Thursday, August 21, 2025

மயூரநாதசுவாமி அபயாம்பிகை மயிலாடுதுறை..


உமையம்மை மயில் வடிவில் ஈசனை வழிபட்டு சுயவடிவம் பெற்ற தலமானதும்,
உலகப் புகழ்பெற்ற தேவாரம் மற்றும் திருப்புகழ் பாடல் பெற்ற சோழநாட்டு தலங்களில் ஒன்றானதும்,
18 சித்தர்களில் ஒருவரான 
குதம்பை சித்தரின்  ஜீவசமாதி அமைந்துள்ள இடமான , காசிக்கு நிகரான ஆறு தலங்களில் ஒன்றான 
மயிலாடுதுறை மாவட்டத்தின் மையத்தில் உள்ள 
#திருமயிலாடுதுறை (சூதவனம், சிகண்டிபுரம், பிரமபுரம், தென்மயிலை) 
என்ற மாயவரம் (#கெளரிமாயூரம்)
#மயூரநாதசுவாமி திருக்கோயிலில் உள்ள 
#அபயாம்பிகை என்ற #அஞ்சொல்நாயகிஅம்மன் திருக்கோயிலை தரிசிக்கலாம் வாருங்கள் 🙏🏻 🙏🏻 🙏🏻 

மயிலாடுதுறை எனும் மாயவரம் மிகவும் தொன்மையானது. -ஆயிரம் ஆனாலும் மாயூரம் போலாகாது- என்று சிறப்பித்துக் கூறப்படுகிறது. பிரம்மாவால் உருவாக்கப்பட்டது மாயவரம். 
ஈசனை அன்னை மயில் உருவத்தில் வழிபடும் இரண்டு தளங்களில் ஒன்று மயிலாப்பூர், மற்றொன்று மயிலாடுதுறை.
"ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகாது " என்று மயிலாடுதுறைக்காரர்கள் பெருமையோடு சொல்லிக்கொள்வார்கள். ஆனால் இதைப் பொருள் அறிந்து எத்தனை பேர் சொல்கிறார்களோ  தெரியவில்லை. மயூரம் என்ற வடசொல் மயிலைக் குறிப்பது. மயில் உருவில் சிவபெருமானை அம்பிகை பூஜை செய்த தலம் ஆதலால் மயூரம் அல்லது மாயூரம் எனப்பட்டது. மயிலைக் காட்டிலும் அழகிய பறவையைக் காண்பது அரிது என்பதால் ஆயிரம் பறவைகள் இருந்தாலும் மயிலுக்கு ஒப்பாகுமா என்று இதற்கு வெளிப்படையாகப் பொருள் காண்பார்கள். ஆனாலும் இதற்கு உட்பொருள் ஒன்றும் உண்டு. மாயூரம் என்பதை மயிலுக்கு மட்டும் சம்பந்தப்படுத்தாமல்,  அவ்வுருவெடுத்து வந்து சிவபூஜை செய்த உமை அன்னைக்கு இணைத்துப் பார்ப்பதே சிறந்த பொருளைத் தரும். அவ்வாறு மயிலம்மனாக வந்து பூஜை செய்து சுய வடிவம் பெற்றுப்  பரமேச்வரனை மணந்து  கொண்ட கௌரிக்கு நிகர் யாரும் இல்லை என்பதால்  " ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகாது " எனப்பட்டது. சுவாமிக்கே கௌரிமாயூர நாதர் என்று பெயர் வரும்படி அரும்தவம் செய்தபடியால் ஊரின் பெயரும் மயிலாடுதுறை ஆயிற்று.

காசிக்கு நிகரான தலங்களாக, ஸ்ரீவாஞ்சியம், திருவையாறு, திருவிடைமருதூர், மயிலாடுதுறை, சாயாவனம் ஆகிய சிவஸ்தலங்களைக் குறிப்பார்கள்.

