்தில் தவித்துக் கொண்டிருந்தவர்கள் முன்னிலையில் கருவூரார் போய் நின்றார்.

“கவலைப்படாதீர்கள், மன்னரின் விருப்பப்படியே ஆடல் வல்லாரின் விக்கிரகத்தை நான் செய்து தருகிறேன்” என்று சிற்பிகளுக்கு ஆறுதல் கூறினார். சிற்பிகளோ “தேர்ந்த சிற்பிகளான எங்களாலேயே முடியாத போது உம்மால் எப்படி முடியும்?” என்றார்கள். “என்னால் முடியும். அதுவும் இன்னும் ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே”, என்றார் கருவூரார்.

விக்கிரகம் செய்வதற்கென்று ஒதுக்கப்பட்டிருந்த அறைக்குள் நுழைந்து தாழிட்டுக் கொண்டார்.

சிற்பிகள் நம்பமுடியாமல் வெளியே காத்திருந்தனர். ஏறத்தாழ ஒரு மணி நேரத்திற்குப் பிறகு கதவு திறந்து கருவூரார் வெளியே வந்து, “போய்ப் பாருங்கள், உங்கள் எண்ணப்படியே விக்கிரகம் முடிந்து விட்டது” என்று சொன்னார்.

நம்ப முடியாத ஆச்சரியத்தில் சிற்பிகள் உள்ளே நுழைந்தனர். அங்கு கருவூராரால் வடிவமைக்கப்பட்ட அம்பலக் கூத்தனின் அழகு திருமேனி உருவம் அவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. வெளியே வந்த சிற்பிகள் கருவூராரை வணங்கினர்.

மறுநாள் சூரியோதயத்திற்கு முன்னரே இரணிய வர்மன் நீராடி திருநீற்றுக்கோலத்துடன் சிற்பிகள் இருந்த இடத்திற்கு வந்தார்.

அங்கு இருந்த நடராசர் சிலையின் அற்புத அழகில் மயங்கினார். சிலையின் ஒளியில் அவர் கண் கூசியது. “இறைவா! நீ இங்கு எழுந்தருளிய கோலம் தான் என்னே!” என்று வியந்தார். அங்கம் அங்கமாகத் தங்கச் சிலையை பார்த்து வியந்தார். தான் வரைந்த ஓவியத்தில் இல்லாத அருள்சக்தி விக்கிரகத்தில் இருப்பதை உணர முடிந்தது. அவர் முகத்தில் மகிழ்ச்சி அதிகரித்தது. சிற்பிகள் பக்கம் திரும்பிய மன்னர், ‘அபாரம்! அற்புதமாகச் செய்து விட்டீர்கள் உங்களுக்கு தக்க சன்மானம் கொடுக்கப் போகிறேன்” என்றார். அப்போது மந்திரி, “மன்னா! சிலையிலிருக்கும் தங்கத்தை சோதித்த பின்னர் இவர்களுக்கு வெகுமதி கொடுக்கலாமே!” என்றார். அதைக் கேட்ட மன்னர், “சிற்பிகளே! விக்கிரகம் செய்யும் போது தங்கத்துகள்கள் சிந்தியிருக்குமே அந்தத் துகள்களைக் கொண்டு வாருங்கள்” என்றார்.

தங்கத்துகள்களை சிற்பிகள் கொண்டு வந்தார்கள். சோதனை செய்த மன்னரின் முகம் கடுமையாக மாறியது.

“சுத்தமான தங்கத்தில் செய்ய வேண்டும் எனச் சொல்லித்தானே உங்களை நியமித்தேன். சிலையில் சிறிது செம்பைக் கலந்து என்னிடம் நம்பிக்கை மோசடி செய்யலாமா?” என்று கடுமையாகக் கேட்டார்.

சிற்பிகள் பயந்து நடுங்கினர். “அரசே, நாங்கள் எவ்வளவோ முயற்சி செய்தும் அந்தச் சிலையை எங்களால் செய்ய இயலவில்லை. அம்பலவர் அடியார் ஒருவர் வந்து இந்தச் சிலையை செய்தளித்தார்” என்றார்கள்.

