_
சிவ ராத்திரி விரதம் இருப்பதால் தெரியாமல் செய்த பாவங்களுடன், தெரிந்தே பாவங்கள் செய்திருந்தாலும் அவை நம்மை விட்டு நீங்கிப் போகும் என்று ஐதீகம்.
மகாசிவராத்திரி நாளில் இரவெல்லாம் கண் விழித்து சிவபெருமானை வழிபட வேண்டும். இதனால் இறைவன் அருள் கிடைப்பதோடு நினைத்த காரியம் நடக்கும் என்பது முன்னோர்கள் வாக்கு.
ஒரு வருடம் சிவராத்திரி விரதம் இருப்பது என்பது நூறு அசுவமேத யாகம் செய்த பலனும், பல தடவை கங்கா ஸ்நானம் செய்த பலனும் கிடைக்கும்.
இந்த நாளில் சிவன் கோயில்களுக்குச் சென்று ஈஸ்வரனை வழிபட்டால் மன அமைதி, வாழ்க்கையில் முன்னேற்றம், தீய சக்திகள் நீங்கி நன்மைகள் நமக்கு உண்டாகும்.
மாசி மாதத்தில் தேய்பிறை சதுர்த்தசி நாள் மகா சிவ ராத்திரியாக கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளின் சிறப்புகள் குறித்து கருட புராணம், கந்த புராணம், பத்ம புராணம், அக்னி புராணம் உள்ளிட்ட பல்வேறு நூல்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. மகா சிவ ராத்திரி நாளில் விரதம் இருப்போருக்கு கிடைக்கும் மகத்துவங்கள் என்ன என்பது பற்றியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவராத்திரிக்கு முதல் நாள் ஒரு வேளை மட்டுமே உணவு உண்ண வேண்டும். சிவராத்திரி அன்று அதிகாலையிலேயே எழுந்து குளித்து விட்டு, சூரிய உதயத்தின் போது காலையில் வீட்டில் செய்ய வேண்டிய பூஜையை முடிக்க வேண்டும். அதன் பின் சிவன் கோவிலுக்குப் போய் முறைப்படி தரிசனம் செய்ய வேண்டும்.
சிவபூஜை செய்யும் இடத்தை மலர்களால் அலங்கரித்து நண்பகலில் குளித்து மாலையில் சிவார்ச்சனைக்கு உரிய பொருட்களோடு சிவன் கோவில் சென்று ஏற்பாடுகளைச் செய்யலாம். மாலையில் மீண்டும் குளித்து வீட்டில் சிவபூஜை செய்ய வேண்டும். வீட்டிலேயே இரவின் நான்கு ஜாமங்களிலும் முறைப்படிப் பூஜை செய்தலும் நலம். வில்வ இலைகளால் அர்ச்சனை செய்தல் கூடுதல் உத்தமம்.
மகா சிவராத்திரி அன்று இறைவனுக்கு நான்கு ஜாம பூஜைகள் செய்யப்படும். அப்போது ஒவ்வொரு ஜாமத்தின் போதும், அபிஷேக, ஆராதனைகள் செய்யப்படுவது வழக்கம். ஒவ்வொரு ஜாமத்திலும் செய்யப்படும் அபிஷேக, அர்ச்சனைகளைப் பார்க்கலாம்.
முதல் ஜாமம்:
பஞ்ச கவ்ய அபிஷேகம், சந்தனப் பூச்சு, வில்வம், தாமரை அலங்காரம், அர்ச்சனை, பச்சைப் பயறுப் பொங்கல் நிவேதனம், ரிக்வேத பாராயணம்.
இரண்டாம் ஜாமம்:
சர்க்கரை, பால், தயிர், நெய் கலந்த ரவை, பஞ்சாமிர்த அபிஷேகம், பச்சைக்கற்பூரம், பன்னீர் சேர்த்து அரைத்துச் சாத்துதல், துளசி அலங்காரம், வில்வம் அர்ச்சனை, பாயசம் நிவேதனம், யஜூர் வேத பாராயணம்.
மூன்றாம் ஜாமம்:
தேன் அபிஷேகம், பச்சைக் கற்பூரம் சாத்துதல், மல்லிகை அலங்காரம், வில்வம் அர்ச்சனை, எள் அன்னம் நிவேதனம், சாமவேத பாராயணம்.
நான்காம் ஜாமம்:
கருப்பஞ்சாறு அபிஷேகம், நந்தியா வட்டை மலர் சாத்துதல், அல்லி, நீலோற்பவம், நந்தியா வர்த்தம் அலங்காரம், அர்ச்சனை, சுத்தான்னம் நிவேதனம், அதர்வண வேத பாராயணம்.
சிவராத்திரி பாடல்கள்:
சிவசிவ என்கிலர் தீவினை யாளர்
சிவசிவ என்றிடத் தீவினை மாளுஞ்
சிவசிவ என்றிடத் தேவரு மாவர்
சிவசிவ என்னச் சிவகதி தானே.
காத லாகிக் கசிந்துகண் ணீர்மல்கி
ஓது வார்தமை நன்னெறிக் குய்ப்பது
வேதம்நான்கினும்மெய்ப்பொருளாவது
நாதன் நாமம் நமச்சிவாயவே.