அம்பிகை மயில் வடிவில் ஈசனை வழிபட்ட இரண்டு தலங்கள் திருமயிலாப்பூர், திருமயிலாடுதுறை ஆகும். திருமயிலாடுதுறை  மாயூரநாதர் அபயாம்பிகை திருக்கோவிலில் அம்பிகை மயில் வடிவிலும், இறைவன் சுயம்பு மூர்த்தியாகவும் அருள்பாலிக்கிறார்.

*#கௌரி தாண்டவம்:

அம்பாள் இறைவனை மயில் வடிவில் வழிபட்டதாலும், மயில் வடிவாகவே ஆடியதாலும் இத்தலம் மயிலாடுதுறை என்றாயிற்று. அம்மை அவ்வாறு ஆடிய தாண்டவம் கௌரி தாண்டவம் எனப்படும். இதனால் இத்தலம் 'கௌரி மாயூரம்' என்றும் பெயர் பெற்றது.

*#அபயாம்பிகை என்று பெயர் வரக் காரணம்:

பார்வதியை மகளாகப் பெற்ற (தாட்சாயினி) தட்சன் வேள்விக்கு ஏற்பாடு செய்து இருந்தார்.  வேள்விக்கு சிவபெருமானை  அழைக்கவில்லை, இதனால் கோபம் கொண்ட சிவன் பார்வதியை வேள்விக்குச் செல்ல வேண்டாம் என்று தடுத்தார்.  பார்வதி  மனம் கேளாமல் சிவபெருமான் கட்டளையையும் மீறி அழையாத விருந்தாளியாக தட்சனின் வேள்வியில் கலந்து கொண்டு  அவமானப்பட்டாள்.

இதனால் சினமுற்ற சிவன் வீரபத்திர வடிவம் கொண்டு வேள்வியைச் சிதைத்தார்.  அப்போது வேள்வியில் பயன்படுத்தப்பட்ட  மயில் ஒன்று அம்பாளைச் சரணடைந்தது.  நாடி வந்த மயிலுக்கு அடைக்கலம் அளித்து காத்ததால் அபயாம்பிகை, அபயப்பிரதாம்பிகை, அஞ்சல் நாயகி, அஞ்சலை என பலவாறு அழைக்கப்படுகின்றாள்.  சிவபெருமானை பார்வதியை மயிலாக மாறும்படி  சபித்து விடுகிறார்.  

அம்பிகை மயில் உருவம் கொண்டு இத்தலத்தில் இறைவனை நோக்கித் தவம் செய்தாள். அவளை பிரிய மனமில்லாத சிவனும், மயில் வடிவத்திலேயே இங்கு வந்தார். அம்பாளின் பூஜையில் மகிழ்ந்து கௌரிதாண்டவ தரிசனம் தந்ததோடு, அம்பாளின் சுயரூபம் பெறவும் அருள் செய்தார். மயிலாக வந்து அருள் செய்ததால், 'மாயூரநாதர்' என்றும் பெயர் பெற்றார்.

இங்கு ஆதி மயூரநாதர் சந்நிதிக்கு அருகில் அம்பிகைக்கு தனி சந்நிதி இருக்கிறது. இங்கு லிங்க வடிவ ஈசன் அருகில் மயில் வடிவில் அம்பிகை வழிபட்ட நிலையில் காட்சி அளிக்கிறாள்.
 தன்னை நாடிவந்த மயிலைக் காத்த அன்னை வீரசக்தி வடிவமாக இருக்கிறாள். ஆடிப்பூரம், வெள்ளிக்கிழமைகளில் காவிரிக் கரையில் எழுந்தருளி காட்சி அளிக்கிறாள் அபயாம்பிகை.