மன்னர் திகைத்து விட்டார்.

“அடியார் செய்தாரா? அவரை இழுத்து வாருங்கள்” என்று கட்டளை பிறப்பித்தார் மன்னர்.

உடனே பணியாட்கள் கருவூரார் இருக்கும் இடம் சென்று அவரை அழைத்து வந்தார்கள். கருவூராரை மேலும் கீழுமாகப் பார்த்த மன்னர், “இவரைச் சிறையில் தள்ளுங்கள். யோசித்து, நாளை தண்டனை வழங்குகிறேன்!” என்று சொல்லி சிலையுடன் அரண்மனையை அடைந்தார்.

அங்கு விக்கிரகத்தை ஒரு பீடத்தில் வைத்து அதையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார், மன்னர் கண்களில் இருந்து கண்ணீர் ததும்பிக் கொண்டிருந்தது.

திடீரென்று அவரெதிரே போகர் தோன்றினார். போகரின் பின்னால் தலைகளில் தங்க மூட்டைகளுடன் அவருடைய ஐந்து சீடர்கள் நின்று கொண்டிருந்தார்கள். ஒரு சீடரிடம் தராசு ஒன்றும் காணப்பட்டது. திடீரென்று அவர்களைப் பார்த்ததுமே மன்னருக்கு ஒன்றுமே தோன்றவில்லை. எழுந்து நின்று கைகளைக் குவித்தார்.

“மன்னா! நீ சிறைச்சாலையில் அடைத்து வைத்திருக்கிறாயே, அவன் என் மாணவன் இனி எந்தக் கருவிலும் ஊர்தல் செய்யாத தகுதி கொண்ட அவனைச் சிறையில் அடைத்து விட்டாய், இதுதானா உன் ஆட்சி முறை?” எனக்கேட்டார் போகர்.

அரசர், “சுத்தத் தங்கத்தில் செய்ய சொன்ன சிலையை செம்பு கலந்து செய்தது மாபெரும் தவறு அல்லவா? அதற்கேற்ற தண்டனைதான் அது” என்றார்.

“சுத்தத் தங்கத்தில் விக்கிரகம் செய்ய முடியாதே! அதனால் தான் செம்பைக் கொஞ்சம் கலக்கச் சொன்னேன். அப்படி செய்ததற்கு இன்னொரு காரணமும் உண்டு கேள். தூய்மையான சொக்க தங்கத்தில் வடிவம் ச்ய்து வைத்தால், அதிலிருந்து கிளம்பும் ஒளி, பார்ப்பவர்களின் கண்களை நாளாக நாளாக குருடாக்கி விடும். இந்த அறிவியல் உண்மை உனக்குத் தெரியாது.

அதனால்தான் என் மாணவன் கருவூரான் சிறிது செம்புடன் பலவிதமான மூலிகைச் சாறுகளையும் சேர்த்து விக்கிரகமாகச் செய்திருக்கிறான். சரி போனது போகட்டும் இந்தா நீ தந்த அதே சுத்த மாற்று தங்கம்,” என்றதோடு தராசில் சிலையை வைத்து இன்னோரு தட்டில் தங்கத்தைக் கொட்ட சீடர்களிடம் கூறினார்.

போகர், “அரசே! உன் தங்கத்தை நீ எடுத்துக் கொள்” என்று கூறிவிட்டு சிலையை கையில் எடுத்துக் கொண்டு கிளம்பத் தொடங்கினார்.

மன்னர் திடுக்கிட்டு போகரின் காலில் வீழ்ந்து வணங்கி தன்னை மன்னிக்குமாறு வேண்டினார்.

எழுந்திருங்கள் அரசே நடராசப் பெருமானை உமக்கே தருகிறேன். என் சீடனை எனக்குத் திருப்பிக் கொடு என்று கேட்டார் போகர்.

அதற்கு அரசர் “தாங்களே கருவூராரை சிறையிலிருந்து வெளியில் வரும்படி அழையுங்கள்” என்றார். அவர் அழைக்கவும் சிறையிலிருந்து வெளியே வந்தார் கருவூரார்.