சொற்றுணை வேதியன் சோதிவானவன்
பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணை யாவது நமச்சி வாயவே.
மற்றுப் பற்றெனக் கின்றி நின்திருப்பாத மேமனம் பாவித்தேன்
பெற்ற லும்பிறந் தேன்இ னிப்பிறவாத தன்மைவந் தெய்தினேன்
கற்ற வர்தொழு தேத்துஞ் சீர்க்கறையூரிற் பாண்டிக் கொடுமுடி
நற்ற வாஉனை நான்மறக்கினுஞ்சொல்லும்நா நமச்சி வாயவே.
போற்றிஓம் நமச்சி வாய புயங்கனே
மயங்கு கின்றேன்
போற்றிஓம் நமச்சி வாய புகலிடம்
பிறிதொன் றில்லை
போற்றிஓம் நமச்சி வாய புறம்எனைப் போக்கல் கண்டாய்
போற்றிஓம் நமச்சி வாய சயசயபோற்றிபோற்றி.
மகா சிவராத்திரி அன்று ஒருவர் சிவனை நினைத்து விரதமிருந்தால், நினைத்த காரியம் மற்றும் ஆசை நிறைவேறும்.
அதோடு, இந்நாளில் சிவ லிங்கத்திற்கு பல பொருட்களால் பூஜைகளும், அபிஷேகங்களும் நடைபெறும். இங்கு மகா சிவராத்திரி அன்று எந்த ராசிக்காரர்கள் எந்த பொருளைக் கொண்டு சிவனை வழிபட்டால், நினைத்த காரியம் நிறைவேறும் என்பது குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.
மேஷம்:
மேஷ ராசிக்காரர்கள், மகா சிவராத்திரி அன்று வெல்லம் கலந்த நீரை சிவலிங்கத்திற்குப் படைத்து, சிவ பஞ்சாக்ஷர மந்திரத்தை சொல்ல வேண்டும். இதனால் நினைத்தது அனைத்தும் நடக்கும்.
ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்கள், தயிரைக் கொண்டு சிவ லிங்கத்திற்கு அபிஷேகம் செய்தால், வீட்டில் உள்ள பணப் பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.
மிதுனம்:
மிதுன ராசிக்காரர்கள், சிவ லிங்கத்தை கரும்புச் சாறு கொண்டு அபிஷேகம் செய்து, ஊமத்தை பழத்தை படைத்தால், ஆசைகள் நிறைவேறும்.
கடகம்:
கடக ராசிக்காரர்கள், சர்க்கரை சேர்த்த பால் கொண்டு சிவ லிங்கத்திற்கு அபிஷேகம் செய்து, மந்தாரைப் பூவால் அலங்கரித்தால், நினைக்கும் காரியம் கூடிய விரைவில் நடக்கும்.
சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்கள், மகா சிவராத்திரி அன்று சிவப்பு சந்தனம் கலந்த பாலால் சிவனுக்கு அபிஷேகம் செய்தால், சிவன் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை வழங்குவார்.
கன்னி:
கன்னி ராசிக்காரர்கள், பாங் பால்/நீரால் சிவ லிங்கத்தை அபிஷேகம் செய்தால், சிவன் நல்ல ஆரோக்கியத்தை அருள்வார்.
துலாம்:
துலாம் ராசிக்காரர்கள், பசு மாட்டுப் பாலால் சிவ லிங்கத்திற்கு அபிஷேகம் செய்தால், வாழ்வில் நல்ல செல்வ செழிப்போடு இருக்க அருள் புரிவார்.
விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்கள், தேன் அல்லது சர்க்கரை கலந்த நீரால் சிவனுக்கு அபிஷேகம் செய்வது மிகவும் நல்லது.
தனுசு:
தனுசு ராசிக்காரர்கள், குங்குமப்பூ கலந்த பாலால் சிவனுக்கு அபிஷேகம் செய்து, சிவ பஞ்சாக்ஷர மந்திரத்தைப் படிக்க வேண்டும். இதனால் வாழ்வில் உள்ள இன்னல்கள் நீங்கும்.
மகரம்:
மகர ராசிக்காரர்கள், மகா சிவராத்திரி அன்று சிவனுக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் செய்து, வில்வ பழத்தைப் படைத்தால், சிவன் வாழ்வில் எதிலும் வெற்றிக் கிட்டச் செய்வார்.
கும்பம்:
மகா சிவராத்திரி அன்று கும்ப ராசிக்காரர்கள், இளநீர் அல்லது கடுகு எண்ணெயால் சிவ லிங்கத்தை அபிஷேகம் செய்தால், நிதி ஆதாயம் லாபம் கிடைக்க உதவுவார்.
மீனம்:
மீன ராசிக்காரர்கள், மகா சிவராத்திரி அன்று குங்குமப்பூ பாலால் சிவனுக்கு அபிஷேகம் செய்தால், செல்வ செழிப்போடு இருக்க வழி செய்வார்.
#ஓம்நமசிவாய
#OmNamaSivaya
#மஹாசிவராத்திரி
#MahaSivarathiri
No comments:
Post a Comment