இங்கு காவிரி துலா ஸ்நானம் மிக விசேஷமாக கருதப்படுகிறது. கங்கை, யமுனை, சரஸ்வதி நதிகள், மாந்தர்கள் தங்கள் பாவங்களைத் தங்களிடம் கரைப்பதால் சேர்ந்துள்ள பாவத்தை நாங்கள் எங்கு கழிப்பது என்று கேட்டபோது, கண்ணுவ முனிவர் மாயவரத்தில் உள்ள காவிரியில் துலா மாதம் என்று அழைக்கப்படும் ஐப்பசி மாதத்தில் நீராடச் சொல்கிறார். நரகாசுரனைக் கொன்ற பிரம்மஹத்தி தோஷம் நீங்க ஸ்ரீ கிருஷ்ணரை இங்குதான் நீராடச் சொல்கிறார் ஈசன்.
 துலா மாதத்தில் சப்த மாதர்கள், தேவர்கள், முனிவர்கள் இங்கு நீராட வருகிறார்கள். ஐப்பசி மாதத்தின் கடைசி நாளான கடைமுகம் அன்று நீராடுவது மிகச் சிறப்பு. அன்று காவிரியில் நீராடி அம்பிகையை வணங்கினால் அவள் நம்மை அனைத்து துன்பங்களிலிருந்தும் அபயம் அளித்துக் காப்பாள் என்பது ஐதீகம்.
 நான்கு பக்கமும் சுற்று மதில்களும், கிழக்கே பெரிய கோபுரமும் காணப்படுகிறது. வீதி உட்பட மொத்தம் ஐந்து பிராகாரங்கள் உள்ளன. இக்கோயிலின் ராஜகோபுரம் ஒன்பது நிலைகளுடன் அழகிய சிற்பங்களுடன் கம்பீரமாகக் காட்சி அளிக்கிறது. உட்கோபுரம் மூன்று நிலைகளுடன் காணப்படுகிறது.,

இங்குள்ள துர்க்கையம்மனின் காலுக்குக் கீழ் மகிஷனும், அருகில் அசுரர்களும் இருப்பது அரிதான ஒன்று. மயூர நாதர் சந்நிதியின் பின்புறம் சுப்பிரமணிய சுவாமி சந்நிதி உள்ளது. இவர் மீது அருணகிரிநாதர் திருப்புகழ் பாடியுள்ளார். ஆதி மயூரநாதர் சந்நிதியின் வடபுறம் அபயாம்பிகை தனி சந்நிதியில் நின்ற திருக்கோலத்தில் காட்சி அளிக்கிறாள்.
 "அழைத்ததும் வருவாள் அபயாம்பிகை' என்பதற்கேற்ப அன்னை அருள் வழியும் கண்களுடன் எழில் ததும்ப நிற்கிறாள்.
 வைகாசியில் பிரம்மோற்சவம், துலா ஸ்நானம், ஆடி கடைசி வெள்ளியன்று லட்சதீபம் ஏற்றுவதும் இங்கு மிக விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது. அன்னை மயிலாக தவம் செய்ததால் நடனம் பயில்பவர்கள் இங்கு வந்து அன்னையை வழிபடுவது மிகச் சிறப்பு. தங்கள் பிரார்த்தனை நிறைவேறியதும் ஈசனுக்கும், அம்பிகைக்கும் வஸ்திரம் சாற்றி வழிபடுகிறார்கள்.

சிவநிந்தனையுடன் செய்யப்பட்ட தட்சன் யாகத்தில் கலந்து கொண்ட தேவர்கள்  யாவரும் தண்டிக்கப்பட்டனர்.  அவர்கள் தாம் செய்த பாவம் நீங்க மயிலாடுதுறை வந்து மாயூரநாதரை வழிபட்டு அருள்  பெற்றனர். கோவிலின் முதற்சுற்றுப் பிரகாரத்தில் தென்கிழக்கு திசையில் மயிலம்மன் சன்னிதி அமைந்துள்ளது.  மயில் வடிவில்  சிவபெருமானும் அம்பிகையும் காட்சி தருகின்றனர்.  பெண் மயிலான அம்பிகையின் இருபுறமும் இரண்டு சிறிய மயில்கள்  சரஸ்வதி, திருமகளாக விளங்குகின்றன.  