அத்துடன் கோவில் அமையவேண்டிய முறை, எந்தெந்த வடிவங்களை எங்கெங்கு எப்படி வைக்க வேண்டும். மூலவரை எப்படி பிரதிட்டை செய்து பூசை செய்ய வேண்டும் என்று தெரிவித்துவிட்டு கருவூரார் அங்கிருந்து சென்றார்.

திருவிடை மருதூர் என்னும் தலத்தை அடைந்து இறைவனை நோக்கி குரல் கொடுத்த போது இறைவன் தலையைச் சிறிது சாய்த்து கருவூரார் குரலைக் கேட்டு பதில் கொடுத்தார். திருவிடை மருதூரில் இன்றும் சிறிது தலை சாய்ந்த நிலையிலேயே இறைவன் திருவடிவம் காணப்படுகிறது.

தஞ்சையில் கோவில் கும்பாபிசேகம் தடைபட்டு நிற்பதைக் கண்ட கருவூரார் உடனே கருவறையில் இருந்த சிவலிங்கத்தை நோக்கிச் சென்றார். எளிதாக அட்ட பந்தனம் செய்து சிவலிங்கப் பிரதிட்டையும் கும்பாவிசேகமும் செய்து வைத்தார்.

மன்னன் கொண்டாடினான். மக்கள் மகிழ்ந்தார். இறைவனும் மனங்களித்தார்.

தஞ்சையிலிருந்து திருவரங்கம் சென்ற கருவூர் சித்தரை, அபரங்சி என்ற தாசி சந்தித்தாள். அவரை முறைப்படி வணங்கி, ஞான சாதனையில் தனக்குள்ள சந்தேகங்களை தீர்க்க வேண்டினாள். அவள் ஆர்வத்தைப் பாராட்டி தீர்த்து வைத்தார்.

மறுநாள் அரங்கரிடம் சென்று அபரஞ்சிக்கு பரிசளிக்க நவரத்ன மாலையொன்றை வாங்கி அதை அவளிடம் தந்தார். கருவூரார் விடைபெறுகையில் அபரஞ்சி வருந்தினாள். “நீ எப்போது நினைத்தாலும் நான் வருவேன்” என்று கூறி தன் யாத்திரையைத் தொடங்கினார்.

மறுநாள் காலை திருவரங்கன் மேனியில் இருந்த நவரத்ன மாலை காணாமல் போன செய்தி தெரிந்தது. அதே சமயம் திருவரங்கக் கோவிலுக்குள் வந்த அபரஞ்சியின் கழுத்தில் அம்மாலை இருந்ததைக் கண்டு அனைவரும் திகைத்தனர்.

பஞ்சாயத்து தொடங்கியது. “பெருமானின் நகை உன்னிடம் எப்படி வந்தது” என்று அனைவரும் கேட்டனர். அபரஞ்சியும் “இந்த பள்ளி கொண்ட பெருமானின் சார்பாக கருவூரார் கொடுத்த பரிசு இது” என்று அமைதியாக பதிலளித்தாள். கோயிலதிகாரி திடுக்கிட்டார். “கருவூரார் எங்கே?” என்று கேட்டார்.

அபரஞ்சிதா மனதார கருவூராரை நினைத்தவுடன் அவர் தோன்றினார். “இந்த பிரச்சினைக்கு அரங்கனே பதில் சொல்வான்” என்றார். அது சமயம் எல்லோரும் கேட்கும் வண்ணம், “நீங்கள் எல்லோரும் எனக்கு அலங்காரம் செய்து பார்க்க நினைக்கிறீர்கள். நானோ என் அடியார்களை அலங்காரம் செய்து பார்க்க நினைத்தேன். நான் தான் அபரஞ்சிதாவுக்கு நவரத்ன மாலையை கருவூரார் மூலம் அளித்தேன்”, என்று அரங்கர் அசரீரி மூலம் சொன்னார்.

