Thursday, September 14, 2023

தென்கைலாயம் வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில்.

தென்கைலாயம் வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில்.
ஏழுமலை என்றாலே நம் நினைவிற்கு வருவது திருப்பதி திருமலை பெருமாளின் மலை யாத்திரை தான் பலருக்கும் நினைவில் வரும். சிவபெருமானுக்கும் ஏழுமலை கொண்ட ஒரு திருத்தலம் இருக்கிறது. அது தான் கோவை மாவட்டத்தில் இருக்கும் “வெள்ளியங்கிரி மலைக்கோவில்.

வெள்ளியங்கிரி மலை சிவன் கோவில் தல வரலாறு.

வெள்ளியங்கிரி மலை மீது மற்றும் மலை அடிவாரத்தில் இருக்கும் சிவன் கோவில்கள் 3000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான கோவில்களாக கருதப்படுகின்றன. இங்கிருக்கும் சிவபெருமான் “வெள்ளியங்கிரி ஆண்டவர்” என்றும் அம்பாள் “மனோன்மணி” என்றும் அழைக்கப்படுகிறார்கள். பன்னெடுங்காலமாக சித்தர்கள் விரும்பி வழிபடும் கோவிலாக இது இருந்திருக்கிறது. புராணங்களின் படி பஞ்ச பாண்டவர்களில் ஒருவனான அர்ஜுனன் இப்பகுதிக்கு வந்த போது சிவபெருமான் வேடன் ரூபத்தில் தோன்றி, அர்ஜுனனுடன் விளையாட்டாக போர் புரிந்தார்.

இறுதியில் தனது உண்மை வடிவத்தில் தோன்றிய சிவபெருமானை வணங்கிய அர்ஜுனனுக்கு, தனது பாசுபத ஆயுதத்தை சிவபெருமான் அளித்து ஆசிர்வதித்தார். இங்கிருக்கும் ஏழு மலைகளும் உடலில் இருக்கும் “ஏழு யோக சக்கரங்களை” குறிப்பதாக கூறுகிறார்கள். இமய மலையில் இருக்கும் கயிலாய மலைக்கு யாத்திரை போக முடியாதவர்கள், “தென்கயிலாயம்” என போற்றப்படும் இந்த வெள்ளியங்கிரி மலையாத்திரை செய்வதால் கயிலாய மலைக்கு சென்ற பலனை அடைவார்கள் என சித்தர்கள் கூறியிருக்கின்றனர். இந்த மலையில் இருக்கும் ஆண்டி சுனை தென்கயிலாயத்தின் “மானசரோவர்” என்றழைக்கப்படுகிறது.
தல சிறப்பு.
இயற்கை எழில் சூழ்ந்த, வனங்கள் நிறைந்த மேற்குத்தொடர்ச்சி மலைதொடர்களில் இந்த வெள்ளியங்கிரி மலைகள் அமைந்திருக்கின்றன. இந்த மலைகளுக்கான புனித யாத்திரை மார்ச் முதல் மே மாதம் வரையான காலங்களில் மேற்கொள்ளப்படுகிறது. புனித யாத்திரை மேற்கொள்ளமுடியாதவர்கள் இந்த மலை அடிவார கோவிலிலேயே வழிபட்டு திரும்புகின்றனர். 20 கிலோமீட்டர்கள் கொண்ட நடைபயணம் கொண்டது இந்த வெள்ளியங்கிரி யாத்திரை. நல்ல உடல்பலம் கொண்டவர்களால் மட்டுமே இந்த யாத்திரையை மேற்கொள்ள முடியும். முதல் மலை மற்றும் ஏழாவது மலை பயணம் சற்று கடினமானதாக இருக்கும். இந்த பயணத்தின் போது மூலிகை செடிகளின் வாசம் நிறைந்த காற்றை சுவாசிப்பதாலும், அம்மூலிகைகளின் சாறுகள் ஊறிய சுனைகளின் நீரை அருந்துவதாலும் நம் உடலில் பல குறைபாடுகள் நீங்குகிறது. இந்த மலைத்தொடர்களில் ஐந்தாவது மலையான “திருநீறு” மலையில் சைவ மரபினர் நெற்றியில் அணியும் திருநீறு பாறைகளால் நிறைந்திருக்கிறது. அவற்றிலிருந்து பெறும் திருநீறை பக்தர்கள் புனித பிரசாதமாக எடுத்து செல்கின்றனர்.

கோவை நகருக்கு நீரை அளிக்கும் நொய்யல் ஆறு இந்த மலை தொடரிலேயே உற்பத்தியாகிறது. இந்த வெள்ளியங்கிரியில் ஒருவருக்கு அன்னதானம் அளிப்பது ஓராராயிரம் நபர்களுக்கு அன்னதானம் செய்த பலனை கொடுக்கிறது. இந்த ஏழாவது மலையில் பஞ்சபூத லிங்கத்திற்கு பூஜைகள் செய்து, வழிபட்ட பிறகு வெள்ளியங்கிரி யாத்திரை நிறைவு பெறுகிறது. மலையில் சிவபெருமானை தரிசித்து வணங்கி இந்த மலையிலேயே சிலகாலம் தங்குபவர்களுக்கு, சிவபெருமானுக்கு வாசிக்கப்படும் இசைக்கருவிகளின் ஒலிகள் மற்றும் ஓம்கார ஒலிகள் கேட்பதாக கூறுகிறார்கள்.
#கோவில் #அமைவிடம்:
வெள்ளியங்கிரி மலை கோயம்புத்தூர் மாவட்டத்தில் பூண்டி என்கிற ஊரில் அமைந்துள்ளது.

No comments:

Post a Comment

Followers

சிவ தாண்டவம்.சிவபெருமான் ஆடிய நடனம்.....

சிவ தாண்டவம். 1.சிவபெருமானின் காளிகா தாண்டவம் ஆடுவது எங்கு? எப்போது? காளிகா தாண்டவம் – படைத்தல் செய்யும் போது. தலம் – நெல்லையப்ப...