இத்திருக்கோயிலில் அம்பாள் சன்னதி தனிச் சன்னதியாக காணப்படுகிறது. அம்பாள் 5 அடி உயரத்தில் நான்கு திருக்கரங்களுடன் அபயவரத முத்திரையுடன் நின்ற திருக்கோலத்தில்  எழுந்தருளி உள்ளார். அன்னை அபயாம்பிகை   மேற்கரங்கள் இரண்டில் சங்கு சக்கரமும், இடது திருக்கரம் தொடை மேல் தொங்கவும்  காட்சி தருகிறாள். தேவாரத்தில் இந்த அம்பிகையை  அம்சலாள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.  இதற்கு  அழகிய சொற்களைப் பேசுபவள் என்பது பொருளாகும்.

இத்திருக்கோயில் 3 பிரகாரங்களைக் கொண்ட அழகிய திருக்கோயில். இரண்டாவது பிரகாரம், மூன்றாவது பிரகாரம் ஆகியவற்றின் வெளிப் புறத்தில் 16 அடி உயரத்தில் செங்கல்லால் ஆன சுற்றுச் சுவர் உள்ளது. இக்கோயிலின் ஆதி மயூரநாதர் முன் திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும் பாடிய தேவாரப் பாடல்களை, பெருமான் நேரடியாகக் கேட்டதாகக் கூறப்படுகிறது. இந்த ஆதிமயூரநாதர் ஆலயத்தை திருக்கோயிலின் வடக்கு வாசல் வழியாக வந்தால் காணலாம்.

இத்திருக்கோயிலின் ராஜகோபுரம் 164 அடி உயரம் கொண்டது. ஒன்பது நிலைகளைகளுடனும் ஒன்பது கலசங்களுடனும் மிக அழகாக காட்சி தருகிறது ராஜகோபுரம்.  இக்கோபுரம் கட்டப்பட்ட காலம் கிபி. 1513, 1514, 1515-ம் ஆண்டுகளில் என்பது போன்ற விவரங்கள் இக்கோயில் கல்வெட்டுக்கள் மூலம் நமக்குத் தெரிய வருகிறது. 

தற்காலத்தில் இக்கோயில் சுவாமி கோயில், அம்பாள் கோயில் என்ற இரண்டு பகுதியாக காணப்படுகிறது. இத்தகைய பழக்கம் முதலாம் குலோத்துங்க சோழன் காலத்தில் ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

அழகிய ராஜகோபுரத்தின் உள்ளே நுழைந்தவுடன் பிரம்ம தீர்த்தக் குளம் உள்ளது. இத்திருக்குளம் பிரம்மனால் உருவாக்கப்பட்ட குளம்.

குளத்தின் நடுவே நீராழி மண்டபம்உள்ளது. மார்கழி மாத திருவாதிரை நாளிலும், சித்திராப் பௌர்ணமியிலும், வைகாசி விசாக தினத்திலும், அருள்மிகு மயூரநாதர், அபயாம்பிகை முன்னிலையில் இத்திருக்குளத்தில் தீர்த்தவாரி நடைபெறும். இத்தீர்த்த குளத்தில் வைகாசி வசந்த உற்சவம் 10 நாட்கள் நடந்தபின் தெப்பத் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுகிறது.

கோபுரத்தை அடுத்து கோயிலின் உள்ளே அழகிய 16 கால் மண்டபம் கட்டப் பட்டுள்ளது. சுவாமியின் திருக்கல்யாணம், ஊஞ்சல் சேவை இங்கேதான் நடைபெறும். கோயிலின் உள்ளே முதல் தரிசனம் முக்குறுணி விநாயகர் என்றழைக்கப்படும் பெரிய விநாயகர் தென்கிழக்கு மூலையில் அமைந்துள்ளார். வடகிழக்கு மூலையில் வள்ளி தெய்வானையுடன் முருகப் பெருமான் தரிசனம்.