உண்மையை அறிந்த ஊரார்கள் கருவூராரிடமும் அபரஞ்சியிடமும் மன்னிப்பு கேட்டார்கள்.

அரசரிடமும் ஊராரிடமும் செல்வாக்கு அதிகரிப்பதைக் கண்ட அவ்வூர் அந்தணர்கள் பொறாமை கொண்டனர். அவரை வம்பில் இழுத்துவிட நினைத்து மதுவையும், மாமிசத்தையும் அவர் இல்லத்தில் மறைத்து வைத்தனர். அரசரிடம் சென்று கருவூராரின் இல்லத்தில் மது மாமிசம் இருப்பதாக கூறினர்.

அரசரின் ஆணைப்படி கருவூராரின் வீடு சோதனைக்குள்ளானது. ஆயினும் அங்கே பூசைக்கு உண்டான பொருட்களும் யாகத்திற்கு தேவையான பொருட்களும் இருப்பதைக் கண்ட மன்னர் தன் தவறை உணர்ந்து மன்னிப்புக் கோரினார். தன்னை முட்டாளாக்கிய வேதியர்கள் மீது கடும் கோபம் கொண்டான். கருவூரார் அவரைச் சமாதானப்படுத்தினார்.

அவமானம் அடைந்த வேதியர்களுக்கு கருவூராரின் மீது கடும் சினம் ஏற்பட்டது. வேதியர்கள் ஒன்று கூடி அவரை கொலை செய்யும் நோக்கத்துடன் துரத்தினர். வேதியர்கள் நோக்கத்தினைப் புரிந்து கொண்ட கருவூரார் அவர்களுக்கு பயந்து ஓடுவதைப் போன்று திருஆனிலையப்பர் கோவிலுக்குள் ஓடினார்.

கோவிலுக்குள் ஓடிய கருவூரார், “ ஆனிலையப்பா, பசுபதீசுவரா!” என்று கூறியழைத்து கருவறையிலிருந்த சிவலிங்கத்தைத் தழுவினார். இனி எந்தக் கருவிலும் ஊறுதல் இல்லாத கருவூரார் இறைவனுடன் இரண்டறக் கலந்து மறைந்தார்.

கருவூராரைத் துரத்தி வந்தவர்கள் இந்த தெய்வீகக் காட்சியைக் கண்டார்கள். தங்கள் தவறுக்கு வருந்தி பரிகாரமாக ஆனிலையப்பர் கோவிலில் ஒரு தனி சந்நிதி அமைத்து அதில் கருவூராரின் வடிவத்தினை அமைத்து வழிபட்டனர். தஞ்சை பெரிய கோவிலிலும் அவரது சிலை பிரதிட்டை செய்யப்பட்டது.

*கருவூரார் செய்த நூல்கள்:*
கருவூரார் வாத காவியம் – 700
கருவூரார் வைத்தியம் – 500
கருவூரார் யோக ஞானம் – 500
கருவூரார் பலதிட்டு – 300
கருவூரார் குரு நரல் சூத்திரம் – 105
கருவூரார் பூரண ஞானம் – 100
கருவூரார் மெய் சுருக்கம் – 52
கருவூரார் சிவஞானபோதம் – 42
கருவூரார் கட்ப விதி – 39
கருவூரார் மூப்பு சூத்திரம் – 30
கருவூரார் அட்டமாசித்து (மாந்திரிகம்). - ஆகியவைகள் ஆகும்.

தியானச் செய்யுள்:
கருவூரில் அவதரித்த மஹாஸ்தபஸ்யே !
திருக்கலைத் தேரில் முடிதரித்த நவநிதியே!
வாரி வழங்கி அருள் கொடுத்தாய்!
மாறாத சித்துடையாய்!
கல் உள்ளளவும் மண் உள்ளளவும் – உன்
கருணைக் கரங்களே காப்பு!

*கருவூரார் சித்தர் பூசை முறைகள்:*

தேக சுத்தியுடன் அழகிய சிறு பலகையில் மஞ்சள் இட்டு மெழுகி பக்தியுடன் கோலமிட்டு, அதன்மேல் கருவூரார் சித்தர் படத்தை வைத்து அதன் முன் மஞ்சள் குங்குமம் இட்டு அலங்கரிக்கப்பட்ட குத்து விளக்கில் தீபம் ஏற்றி வைக்க வேண்டும். பின்னர் துளசி, மல்லிகைப் பூ ஆகியவற்றைக் கொண்டு பின்வரும் பதினாறு போற்றிகளைக் கூறி அர்ச்சனை செய்ய வேண்டும்.

*பதினாறு போற்றிகள்:*
1. சிவனே போற்றி!
2. சிவனைப் பூசிப்பவரே போற்றி!
3. நாடி யோகியே போற்றி!
4. ஒளி பொருந்தியவரே போற்றி!
5. அவதார புருசரே போற்றி!
6. இந்திராதி தேவர்களுக்கு பிரியரே போற்றி!
7. லோக சேம சித்தரே போற்றி!
8. நடராசரைப் பிரதிட்டை செய்தவரே போற்றி!
9. யோக மூர்த்தியே போற்றி!
10. ஓம் கம் நம் பீஜாட்சரத்தை உடையவரே போற்றி!
11. கற்பூரப் பிரியரே போற்றி!
12. வேண்டிய வரம் அளிப்பவரே போற்றி!
13. வெட்டை வெளியில் வசிப்பவரே போற்றி!
14. பூவுலகில் சஞ்சரிப்பவரே போற்றி!
15. கருவைக் காப்பவரே போற்றி!
16. ஞானத்தை அளிக்கும் கருவூர் சித்தர் சுவாமியே போற்றி! போற்றி!
இவ்வாறு நிவேதனமாக பச்சைக் கற்பூரம் போட்ட சர்க்கரைப் பொங்கலை வைக்க வேண்டும்.

பின் உங்கள் பிரார்த்தனையை மனமுருகக் கூறி வேண்டவும். நிறைவாக தீபாராதனை செய்யவும்.

கருவூர் சித்தரின் பூசை பலன்கள்:

இவர் நவக்கிரகங்களில் சனீஸ்வர பகவானை பிரதிபலிப்பவர். இவரை முறைப்படி வழிபட்டால்,

1. ஜாதகத்தில் உள்ள சனி தோசம் நீங்கி நன்மை கிடைக்கும்.
2. ஏழரைச் சனி, அட்டமச் சனி, கண்டச் சனியால் ஏற்படும் கோளாறுகள் அகலும்.
3. வாகனத்தால் ஏற்படக்கூடிய விபத்துகள் நீங்கும்.
4. இரும்பு விவசாயம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் நீங்கும்.
5. போக்குவரத்து துறையில் உள்ளவர்களுக்கு உண்டான பிரச்சினகள் அகலும்.
6. படிப்பில் உள்ள மந்த நிலை மாறும்.
7. எதிலும் வெற்றி கிடைக்காமல் தடை ஏற்படக்கூடிய நிலை மாறும்.
8. எலும்பு சம்பந்தமான கோளாறுகள் அகலும்.
9. பிரம்மஹத்தி தோசம் அகலும்.
10 புத்திர பாக்கியம் கிடைக்கும்.
11. வேலையாட்கள் முதலாளிகளுக்கு இடையில் ஏற்படும் பிரச்சினைகள் அகலும்.

இவரை வழிபட சிறந்த கிழமை: சனிக்கிழமை. இவருக்கு கருநீல வஸ்திரம் அணிவித்து வழிபடுதல் விசேடம்.

கருவூர் சித்தர் வரலாறு முற்றிற்று.
நன்றி......

No comments:

Post a Comment

Followers

புராதனவனேஸ்வரர் பட்டுக்கோட்டை தஞ்சாவூர்...

அருள்மிகு புராதனவனேஸ்வரர் திருக்கோயில் பட்டுக்கோட்டை தஞ்சாவூர் மாவட்டம்.       இறைவன் :- புராதனவனேஸ்வரர் இறைவி :- பெரியநாயகி அம்...