கோயிலின் உள் பிரகாரத்தில் உற்சவர்களின் சன்னதி, நடராஜர் சன்னதி, விநாயகர், வித்யாக்ரபாதர், பதஞ்சலி முனிவர், சேக்கிழார், நால்வர், சப்த மாதாக்கள், அறுபத்து மூவர் போன்றோரது சன்னதிகளும் உள்ளன. இவற்றோடு அல்லாமல் சகஸ்ரலிங்கம், சட்டைநாதர் பலிபீடம், இந்திர லிங்கம், அக்னி லிங்கம், எமலிங்கம், நிருதி லிங்கம், ஆகியோர் எழுந்தருளி உள்ளனர். இதை அடுத்து மகா விஷ்ணு , வாயுலிங்கம், வருணலிங்கம், மகாலெட்சுமி, பிரம்மலிங்கம் நந்தியுடன் காட்சி தருகின்றனர்.

விநாயகர் சதுர்த்தி அன்று இங்கே எழுந்தருளியுள்ள 21 விநாயகர் திருவுருவங்களுக்கு மோதக நிவேதனம் செய்து சிறப்பு பூஜை நடைபெறும். 

இத்திருத்தல மயூரநாதரை திலீபன், திருமால், பிரம்மன், இந்திரன், அகத்தியர், கண்ணுவர், கவுண்டில்யன், சுசன்மன், நாதசர்மா, தருமன், லெட்சுமி, விசாலன், காமன், ஆகியோரும், அஃறிணை உயிர்களான, கழுகு, கிளி, காகம், குதிரை, நரி, யானை, வானரம், பூனை, கழுதை, போன்றவைகளும் வழிபடும் பேறு பெற்றனர். 

தெற்குப் பகுதியில் அகத்திய விநாயகர், நடராஜர், ஜுரதேவர், ஆலிங்கனசந்திர சேகரர் எழுந்தருளியுள்ளனர். இங்கே தனிச் சன்னதியில் சின்முத்திரையுடன் தட்சிணாமூர்த்தி காட்சி தருகிறார்.

தட்சிணாமூர்த்தி சுவாமிக்கு மேற்புறமாக குதம்பைச் சித்தர் ஸ்வாமிகள் ஜீவ சமாதி உள்ளது. இக்கோயிலில் நடக்கும் அர்த்தஜாமபூஜை மிகவும் விசேஷம் வாய்ந்தது. திருமணமாகாதவர்கள் திருமணம் வேண்டி நேர்ந்துகொண்டு, இந்த அர்த்த ஜாம பூஜையில் கலந்து கொண்டால் விரைவில் திருமணம் நடக்கும் என்பது ஐதீகம்.
அம்பாள் 5 அடி உயரத்தில் 4 திருக்கரங்களுடன் அபயவரத முத்திரையுடன் எழுந்தருளி உள்ளார். 

அம்பாளுக்கு வலப்புறம் நாத சர்மாவின் மனைவி அநவித்யாம்பிகை இறைவன் காட்டிய இடத்தில் ஐக்கியமாகி லிங்க வடிவத்தில் காட்சி தருகிறார். இந்த லிங்கத்திற்கு சிவப்பு நிறத்திலேயே புடவை சாத்தப்படுகிறது. இந்தத் தலத்தில் மட்டுமே லிங்க உருவமாக உள்ள அம்மைக்கு புடவை சாத்தி வழிபடப் படுகிறது.

அம்பாள் கோயிலின் முன் மண்டப வாசலில் இத்தலத்தின் பதிகப் பாடல்களும், உள்ப்ரகாரத்தில் அவயாம்பிகை சதகப் பாடல்களும், அகவல் பாடல்களும் கல்வெட்டில் பொறிக்கப் பட்டுள்ளன.

'அபயாம்பிகை சதகம்' எனும் நூறு பாடல்களைக் கொண்ட துதிப்பாடலை இயற்றிய அபயாம்பிகை பட்டர் கிருஷ்ணசாமியின் தலமாகவும் உள்ளது. 

"அன்னையே உன் அருளுக்கு இணை எதுவும் இல்லை. நீ எங்களைக் காக்கவே பல்வேறு வடிவம் எடுத்து வருகிறாய். ஒவ்வொரு வடிவமும், மற்றதை விட அதிக அருட்சக்தியும், கருணையும் நிரம்பியதாய் இருக்கிறது.' என்கிறார் ஆதிசங்கரர்.

 "தாயே நான் உன்னிடம் எதுவும் சொல்ல வேண்டியதில்லை. நீயே அனைத்தும் அறிவாய். உன்னை நோக்கிக் கரம் குவிப்பது ஒன்றே என் வேலை' என்கிறார் நீலகண்ட தீட்சிதர்.
 உச்சிக் கிளியே அருட்கிளியே உணர்வு உணர்வாய்
 உயிருக்குயிராய் உதித்த கிளியே - - - -அருள் அமையும்
 மயிலா புரியில் வளரீசன் வாழ்வே அபயாம்பிகைத்தாயே.
 என்று போற்றித் துதிக்கிறது அபயாம்பிகை சதகம்.

*திருஞானசம்பந்தர் பெருமானால் இத்தலத்தில் பாடப்பட்ட தேவாரப் பாடல்:

கரவுஇன் றிநன்மா மலர்கொண்டு
இரவும் பகலும் தொழுவார்கள்
சிரம்ஒன் றியசெஞ் சடையான் வாழ்
வரவா மயிலாடு துறையே !!

உரவெங் கரியின் னுரிபோர்த்த
பரமன் னுறையும் பதிஎன்பர்
குரவம் சுரபுன் னையும்வன்னி
மருவும் மயிலாடு துறையே !!

ஊனத்து இருள்நீங் கிடவேண்டில்
ஞானப் பொருள்கொண்டு அடிபேணும்
தேன்ஒத்து இனியான் அமரும்சேர்
வானம் மயிலாடு துறையே !!

அஞ்சுஒண் புலனும் மவைசெற்ற
மஞ்சன் மயிலா டுதுறையை
நெஞ்சுஒன் றிநினைத்து எழுவார்மேல்
துஞ்சும் பிணிஆ யினதானே !!

தணியார் மதிசெஞ் சடையான்றன்
அணிஆர்ந் தவருக்கு அருள்என்றும்
பிணியா யினதீர்த்து அருள்செய்யும்
மணியான் மயிலாடு துறையே !!

தொண்டர் இசைபா டியும்கூடிக்
கண்டு துதிசெய் பவன்ஊராம்
பண்டும் பலவே தியர்ஓத
வந்தார் மயிலாடு துறையே !!

அணங்கோடு ஒருபா கம்அமர்ந்து
இணங்கி அருள்செய் தவன்ஊராம்
நுணங்கும் புரிநூ லர்கள்கூடி
வணங்கும் மயிலாடு துறையே !!

சிரம்கை யினில் ஏந் திஇரந்த
பரம்கொள் பரமேட் டிவரையால்
அரங்கஅவ் அரக்கன் வலிசெற்ற
வரங்கொள் மயிலாடு துறையே !!

ஞாலத் தைநுகர்ந் தவன்தானும்
கோலத்து அயனும் மறியாத
சீலத்தவனூர் சிலர் கூடி
மாலைத் தீர்மயி லாடுதுறையே !

ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

No comments:

Post a Comment

Followers

மயூரநாதசுவாமி அபயாம்பிகை மயிலாடுதுறை..

உமையம்மை மயில் வடிவில் ஈசனை வழிபட்டு சுயவடிவம் பெற்ற தலமானதும், உலகப் புகழ்பெற்ற தேவாரம் மற்றும் திருப்புகழ் பாடல் பெற்ற சோழநாட்டு தலங்களில்...